Published:Updated:

சிங்கப்பெண்கள் ஷிவானி, ரம்யா... பாலாஜி - ஆரி மட்டும்தான் கன்டென்ட்டா?! பிக்பாஸ் – நாள் 96

பிக்பாஸ் – நாள் 96

இந்த சீஸனின் மிக அருமையான காட்சிக்கோர்வையாக இது இருக்கும் என்று தோன்றுகிறது. ‘நன்றி பிக்பாஸ். நன்றி மக்களே’ என்று நெகிழ்ந்தார் ரம்யா. ஷிவானியும் கண்கலங்கினார். பிக்பாஸ் வீட்டில் நடந்தது என்ன? – நாள் 96

Published:Updated:

சிங்கப்பெண்கள் ஷிவானி, ரம்யா... பாலாஜி - ஆரி மட்டும்தான் கன்டென்ட்டா?! பிக்பாஸ் – நாள் 96

இந்த சீஸனின் மிக அருமையான காட்சிக்கோர்வையாக இது இருக்கும் என்று தோன்றுகிறது. ‘நன்றி பிக்பாஸ். நன்றி மக்களே’ என்று நெகிழ்ந்தார் ரம்யா. ஷிவானியும் கண்கலங்கினார். பிக்பாஸ் வீட்டில் நடந்தது என்ன? – நாள் 96

பிக்பாஸ் – நாள் 96
கடந்த சீஸன்களின் இறுதிக்கட்டங்களில் போட்டியாளர்கள் கடுமையான டாஸ்க்குகளில் அவதிப்பட்டதைப் போல இந்த சீஸனின் போட்டியாளர்கள் கஷ்டப்படவில்லை. கொடுத்து வைத்தவர்கள். மிக எளிமையான டாஸ்க்குகள்தான்.

கயிற்றை நீண்ட நேரம் பிடித்துக் கொண்டிருக்க வேண்டும் என்கிற டாஸ்க்கில் கூட தங்களுக்குள் எழுந்த அகங்காரம் காரணமாக ஆண்கள் கைவிட்டுச் செல்லும் போது மனஉறுதியுடன் பெண்கள் தாக்குப் பிடித்துக் கொண்டிருப்பது உண்மையிலேயே பாராட்டுக்குரியது. உடல் வலிமையை விடவும் மனவலிமையே பெரிது என்பதும், பெண்களுக்கு அது அதிகம் உண்டு என்பதும் இன்னொரு முறை நிரூபணமானது.

சூழலின் பின்னணிக்கு ஏற்றபடி டைமிங்காக ‘சிங்கப்பெண்ணே’ பாடலை பிக்பாஸ் போட, களத்தில் இருந்த இரண்டு பெண்களையும் சக ஆண்கள் போற்றிப் பாராட்டி மகிழ்ந்ததும் பெண்கள் அதற்கு உணர்ச்சிவசப்பட்டதுமான காட்சியானது உண்மையிலேயே அற்புதமானது. ஆண் – பெண் என்கிற பாலின பேதங்கள் மறைந்து பாலின சமத்துவம் மலர வேண்டும் என்பதற்கான மாற்றத்தின் உதாரணக்காட்சியாக இருந்தது.

நான் கூட பிரமோவைப் பார்த்து விட்டு வலிதாங்காமல்தான் ஷிவானியும் ரம்யாவும் அழுகிறார்கள் என்று நினைத்து விட்டேன். பந்தை ஒருவரின் மீது ஒருவர் எறிந்து கொள்ளும் குடுமிப்பிடிச்சண்டை மறுநாள்தான் வரும் போல் இருக்கிறது.

பிக்பாஸ் – நாள் 96
பிக்பாஸ் – நாள் 96

ஓகே... 96-வது நாளில் என்ன நடந்ததென்று பார்ப்போம்.

‘லெட் மி டெல் எ குட்டி ஸ்டோரி’ பாடலுடன் பொழுது விடிந்தது. விஜய் ரசிகையான ரம்யா எக்ஸ்ட்ரா மகிழ்ச்சியடைந்திருப்பார். ‘டிசைன் டிசைனா ப்ராப்ளம் வில் கம் அண்ட் கோ’ என்று விஜய் பாடுவது நல்ல டைமிங். (50 சதவீத இருக்கைகளுக்குத்தான் அனுமதியாமே?!).

விடிய விடிய நீதி சொன்ன டாஸ்க், விடிந்தவுடன் மறுபடியும் துவங்கியது. ‘நிலையிற் பிரியேல்’ என்பதை எல்கேஜி குழந்தை மாதிரி தத்தி தத்தி வாசித்தார் பாலாஜி. ஆரி அதற்கு பொருள் சொன்னார். ‘உன்னுடைய நல்ல நிலையிலிருந்து என்றும் தாழ்ந்து விடாதே’. ‘அப்ப உங்களுக்குத் தர்றேன்’ என்று பஞ்சாயத்தை மங்கலகரமாகத் துவங்கினார் பாலாஜி.

