Published:Updated:

ரியோவுக்கும், ஆரிக்கும் எவ்வளவு முகமூடிகள்... ரேகா வெளியேறியதன் பின்னணி என்ன? பிக்பாஸ் நாள் - 14

பிக்பாஸ் - நாள் 14

பிக்பாஸ் போட்டியாளர்களின் வயது வித்தியாசங்களைக் கவனித்தால் தந்தை, தாய் என்று அது ஒரு குடும்பத்தின் அமைப்பு போலவே இருக்கும். கடந்த சீஸனிலும் முதலில் வெளியேறியவர், வீட்டின் தாய் போல இருந்த ஃபாத்திமா பாபு. இந்த சீஸனில் ரேகா.

Published:Updated:

ரியோவுக்கும், ஆரிக்கும் எவ்வளவு முகமூடிகள்... ரேகா வெளியேறியதன் பின்னணி என்ன? பிக்பாஸ் நாள் - 14

பிக்பாஸ் போட்டியாளர்களின் வயது வித்தியாசங்களைக் கவனித்தால் தந்தை, தாய் என்று அது ஒரு குடும்பத்தின் அமைப்பு போலவே இருக்கும். கடந்த சீஸனிலும் முதலில் வெளியேறியவர், வீட்டின் தாய் போல இருந்த ஃபாத்திமா பாபு. இந்த சீஸனில் ரேகா.

பிக்பாஸ் - நாள் 14
கொரோனா நெருக்கடியிலும் மெத்தனமாகவும் மாஸ்க் அணியாமல் கவனமின்றி இருப்பவர்களையும் இடித்துரைத்த கமல், ‘புது வாழ்வு முறையில்’ நாம் அதிஜாக்கிரதையாக இருக்க வேண்டியதின் அவசியத்தை எடுத்துரைத்தது சிறப்பு.

‘என்னடா... இது கையில் சாக்ஸ் போட்டுக் கொண்டிருக்கிறாரே... கமல்... அதுவும் பாதியாக இருக்கிறதே’ என்று நினைத்துக் கொண்டிருந்தேன். அது ஃபேஷன் இல்லையாம்... யார் வெளியேறப் போகிறார்கள் என்பதை சுட்டிக் காட்ட வேண்டுமாம். ‘'நான் ஏன் மாஸ்க் போடலைன்னு கேட்கறீங்களா? என்று கேட்டுவிட்டு, "இங்க மிக கவனமான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன” என்று விளக்கினார் கமல்.

''சேர் எதுக்குன்னு கேட்கறீங்களா, உட்காருவதற்குங்க... இந்தப் படப்பிடிப்பிற்காக எட்டு மணி நேரம் நிற்க வேண்டியிருக்கும்’' என்று அதற்கும் விளக்கம் கொடுத்தார் கமல். இப்படி ஒவ்வொன்றிற்கும் அவசியமற்ற விளக்கங்கள் கொடுத்துக் கொண்டிருந்தால் எட்டு மணி நேரம்தான் ஆகும். Jokes Apart, கமலின் வயதை ஒரு கணம் நினைத்துப் பார்த்தால் அவரின் உழைப்பு குறித்த பிரமிப்பு வரத்தான் செய்கிறது.

பிக்பாஸ் - நாள் 14
பிக்பாஸ் - நாள் 14

நேற்றைய கட்டுரையில் சொல்லியிருந்தபடி கடந்த வாரத்தில் நிகழ்ந்த சில்லறைச் சச்சரவுகளுக்கு மீண்டும் நெடிய பஞ்சாயத்து செய்வதை விடவும் புதிய டாஸ்க்குகளின் மூலம் போட்டியாளர்களின் அப்போதைய மனநிலையை அறிய முயல்வது சுவாரஸ்யமாக இருக்கும். இன்று அப்படியே நடந்தது.

ஒவ்வொரு போட்டியாளரும் தங்களின் சக போட்டியாளருக்கு முகமூடியும் ‘அகமே முகம்’ என்கிற பேட்ஜூம் தர வேண்டும். முகமூடி என்றால் தன்னை ஒளித்துக் கொண்டிருப்பவர். ‘அகமே முகம்’ என்றால் வெளிப்படையாக இருப்பவர்.

