Published:Updated:

''எங்கள மாதிரி இளைஞர்களுக்கு இயக்குநர் இரஞ்சித் அப்பா மாதிரி!'’ - கானா குணா ஷேரிங்ஸ் #TvPotti

இரஞ்சித்துடன் குணா
இரஞ்சித்துடன் குணா

"'எப்படியாச்சும் உன்னை சினிமாவுல நடிக்க வெச்சிருவேன்'னு அபினவுக்கு ஒரு சத்தியம் பண்ணி கொடுத்திருக்கேன்."

'சங்கி மங்கி', 'என் வீட்டுக் குத்துவிளக்கு', 'டசக்கு டசக்கு..' என வரிசையாக ஹிட் கானா பாடல்களைக் கொடுத்த உற்சாகத்தில் இருக்கிறார் கானா பாடகர் குணா. தற்போது விஜய் டிவியில் 'சூப்பர் சிங்கர்' நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் தெறி பர்ஃபார்மன்ஸ் கொடுத்து வருகிறார்.

சின்ன வயசுல இருந்தே கானா பாடல்னா உயிர். எப்பவும் என் வாய் சும்மா இருக்காது. பாடிக்கிட்டே தான் இருப்பேன்
கானா குணா

கடைசியாக ஒளிபரப்பான எபிசோடில், கானா பாடகர் அபினவுக்கும், குணாவுக்கும் இடையே போட்டி நிலவியது. இருவரில் ஒருவர் தான் போட்டியில் தொடர முடியும் என்ற நிலை ஏற்பட்டது. ரசிகர்கள் மற்றும் நடுவர்களின் தீர்ப்பு குணாவுக்கு சாதகமாக அமைந்தது.

'நானே குணாவுக்குத் தான் வாக்களித்தேன்’ என்று அபினவ் தெரிவித்திருந்தார். சென்னை, வியாசர்பாடியைச் சேர்ந்த 'கானா' குணா சினிமா, 'சூப்பர் சிங்கர்' நிகழ்ச்சி என பிஸியாக இருக்கிறார். 'சூப்பர் சிங்கர்' வாய்ப்பு குறித்தும், சினிமா வாய்ப்புகள் குறித்தும் நம்மிடம் பகிர்ந்து கொண்டார் குணா.

சூப்பர்சிங்கரில் கானா குணா
சூப்பர்சிங்கரில் கானா குணா

"நான் வியாசர்பாடி பையன். ரொம்ப கஷ்டப்படும் குடும்பம். 9-வது வரைக்கும்தான் படிச்சிருக்கேன். சின்ன வயசுல இருந்தே கானா பாடல்னா உயிர். எப்பவும் என் வாய் சும்மா இருக்காது. பாடிக்கிட்டே தான் இருப்பேன். முன்னாடியெல்லாம் என் வீட்ல டிவி இருக்காது. பக்கத்து வீட்லதான் டிவி பார்ப்பேன். மின்சாரம் இருக்காது. சிம்னி விளக்கு வைத்துதான் நைட்ல சாப்பிடுவோம். நைட்ல தூக்கம் வராது. என் அப்பா நள்ளிரவு 3 மணி வரைக்கும் எனக்கு விசிறி விடுவார்.

கானா பாட்டு நல்லா பாடுவேன். இறந்தவர் வீட்டுக்குப் போய் இரங்கல் பாட்டு பாடுவேன். அப்படியே கொஞ்ச காலம் ஓட்டினேன். சொற்ப வருமானம் தான் கிடைக்கும். அப்புறம் சினிமாவுல பாட்டு எழுதுற லோகு அண்ணன் தான் எனக்கு சினிமாவுல பாட வாய்ப்பு வாங்கி கொடுத்தார். சங்கி மங்கி பாட்டு மூலமா ஃபேமஸ் ஆனேன். அப்புறம் கச்சேரி வாய்ப்புகள் நிறைய வந்துச்சு.

நண்பருடன் கானா குணா
நண்பருடன் கானா குணா

இப்போ ஜி.வி,பிரகாஷ் நடிக்கும் படத்தில் நெகடிவ் ரோலில் நடிக்கிறேன். 'கொரில்லா', 'குப்பத்து ராஜா' உள்ளிட்ட படங்களில் பாடியிருக்கேன். ஆனாலும் பொருளாதார ரீதியா பெருசா முன்னேறல. மக்கள் மத்தியில் கொஞ்சம் பேர் கெடச்சிருக்கு அவ்வளவுதான்.

ஒருநாள் விஜய் டிவி-யில இருந்து போன் பண்ணி 'சூப்பர் சிங்கர்' பத்தி பேசினாங்க. எனக்கு நல்ல பிளாட்பார்ம்னு தோணுச்சு. அதனால சூப்பர் சிங்கரில் பாட ஒத்துக்கிட்டேன். சூப்பர் சிங்கரில் எனக்கு அபினவ் என்பவரை ரொம்பப் பிடிக்கும். காரணம் அவரும் கானா பாடகர். என்னை மாதிரி ரொம்ப கஷ்டப்பட்டு இந்த மேடைக்கு வந்திருக்கார். ஆனா கடைசில எனக்கும் அவருக்குமே போட்டி வந்துடுச்சி. நான் விட்டுக் கொடுக்ககூட தயாரா இருந்தேன். ஆனால் அவர் எலிமினேட் ஆகிட்டார். என்னால எதுவுமே செய்ய முடியாம போச்சு.

கானா குணா
கானா குணா

நான் அபினவுக்கு ஒரு சத்தியம் பண்ணி கொடுத்திருக்கேன். 'எப்படியாச்சும் உன்னை சினிமாவுல நடிக்க வெச்சிருவேன். நம்மள மாதிரி கஷ்டப்பட்றவங்களுக்கு அப்பா மாதிரி இரஞ்சித் அண்ணன் இருக்காரு. கெளதம் மேனன் சாரும் தங்கமானவரு. எப்படியாச்சு உன்ன நடிக்க வெச்சிடுவேன். உன் கஷ்டம்லாம் மாறும்’’ அப்படின்னு பிராமிஸ் பண்ணிருக்கேன். அதை நான் நிறைவேத்துவேன்’’ என்றார் குணா உருக்கமாக.

அடுத்த கட்டுரைக்கு