Published:Updated:

`நீ படிச்ச ஸ்கூல்ல நான் ஹெட்மாஸ்டர்' சுரேஷை மாட்டிவிட்ட பிக்பாஸ்; கெத்து ரம்யா! நடந்தது என்ன? நாள் 9

பிக்பாஸ் - நாள் 9

`தூள்’ படத்தில், "என் ஸ்வப்னா புத்திசாலிடா... அவளை யாரும் ஏமாத்த முடியாது” என்று விவேக் சொல்வது போல வெள்ளந்தியான புன்னகையுடன் இதுவரை சுற்றிக் கொண்டிருந்த ரம்யா, தனது புத்திசாலித்தனத்தைக் காட்டிய தினம் இன்று. பிக்பாஸ் வீட்டில் நடந்தது என்ன? நாள் 9

Published:Updated:

`நீ படிச்ச ஸ்கூல்ல நான் ஹெட்மாஸ்டர்' சுரேஷை மாட்டிவிட்ட பிக்பாஸ்; கெத்து ரம்யா! நடந்தது என்ன? நாள் 9

`தூள்’ படத்தில், "என் ஸ்வப்னா புத்திசாலிடா... அவளை யாரும் ஏமாத்த முடியாது” என்று விவேக் சொல்வது போல வெள்ளந்தியான புன்னகையுடன் இதுவரை சுற்றிக் கொண்டிருந்த ரம்யா, தனது புத்திசாலித்தனத்தைக் காட்டிய தினம் இன்று. பிக்பாஸ் வீட்டில் நடந்தது என்ன? நாள் 9

பிக்பாஸ் - நாள் 9
இந்த நிகழ்ச்சி இப்போதுதான் சற்று சூடு பிடிக்க ஆரம்பித்திருக்கிறது. அதற்கான ராஜதந்திர அஸ்திவாரத்தை ‘Eviction Free pass’ என்கிற பெயரில் இன்று போட்டார் பிக்பாஸ். இதே ரேஞ்சில் சென்றால் வண்டி நிச்சயம் பிக்அப் ஆகி விடும்.

பிக்பாஸ் வரலாற்றிலேயே இந்த ‘எவிக்ஷன் ப்ரீ பாஸ்’ என்னும் உத்தி தமிழில்தான் முதன்முறையாக அறிமுகம் ஆகயிருக்கிறதாம். தமிழ்தான் எப்போதும் முன்னோடி என்பது இதன் மூலம் நிரூபணமாகியிருக்கிறது. (ரொம்ப முக்கியம்!).

இன்னொன்று... சென்ற கட்டுரையிலேயே குறிப்பிட்டது போல் பிக்பாஸ் விளையாட்டை மிகச் சரியாக புரிந்து கொண்டு விளையாடுகிறவர்களில் பிரதானமானவர் சுரேஷ் மட்டுமே. உணர்ச்சிவசப்படாமல் கறாராக யோசித்தால் இது புரியும். இதர அனைவரும் கவனம் கலைகிறார்கள்; அல்லது எளிதில் உணர்ச்சி வசப்பட்டு விடுகிறார்கள்.

பிக்பாஸ் - நாள் 9
பிக்பாஸ் - நாள் 9
`தூள்’ படத்தில், "என் ஸ்வப்னா புத்திசாலிடா... அவளை யாரும் ஏமாத்த முடியாது” என்று விவேக் சொல்வது போல வெள்ளந்தியான புன்னகையுடன் இதுவரை சுற்றிக் கொண்டிருந்த ரம்யா, தனது புத்திசாலித்தனத்தைக் காட்டிய தினம் இன்று.

என்ன நடந்தது என்று விரிவாகப் பார்ப்போம்.

கிச்சன் ஏரியா. அங்கு சுரேஷ் இருந்தார். எனவே உத்தரவாதமாக அங்கு ஒரு பஞ்சாயத்து நிகழ்ந்தே ஆக வேண்டும். நிகழ்ந்தது. உதவி செய்து கொண்டிருந்த ஆஜித்தை சுரேஷ் ‘சுள்’ என்று ஏதோ சொல்லி விட 'போய்யா... யோவ்...' என்கிற கோபத்துடன் ஆஜித் சென்று விட்டார்.

சுரேஷிற்கு OCD என்கிற பிரச்னை இருப்பது அவருடைய அறிமுக வீடியோவிலேயே நமக்குத் தெரியும். அது போன்ற ஆட்களுக்கு தன்னைச் சுற்றிலும் பொருட்கள் இறைந்திருப்பது. அசுத்தமாக இருப்பது போன்ற ஒழுங்கீனங்கள் பிடிக்காது. அவர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தும் விஷயம்.