இந்த வில்லங்கமான விளையாட்டில் ரியோவிற்கு நிறைய முகமூடிகள் கிடைத்தன. வீட்டிற்குள் நுழைந்தபோது இயல்பாகவும் கூலாகவும் தென்பட்ட ரியோவின் இன்னொரு முகத்தை நாம் மெல்ல மெல்ல அறிந்து கொள்ள முடிந்தது. அது சட்டென்று வந்து விடுகிற முன்கோபம். தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்வதில் உள்ள ஆர்வம். அது மட்டுமில்லாமல் ‘எதையாவது தவறாகப் பேசி மாட்டிக் கொள்வோமோ’ என்கிற ஜாக்கிரதையுணர்ச்சி அவரிடம் இருக்கிறது. கமல் சுட்டிக் காட்டும்போது மிகவும் சங்கடப்படுகிறார்.

எனவே ரியோவிற்கு நிறைய முகமூடிகள் கிடைத்ததில் ஆச்சர்யமில்லை. ஆனால் “நான் விஷயங்களை இங்க மறைக்கறேன். அதைக் வெளிக்காட்ட விரும்பவில்லை” என்று முன்பே சுயவாக்குமூலம் தந்தவர் ரியோ. எனவே, ‘இவங்க புதுசா ஒண்ணும் கண்டுபிடிக்கலை’ என்று அவர் பிறகு தந்த விளக்கமும் ஏற்றுக் கொள்ளக்கூடியதே.

பிக்பாஸ் - நாள் 14
பிக்பாஸ் - நாள் 14

ஆரிக்கு நிறைய முகமூடிகள் கிடைத்ததில் சற்று ஆச்சர்யம் என்றாலும் போட்டியாளர்கள் அவரை சரியாக கணிக்க முயல்கிறார்கள் என்று தோன்றுகிறது. ‘எப்போதும் மற்றவர்களுக்கு உபதேசமும் வழிமுறையும்’ சொல்லிக் கொண்டிருப்பது ஒருவகையில் நல்ல விஷயம்தான். ஆனால், அதன் மூலம் அவர் தன்னை உயர்நிலையில் வைத்துக் கொள்ள முயல்கிறார். நல்ல இயல்புகளை மட்டும் வெளிப்படுத்திக் கொள்வதின் மூலம் தன்னை ஒளித்துக் கொள்ள முயல்கிறார் என்றும் புரிந்து கொள்ளலாம்.

இதற்கு பதிலளிக்கும் வகையில், கமலுக்குப் போட்டியாக நெடிய விளக்கத்தை அளித்தார் ஆரி.

பிக்பாஸ் வீட்டில் உள்ள ஒரு பிரச்னை என்னவென்றால் ‘குரங்கு தொப்பியை திருப்பிக் கொடுத்த கதைதான்’. ஒருவர் ஆரம்பித்து வைத்தால் மற்றவர்களும் தன்னிச்சையாக அதை நகல் செய்து விடுகிறார்கள். அதனாலும் கூட ரியோவிற்கும் ஆரிக்கும் அதிக முகமூடிகள் கிடைத்திருக்கலாம். (இருவரும் வெளியில் சென்ற பிறகு மாஸ்க் வாங்க காசு செலவழிக்க வேண்டியதேயில்லை. அந்த அளவிற்கு குவிந்து விட்டன).

இன்னொரு உதாரணமும் இருக்கிறது. ‘அகமே முகம்’ என்கிற விருதின் பெயரை வாய்விட்டு முதலில் படித்தவர் நிஷாதான். இதை கமல் பாராட்டியவுடன் சுதாரித்துக் கொண்ட மற்றவர்களும் இந்தச் சொற்களைப் பயன்படுத்தி விட்டு பிறகு விளக்கம் அளித்தார்கள். இதுவும் ‘குரங்கு’ உதாரணத்திற்கான சான்று.

‘படபட பட்டாசாக’ உள்ளே நுழைந்த அர்ச்சனா மீது நமக்கே சற்று மெல்லிய எரிச்சல் வந்த போது போட்டியாளர்களுக்கும் அது நிச்சயம் வந்திருக்கும். ஆனால் ஆச்சர்யப்படும் விதத்தில், ‘அகமே முகம்’ பேட்ஜை அதிகம் பெற்றவர் அர்ச்சனாதான். எனில் நாம் பார்க்காத அர்ச்சனாவின் ‘இனிய முகம்’ நிறைய இருக்கிறது போல. அது நமக்கு அதிகம் காட்டப்படவில்லை. வலியாக அவஸ்தைப் பட்ட சுரேஷிற்கு தாமாக முன்வந்து க்ரீம் தேய்த்து விட்டது ஓர் உதாரணக்காட்சி.