‘சமூக அக்கறை உள்ளிட்ட நல்ல விஷயங்களைச் செய்யும் ஆரி அதைப் பின்பற்ற வேண்டும்’ என்ற பாலாஜி ‘வெதை நான் போட்டது’ என்று ஆரியைப் பாராட்டினார். ரியோவும் அதை வழிமொழிந்தார். “உன் கரியரை முடிவு பண்ணிக்கோன்னு வந்த மொத நாள்ல சொன்னேன்" என்று கேபிக்கு இந்தப் பட்டத்தை சூட்டினார் ஆரி. ‘ஃபைனல்ல இருக்கணும்’ என்று சொல்லி ரம்யா, ரியோவிற்கு வழங்கினார். இறுதியில் கேபிக்கு இது பொருத்தப்பட்டது.

‘வஞ்சகம் பேசேல்’ என்பது அடுத்த வாக்கியம். இதில் பாலாவை பலரும் குறிப்பிட்டார்கள். ‘என்னை Safe Game’ன்னு சொன்னாங்க’ என்று ஆரம்பித்து ரம்யாவைப் பற்றி ஆரி குறிப்பிடும்போது அவரது பேச்சை ரம்யா இடைமறிக்க, "நான் பேசும் போது குறுக்கே பேசாதீங்க..” என்று ஆரி சூடானார்.

“உங்க மேல குறைகள் சொன்னால் முதலில் அதை கவனிக்கப் பழகுங்க. அதை நீங்க ஏத்துக்கணும்னு கூட அவசியமில்லை. அதுல நியாயமில்லைன்னா நீங்க ஒதுக்கிடலாம்” என்று ஆரி சொல்வது நல்ல விஷயம். ஆரியே முதலில் அதைப் பின்பற்றுகிறார் என்பதால் அதைச் சொல்லும் தகுதி அவருக்கு உண்டு.

பிக்பாஸ் – நாள் 96
பிக்பாஸ் – நாள் 96

ஆனால் – இதில் இன்னொரு பரிமாணமும் உள்ளது. ‘இது என் கருத்து. எனவே நான் இதைப் பதிவு செய்கிறேன்’ என்கிற செளகரியத்தை வைத்துக் கொண்டு எதிர்தரப்பின் மீது தொடர்ச்சியாக புகார் சொல்லிக் கொண்டே இருந்தால் சமூகம் அதை நம்பி விடுவதற்கான வாய்ப்பும் உண்டு. (‘பாபநாசம்’ படத்தின் டெக்னிக்).

உதாரணத்திற்கு ஒரு விஷயத்தைப் பார்ப்போம். ‘உன் மனைவியை அடிப்பதை நிறுத்தி விட்டாயா?’ என்கிற கேள்விக்கு ‘ஆம்’ அல்லது ‘இல்லை’ என்கிற இரு பதில்களை மட்டுமே ஒருவரால் சொல்ல முடியும் என்று வைத்துக் கொள்வோம். இரண்டில் எதைச் சொன்னாலும் பிரச்னையாகி விடும்.

இந்த உத்தியை ஒருவகையில் ஆரிக்கும் பொருத்திப் பார்க்கலாம். தன்னுடைய புகார்களுக்கான காரணத்தையும் கூடவே அவர் சொன்னாலும் மீண்டும் மீண்டும் குறை சொல்வதை அவர் நிகழ்த்தும் போது இந்த டெக்னிக்கை திட்டமிட்டோ அல்லது தன்னிச்சையாகவோ பயன்படுத்துகிறார் என்று எண்ணத் தோன்றுகிறது.

ரம்யா தன்னைப் பற்றி வஞ்சகம் பேசியிருந்தாலும் அது முதன்முறை என்பதால் ரம்யாவை மன்னித்து விட்ட ஆரி, பட்டத்தை பாலாஜிக்கு வழங்கினார். "கடுமையான வார்த்தைகளைப் பேசுகிறார். ஒருவரின் கேரக்டரை கொலை செய்கிறார்" என்பது போன்ற காரணங்களைச் சொல்லி ஆரிக்கு வழங்கினார் பாலாஜி. "பாலா டைட்டில் வின்னர் ஆவதற்கு நான் உதவி செய்கிறேன் என்று ஆரி சொன்னது தவறான புரிதல்" என்று சொல்லி ஆரிக்கு வழங்கினார் ஷிவானி. இறுதியில் ‘வஞ்சகம் பேசேல்’ பட்டம் பாலாஜிக்கு வழங்கப்பட்டது. "பண்ணியிருப்பேன்.. மறுக்கலை. இனிமே திருத்திப்பேன்" என்று சொல்லி ஏற்றுக் கொண்டார் பாலாஜி. (அமாவாசை... உனக்கு இதே வேலையாப் போச்சு!).

‘சொல்வது தெளிந்து சொல்’ என்கிற வாசகத்தை காதில் கேட்டவுடனே ஒட்டுமொத்த வீடும் ரியோவின் பக்கம் திரும்பிப் பார்த்தது. ‘சுருக்கி சுருக்கி... சுருக்கி... மணிரத்னம் வசனம் மாதிரி சொல்லிடறாரு’ என்றார் பாலாஜி. "உனக்கு வெட்கமாவே இல்லையாடா” என்று தன் கட்அவுட்டைப் பார்த்து செல்லமாகத் திட்டி விட்டு பட்டத்தை ஏற்றுக் கொண்டார் ரியோ. (பதிலுக்கு கட்அவுட் ஹிஹி என்று சிரித்துக் கொண்டிருந்தது).