சராசரி நபர்களுக்கே கூட இது மெலிதாக உண்டு. நம்மிடம் ஒருவர் ‘ஓசி’ பேப்பர் வாங்கி வாசித்துவிட்டு திருப்பித் தரும் போது கசங்கலான பக்கத்துடன் கசமுசாவென்று ஒழுங்கில்லாமல் திருப்பத் தந்தால் நமக்கு ‘சுர்’ரென்று மண்டையில் ஏறுமல்லவா? சிலருக்கு இந்த உணர்வு அதிகமாக இருக்கும். சுரேஷ் இந்த வகை என்று தோன்றுகிறது. சமையல் அறையில் நிகழும் ஒழுங்கீனங்களை அவரால் சகித்துக் கொள்ள முடியவில்லை. இதுதான் கிச்சன் ஏரியாவில் அதிக அளவிலான பஞ்சாயத்துக்கள் நிகழ காரணம் என்று நினைக்கிறேன்.

சுரேஷிடம் கோபித்துக் கொண்ட ஆஜித், அங்கேயே நின்று சண்டை போடாமல் தன்னை சமநிலைப்படுத்திக் கொள்ள இடத்தை விட்டு அகன்றது புத்திசாலித்தனம். பிறகு பாலாவிடம் சென்று, ‘எனக்கு கோபமே வராதுங்க... என்னையே கோபப்பட வெச்சுட்டாரு’ என்று ஆஜித் அனத்த, பாலா அவரைச் சமாதானப்படுத்தினார். டிராகுலாக்களின் குணம் அது. அது யாரைக் கடிக்கிறதோ அவரும் டிராகுலா ஆகிவிடுவார். ஆஜித்தின் நிலைமை அப்படியாகி விட்டது.

பிக்பாஸ் - நாள் 9
பிக்பாஸ் - நாள் 9
அடுத்து ஒரு முக்கியமான அறிவிப்பை வெளியிட்டார் பிக்பாஸ். ‘Eviction Free pass’. மக்களின் முடிவை மாற்றக்கூடிய துருப்புச் சீட்டு இது. இதை வெல்பவர், தான் வீட்டை விட்டு வெளியேறும் சூழல் வந்தால் இதை வைத்து தன்னைக் காப்பாற்றிக் கொள்ளலாம்.

இந்த ஃப்ரீ பாஸ் விளையாட்டை, ‘தகுதியில்லாதவர்கள்’ என்று முன்னர் அறிவிக்கப்பட்ட எட்டு பேர் மட்டுமே விளையாட முடியும்.

‘அதென்ன? தகுதியில்லாதவர்கள்தான் இதை விளையாடி தன்னைக் காப்பாற்றிக் கொள்ள முடியுமா எனில் தகுதியுள்ள இதர எட்டு நபர்கள் இதைக் கைப்பற்றி பிறகு உபயோகப்படுத்த முடியாதா? தகுதியுள்ளவர்களுக்குத்தானே முன்னுரிமை தரப்பட வேண்டும்?’ என்று நமக்கு லாஜிக் கேள்விகள் தோன்றலாம். தோன்றட்டும்.

ஆனால் - ‘எதிர்பாராததை எதிர்பாருங்கள்’ என்பதுதான் பிக்பாஸின் தாரக மந்திரம். அது பிக்பாஸ் வீடு. எனவே மாற்றுக் கருத்துக்கள் இருந்தாலும் அங்குள்ள ‘கோக்குமாக்கான’ விதிகளை நாம் ஏற்றுக் கொண்டுதான் ஆக வேண்டும். (நம் ஜனநாயகம் மாதிரி!).

எட்டு பேரும் ஓர் அறையில் சுற்றி அமர வேண்டும். ‘இவர் வெளியேற்றப்பட வேண்டும்’ என்று ஒருவரைச் சுட்டிக் காட்டி மற்றவர்கள் நாமினேட் செய்யலாம். அப்படி சுட்டிக் காட்டப்பட்டவர் “அந்த சீட்டு தனக்கு எத்தனை முக்கியமானது” என்பதை விவரிக்கும் அதே சமயத்தில் இதர நபர்களை நிராகரிக்கும் காரணங்களையும் கூறலாம். அலார்ம் மணி அடித்தவுடன் வாதத்தில் தோற்றுப் போனவர் அறுபது விநாடிக்குள் அறையிலிருந்து வெளியேற வேண்டும்.

பிக்பாஸ் - நாள் 9
பிக்பாஸ் - நாள் 9
இது ஒரு ‘மைண்ட் கேம்’. நீங்கள் எந்த அளவிற்கு தன்னம்பிக்கையாகவும் உறுதியாகவும் தர்க்கத் திறனுடனும் சிந்தித்து உணர்ச்சிவசப்படாமல் பேசுகிறீர்களோ, அந்த அளவிற்கு வெற்றியை நோக்கி நகர முடியும்.