பிக்பாஸ் - நாள் 14
பிக்பாஸ் - நாள் 14
அனிதா, சுரேஷிற்குத்தான் முகமூடி அளிப்பார் என்று சுரேஷ் உட்பட நாமும் நினைத்துக் கொண்டிருந்த போது இதை கமலும் சுட்டிக் காட்டினார். ‘ஆனால் சுரேஷ் வெளிப்படையாக இருக்கிறார்’ என்கிற யதார்த்தமான காரணத்தை அனிதா சொன்னது சிறப்பு.

"மீடியா இமேஜ் வேற... சொந்த முகம் வேற. ரெண்டையும் குழப்பிக்கக்கூடாது. தனது மீடியா இமேஜ் கலைஞ்சுருமோன்னு அனிதா கவலைப்பட்டுட்டே இருக்காங்க” என்கிற காரணத்தைச் சொல்லி அவருக்கு முகமூடியை சனம் அளித்தது சிறப்பானதொன்று.

வேல்முருகனுக்கு முகமூடி அணிவித்த நிஷா அதற்குச் சொன்ன காரணம் மிகச் சரியானது. வந்த புதிதில் மிக உற்சாகமாக இருந்த வேல்முருகன், இப்போது தன்னைச் சுருக்கிக் கொள்கிறார். ‘எதற்குங்க வம்பு’ என்று ஒதுங்கிப் போகிறார். அதே சமயத்தில் தான் தெரிய வேண்டும் என்கிற ஆர்வமும் ஆவேசமும் அவரிடம் இருக்கிறது. இந்த நோக்கில் வேல்முருகன் பல முகமூடிகளை அணிந்து கொண்டிருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும்.

தனக்கு முகமூடி அளித்த நிஷாவிற்கு பதிலுக்கு வழங்கி பழிவாங்கினார் வேல்முருகன். ‘நிஷாக்கா... துணிச்சலாக அடித்து ஆட வேண்டும்’ என்று அவர் சொன்னது சரியான காரணம். “தனது கோபத்தை மறைக்க மாட்டார்'’ என்று காரணம் சொல்லி ரியோவிற்கு முகமூடி வழங்கி சொதப்பினார் சோம். கமல் மீண்டும் விளக்கச் சொன்ன போது அவர் தடுமாறியது சுவாரஸ்யம்.

மற்றவர்களிடம் இருந்து பெரும்பாலும் ஒதுங்கியும் தனக்கு இணக்கமானவர்களிடம் மட்டுமே பழகும் ஷிவானியின் குணாதிசயம் எதிர்மறையாகப் பார்க்கப்பட்டாலும் ‘இயல்புத்தன்மையுடன் இருக்கிறார்’ என்று அதுவே அவருக்கு ஒரு ‘ப்ளஸ்’ ஆக இருக்கிறது. இந்த நோக்கில் அவருக்கு கிடைத்த இரண்டு ‘பேட்ஜ்’கள் இனிய ஆச்சர்யம்தான்.

தனக்கு கிடைத்த முகமூடிகளைப் பற்றி விளக்கம் அளித்த ஆரி, "இங்க ஃபேவரிட்டிஸம் இருக்கு. தன் அடையாளத்தை மறைத்துக் கொண்டு செயல்படுகிறார்கள். ஒருத்தர் ஆரம்பிச்சா அதையே மத்தவங்களும் ஃபாலோ பண்றாங்க" என்று சொன்னது சரியானதாக இருக்கலாம். ஆரியின் வாதத்திற்குப் பிறகு ‘எனக்கு நடந்தது அநீதி’ என்று கோபப்பட்டார் ரியோ.
பிக்பாஸ் - நாள் 14
பிக்பாஸ் - நாள் 14

"இந்த வீட்ல குரூப்பிஸம் இல்லவே இல்லைங்க” என்று ஆரம்பம் முதலே வாதிட்டுக் கொண்டிருக்கிற ரியோவின் கருத்தை ஆரியின் விளக்கம் உடைத்துப் போட்டு விட்டது.