பிக்பாஸ் – நாள் 96
பிக்பாஸ் – நாள் 96

‘கோல்கைக் கொண்டு வாழ்’ என்பது அடுத்த வந்த திருவாசகம். 'பாரபட்சம் காட்டாதே' என்பதுதான் பொருள். இதற்கு அன்பு அணியில் உள்ளவர்களே சோமை அடையாளம் காட்ட ‘ஒத்துக்கறேன்... வேற வழி’ என்று இந்த எதிர்மறை வாக்கியத்தை புன்னகையுடன் ஏற்றுக் கொண்டார் சோம்.

‘கெடுப்பது சோர்வு’ என்பது அடுத்த நீதி வாக்கியம். (போதும்யா. எங்களுக்குத்தான் வருது சோர்வு). ‘பெண்டிங்ல இருக்கிற எல்லா கேஸையும் இவன் மேல போடுங்கய்யா’ என்று ஒரு அப்பாவி மாட்டியவுடன் போலீஸ்காரர்கள் திட்டமிடுவது போல, பல எதிர்மறை வாக்கியங்களை வீட்டில் உள்ளவர்கள் தன் மீது போட்டதால் பாலாஜி இப்போது பொங்கி விட்டார்.

எனவே ‘சிவனும் சக்தியும் சேர்ந்தா மாஸூடா’ பாடலை மீண்டும் பாடி, "இந்த வீட்டில் ஆரியும் நானும் மட்டும்தான் சேஃப் கேம் ஆடலை. ஏதோ அவருக்கும் எனக்கும் மட்டும்தான் பிரச்னை-ன்ற மாதிரி ரெண்டு நாளா போயிட்டு இருக்கு. நீங்க சேஃப் கேம் ஆடறதால பாதிக்கப்பட்டவங்கள்ல நானும் ஒருத்தன்" என்று ஆவேசமாகக் கோபப்பட்டார். ஆனால் பட்டத்தை இவர் யாருக்குத் தந்தார் என்பது தெளிவாக இல்லை. சர்காஸ்டிக்காக ஆரிக்கு வழங்கியது போல்தான் புரிந்து கொள்ள முடிந்தது. பாலாஜியின் ஆவேசத்தை வரவேற்று மகிழ்ந்தார் ஆரி.

ஒரு வகையில் பாலாஜியின் ஆவேசமும் ஆரியின் மகிழ்ச்சியும் சரியானதே. இந்த இருவர் மட்டும்தான் தன் அபிப்ராயங்களை வெளிப்படையாக வைத்து விடுகிறார்கள். வைக்கும் முறையில் விமர்சனங்கள் இருக்கலாம். ஆனால் உண்மையாக நடந்து கொள்கிறார்கள்.

பிக்பாஸ் – நாள் 96
பிக்பாஸ் – நாள் 96

"எனக்கு கோபம் வராது. நான் இதுவரை கோபப்பட்டேன்னா... அது ஆரி மேல மட்டும்தான்" என்று சொன்ன ரம்யா, இந்தப் பட்டத்தை ஆரிக்கு வழங்கினார். "கேம்ல நிறைய பிரச்சினை வந்துச்சு. லக்ஸரி பாயிண்ட் போச்சு" என்று சரியான காரணத்தைச் சொல்லி பாலாஜிக்கு வழங்கினார் ரியோ. இறுதியில் இந்தப் பட்டம் பாலாஜிக்கு வழங்கப்பட்டது.

‘புறங்கூறிப் பொய்த்துயிர் வாழ்தலின் சாதல் அறங்கூற்றும் ஆக்கத் தரும்’ என்பது அடுத்த திருவாசகம். வாசிக்கும் போதே இதன் பொருளை அறிந்து விட முடியும். இதில் பலரும் ரம்யாவை வரிசையாக குறிப்பிட்டார்கள். இது ஆரியின் மனதை வேதனைப்படுத்தியதோ என்னமோ... எனவே ரம்யாவை காப்பாற்றும் நோக்கில் தன் வாதத்தை ஆரம்பித்தார்.

"இந்த வீட்டில் எல்லோரும்தான் புறம் பேசுகிறார்கள். இதான் இந்த ஷோவோட அடையாளம். இதை யாரும் மறுக்க முடியாது. ஆனால் கமல் சார் ஷோவில் ‘தொன்னூறு நாளும் ஆரி சலிப்பூட்டுகிறார்’ என்று ரம்யா சொன்னார். ஆனால் பிறகு அதை என்னிடம் தெளிவுப்படுத்தியிருக்கலாம்" என்கிற காரணத்தைச் சொல்லி ரம்யாவிற்குத் தந்தார் ஆரி.

ஆரி குறிப்பிட்டது போல் அந்த வீட்டில் புறம் பேசாதவர்கள் என்று எவரும் கிடையாது. ஆரம்ப நாட்களில் இதைத் தவிர்த்த ரம்யாவும் பிறகு பேச ஆரம்பித்து விட்டார். அவர் பேசியது பெரும்பாலும் ஆரியைப் பற்றிய விமர்சனங்களும் கிண்டல்களும்தான். ஆனால் - ‘சபையில் ஓப்பனாக சொன்ன ஒரு கமெண்ட் எப்படி புறங்கூறுதல் ஆகும்?’ என்பதில் லாஜிக் இடிக்கிறது. மற்றவகையில் ரம்யாவும் புறங்கூறுதல் லிஸ்ட்டில் வருபவர்தான்.
பிக்பாஸ் – நாள் 96
பிக்பாஸ் – நாள் 96

"கலாய்க்கறதுதான் என் குணாதிசயம். அதில் உள்நோக்கம் எதுவும் இருக்காது. இனிமே நேரடியாவே கலாய்க்கிறேன்" என்று தனது டிரேட் மார்க் புன்னகையோடு சொன்னார் ரம்யா. எனில் இனி அவர் ஆரியை நேரடியாக கலாய்க்கிறாரா என்று பார்ப்போம். இந்தப் பட்டம் ரம்யாவிற்கு வழங்கப்பட்டது.

