Published:Updated:

விபத்து, புருவத்தில் தையல், ஷோ ஹிட் ட்ரிக்! - எப்படி இயங்குகின்றன ரியாலிட்டி ஷோக்கள்?

ரியாலிட்டி ஷோ ஒன்றின் டாஸ்க்
ரியாலிட்டி ஷோ ஒன்றின் டாஸ்க்

"கண் புருவத்துல பெரிய அடி. தையல் போட்டிருக்கேன். இனிமே இந்த மாதிரி ஷோக்கள்ல கலந்துக்கிட்டா எச்சரிக்கையோட இருக்கணும்கிற பாடத்தைத் தந்திருக்கு இந்த விபத்து'' - ரியாலிட்டி ஷோ குறித்து நீபா பகிர்ந்த ஸ்டேட்மென்ட்

டிவி-யில் அழுகாச்சி சிரியல்களாக அணிவகுக்க, அதில் எரிச்சலடைந்த சின்னத்திரை ரசிகர்களுக்காக வெளிவந்தவைதான் ரியாலிட்டி ஷோக்கள். பொது அறிவை, புத்திக் கூர்மையை வளர்க்கும் விதத்தில் வந்த எத்தனையோ ஷோக்கள் மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. இன்னொருபுறம், இசை, நடனம் என ஒருவரிடம் இருக்கும் திறமையை வெளிக்கொண்டு வந்த ரியாலிட்டி ஷோக்களையும் நாம் பார்த்திருக்கிறோம். ஆனால், சமீபமாக ரியாலிட்டி ஷோ என்றாலே ஏக சர்ச்சைகள் போய்க்கொண்டிருக்கின்றன.

ரியாலிட்டி ஷோ
ரியாலிட்டி ஷோ
Image by Pavlofox from Pixabay

`ஸ்கிரிப்ட் படி நடக்குது' என்கிறார்கள் சிலர். `போட்டியாளர்கள்ல யார் ஜெயிக்கணும்கிறதை முன்கூட்டியே முடிவு செய்து வெச்சிட்டாங்க' என்கிறார்கள் இன்னும் சிலர். `இதெல்லாம்கூட பரவால்ல, சில ஷோக்கள்ல ஏதாவது அசம்பாவிதம் நடந்தா, பாதிக்கப்பட்டவங்களைக் கவனிக்கிறதைவிட, அந்தச் சம்பவத்துல இருந்து கன்டென்ட் எடுக்கறதுலயே கண்ணும் கருத்துமா இருக்காங்க' என்கிறார்கள் வேறு சிலர்.

டிவி-யில் பார்த்து ரசிக்கும் ரசிகர்கள் தொடங்கி பங்கேற்கும் போட்டியாளர்கள் வரை ஆளாளுக்கு இப்படிப் புலம்பும் அளவுக்கு ரியாலிட்டி ஷோக்களில் என்னதான் நடக்கிறது? அதில் கலந்துகொண்ட சிலரிடம் பேசினோம்.

"நானும் ரெண்டு சேனல்ல ரெண்டு ஷோவுல கலந்துட்டு வந்துட்டேன். ஆனா, இப்ப வரைக்கும் ரியாலிட்டி ஷோங்கிற வார்த்தைக்கு என்ன அர்த்தம்ன்னே எனக்குப் புரியல. ரெண்டு ஷோவுலயுமே கசப்பான அனுபவம்தான் கிடைச்சது. முதல்ல ஒரு டான்ஸ் ஷோ. அது ஒளிபரப்பான சமயத்துலதான் உண்மையிலேயே எனக்கும் என் கணவருக்கும் கருத்து வேறுபாடு ஆரம்பிச்சிருந்தது. விடிய விடிய வீட்டுல சண்டை போட்டுட்டு மறுநாள் காலையில ஷூட்டிங் ஸ்பாட் போய் எதுவுமே நடக்காத மாதிரி இருக்க முடியுமா சொல்லுங்க. அப்படி இருக்க வேண்டிய ஒரு சூழல்ல, என்னைக் கட்டுப்படுத்த முடியாம சில விஷயங்களைக் கேமரா முன்னாடியே பேசிட்டேன். சேனல் நினைச்சிருந்தா குடும்ப விவகாரம்னு அதை வெளியுலகத்துக்குக் காட்டாம தவிர்த்திருக்கலாம். ஆனா, நான் பேசியதையே ப்ரோமோவாக போட்டு ஃபேமிலி பிரச்னையை வெளியுலகத்துக்குத் தெரிய வெச்சிட்டாங்க'' என்றார் `தாடி' பாலாஜியின் மனைவி நித்யா.

நித்யா
நித்யா

"ஷூட்டிங் ஸ்பாட்ல நடக்குற சண்டை சச்சரவுகளை அப்படியே காட்டுறதைக்கூட ஏத்துக்கலாம். ஆனா, விபத்து நடந்தாலும் அதை லைவா காட்டத் துடிக்கிறதை என்னனு சொல்ல'' என்றார், குடும்பப் பிரச்னை பொதுவெளிக்கு வந்ததன் மூலம் சில மாதங்களுக்கு முன் மீடியாவின் கவனம் ஈர்த்த அந்த நடிகர்.