இது ஏதோ பிக்பாஸ்ஸில் நிகழும் விளையாட்டுதானே என்று எண்ணி விட வேண்டாம். நம் அன்றாட வாழ்க்கையிலேயே பயன்படக்கூடிய விளையாட்டு இது. பணிச்சூழலில் உள்ள ஒரு கடினமான நேர்காணல், சிக்கலான மனிதர்களுடன் கூடிய சந்திப்பு போன்ற சூழல்களை எதிர்கொள்ளும் போது அதை மனஉறுதியுடன் எதிர்கொள்ள இந்தப் பயிற்சி உதவும். உணர்ச்சிவசப்பட்டு வார்த்தைகளை விட்டு விட்டால் நம் தோல்விக்கு நாமே அஸ்திவாரம் போடுகிறோம் என்று பொருள்.

“இந்த கேம்ல கேப்டனும் உண்டுதானே?” என்று சுரேஷை கோத்து விசாரித்து விட்டு ‘அப்பாடா’ என்று ஆறுதல் அடைந்தார் அனிதா.

ஆட்டம் துவங்கியது. அந்தக் கூட்டத்தின் நெறியாளர் போல தன்னையே நியமித்துக் கொண்டு தன்னம்பிக்கையுடன் உரையாடத் துவங்கினார் சுரேஷ்.

உண்மையில் இதை மற்றவர்கள் ஏற்றுக் கொள்ளத் தேவையில்லை. ஆனால் அப்படியொரு பிம்பத்தை சாமர்த்தியமாக ஏற்படுத்திக் கொண்டார் சுரேஷ். அவருடைய வயது, அனுபவம், ஆளுமைத்திறன், வியூகம் போன்றவையும் இதற்கு காரணம்.

இது ஒரு போர். எதிரே நிற்பவர்கள் நெருங்கிய உறவினர்களாக இருந்தாலும் போரிட்டுதான் ஆக வேண்டும். அதுவே போர் தர்மம். இந்தச் சூழலை சுரேஷே துவக்கத்தில் தெளிவாக விளக்கி விட்டார்.

பிக்பாஸ் - நாள் 9
பிக்பாஸ் - நாள் 9

சுரேஷ் தன் வாதத்தை ஆரம்பித்தார். "இந்த அறையில் இருப்பவர்கள் மற்றும் வீட்டின் உள்ளே இருப்பவர்கள் ஆகிய அனைத்து பதினாறு நபர்களின் கருத்துக்களின் அடிப்படையில்தான் நாமினேட் வரிசை உருவாகியிருக்கிறது. எனவே அந்த மெஜாரிட்டி நிலைக்கு மரியாதை செலுத்தும் வகையில் யார் அதிக எண்ணிக்கையில் நாமினேட் ஆகியிருக்கிறார்களோ... அந்த வரிசையின் படி ஆட்களை வெளியேற்ற முடிவு செய்யலாம்" என்றார்.

சுரேஷின் இந்தக் கருத்து, அந்த அறையில் இருந்த பெரும்பாலோனோருக்கு ஏற்புடையதாக இருந்ததால் ஒப்புக் கொண்டார்கள். சனத்தைத் தவிர. ஏனெனில் அவர்தான் எவிக்ஷன் லிஸ்ட்டின் முதலிடத்தில் இருந்தார்.

‘நான் ஒரு ராசியில்லா ராஜா.. என் வாசத்திற்கில்லை இது வரை ரோஜா’ என்று அவர் தன்னைக் காப்பாற்றிக் கொள்ளும் நோக்கில் பரிதாபக் கதைகளை வீசினாலும் அது எடுபடவில்லை. எனவே, ‘எப்படியாவது நாசமாப் போங்க’ என்று மூக்கைச் சிந்திக் கொண்டே வெளியேறினார்.

வெளியே சென்று தனிமையில் துயரத்துடன் நின்று கொண்டிருந்த அவரை அனிதா சமாதானப்படுத்த “ஏதோ தான்தான் பிக்பாஸ்-ன்ற மாதிரியே சுரேஷ் பேசறாரு” என்றார் சனம். அவ்வாறான பிம்பத்தைக் கட்டமைத்தது சுரேஷ். அதற்கு ஏமாறாமல் இருப்பதுதான் நம் சாமர்த்தியம்.

மனதளவில் யார் சோர்ந்து போனாலும் ஆம்புலன்ஸ் போல உடனே விரைந்து சுயமுன்னேற்ற வகுப்பெடுக்கும் ஆரி, “உன்னை யாரு பேச வேண்டாம்னு சொன்னாங்க? எப்படி இருந்தாலும் யாராவது ஒருத்தர்தான் இந்த வீட்ல கடைசில இருக்கப் போறாங்க" என்றெல்லாம் சமாதான தத்துவம் பேச, மூக்கை உறிஞ்சிக் கொண்டே சற்று ஆறுதல் அடைந்தார் சனம்.