‘மந்திரம் வலிமை’ என்பது அடுத்த பொன்மொழி. இதில் ஏறத்தாழ அனைவருமே ஆரியைக் குறிப்பிட்டது நல்ல விஷயம். ஆரி சொல்லும் அறிவுரைகள் பல சமயங்களில் தங்களுக்கு உத்வேகமாக இருந்ததாக போட்டியாளர்கள் குறிப்பிட்டார்கள். "முதன்முறையாக நேர்மறை வாக்கியத்திற்கான பட்டம் எனக்கு கிடைத்ததில் மகிழ்ச்சி" என்ற ஆரி “செடி வளர்ப்பதில் மற்றவர்கள் சுணக்கம் காட்டிய சமயத்திலும் ரம்யா அதைத் தொடர்ந்து செய்ததில் மகிழ்ச்சி" என்று சொல்லி ரம்யாவிற்கு இந்த வாசகத்தைப் பொருத்தினார். ('ஆரி'ன்ற காட்டுச் செடில ஒரு பூ பூத்திருக்கு).

பிக்பாஸ் – நாள் 96
பிக்பாஸ் – நாள் 96

நீதி வாக்கியங்களுக்கு சற்று ரெஸ்ட் கொடுத்து இடைவேளை விட்டவுடன் ரியோ மட்டும் அப்படியே சோர்ந்து அமர்ந்திருந்தார். “என் மேல எண்பத்தெட்டு கேஸூ இருக்கு. இண்டர்போல்யே என்னைத் தேடறதா ஒரு சர்வதேச தகவல் வந்திருக்கு. நான் தைரியமா இல்ல... கண்ணைத் துடை. சிரி... இப்ப எப்படி இருக்கு மூஞ்சி” என்பது போல் ரியோவிற்கு ஆறுதல் சொல்லிக் கொண்டிருந்தார் ஆரி.

‘தெளிவாக தன் கருத்துக்களை சொல்வதில்லை’ என்று ரியோ குறித்து பாலா சொன்ன கமெண்ட் ரியோவைப் புண்படுத்தி விட்டது போல. அல்லது ‘எல்லோரும் சேஃப் கேம் ஆடறாங்க’ என்று பாலாஜி எகிறியதற்காக வருத்தப்படுகிறாரோ என்று தெரியவில்லை. "97 நாள் ஆயிடுச்சு... இன்னமுமா என் மேல குற்றம் சுமத்திட்டே இருக்கணும்" என்று வருத்தப்பட்டார் ரியோ. "இல்லை பிரதர். பாலாஜியோட ஸ்ட்ராட்ட்ஜி என்னன்னா…’ என்று ஆரி விளக்க முற்படும் போது, "இல்ல ப்ரோ... எனக்கு அவ்ளோ டீப்பாலாம் யோசிக்கத் தெரியாது" என்று சலித்துக் கொண்டார் ரியோ.

“உங்க மேல இருக்கும் குறையை சுட்டிக் காட்டியவுடன் ஒப்புக் கொண்டீர்கள் அல்லவா... அவ்வளவுதான். விட்டுருங்க. அதுவே நல்ல விஷயம்" என்று ரியோவைத் தேற்றினார் ஆரி. தனது கட்அவுட்டை இப்போது கட்டிப்பிடித்து அரவணைத்த ரியோ ‘நீ நல்லவன்டா’ என்று தனக்குத் தானே சான்றிதழ் வழங்கிக் கொண்டிருந்தார். (அப்போதும் கட்அவுட் ‘ஹிஹி’ என்றே சிரித்துக் கொண்டிருந்தது).

‘ஒற்றுமை வலியமாம்’ என்பது அடுத்த நீதி வாக்கியம். இதற்கு பலரும் ரியோவைச் சுட்டிக் காட்டினார்கள். அர்ச்சனா அகன்ற பிறகும் அன்புக்கூட்டணி தளர்ந்து விடாமல் ரியோ காப்பாற்றுவதால் இந்த வாசகம் பொருந்தி இருக்கலாம். இந்த வாசகத்திற்கு ஷிவானியின் பெயரைச் சுட்டிக் காட்டினார் பாலா. என்றாலும் மெஜாரிட்டியான வாக்குகளைப் பெற்று ரியோ தேர்வானார்.

பிக்பாஸ் – நாள் 96
பிக்பாஸ் – நாள் 96

‘ஞயம்பட உரை’ என்பது அடுத்த வாக்கியம். (ஹப்பாடா! இத்தோட இந்த டாஸ்க் முடிஞ்சது). இதில் ஏகமனதாக சோம் தேர்வானார். இன்சொற்களை அதிகமாகப் பேசுகிறவர் அவர்தானாம். ‘ஏதோ... தெரியாமப் பண்ணிட்டேன்’ என்று தயக்கத்துடன் வாங்கிக் கொண்டார் சோம்.

இந்த டாஸ்க்கில் அதிக அளவு எதிர்மறையான வாக்கியங்களைப் பெற்று முன்னணியில் இருப்பவர் பாலாஜி. அதற்கு அடுத்த இடம் ஆரி. இதற்கான மதிப்பெண்கள் கழிக்கப்படும். இந்த நோக்கில் ரம்யாவும் ஷிவானியும் பூஜ்யம் மதிப்பெண் பெற்றார்கள். சோம் முதல் இடத்தைப் பெற்றார்.

பிக்பாஸ் – நாள் 96
பிக்பாஸ் – நாள் 96

ஆரிக்கு ஏழாவது இடமும், பாலாவிற்கு ஆறாவது இடமும், ரம்யாவிற்கு ஐந்தாவது இடமும், ஷிவானிக்கு நான்காவது இடமும் ரியோவிற்கு மூன்றாவது இடமும் கேபிக்கு இரண்டாவது இடமும் வாக்கெடுப்பின் மூலம் கிடைத்தது.

இந்த டாஸ்க்கை முடித்து வெளியே வரும் போது ‘நம்பர் ஆட்டம் முடிஞ்சது. இனிமே மக்கள் ஆடறதுதான் பாக்கி’ என்று ஆரி சொல்லிக் கொண்டு வந்தார். இதில் பிழையேதும் இருப்பதாக தெரியவில்லை. ஆனால் “ஆரி சொல்றது கடுப்பாகுது" என்று பிறகு ரியோவிடம் சலித்துக் கொண்டார் சோம். ‘அவிய்ங்க தெளிவா இருக்காங்க பாஸூ’ என்று ரியோவும் பின்பாட்டு பாடினார்.

பிக்பாஸ் – நாள் 96
பிக்பாஸ் – நாள் 96
இந்த நிலையில் மதிப்பெண் பட்டியலின் வரிசை இவ்வாறு அமைந்திருந்தது. ரம்யா (31), சோம் (39), ரியோ (37), கேபி (28), ஆரி (25), பாலா (32), ஷிவானி (32). ஆக... ரியோவைத் தாண்டி விட்டு சோம் முன்னணிக்கு நகர்ந்திருக்கிறார்.

‘அம்போ’வென்று அமர்ந்திருந்த பாலாஜியிடம் ‘ஒண்ணும் கவலைப்படாதீங்க பிரதர்... நம்மைப் போன்ற போராளிகளுக்கு நெகட்டிவ் கமெண்ட்ஸ் வர்றதெல்லாம் சகஜம்’ என்று ஆரி ஆறுதல் கூற முயல, ‘இவிய்ங்க கெடக்கறாங்க. நான் லிஸ்ட்ல எப்படி முதல்ல வர்றதுன்னு யோசிச்சிட்டு இருக்கேன்’ என்று ‘அமாவாசை’ பாலாஜி பதில் சொன்னதும் ‘அடப்பாவி... இவனுக்குப் போய் ஆறுதல் சொல்ல வந்தோமே’ என்று ஆரி நொந்து போயிருப்பார். “இது படங்காட்டற ஷோ இல்ல. பாடம் கத்துக்க வந்த ஷோ’ என்று பன்ச் டயலாக் எல்லாம் பேசியிருந்தார் ஆரி. எல்லாம் விரயம்.

அடுத்ததாக பற்பசை விளம்பரம் தொடர்பான டாஸ்க். வீடு இரு அணிகளாகப் பிரியும். பாலாஜி இதன் நடுவர். பல்லின் அமைப்பில் ஒரு பெரிய செட்அப் செய்திருந்தார்கள். மெனக்கெட்டு அப்படி உருவாக்கியதற்கு பாராட்டு. ஆனால் அதன் மேல் இருந்த கறைகள் பார்ப்பதற்கு ஒரு மார்க்கமாக இருந்தது. (அந்தச் சமயத்தில் உணவு அருந்திக் கொண்டிருந்த பார்வையாளர்களின் பாடு சிரமம்தான்). இரு அணிகளில் எந்த அணி அந்தப் பல்லின் மீதுள்ள கறைகளை முதலில் சுத்தம் செய்கிறதோ அதுவே வெற்றி பெறும்.

பிக்பாஸ் – நாள் 96
பிக்பாஸ் – நாள் 96
இதில் ஆரி அணி திறமையாகச் செயல்பட்டு பரபரவென்று சுத்தம் செய்து கொண்டிருந்தது. அந்த அணியே வெற்றி பெறும் என்று கூட தோன்றியது. இப்போது நடுவரை அழைத்த பிக்பாஸ் “என்னய்யா வேடிக்கை பார்த்துட்டு இருக்கே... அவங்க சுத்தம் பண்ணி வெச்சதுல இன்னமும் கொஞ்சம் கறையை ஊத்து... கறை நல்லது" என்று உசுப்பேற்றி விட அப்படியே செய்தார் நடுவர் பாலாஜி.

சுத்தம் செய்யும் பொருட்கள் அனைத்தும் ஏறத்தாழ காலியாகி விட்ட நிலையில் அப்போது ஆரி செய்த உத்தி அருமையானது. Presence of mind என்று இதைத்தான் சொல்லுவார்கள். சட்டென்று தன் டீ ஷர்ட்டைக் கழற்றி துடைக்க ஆரம்பித்து விட்டார். “கோவாலு... நீயும் அதே மாதிரி பண்ணேன்..’. என்று ரியோ அணியில் இருந்தவர்கள் உசுப்பெற்றி விட, “அவங்கள்லாம் எக்சர்சைஸ் பண்ற பாடிம்மா. என்னுது பிஞ்சு உடம்பு... தாங்காது” என்று வெட்கப்பட்டு டீஷர்ட்டை கழற்ற மறுத்து விட்டார் ரியோ.

ஆனால் இறுதியில் இரு பற்களையும் பார்வையிட்ட பாலாஜி, ரியோ அணியே வெற்றி பெற்றதாக அறிவித்துவிட்டு ஆரியின் சமயோசித நடவடிக்கையையும் கூடவே பாராட்டினார். ('இதயத்தில் இடம் தருகிறேன். கூட்டணியில் இடம் இல்லை’ என்கிற சாமர்த்தியத்தைப் போல் இந்தத் தீர்ப்பு இருந்தது). இதற்கான பரிசுகள் வழங்கப்பட்ட போது ஆரி முகத்தை ‘உம்’மென்று வைத்துக் கொண்டிருந்தார். நடுவராக பாலாஜி விளையாடி விட்டார் என்கிற கோபமா அல்லது தன் டீஷர்ட்டைக் கழற்றி திறமையைக் காட்டியும் தோற்று விட்டோமே என்கிற வருத்தமா என்று தெரியவில்லை.

TICKET TO FINALE-வின் கடைசி டாஸ்க். (ஹப்பாடா...) ஒரு பெரிய தூண்களில் ஏழு கயிறுகள் இடைவெளி விட்டு கட்டப்பட்டிருக்கும். ஒவ்வொரு போட்டியாளரும் நிற்பதற்கு பிளாட்பார்ம் அமைக்கப்பட்டிருக்கும். போட்டியாளர்கள் அதன் மீது நின்று முதலில் நீல நிறப்பட்டை இருக்கும் கயிற்றின் பகுதியைப் பிடிக்க வேண்டும். அதன் பிறகு பிக்பாஸ் அறிவிக்கும் போது சற்று முன்னேறி சிவப்புநிறப் பகுதியை பிடிக்க வேண்டும். இடையில் சில மாற்றங்களையும் பிக்பாஸ் சொல்லுவாராம்.
பிக்பாஸ் – நாள் 96
பிக்பாஸ் – நாள் 96

கயிறு திரிக்கும்... ச்சே... கயிறு பிடிக்கும் இந்த டாஸ்க் துவங்கியது. ஆனால் விளையாட்டின் ஆரம்பத்திலேயே பாலாஜி ஒரு கையை எடுத்துவிட்டு மீண்டும் பிடித்தார். “ஏதோ ஞாபகத்துல எடுத்துட்டேன் பாஸூ... இப்பத்தான் கேம் ஆரம்பிச்சது. ஒரு வார்ம்-அப்ல பண்ணிட்டேன்" என்று பாலாஜி நிறைய நியாயங்களைப் பேசினாலும் அது முறையானதல்ல. இதை ஆரி பலமாக ஆட்சேபித்தாலும் ‘சரி போகட்டும்’ என்பது போல் விட்டுவிட்டார்.

பாலாஜியின் கால் தரப்பட்டிருக்கும் தடத்தில் இல்லாமல் முன்னகர்ந்திருப்பதை ரியோ சுட்டிக் காட்ட அதற்கும் ஆவேசம் அடைந்தார் பாலாஜி. ‘அய்யோ... கால் வலிக்குதே’ என்று இன்னொரு பக்கம் சிணுங்கிக் கொண்டிருந்தார் ரம்யா. அவர்கள் நின்று கொண்டிருக்கும் பிளாட்பார்ம் சரிவாக அமைக்கப்பட்டிருந்ததே அதற்குக் காரணம். (பிக்பாஸா... கொக்கா!).

ஷாப்பிங் சேனலில் வரும் மார்க் – தாமஸ் போல ரியோவும் சோமுவும் விளம்பர வாசகங்களை ஆங்கில வாசனையுடன் தமிழில் பேசினார்கள். இப்படி சிரிப்பதும் பாட்டு பாடுவதும் நல்ல உத்தி. வலி தெரியாமல் இருக்கும். ‘என் முதுகுத் தண்டிற்கு ஒத்தடம் தேவைப்படுது’ என்று சோம் சொல்ல, 'எனக்கு முதுகுத்தண்டே தேவைப்படுது’ என்று ரியோ சொன்னது அட்டகாசமான கமெண்ட். இது போன்ற சமயங்களில் ரியோவின் நகைச்சுவையுணர்ச்சியை அதிகம் ரசிக்க முடிகிறது. அவருடைய மனைவி கூறிய புத்திமதியின் படி தனது சென்ஸ் ஆஃப் ஹியூமரை அவர் அதிகம் வெளிப்படுத்தலாம். (ஆனால் சென்ஸ் ஆஃப் ஹியூமர் உள்ளவர்கள்தான் அதிகம் எளிதில் உணர்ச்சிவசப்படுபவர்களாகவும் இருப்பார்கள்).

