Published:Updated:

`யார் ஹீரோயின்?' - நடிகைகளுக்கு இடையே பஞ்சாயத்து; சீரியல் தொடங்கும் முன்னே விலகிய ராதிகா ப்ரீத்தி!

ராதிகா ப்ரீத்தி

"ஆரம்பத்துல ஹீரோ இல்லாமத்தான் பூஜை போட்டாங்க. ஹீரோவா நடிக்க பல ஆர்ட்டிஸ்டுகள்கிட்டப் பேசி, கடைசியா ‘செம்பருத்தி’யில் நடிச்ச அக்னி கமிட் ஆனார்."

`யார் ஹீரோயின்?' - நடிகைகளுக்கு இடையே பஞ்சாயத்து; சீரியல் தொடங்கும் முன்னே விலகிய ராதிகா ப்ரீத்தி!

"ஆரம்பத்துல ஹீரோ இல்லாமத்தான் பூஜை போட்டாங்க. ஹீரோவா நடிக்க பல ஆர்ட்டிஸ்டுகள்கிட்டப் பேசி, கடைசியா ‘செம்பருத்தி’யில் நடிச்ச அக்னி கமிட் ஆனார்."

Published:Updated:
ராதிகா ப்ரீத்தி
சீரியல் துவக்க விழாவில் தடபுடலாகப் போடப்பட்ட பூஜையில் கலந்து கொண்ட ஹீரோயின் சீரியலின் முதல் எபிசோடு ஒளிபரப்பாகும் முன்னரே சீரியலில் இருந்து விலகி விட்டதுதான் தமிழ்த் தொலைக்காட்சி ஏரியாவில் லேட்டஸ்ட் பரபரப்பு.

விஜய் டிவியில் பிக் பாஸ் தொடங்கவிருக்கிற சூழலில் அதைச் சமாளிக்கும் விதமாக அந்த நேரத்தில் புதுப்புது சீரியல்களை இறக்கத் திட்டமிட்டிருக்கிறது சன் டிவி. இந்த சீரியல்களில் நடிப்பதற்காக முன்னணி நடிகை, நடிகர்களையும் கமிட் செய்தார்கள்.

அந்த வரிசையில் விஷன் டைம் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்க பிரைம் டைமில் ஒளிபரப்பாக இருக்கும் ஒரு சீரியலில் நடிக்க ‘பூவே உனக்காக’ தொடரில் ஹீரோயினாக நடித்த ராதிகா ப்ரீத்தியைக் கமிட் செய்திருந்தார்கள். சீரியலின் துவக்க விழாவில் அவரும் உற்சாகமாகக் கலந்துகொண்டார்.

நிவிஷா
நிவிஷா

பூஜை முடிந்து ஒரு வாரம் ஷூட்டிங்கும் போயிருக்கிறது. ஆனால் அதன் பிறகு சிலபல காரணங்களால் ஷூட்டிங் தடைபட்டதாகப் பேச்சுகள் கிளம்பின. விசாரித்தபோது, "தொடரின் ஹீரோ இன்னும் கமிட் ஆகவில்லை; எனவே ஹீரோ கமிட்டானதும் ஷூட்டிங் தொடரும்" என்றார்கள்.

இந்நிலையில் தற்போது சீரியலில் இருந்து ஹீரோயின் ராதிகா ப்ரீத்தி விலகிவிட்டார் எனத் தகவல்கள் வருகின்றன.

இது தொடர்பாக சீரியலின் படப்பிடிப்புத் தளத்திலிருந்த ஆர்ட்டிஸ்டுகள் சிலரிடம் பேச்சுக் கொடுத்த போது,

"ஆரம்பத்துல ஹீரோ இல்லாமத்தான் பூஜை போட்டாங்க. ஹீரோவா நடிக்க பல ஆர்ட்டிஸ்டுகள்கிட்டப் பேசி, கடைசியா ‘செம்பருத்தி’யில் நடிச்ச அக்னி கமிட் ஆனார். ஏற்கெனவே கமிட்டாகியிருந்த நடிகர் தினேஷுக்கு ஜோடியா நிவிஷா கமிட் ஆகியிருந்தாங்க. ஆனா ராதிகா ப்ரீத்தி வெளியே போனதுக்கான காரணம் வேற.

அதாவது, 'இந்த சீரியல் அக்கா, தங்கை கதைன்னும் அதுல தங்கச்சியா நடிக்கற நீங்கதான் ஹீரோயின்’னும் ராதிகாகிட்டச் சொல்லி கமிட் ஆனதா சொல்லப்படுது. ஆனா ஷூட்டிங் தொடங்கின பிறகு அக்கா கேரக்டருக்காக சீரியல்ல வந்து சேர்ந்த நிவிஷா, தன்னுடைய கேரக்டர்தான் சீரியல்ல ரொம்ப முக்கியமானது என ராதிகா காதுபடவே பேசியிருக்காங்க.

ஆரம்பத்துல சில நாள்கள் ஷூட்டிங் ஸ்பாட்ல ராதிகா, நிவிஷா ரெண்டு பேருமே ஒற்றுமையா இருந்த நிலையில் ‘யாருக்கு முக்கியத்துவம், சீரியலில் ஹீரோயின் யார்’ங்கிற இந்தப் பேச்சு மன வருத்தத்தை உண்டாக்கிடுச்சு. அதனால ராதிகா ப்ரீத்தி சீரியலில் தொடர விரும்பவில்லைனு கிளம்பிட்டாங்க" என்றார்கள்.

"கதை தனக்கு முன்னாடி சொல்லப்பட்டது போல நகராதுன்னு நினைச்ச ராதிகா வெளியேறிட்டாங்க" என்று சொன்ன மேலும் சிலர், தன் கேரக்டருக்கு முக்கியத்துவம் தர வேண்டும் என நிவிஷா தயாரிப்புத் தரப்புக்கு அழுத்தம் தந்தார் என்றும் குறிப்பிடத் தவறவில்லை.

சீரியல் ஷூட்டிங் பூஜையில் ராதிகா ப்ரீத்தி
சீரியல் ஷூட்டிங் பூஜையில் ராதிகா ப்ரீத்தி

ராதிகா ப்ரீத்தியிடம் நாம் பேசினோம்.

‘’ஆமா சார். பூஜையில கலந்துகிட்டது நிஜம்தான். ஆனா சீரியல்ல நான் இல்லை. காரணம் டெலிகாஸ்ட் தாமதமாகிட்டே இருந்தது. பூஜை போட்டு நாலு மாசமான பிறகும் ஒளிபரப்பு எப்போனு தெரியாத சூழல். ரெண்டு நாள்தான் ஷூட் போச்சு. இன்னொரு பக்கம் எனக்கு படங்கள், வெப் சீரிஸ் வாய்ப்புகள் வந்தன. அதனால இன்னும் எவ்ளோ நாள் காத்திட்டிருக்கறதுனுதான் நான் விலகிக்கிடுறேன்னு சொல்லிட்டு வெளியில வந்துட்டேன். என் பக்கம் நியாயம் இருந்தது, அதனால தயாரிப்புத் தரப்புமே சரின்னுட்டாங்க" என்கிறார்.

நிவிஷாவையும் தொடர்பு கொண்டோம்.

‘’இது பர்சனலான கேள்விங்க. இதை மாதிரி நீங்க எங்கிட்டக் கேட்கக் கூடாது. சீரியல் ஒளிபரப்புத் தொடங்குகிற வரையில் இது தொடர்பா என்னால எதுவும் சொல்ல முடியாது" என்று மட்டும் முடித்துக் கொண்டார் அவர்.