சுரேஷின் அடுத்த டார்கெட் ஷிவானி. ஏனெனில் எவிக்ஷன் லிஸ்ட்டில் அவர்தான் அடுத்தது. "உனக்கென்னம்மா... இன்ஸ்டாகிராம்ல நாலு லட்சம் ஃபாலோயர்ஸ் இருக்காங்க... நீ எங்க போனாலும் பொழச்சுப்பே" என்பது போன்ற அஸ்திரத்தை சுரேஷ் வீச மற்றவர்களும் அதையே பின்பற்றினார்கள்.

“நானும் கஷ்டப்படற பொண்ணுதான். சரி.. போங்க. நான் தனியாளு இல்ல.. என் பின்னாடி ஒரு கூட்டமே இருக்கு.. அவங்க என்னைக் காப்பாத்துங்க..” என்று கெத்தாக வெளியேறினார் ஷிவானி. (ஆர்மிக்காரவுகளே.. நோட் பண்ணி வெச்சுக்கங்க. கைவிட்டுடாதீங்க..’)
பிக்பாஸ் - நாள் 9
பிக்பாஸ் - நாள் 9

லிஸ்ட்டில் அடுத்தது சம்யுக்தா. “நான் ஒரு தாய். தாய் என்கிற உறவுதான் உலகத்தில் உன்னதமானது" என்றெல்லாம் வழக்கம் போன்ற சென்டி ஆயுதத்தை சம்யுக்தா எடுத்து வைத்தாலும் அது செல்லுபடியாகவில்லை. "பிக்பாஸே வந்தா கூட நான் விட்டுத்தர மாட்டேன்” என்று கல்லுளிமங்கனாக உறுதியாக நின்றார் சுரேஷ். எனவே அந்த உன்னதமான தாயும் பரிதாபத்துடன் வெளியேற நேர்ந்தது. வெளியே சென்ற சம்யுக்தா ‘Survival of the fittest’ என்று இந்த விளையாட்டைப் பற்றி சொன்னது திருவாசகம்.

அடுத்த டார்கெட் ரேகா. ‘உங்களுக்கென்னம்மா... பெரிய ஆக்ட்ரஸ்... நிறைய சாதிச்சிட்டீங்க... ‘கடலோரக் கவிதைகள்’ டிவிடியை வெச்சு வீட்ல நிம்மதியா சினிமா பார்க்காம... ஏன் இங்க வந்து கஷ்டப்படறீங்க. நாங்க வளர்ற பசங்க... எங்களுக்கு வாய்ப்பு தாங்க” என்பது போல் இதர போட்டியாளர்கள் தங்கள் வாதங்களை வைத்தார்கள்.

"இந்தம்மா ரொம்ப தயாரா வந்திருக்காங்க. இருநூறு நாளைக்கு தேவையான டிரஸ் இப்பவே ரெடியா இருக்கு. பிக்பாஸே வீட்டை காலி செஞ்சாலும் இவங்க போக மாட்டாங்க!"
என்று ரேகாவைப் பற்றி ஜாலியாக சொன்னார் சுரேஷ்.

“யாருக்கு வேண்டுமானாலும் விட்டுக்கொடுப்பேன்... இந்த சுரேஷிற்கு மட்டும் விட்டுத்தர மாட்டேன்...” என்று சுரேஷை ஜாலியாக பழிவாங்கும் நோக்கில் ரேகா பேசி விட, ‘தவளையும் தன் வாயால் கெடும்’ கதையாக அது மாறிப் போனது. எனில் அவர் வெளியேறத் தயாராக இருக்கும் மனநிலையில் இருக்கிறார் என்பது அவர் வாயாலேயே வந்து விட்டது. “நான் இங்க ரொம்ப நாள் இருக்க மாட்டேன்னு ரேகாம்மா... வந்த நாள் முதலே சொல்லிட்டு இருக்காங்க” என்று ரம்யா போட்ட தூபமும் வேலை செய்தது.

பிக்பாஸ் - நாள் 9
பிக்பாஸ் - நாள் 9

அறுபது விநாடிகளுக்கான அலார்ம் ஆரம்பிக்க அப்போதும் பிடிவாதமாக அமர்ந்திருந்த ரேகா ‘டைம் முடியப் போகுது... போங்க’ என்று மற்றவர்கள் பதட்டத்தை ஏற்படுத்தியவுடன் “என்னோட பாயிண்ட்டை ரிஜிஸ்டர் பண்ணிட்டேன்... பார்த்துக்கங்க” என்றபடி வெளியேறினார் ரேகா. வெளியேறாமல் அப்படியே அமர்ந்திருந்தால் என்னதான் நடக்கிறது என்பதை அவர் பார்த்திருக்க வேண்டும்.

