Published:Updated:

பிரைம் டைம் பெருமாளு: சேனல் மாறினா விருது கிடைக்குமா? `அபியும் நானும்' தொடரில் என்ன பிரச்னை?

அபியும் நானும்

"'கயல்' சீரியல்ல, அதுவும் ஹீரோ சஞ்சீவ் பெயர் நாமினேஷன் பட்டியலில் இடம் பிடித்தபோதே விமர்சனங்கள் எழுந்தன. அவருக்கு விருதே கொடுத்துட்டாங்க. 'சேனல் மாறினா விருது கிடைக்கும்ப்பா'னு சிலர் புலம்பிருக்காங்க!"

Published:Updated:

பிரைம் டைம் பெருமாளு: சேனல் மாறினா விருது கிடைக்குமா? `அபியும் நானும்' தொடரில் என்ன பிரச்னை?

"'கயல்' சீரியல்ல, அதுவும் ஹீரோ சஞ்சீவ் பெயர் நாமினேஷன் பட்டியலில் இடம் பிடித்தபோதே விமர்சனங்கள் எழுந்தன. அவருக்கு விருதே கொடுத்துட்டாங்க. 'சேனல் மாறினா விருது கிடைக்கும்ப்பா'னு சிலர் புலம்பிருக்காங்க!"

அபியும் நானும்

"இப்பவே உச்சந்தலையைப் பிளக்குது வெயில். இன்னும் அக்னி நட்சத்திரமெல்லாம் இருக்கு. இந்த வருஷம் சூரியன் சுட்டெரிப்பார்னுதான் தோணுது" என்றபடியே வந்தமர்ந்தார் பிரைம் டைம் பெருமாளு.

"சூரியன் எரிக்கறது இருக்கட்டும், தப்புத் தப்பாத் தகவல் சொன்னா சீரியல் ரசிகர்கள் நம்மைப் பார்வையாலேயே எரிச்சிடுவாங்க" எனக் கோபம் காட்டினோம்.

"புரியுது, விஜய் டெலி அவார்ட்ஸ் ஏப்ரல் கடைசியில இருக்கும்னு சொல்லியிருந்தேன். ஆனா சன் டிவி விருது நடத்திய மூணாவது நாளே அதாவது ஏப்ரல் 2ம் தேதியே நடத்திட்டாங்க. இதைத்தானே சொல்ல வர்றீங்க?" எனச் சொன்னவர், "ஏன்னு தெரியலை, இப்பெல்லாம் விஜய் டிவியில சில நிகழ்ச்சிகள் குறித்துக் கேட்டால், ஷங்கர் பட அப்டேட் மாதிரி பில்டப் தர்றாங்க. இருந்தாலும் தப்புக்கு நான் சாரி கேட்டுக்கறதுதான் முறை" என்றவருக்கு கூடுதலாக இரண்டு ஐஸ் கட்டிகள் போட்டு மோர் கொடுத்தோம்.

சன் குடும்பம் விருதுகள்
சன் குடும்பம் விருதுகள்

'இதம், இதம்'னு சொல்லியபடியே குடித்தவர், "ரெண்டு விருது நிகழ்ச்சிகள் குறித்துமே குறைபட்டுக்கிட்டவங்கதான் நிறைய" என மேட்டருக்குள் வந்தார்...

"சன் குடும்பம் விருதுகள் விழா ஏற்பாடுகள் ரொம்பவே சுமார் ரகமாம். மாலையில் தொடங்கின நிகழ்ச்சிக்குக் காலையிலேயே வந்து காத்திட்டிருந்திருக்காங்க நடிகர் நடிகைகள். ஏற்கெனவே வெயில். இதுல நிகழ்ச்சி நடக்க இருந்த அரங்கத்துல திடீர்னு ஏசி வேலை செய்யலை. வியர்வையில குளிச்ச பல ஆர்ட்டிஸ்டுகள், இதுக்கு பேசாம வீட்டுலயே இருந்திருக்கலாம்'னு புலம்பியதைக் கேட்க முடிஞ்சது. விருதுகளைப் பொறுத்தவரை 'கயல்', 'சுந்தரி', 'அன்பே வா' உள்ளிட்ட சில சீரியல்கள் முன்னிலைப்படுத்தப்பட்டதா தெரியுது.