அகம் டிவி வழியாக மீண்டும் உள்ளே வந்தார் கமல். ("ஒவ்வொரு தடவையும் போட்டியாளர்கள் எழுந்து ‘வணக்கம்’ சொல்லணுமா... என்ன?”)

வீட்டின் தலைவரான சுரேஷ் பற்றிய புகார் கடிதங்கள். அது பற்றிய விசாரணை. கடந்த வார தலைவரான ரம்யா பற்றி வந்த கடிதங்கள் அப்போது வெளிப்படவில்லை. ஏன் இந்த பாரபட்சம்?

'சுரேஷிடம் அதிகாரம் ரொம்ப அதிகமாக இருக்கிறது. அர்ச்சனா வந்ததும் அமைதியாகி விட்டார்’ என்பது போன்ற விமர்சனங்கள் சுரேஷின் மீது வந்தன. ‘'இந்தியாவின் பிரதமர் போல தன்னை வீட்டின் முழுமுதற் தலைவராக கருதிக் கொள்கிறார். தன்னிச்சையாக முடிவுகளை எடுக்கிறார்” என்று ரமேஷ் சொன்ன கருத்தை அரசியல் சாயத்திலும் தோய்த்தெடுத்து ‘மோடி மஸ்தான்’ வித்தை செய்தார் கமல்.

‘வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு’ என்பதைப் போல அதுவரை தன் ராஜதந்திரத்தால் பிக்பாஸ் வீட்டை ஆட்டிப் படைத்துக் கொண்டிருந்த சுரேஷ், அர்ச்சனாவின் வரவிற்குப் பிறகு வெளிப்படையான நையாண்டிகளால் அதிருப்தியாகி முகம் சுருங்கி ஒதுங்கி விட்டார் என்றுதான் தோன்றுகிறது. இருவருமே மீடியா துறையில் நெடுங்காலம் இருந்தவர்கள். பாம்பின் கால் பாம்பறியும்.

"கோபத்தை கன்ட்ரோல் செய்ய முயற்சி செய்கிறேன்” என்று இதற்கு சுருக்கமாக விளக்கம் அளித்து முடித்து விட்டார் சுரேஷ். இளைய தலைமுறையினருக்கு சுரேஷ் அளிக்கும் முன்னுரிமையை கமல் பாராட்டிப் பேசியது சிறப்பு. நம்முடைய கட்டுரையிலும் சுரேஷின் அந்த குணாதிசயத்தைப் பாராட்டி எழுதியிருந்தோம்.

அடுத்தது ‘தங்க மீன்கள்’ திரைப்படக்காட்சி பற்றிய விசாரணை. கேப்ரியல்லாவை சிரமப்பட்டு முதுகில் சுரேஷ் சுமந்தததைப் பற்றிய பேச்சு நடந்தது.
பிக்பாஸ் - நாள் 14
பிக்பாஸ் - நாள் 14

''காணவில்லைன்னு என்னைச் சொல்லிட்டாங்க... அதனால எதையாவது செய்து என் திறமையை வெளிக்கொண்டு வரணும்னு நெனச்சேன். கேப்டன் போட்டிக்கு முன்னாடி நின்னேன். தாத்தா எனக்காக ரொம்ப சிரமப்பட்டாரு… ஆனா டாஸ்க்காதான் நெனச்சு செஞ்சாரு. என் ஃபிரெண்ட்ஸ் என் கூட நிக்கணும்னு எதிர்பார்க்கலை. ஆனா அவங்க நிக்காதபோது கொஞ்சம் வருத்தமா இருந்துச்சு’' என்று பட்டவர்த்தனமாக பேசினார் கேப்ரியல்லா.

“சரி... உங்களுக்கு ஃபிரெண்ட்ஸ் உள்ள மட்டும் இல்ல.. வெளியவும் நிறைய இருக்காங்க” என்று கேப்ரியல்லா காப்பாற்றப்பட்ட செய்தியை அப்படியே போகிற போக்கில் கமல் சொன்ன விதம் சுவாரஸ்யமானது. அடுத்ததாக ‘மக்களின் வாக்கின் மூலம் காப்பாற்றப்பட்டவர் சம்யுக்தா’ என்பதையும் அறிவித்தார் கமல்.