தனக்கு நிகழ்ந்த அனுபவத்தைச் சொன்ன அவர், "நானும் என் மனைவியும் கலந்துகிட்ட ஷோல ஒரு டாஸ்க் வெச்சாங்க. அதைப் பண்றப்ப, திடீர்னு விபத்து நடந்துடுச்சு. ரெண்டு பேருக்குமே பலத்த காயம் ஆகிடுச்சு. ஆனா, சம்பவம் நிகழ்ந்ததும், முதலுதவி செய்றதுக்கோ, ஆம்புலன்ஸுக்குச் சொல்லவோ ஆளைக் காணோம். அதுக்குப் பதிலா, கேமராவை எங்க பக்கம் திருப்பி எங்களை ஃபோகஸ் பண்றாங்க. `ஷோ ஹிட் ஆகணும்னுதான்; அதேநேரம் நாங்க உயிரோட இருக்கணும்ப்பா'னு சொன்ன பிறகு மருத்துவ உதவிகளைச் செய்றாங்க. இதுல என்ன வேடிக்கைன்னா, பிறகு எனக்கும் என் மனைவிக்கும் பிரச்னை வந்தப்ப, ஷோல பட்ட காயத்தைக் காட்டி, அது நான் அடிச்சதால உண்டாச்சுனு சொல்லிட்டாங்க" என்கிறார்.

கடந்த வாரம், ஒரு ரியாலிட்டி ஷோவில் நடிகை நீபாவும் விபத்தைச் சந்தித்ததாகத் தெரியவர, அவரைத் தொடர்புகொண்டோம்.

நீபா
நீபா
``சுதா கொங்கரா `மண்ணுருண்ட' பாடலுக்கான சூழலைச் சொல்லும்போது மிரண்டுட்டேன்!" - ஏகாதசி

"அடிபட்டது உண்மைதான். கண் புருவத்துக்குப் பக்கத்துல பெரிய அடி. கொஞ்சம் எசகுபிசகா நடந்திருந்தா பார்வையே போயிருந்தாலும் ஆச்சர்யப்படறதுக்கில்லை. இனிமே இந்த மாதிரி ஷோக்கள்ல கலந்துக்கிட்டா எச்சரிக்கையோட இருக்கணும்கிற பாடத்தைத் தந்திருக்கு இந்த விபத்து'' என்றார் இவர்.

இவர்கள் இப்படிச் சொல்கிற அதேநேரம் ரியாலிட்டி ஷோக்களுக்கு ஆதரவாகப் பேசுகிற ஆர்ட்டிஸ்டுகளையும் பார்க்க முடிகிறது.

"ஷோவுல கலந்துக்குறது முழுக்க முழுக்க நம்மளோட விருப்பம்தான். யாரும் கட்டாயப்படுத்தி இழுத்துட்டுப் போகலை. அப்படியிருக்கிறப்ப, ஆரம்பத்துலே அக்ரீமென்ட் போடுறாங்க. அதுல ஷோ புரமோஷனுக்கு ஒத்துழைப்புத் தரணும்னும் சொல்லப்பட்டிருக்கும். அதுக்கெல்லாம் சரின்னு சொல்லிட்டுத்தானே கலந்துக்குறோம். தவிர, அதுக்கு சம்பளமும் தர்றாங்க. ஷோ ஹிட் ஆகுறதுக்காக சில விஷயங்களை சேனல்ல இருந்து பண்ணத்தான் செய்வாங்க. என்னைப் பொறுத்தவரை அது தப்பில்லை" என்கிறார், நடிகை ஆனந்தி.

ஆனந்தி
ஆனந்தி

ரியாலிட்டி ஷோக்கள் குறித்த எதிர்மறையான விமர்சனங்களுக்கு சேனல்கள் தரப்பில் என்ன சொல்கிறார்கள்?

"ரியாலிட்டி ஷோக்கள் வந்த பிறகுதான் எத்தனையோ திறமையாளர்களுக்குக் கிடைக்க வேண்டிய அங்கீகாரம் கிடைச்சிருக்கு. சாதாரண, பெரிய பின்னணியில்லாதவங்களுக்கும் சாதிக்க முடியும்கிற நம்பிக்கை வந்திருக்கு. இதுக்கு எவ்வளவோ உதாரணங்களைச் சொல்ல முடியும். அதே நேரம், வணிக ரீதியா வெற்றியடையணும்கிற குறிக்கோள் இயல்பானது. அதுக்காக சில விஷயங்களைச் செய்வாங்க. ஆனா, விபத்து நடந்தா `முதல்ல கேமரா.. அப்புறம் ஆம்புலன்ஸுக்குச் சொல்லுங்கப்பா'னு சொல்றாங்கன்னா, கொஞ்சம் மிகைப்படுத்திச் சொல்றாங்கன்னு நினைக்கிறோம்'' என்பதே சேனலின் பதிலாக இருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு