Published:Updated:

``ஆல்யாவுக்கும் எனக்கும் மே 27-ம் தேதியே கல்யாணம் ஆகிடுச்சு... ஆனா, சொல்லலை!" - `ராஜா ராணி' சஞ்சீவ்

Sanjeev and Aalya Manasa
Sanjeev and Aalya Manasa

`நெருக்கமான நண்பர்களை மட்டும் கூப்பிட்டு, மே 27-ம் தேதி, ஈ.சி.ஆர்ல இருக்கிற ஒரு கோயில்ல நாங்க கல்யாணம் பண்ணிக்கிட்டோம்’

'சரவணன் மீனாட்சி' சீரியலுக்குப் பிறகு, 'ராஜா ராணி' சீரியலை கொண்டாடித் தீர்த்தனர், தமிழக மக்கள். 'குளிர் 100 டிகிரி' உள்ளிட்ட சில படங்களில் நடித்திருந்த சஞ்சீவையும், `மானாட மயிலாட' ரியாலிட்டி ஷோ மூலம் சின்னத்திரை ரசிகர்களுக்குப் பரிச்சயமாகியிருந்த ஆல்யா மானசாவையும், ஹீரோ - ஹீரோயினாக்கி தொடங்கப்பட்ட சீரியல் இது.

Sanjeev, Alya Manasa
Sanjeev, Alya Manasa

2017, மே 29ல் ஆரம்பித்த இந்த சீரியல், கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் தொடர்ந்தது. சஞ்சீவ் - ஆல்யா மானசா ஜோடி, இளைஞர்கள் இடையே பிரபலமானார்கள். இவர்களின் நிஜப்பெயரைவிட செம்பா - சின்னய்யா (கார்த்திக்) என்ற இவர்களது கதாபாத்திரங்கள் மக்கள் மனத்தில் நின்றன. ஆன் ஸ்கிரீனில் அவர்களுடைய அலட்டிக்கொள்ளாத நடிப்பும் ஆஃப் ஸ்கிரீனில் (ரியாலிட்டி ஷோக்களில்) இவர்களது ரகளைகளும் பலரால் ரசிக்கப்பட்டது. சோஷியல் மீடியாக்களில் இவர்களுக்கென நிறைய ரசிகர் பக்கங்கள் உருவாக்கப்பட்டன.

இந்நிலையில், இருவரும் காதலிக்கிறார்கள் என்ற செய்திகள் வர, அதற்கு மறுப்பு தெரிவிக்காமல் இருந்த ஜோடி, ஒரு கட்டத்தில் 'ஆமா... நாங்க ரியல் ஜோடிதான்' என்று இன்ப அதிர்ச்சி கொடுத்தார்கள். அதன்பின், காதல் ஜோடிகளாக பல பேட்டிகள் கொடுத்தனர். விஜய் டி.வி-யில் வரும் ரியாலிட்டி ஷோக்களில் மட்டுமல்லாது எல்லா இடங்களுக்கும் சேர்ந்தே சென்றனர். இவர்கள் இருவரும் காதலிக்கிறார்கள் என்பது உறுதியானவுடன், இவர்களுக்கான ரொமான்டிக் காட்சிகள் இன்னும் அதிகமாக்கப்பட்டன.

Raja Rani Alya Manasa, Sanjeev
Raja Rani Alya Manasa, Sanjeev

விஜய் டி.வி விருது விழாவின் மேடையில் இவர்கள் இருவரையும் மாலை மாற்றச்சொல்லி நிச்சயதார்த்தம் செய்துவைத்தனர், விஜய் டி.வி நண்பர்கள். 'அடுத்து எப்போ கல்யாணம்?' என்ற பேச்சு கிளம்பியது. அதற்கு ஆல்யா - சஞ்சீவிடம் இருந்து பதில் வரும் என்று எதிர்பார்த்த நிலையில், 'ராஜா ராணி' சீரியல் முடிவடைய இருக்கிறது என்று செய்தி வர, அதன் ரசிகர்கள் அனைவருக்கும் செம ஷாக்.

'ராஜா ராணி' சீரியல் ஷப்னம் திருமண வரவேற்பு... ஆல்யா மானசா, வாணிபோஜன் உள்ளிட்ட பிரபலங்கள் பங்கேற்பு!