‘சென்னை கேங்க்ஸ்டர்’ பாடலை இவர்கள் பாட ஓரிடத்தில் தனது கையை எடுத்து வாயைப் பொத்திக் கொண்டார் ரியோ. அவர் அதை உணரவேயில்லை. இதை பிறகு நிதானமாக ஆரி சுட்டிக் காட்டியதும் ‘அய்யய்யோ... ஆமால்ல…’ என்று ஒப்புக் கொண்டார். ‘தெரியாம பண்ணிட்டேன் பாஸ். எச்ச தொட்டு அழிச்சிடலாம்’ என்று இவரும் பாலாஜியைப் போலவே போங்காட்டம் ஆடி ஆட்டத்தைத் தொடர்ந்தார்.
பிக்பாஸ் – நாள் 96
பிக்பாஸ் – நாள் 96

‘கையை எடுத்தவங்கள்லாம் அவுட்டுதானே?’ என்கிற சந்தேகம் மற்றவர்களுக்கு வந்தது. "ஹே... நானும் கையை தெரியாம ஒருமுறை எடுத்துட்டேன்" என்று கேபியும் ஒப்புதல் வாக்குமூலம் அளித்தார். “ஆரி... உங்க கால் பகுதி முன்னாடி நகர்ந்திருக்குது” என்று பாலாஜி குற்றம் சாட்ட இப்போது ஆரிக்குக் கோபம் வந்துவிட்டது.

"ஃபைனல் டாஸ்க்ல வந்து கையை விட்டுட்டு தெரியாம விட்டுட்டேன்னு நீ சொல்லுவே... அதை நாங்க ஏத்துக்கணும். எல்லோரோட காலும்தான் நகர்ந்திருக்கு... என்னை மட்டும் ஏன் சொல்றே?” என்று ஆரி பயங்கரமாக டென்ஷன் ஆனார். உண்மையில் அவர் இந்த விஷயத்தை அந்த அளவிற்கு கோபம் வராமல் சொல்லியிருக்கலாம். இப்படி சட்டென்று சண்டைக்கோழியாக மாறுவதுதான் ஆரியிடமுள்ள பெரிய மைனஸ் பாயிண்ட்.

பிக்பாஸ் – நாள் 96
பிக்பாஸ் – நாள் 96

ஆரியின் குற்றச்சாட்டைக் கேட்டவுடன் முகம் சுருங்கிய பாலாஜிக்குப் பயங்கர கோபம் வந்திருப்பது முகத்தில் அப்பட்டமாகத் தெரிந்தது. எனவே வந்த கோபத்தில் கயிற்றை விட்டு விட்டு ஓரமாக சென்று அமைதியாக அமர்ந்துவிட்டார். பாலாஜியின் இந்த அபத்தமான முடிவிற்கு அனைவருமே அதிர்ச்சியடைந்தார்கள்.

குறிப்பாக ஷிவானி அடைந்த அதிர்ச்சியும் சொன்ன புத்திமதியும் முக்கியமானது. "எதுவா இருந்தாலும் பிக்பாஸ் சொல்லட்டும். நீ Provoke ஆகாதே… இது ஃபைனல் டாஸ்க்" என்று ஷிவானி சொன்ன உபதேசம் திருவாசகம். ‘கூடவே இருக்கியே செவ்வாழை... அவனுக்கு ஏதாவது புத்தி கித்தி சொல்லக்கூடாதா’ என்கிற பருத்திவீரன் வசனம் போல், பாலாஜியின் கூடவே சுற்றும் செவ்வாழையாக ஷிவானி இருந்தாலும் சமயங்களில் அவர் சொல்லும் ஆலோசனையும் உபதேசமும் மிகச்சரியாக இருக்கிறது. ஷிவானியின் பேச்சைக் கேட்டால் கூட போதும், பாலாஜி உருப்பட்டு விடலாம்.

"என்னை ஸ்போர்ட்ஸ்மேன்ஷிப் இல்லாதவன்னு சொல்றீங்களா?” என்று தன் கோபத்தை ஆரியிடம் காண்பித்துக் கொண்டிருந்தார் பாலாஜி. இதைக் கண்ட ஆரிக்குள் குற்றவுணர்ச்சியும் பதற்றமும் பெருகியிருக்க வேண்டும். கமலின் விசாரணை நாளில் இது பிரச்னையாகலாம் என்று நினைத்தாரோ... என்னமோ... வந்த வெறுப்பில் அவரும் கயிற்றை விட்டு விட இப்போதும் சக போட்டியாளர்கள் அதிர்ச்சி அடைந்தார்கள். “ஆரி… நீயுமா?” (அட! டைட்டில் நல்லாயிருக்கே?!).

"எல்லோர் காலையும் பாரு... எப்படியிருக்கு?” என்று பாலாஜியிடம் நெருங்கிச் சென்று தன் தரப்பு நியாயத்தைப் பேசிக் கொண்டிருந்தார் ஆரி. இப்படி இவர்கள் சண்டை போடுவது இதர போட்டியாளர்களின் கவனத்தைக் கலைக்கலாம் என்று கூட இவர்களுக்கு உறைக்கவில்லை. ஆரியின் செய்கையைக் கண்ட ரியோ இப்போது தானும் குற்றவுணர்ச்சி அடைந்து, "பிக்பாஸ்... நான் கையை விட்டது தப்புன்னா.. சொல்லிடுங்க. போட்டியில் இருந்து விலகிக்கறேன்" என்று பிக்பாஸிடம் ரகசியம் பேசிக் கொண்டிருந்தார். அப்படி இருந்தால் பிக்பாஸ் பிறகு சொல்லட்டும், நாம் போட்டியைத் தொடர்வோம் என்று ஏன் அவருக்குத் தோன்றவில்லை?