'சுந்தரி' தொடருக்கு விருது கிடைத்தது பத்தி யாரும் எந்தவிதமான விமர்சனமும் செய்ததா தெரியலை. ஆனா 'கயல்' சீரியல்ல அதுவும் ஹீரோ சஞ்சீவ் பெயர் நாமினேஷன் பட்டியலில் இடம் பிடித்தபோதே விமர்சனங்கள் எழுந்தன. அவருக்கு விருதே கொடுத்துட்டாங்க. 'சேனல் மாறினா விருது கிடைக்கும்ப்பா'னு சிலர் புலம்பிட்டிருக்க, சஞ்சீவோ 'மகன் பிறந்த நேரம்'னு செம உற்சாகத்துல இருக்கார்'' என்றவரிடம்,

"விஜய் டெலி அவார்ட்ஸ்ல என்ன விசேஷமாம்?" என்றோம்.

"அங்கு ஏற்பாடுகள்ல யாரும் அதிருப்தியடைஞ்சதா தெரியலை. சன் டிவியில விருது வாங்கிய சஞ்சீவின் மனைவி ஆல்யாவுக்கு குழந்தை பிறந்ததால அவங்களால நிகழ்ச்சிக்கு வரமுடியலை. 'ராஜா ராணி' தொடர்ல நடிச்ச சித்துவுக்குத்தான் சிறந்த ஹீரோவுக்கான விருது தரப்பட்டிருக்கு. 'பெஸ்ட் காமெடியன்' விருது அர்ச்சனாவுக்குத் தந்தாங்க."

'ராஜா ராணி' அர்ச்சனா
'ராஜா ராணி' அர்ச்சனா

"'காமெடி டைம்' அர்ச்சனாவுக்கா?"

"இதே கேள்வியைத்தான் நிறையப் பேர் கேட்டிட்டிருக்காங்க. ஆனா விருது 'ராஜா ராணி'யில வில்லியா நடிச்ச அர்ச்சனாவுக்கு. என்னது வில்லியா நடிச்சவருக்குக் காமெடிக்கான விருதானு எல்லாம் என்னைக் கேக்கக் கூடாது" என்றவர், அடுத்த செய்திக்குள் நுழைந்தார்.

"சில சீரியல்களுக்குப் பின்னாடி நடக்கிற கதைகளை சீரியலா எடுத்தாலே மெகா ஹிட் தரலாம் போல" என்றார் பி.பி.

"பீடிகை வேண்டாம் ப்ளீஸ்" என்றோம். நேராக மேட்டருக்கு வந்தார்...

'''அபியும் நானும்'னு ஒரு தொடர். அபிங்கிறது ஒரு குழந்தை. அப்பா மகள் பாசக் கதை. ஆரம்பிச்ச புதுசுல நல்ல ரேட்டிங் கிடைச்ச சீரியல். இப்ப ரேட்டிங் அதலபாதாளத்துல போயிட்டதாச் சொல்றாங்க. விசாரிச்சா இப்படிச் சொல்றாங்க.

'ஏங்க அபிங்கிறது ஒரு பெண் குழந்தை. அந்தக் குழந்தையை இப்ப பையனா (?) மாத்திடாங்க. அவங்க அப்பாவா நடிச்சிட்டிருந்த ராஜ்கமலை ஜெயிலுக்குப் போனதா காட்டி பத்து மாசத்துக்கு மேல ஆச்சு. சீரியல் டைட்டில்ல இருக்கிற ரெண்டு பேரையுமே ஒதுக்கி வச்சிட்டு கதையை இஷ்டத்துக்கு மாத்தினா எப்படிங்க ரேட்டிங் கிடைக்கும்? என்ன பஞ்சாயத்தோ தெரியலைங்க' என்கிறார்கள்.

ராஜ்கமல்
ராஜ்கமல்

ராஜ்கமல் கிட்டயே பேசினேன்.

'பெருமாளு, பல வருஷம் கழிச்சு மறுபடி டிவி பக்கம் வந்தவனுக்கு இந்த சீரியல் நல்ல பேர் தந்ததெல்லாம் நிஜம்தான். ஆனா இப்ப பத்து மாசமா நான் தொடர்ல இல்லைங்கிறதுக்குக் காரணமும் என்க்குத் தெரியாது. என்னைப் பொறுத்தவரைக்கும் ஒரே பாதையில மட்டும் பயணிக்கிறவன் இல்லை. சீரியல் இல்லையா மறுபடி சினிமாவுக்குப் போயிடுவேன். என்னுடைய யூ டியூப் சேனல் இருக்கு. இப்போ சீரியல் ஷூட்டிங் ஹவுஸ் தொடங்கி இருக்கேன். ஓடறதுக்கு எனக்கு நிறைய ரூட் இருக்கு. அதனால யோசிக்கவே நேரமில்லை'ங்கிறார்.

என்ன பஞ்சாயத்தோ தெரியலை'' என்றவர்,

"சரி, இத்தோட சங்கத்தைக் கலைச்சிடலாம், அடுத்த வாரம் பார்ப்போம்" எனக் கிளம்பினார்.