நம் அன்றாட நடைமுறையிலும் இந்த உத்தியைப் பயன்படுத்துபவர்கள் நிறைய. ஒரு செயற்கையான பதற்றத்தை ஏற்படுத்தி நம்மை யோசிக்க விடாமல், அவர்களின் வியூகத்திற்குள் நம்மை தள்ளி விட்டு விடுவார்கள். ‘இந்த அருமையான ஆஃபர் இன்னமும் இரண்டு மணி நேரத்திற்குத்தான்’ என்று நம்மை அவசரத்திற்குள் தள்ளுகிற வணிக உத்திகளும் இப்படித்தான்.

இப்போது அந்த அறையில் எஞ்சியவர்கள் கேப்ரியல்லா, ஆஜித், ரம்யா மற்றும் சுரேஷ்.

நெருக்கடி அதிகரிக்கும் போது சிலருக்கு உள்ளே இருக்கிற defensive mechanism துரிதமாக வேலை செய்யும். அது போன்ற மணி இப்போது கேப்ரியல்லாவிற்குள் அடிக்க ஆரம்பித்தது. “ஆமாம்... நாம ஏன் நாமினேஷன் ஆர்டர்ல போகணும்... அப்படி ஏதாவது விதியிருக்கா... என்ன...” என்று லேட்டாக யோசித்து ஒரு கேள்வியை கேட்க அதற்கும் ஒரு பதிலை தயாராக வைத்திருந்தார் சுரேஷ்.

“நீ கேட்டது கரெக்ட்டுதாம்மா ராஜாத்தி... ஆனா இதுவரைக்கும் அப்படித்தானே போயிட்டு இருந்தது. இப்ப திடீர்னு மாத்தினா... வெளியே போனவங்களை ஏமாத்தினது போல் ஆயிடும். நேர்மையா இந்த விளையாட்டை ஆடுவோம்’ என்று லாஜிக் பூர்வமான வாதத்தை வைக்க அதற்கு பதில் இல்லை. ‘நானொரு ராசியில்லா ராஜா’ பாடலை கண் கலங்க கேபி பாடினாலும் அதற்கு யாரும் உருகவில்லை. ‘நான் உன்னை விடவும் பாவம்’ என்று மல்லுக்கட்டினார் ரம்யா.

பிக்பாஸ் - நாள் 9
பிக்பாஸ் - நாள் 9

‘என்ன எழவு கேம் இது. ஒண்ணுமே புரியலை’ என்று சிணுங்கியபடி வெளியேறினார் கேபி.

ஆக மீதம் இருந்தவர்கள்... ஆஜித். ரம்யா. மற்றும் சுரேஷ். ‘என் ஸ்வப்னா புத்திசாலிடா... அவளை யாரும் ஏமாத்த முடியாது’ என்கிற ஐடியாவிற்குள் இப்போதுதான் நுழைந்தார் ரம்யா.

“ஆமாம். நீங்கதான் எவிக்ஷன் லிஸ்ட்லயே இல்லையே. அப்புறம் என்ன... நாங்க ரெண்டு பேரும் உங்களை இப்ப நாமினேட் பண்றோம்... நீங்க எங்களை கன்வின்ஸ் பண்ணுங்க’ என்று சுரேஷை நோக்கி தன் ஆயுதத்தை வீசிய ரம்யா... ‘என்னடா தம்பி சொல்றே?” என்று ஆஜித்தை துணைக்கு அழைக்க, ஒன்றும் புரியாமல் மலங்க மலங்க விழித்த ஆஜித், "இது பச்சைக்கலர் ஸ்டராட்டஜியா இருக்கே” என்று வெள்ளந்தியாக கேட்க “அடப்பாவி. இதுவே இப்பத்தான் உனக்கு புரியுதா?" என்றார் சுரேஷ்.

ஆனானப்பட்ட சுரேஷையே ரம்யா மடக்கி கேள்வி கேட்டதால் உள்ளே இருந்த மக்கள் மிகுந்த உற்சாகமாகி ‘வாடி ராஜாத்தி...’ என்கிற பாடலை கோரஸாக பாட ஆரம்பித்தார்கள்.

அது சரி, தனியறையில் நடக்கும் இந்த விவாதம், வீட்டினுள் இருக்கும் மக்களுக்கு எப்படித் தெரிந்தது? இங்குதான் ஒரு டிவிஸ்ட் வைத்தார் பிக்பாஸ். உள்ளே நடக்கும் உரையாடல்களை வீட்டு மக்களுக்கும் தெரியும் படி ‘பப்பரப்பே’ என்று டிவியில் ஒளிபரப்பினார்.

"நீ படிச்ச ஸ்கூல்ல. நான் ஹெட்மாஸ்டர்டா” என்று சுரேஷை நோக்கி பிக்பாஸ் பஞ்ச் டயலாக் சொன்னதைப் போலவே இந்த நிகழ்வு அமைந்தது.
பிக்பாஸ் - நாள் 9
பிக்பாஸ் - நாள் 9

"நான் உடல்ரீதியாக பலவீனமானவன். என்னால் மற்றவர்களைப் போல் டாஸ்க் செய்ய முடியாது. மனதளவிலும் அத்தனை ஸ்ட்ராங்க் என்று சொல்ல முடியாது. இந்த வீட்டில் என்னை கார்னர் பண்றாங்க.. இங்க குரூப்பிஸம் இருக்கு” என்று பல புகார்களைச் சொல்லி தன்னை நிலைப்படுத்திக் கொள்ள சுரேஷ் முயன்றாலும் ரம்யா தன்னை சாமர்த்தியமாக கார்னர் செய்ததால், “சூப்பர்... உங்களை எதிர்த்து நான் இதுவரைக்கும் தாக்குப் பிடித்ததையே வெற்றியாக நினைக்கிறேன். நான் ரொம்ப எஞ்சாய் பண்ணி இந்த விளையாட்டை விளையாண்டேன். நேர்மையா விளையாடினேன்னு நெனக்கறேன்” என்று சதுரங்க ஆட்டத்தில் தோற்றுப் போன சக ஆட்டக்காரர் மாதிரி ஸ்போர்ட்டிவ்வாக வெளியேறினார் சுரேஷ்.

ஆம். சுரேஷ் குறிப்பிட்டது சரிதான். அந்த ஆட்டத்தின் விதிகளையும் பிக்பாஸ் போன்ற ரியாலிட்டி ஷோக்களின் போக்கையும் சரியாக உணர்ந்து கொண்டு புத்திசாலித்தனமாக தன் அசைவுகளை செயல்படுத்திய சுரேஷை பாராட்டியே ஆக வேண்டும்.

அறிவுபூர்வமாகவும் உணர்ச்சிவசப்படாமலும் பேசும் ஆரி ‘சூப்பரா விளையாடறீங்க சார்’ என்று பிறகு சுரேஷை பாராட்டியதே இதற்கு உதாரணம். “வேற லெவல் ஸ்டராட்டஜி சார். உங்களுடையது" என்று ரம்யாவும் வாய் நிறைய புன்னகையுடன் சுரேஷை வழியனுப்பி வைத்தார். அவரை வெளியே அனுப்பியதில் ரம்யாவிற்கு அத்தனை மகிழ்ச்சி.

வெளியே வந்த சுரேஷிற்கு சில பஞ்சாயத்துக்கள் காத்திருந்தன. (பஞ்சாயத்திற்கே பஞ்சாயத்தா?!). டிவியில் பார்த்த காட்சிகளை வைத்து மக்கள் உணர்ச்சிக் கொந்தளிப்பில் இருந்தார்கள். ஆனால் சுரேஷின் தரப்பில் பெரிதாக எந்தத் தவறுமில்லை என்பதே என் பார்வை. அதைப் பற்றி பின்னர் விளக்கமாக பார்ப்போம்.

இப்போது ஆஜித்திற்கும் ரம்யாவிற்கும் இடையில்தான் போட்டி. "நான் வாழ்க்கைல நிறைய கஷ்டங்களைப் பார்த்துட்டேன். வளர வேண்டிய பையன்" என்கிற பரிதாபக் கதையை முன்வைத்த ஆஜித் ‘தனக்கு அந்த டிக்கெட் எத்தனை முக்கியமானது என்பதை உருக்கமாக தெரிவித்தார்.

"நானும் அப்படித்தான். பிக்பாஸ் சீஸன் ஒண்ணுல பார்வையாளரா உட்கார்ந்திருந்தேன். சீஸன் 3-க்கு டிரை பண்ணேன். கிடைக்கலை. ஒரு நடிகையாக சில படங்களில் நடித்திருந்தாலும் பெரிய அளவில் வெற்றி இல்லை. பிக்பாஸ் எனக்கு கிடைச்சிருக்கும் பெரிய வாய்ப்பு" என்று தன் தரப்பு வாதத்தை வைத்த ரம்யா, “ஆனா. என்னை விடவும் நீ சின்ன பையன். வளர வேண்டியவன். உன்னை ஜெயிச்சுட்டு நான் வெளியே போனா... சந்தோஷமா இருக்க மாட்டேன்" என்று ஆஜித்திற்கு விட்டுக் கொடுத்தார்.

பிக்பாஸ் - நாள் 9
பிக்பாஸ் - நாள் 9

முன்பே சொன்னபடி இது ஒரு போர். உணர்ச்சிவசப்படாமல் விளையாடுவது முக்கியம் என்றாலும் தன்னுடைய மனச்சாட்சியையும் மென்மையான உணர்ச்சிகளையும் ஒட்டுமொத்தமாக கழற்றி வைத்து விட்டு செயல்படுவது பலரால் முடியாத விஷயம். அந்த நோக்கில் நேர்மையாக செயல்பட்டார் ரம்யா.

இன்னொரு வகையில் இதை ரம்யாவின் உத்தியாகவும் சொல்ல முடியும். ‘சின்னப் பையனைப் போய் ஜெயிச்சிட்டு வந்ததுப்பா... இந்தப் பொண்ணு’ என்றுதான் மக்கள் கருதுவார்கள். அதுவே விட்டுக்கொடுப்பதின் மூலம் மக்களின் அனுதாபத்தையும் வரவேற்பையும் வரும் வாரங்களில் மக்களின் ஆதரவில் ரம்யா பெற்று வெற்றி பெறக்கூடும். இப்படி ஒரு கல்லில் இரண்டு மாங்காயை ரம்யா அடிக்க முயன்றிருக்கலாம்.
ஆக ஆஜித்திற்கு அடித்தது அந்த அதிர்ஷ்ட லாட்டரி!

இப்போது சுரேஷிற்கு எதிராக நடந்த பஞ்சாயத்துக்களைப் பற்றிப் பார்ப்போம். வந்தநாள் முதல் கூலாக இருந்த ரியோ. இப்போது தனது கோப முகத்தை காண்பிக்க ஆரம்பித்திருக்கிறார். இதுதான் அவர் மறைக்க விரும்பிய விஷயம் போலிருக்கிறது. பிக்பாஸ் போன்ற போட்டிகளில் ஒரிஜினல் முகம் பெரும்பாலும் அம்பலப்பட்டுத்தான் ஆகும். அந்த வகையில் ரியோவின் முகமூடி கழலத் துவங்கியிருக்கிறது.

“இங்க குரூப்பிஸம் இருக்குன்னு சுரேஷ் எப்படிச் சொல்லலாம். நாம எல்லோருமே இங்க விளையாடத்தான் வந்திருக்கோம். அது வேற விஷயம்... ஆனா விளையாட்டைத் தாண்டி நமக்குள்ள ஒரு பாசம் இருக்கு... அதை அவர் கொச்சைப்படுத்தறார்" என்பது போல் ரியோ பிரசங்கம் செய்தார். சுரேஷ் வீட்டிற்குள் வந்த போதும் தனது ஆத்திரத்தை வெளிப்படுத்தினார்.

பிக்பாஸ் - நாள் 9
பிக்பாஸ் - நாள் 9
ஒன்றுக்கு மேற்பட்ட நபர்கள் ஒரு சூழலில் கூடும் போது அங்கு குழு மனப்பான்மை தன்னிச்சையாக உருவாகும். விளையாட்டிற்குள்ளும் அந்த குழு மனப்பான்மை செயல்படும். மனித வரலாற்றில் எத்தனையோ முறை நிரூபிக்கப்பட்ட விஷயம் இது. எனவே ரியோவின் கோபமும் வாதமும் வீண்.

அடுத்த நபர் வேல்முருகன். ‘வீட்டிற்குள் குழு மனப்பான்மை இருக்கிறது’ என்பதைச் சுட்டிக் காட்டுவதற்காக வேட்டி உதாரணத்தை சொன்னார் சுரேஷ். அது உள்ளே ஒளிபரப்பாகும் என்று அவர் எதிர்பார்த்திருக்க மாட்டார். ‘தனக்கு எதிராக ஒரு அணி வீட்டில் உருவாகியிருக்கிறது, வேல்முருகனும் அதைக் கண்டு அஞ்சுகிறார்’ என்பதைச் சுட்டிக்காட்டவே ‘வேட்டி உதாரணம்’ சுரேஷால் சொல்லப்பட்டது.

ஆனால் ‘வேட்டி தந்ததை பொதுவில் சொல்லி விட்டார்’ என்கிற தன்மான உணர்ச்சி வேல்முருகனுக்குள் பொங்கி விட்டது. வீட்டிற்குள் அடித்துக் கொண்டிருந்த ‘சுரேஷ் எதிர்ப்பு அலை’யும் அவருக்குள் பாதிப்பை ஏற்படுத்தியிருக்க வேண்டும். எனவே தனது ஆட்சேபத்தை சுரேஷிடம் வெளிப்படுத்தினார்.