பிக்பாஸ் – நாள் 96
பிக்பாஸ் – நாள் 96

‘செருப்பால் அடித்து விட்டு பருப்பு சோறு போடுவது’ என்கிற பழமொழி இருக்கிறது. அதைப் போல் அவ்வப்போது ஆரியிடம் சண்டை போட்டு விட்டு பிறகு மன்னிப்பு கேட்பதை பாலாஜி ஒரு பொழுதுபோக்காகவே வைத்துக் கொண்டிருக்கிறார். மன்னிப்பு என்கிற வார்த்தைக்கு மதிப்பே இல்லாமல் போய் விடும்.

‘இவனுங்க மட்டும்தான் திருந்தணுமா என்ன... நானும் திருந்துவேன்’ என்று அடம்பிடித்த ரியோ தானும் கயிற்றை விட்ட போது பாசக்கிளிகளான கேபியும் சோமுவும் அலறினார்கள். “ஏமாத்தினான்–ன்ற கெட்ட பேரு மட்டும்தான் நான் வாங்கலை. எனவேதான் விட்டுட்டேன்" என்று பாலாஜி தன் செயலுக்கு நியாயம் கற்பித்துக் கொண்டிருந்தார்.

இதர போட்டியாளர்கள் கயிற்றைப் பிடிக்க ஆரம்பித்து இரண்டு மணி நேரத்தைக் கடந்திருப்பதாக பிக்பாஸ் அறிவித்தார்.

சோமின் கால் பிளாட்பாரத்தின் வெளியே நீட்டிக் கொண்டிருப்பதைப் பார்த்து ஆரி உள்ளிட்டவர்கள் ஆட்சேபிக்க, "என் ஷூ அப்படித்தான் இருக்கும்... வேணுமின்னா கழட்டிப் பாருங்க" என்று சோமிற்கு கோபம் வந்தது. மற்றவர்களின் புகாரினால் எரிச்சல் அடைந்த சோம் கயிற்றை விட்டு விட ‘ஏண்டா’ என்று எரிச்சல் ஆனார் ரியோ. சக பாசப்பறவையான கேபியும் இப்போது கையை எடுத்து விட ‘அய்யோ... போச்சே... போச்சே’ என்பது போல் கோபத்தில் பந்தை சுவற்றின் மீது ஆத்திரத்துடன் விட்டெறிந்தார் ரியோ. (குழு மனப்பான்மையோடு ரியோ இப்படி கோபமடைவது பார்க்க எரிச்சலாக வருகிறது).

பிக்பாஸ் – நாள் 96
பிக்பாஸ் – நாள் 96
பிறகு சமாதானம் அடைந்த ரியோ, எம்.ஜி.ஆர் குரலில் வசனம் பேசி ரம்யாவிற்கு பொழுதுபோக்கு ஏற்படுத்தியது சுவாரஸ்யம். ஆக மீதம் களத்தில் இருந்தவர்கள் ஷிவானியும் ரம்யாவும் மட்டுமே.

திடீரென்று பின்னணியில் ஒரு பாட்டின் இசை ஆரம்பித்தது. அது ‘சிங்கப்பெண்ணே’ பாடல் என்பதைப் புரிந்து கொண்ட போட்டியாளர்கள் மிகவும் உற்சாகமடைந்தார்கள். எனவே களத்தில் போராடிக் கொண்டிருந்த ஷிவானியையும் ரம்யாவையும் உற்சாகப்படுத்த ஆரம்பித்தார்கள். நடந்து கொண்டிருந்த செயலும், பாடலின் இசையும் வரிகளும் மிக எமோஷனல் ஆன சூழலை ஏற்படுத்தியது. உணர்ச்சிப்பெருக்கில் தங்களின் கண்ணீரை கட்டுப்படுத்திக் கொள்ள முடியாமல் பெண் போட்டியாளர்கள் தத்தளித்தார்கள்.

பிக்பாஸ் – நாள் 96
பிக்பாஸ் – நாள் 96

இந்த சீஸனின் மிக அருமையான காட்சிக்கோர்வையாக இது இருக்கும் என்று தோன்றுகிறது. ‘நன்றி பிக்பாஸ். நன்றி மக்களே’ என்று நெகிழ்ந்தார் ரம்யா. ஷிவானியும் கண்கலங்கினார். சோம் ரம்யாவை அன்பு மிகுதியில் அரவணைத்த போது அதனாலேயே அவர் கயிற்றை விட்டு விடுவாரோ என்று கூட தோன்றி விட்டது. (எமோஷனைக் குறைங்க பாஸூ). இருவரில் யார் ஜெயிக்கிறார்கள் என்பது நாளைக்குத் தெரியும்.

‘வயத்துக்காக மனுஷன் இங்கே கயத்தில் ஆடுறான் பாரு…

ஆடி முடிச்சு இறங்கி வந்தா அப்புறம் தாண்டா சோறு…’

என்கிற எம்.ஜி.ஆர் திரைப்படத்தின் பாடல்வரிகள்தான் இந்த டாஸ்க்கைப் பார்க்கிற போது நினைவிற்கு வருகிறது.