சீரியல் முடிந்தவுடன், இவர்கள் இருவரும் சேர்ந்து அடுத்த சீரியலில் நடிக்கவிருக்கிறார்கள் என்ற வந்த செய்தியைத் தொடர்ந்து, "நாங்கள் இருவரும் ஆல்யா பிறந்தநாளன்று திருமணம் செய்துகொண்டோம். சில காரணங்களால் இதை முன்னரே அறிவிக்க முடியவில்லை. உங்களுடைய அன்பும் ஆசியும் வேண்டும்" என்று இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருந்தார் சஞ்சீவ். இதைத் தொடர்ந்து, சஞ்சீவைத் தொடர்புகொண்டு பேசினோம்.

"எங்களுடைய நெருக்கமான நண்பர்களை மட்டும் கூப்பிட்டு, மே 27-ம் தேதி, ஈ.சி.ஆர்ல இருக்கிற ஒரு கோயில்ல நாங்க கல்யாணம் பண்ணிக்கிட்டோம். அன்னைக்குத்தான் ஆல்யாவுக்கு பிறந்தநாள். ஜூலை வரை சீரியல் ஷூட்டிங் இருந்தது. அதை முடிச்சுட்டு சொல்லலாம்னு, அதுவரை யார்கிட்டேயும் சொல்லலை. ஆல்யா மானசா வீட்ல பேசிப்பார்த்தோம். ஆனா, அவங்க வீட்டுல இந்தக் கல்யாணத்துக்கு சம்மதிக்கலை. ஆல்யாவும் எவ்ளோவோ பேசிப்பார்த்தாங்க. ஆனா, அவங்க ஒத்துக்கலை. அவங்க, நாங்க சொல்றதைக் கேட்காம ஆல்யாவுக்கு மாப்பிள்ளை பார்க்க ஆரம்பிச்சுட்டாங்க. அதனாலதான், உடனே கல்யாணம் பண்ண வேண்டியதாகிடுச்சு. கல்யாணம் முடிஞ்ச பிறகுதான், எங்க வீட்லயும் சொன்னேன். அப்புறம், எங்க வீட்டுல இருந்து எல்லோரும் முறைப்படி பொண்ணு கேட்கப் போனாங்க. அப்பவும் அவங்க வீட்ல ஒத்துக்கலை. சரினு, எங்க வீட்டுல இருக்கிறவங்க முன்னிலையில ஆகஸ்ட் 28-ம் தேதி, முறைப்படி கல்யாணம் நடந்தது.

Raja Rani fame Alya Manasa, Sanjeev
Raja Rani fame Alya Manasa, Sanjeev

இப்போ, ஆல்யா எங்க வீட்லதான் இருக்கா. ஆல்யாவுடைய அப்பா, தங்கச்சி ரெண்டு பேரும் பேசிக்கிட்டுதான் இருக்காங்க. ஆனா, அவங்க அம்மா இன்னும் பேசலை. அம்மா பேசமாட்டேங்கிறாங்கன்னு ஆல்யாவுக்கு ரொம்ப வருத்தம். இந்த மாதிரியான சூழல் இருக்கும்போது எப்படி எல்லார்கிட்டேயும் சொல்றதுனுதான் வெளியே சொல்லலை. இந்த மாதம் ரிசப்ஷனுக்கு அழைக்க மிர்ச்சி செந்தில் அண்ணன்கிட்ட பேசினேன். அவர், சோஷியல் மீடியாவுல பதிவுபண்ணிட்டார்.

`ராஜா ராணி'யின் கடைசி நாளில் கலங்கிய ஆல்யா... பரிசாகக் கிடைத்த ஆச்சர்யம்!

சரி, இதுக்குப் பிறகும் நாம சொல்லாமல் இருந்தால் நல்லாயிருக்காதுனு, நானும் என்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்துல சொல்லிட்டேன். 'ஏன் சொல்லாமல் கல்யாணம் பண்ணீங்க'ன்னு ரசிகர்கள் யாரும் தப்பா எடுத்துக்க வேண்டாம். சூழல் சரியில்லை அதான். உங்களுடைய அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி. விஜய் டி.வி-யிலேயே ரெண்டு பேரும் வெவ்வேற சீரியல்ல கமிட்டாகி இருக்கோம். சீக்கிரமே அதுக்கான அறிவிப்பும் வரும்" என்றவருக்கு, திருமண வாழ்த்துகள் சொன்னோம்.

அடுத்த கட்டுரைக்கு