வேல்முருகனுக்கு எந்த இடத்தில் கோபம் தலைக்கேறியது என்பதையும் பார்க்க வேண்டும். முதலில் சுரேஷூடன் இயல்பாக பேசிக் கொண்டிருந்த வேல்முருகன், தன்னுடைய கேள்விக்கு சரியாக பதில் அளிக்காமல் சுரேஷ் அகன்ற போதுதான் வேல்முருகனுக்கு கோபம் அதிகரித்தது. ஆக வேட்டி பிரச்னை கூட அடுத்துதான். ‘நானா உங்க கிட்ட வேட்டி கேட்டேன்’ என்று தன் கோபத்தை வேறு விதமாக வெளிக்காட்டினார். தன்னை மதித்து பேசாமல் நகர்ந்ததால்தான் வேல்முருகனுக்கு கோபம் அதிகமாகியது.

மனஉறுதியுடன் சாமர்த்தியமாக நிற்கிறவர்களைக் கண்டு பலவீனமான, நெகிழ்வான மனதுள்ளவர்களுக்கு கோபம் வருவது இயல்பு. நம் அன்றாட நடைமுறையிலேயே நாம் நிறையப் பார்க்கலாம். வீட்டின் இதர போட்டியாளர்களுக்கும் சுரேஷின் மீது கோபம் வருவது இதனால்தான்.

பிக்பாஸ் - நாள் 9
பிக்பாஸ் - நாள் 9

ஆனால் பிக்பாஸ் போன்ற போட்டிகளுக்கு இந்தக் குணாதிசயம் அவசியமானது. அதனால்தான் இந்தக் கட்டுரையின் துவக்கத்திலேயே சொன்னேன். ‘இந்த விளையாட்டை சரியாகப் புரிந்து கொண்டு ஆடுகிறவர் சுரேஷ்’ என்று.

"பத்த வெச்சிட்டியே பரட்டை... நன்றி” என்று கேமராவைப் பார்த்து நமட்டுச் சிரிப்பு சிரித்தார் சுரேஷ். இந்த வகையில் அவர் ஒரு சதுரங்க ஆட்டத்தை ஆடுவது... ‘இதர போட்டியாளர்களுடன் அல்ல... பிக்பாஸூடன்’... என்பது உணர்ச்சிவசப்படாமல் யோசித்தால் புரியும்.

இது மட்டுமல்ல, தன் சாமர்த்தியத்திற்காக தன்னை மட்டும் மெச்சிக் கொள்ளும் மனிதராக அவர் இல்லை. தன்னை வெல்பவர்களை பாராட்டும் ஸ்போர்ட்ஸ்மேன்ஷிப்பும் அவரிடம் இருக்கிறது. தனக்கு ‘செக்மேட்’ வைத்த ரம்யாவையும் அதற்கு காரணமாக இருந்த கேபியையும் அவர் பாராட்டத் தவறவில்லை. ஆஜித்திற்கு பாஸ் அளிக்க தன்னை அழைத்தபோது ரம்யாவையும் கேபியையும் கூட அழைத்து அங்கீகாரம் தர முயன்றது இதற்குச் சான்று.

சுரேஷ் அடிப்படையில் ஓர் இம்சைவாதியாக இருக்கலாம். பிறருக்கு பயங்கர எரிச்சல் தரும் நபராக இருக்கலாம். ஆனால் அவரின் நோக்கில் இந்த விளையாட்டை சரியான திசையில் நகர்த்திச் செல்லும் நபராக இருக்கிறார். அதற்கான உத்திகளை சிறப்பாக கையாள்கிறார்.

சரி... ஆஜித் ‘எவிக்ஷ்ன் ப்ரீ பாஸை’ வென்றாலும் அங்கும் ஒரு டிவிஸ்ட் வைத்தார் பிக்பாஸ். அது ஒரு முறை மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும். பத்தாவது வாரம் வரை மட்டுமே செல்லுபடியாகும். தனக்கோ அல்லது மற்றவர்களுக்கோ இந்த பாஸை ஆஜித் பயன்படுத்தலாம்.

பிக்பாஸ் - நாள் 9
பிக்பாஸ் - நாள் 9

ஆனால் – அந்தச் சீட்டை பத்திரமாக வைத்துக் கொள்ள வேண்டியது ஆஜித்தின் பொறுப்பு. வேறு எவராவது அந்தச் சீட்டை எடுத்து விட்டால் – அதாவது திருடி விட்டால் – எடுத்தவர் அதைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

எனவே இந்தப் போட்டியில் வெற்றி பெற்றாலும் அந்த சந்தோஷத்தை ஆஜித்தால் முழுமையாக அனுபவிக்க முடியாது. ‘புதையல் காக்கும் பூதம்’ போல அந்தச் சீட்டை பத்திரமாக பாதுகாக்க வேண்டும். முக்கியமாக சுரேஷ் போன்ற நபர்களிடமிருந்து.

‘இப்படியா ஒரு ஆளை டிசைன் டிசைனா படுத்தி எடுப்பாங்க?' என்று கேட்கிறீர்களா? அதுதான் ‘பிக்பாஸ்’.