ஆக இறுதியில் இருந்தவர்கள் ரேகா மற்றும் சனம். யார் வெளியேறப் போகிறார்கள்? ஜூம் மீட்டிங்கின் வழியாக சதுரப் புள்ளிகளில் மெளனமாக இருந்த பார்வையாளர்களை "அப்போ போயிட்டு வர்றீங்களா?” என்று மரியாதையுடன் துரத்தி விட்டார் கமல். ரகசியம் காப்பாற்றப்பட வேண்டுமாம். என்றாலும் அந்த ரகசியம் நேற்று காலையிலேயே தெரிந்து விட்டது.

சனத்தின் முகத்தில் பீதி அப்பட்டமாகத் தெரிந்தது. ‘மக்கள் தீர்ப்பு எப்படி இருந்தாலும் ஓகே’ என்று "பில்டிங் ஸ்ட்ராங்கு... பேஸ்மென்ட் கொஞ்சம் வீக்கு” மோடில் கெத்து காட்டினார். “உங்க கூட எப்பவோ நடிச்சுட்டேன்... அப்புறம் என்ன சார்... இந்த வீட்டைச் சுத்திப் பார்க்கத்தான் வந்தேன். பார்த்தாச்சு” என்று இயல்பான தொனியில் இருந்தார் ரேகா.

சில பில்டப்களுக்குப் பிறகு வெளியேறுபவர் ‘ரேகா’ என்பதை கமல் அறிவித்தார். ஆக... பிக்பாஸ் ‘மத்தி’ மீன் கொடுத்த ரகசியம் இப்போது விளங்கி விட்டது. ஃபேர்வெல் பார்ட்டியை முன்பே கொண்டாடியிருக்கிறார் போல. விஷமக்கார பிக்பாஸ்.

ரேகாவின் பிரிவிற்கு உண்மையிலேயே கலங்கியவராக பாலாவைச் சொல்ல வேண்டும். சற்று ‘சுள்’ என்று முகத்தில் அடிப்பது போல் பேசினாலும் அவர் ஒரு வளர்ந்த குழந்தை என்று தோன்றுகிறது. வேல்முருகன் கலங்குவது போல் கண்களைத் துடைத்துக் கொண்டார். ஷிவானி கண்கலங்கலாமா... வேண்டாமா என்று யோசித்துக் கொண்டிருந்தார்.

பிக்பாஸ் - நாள் 14
பிக்பாஸ் - நாள் 14
“மொதல்ல என்னை வேறமாதிரி ரியோ நெனச்சார். நான் உண்மையிலேயே குழந்தை மாதிரிதான்” என்று சொன்ன ரேகா, செடியை ரியோவிற்கு பரிசளிக்க, அந்த அன்பின் வெளிச்சம் பட்ட கணத்தின் வெம்மையைத் தாங்க முடியாது உடைந்து அழுதார் ரியோ.

அடுத்ததாக உண்டியலை ரேகா உடைக்க வேண்டும். அதிலிருக்கும் காயினை யாராவது எடுத்துக் கொள்ளலாமாம். பிள்ளையார் கோயிலில் சூறைத் தேங்காய் பொறுக்கும் ஆதிகாலத்து பழக்கத்தை பிக்பாஸ் இன்னமும் விடவில்லை போல. “நீங்களே.. கொடுத்துடுங்க..” என்று மற்றவர்கள் சொன்னவுடன் அந்த காயினை ஷிவானிற்கு பரிசளித்தார் ரேகா. பிறகுதான் ஷிவானியின் அழுகை அதிகரித்தது.

“எல்லோரும் குறை சொல்கிறார்களே... இந்தப் பெண்ணை ஆதரிப்போம்" என்கிற காரணமும் மற்றும் ‘தன் மகளை நினைவுப்படுத்துகிறார்’ என்கிற சென்ட்டி காரணமும் ஷிவானிக்கு நாணயம் அளித்ததின் பின்னணியில் இருந்திருக்கலாம்.

பிக்பாஸ் போட்டியாளர்களின் வயது வித்தியாசங்களைக் கவனித்தால் தந்தை, தாய்... என்று அது ஒரு குடும்பத்தின் அமைப்பு போலவே இருக்கும். கடந்த சீஸனிலும் முதலில் வெளியேறியவர், வீட்டின் தாய் போல இருந்த பாத்திமா பாபு. இந்த சீஸனில் ரேகா. இதில் ஏதோவொரு பேட்டர்ன் இருப்பது போல் தெரிகிறது.

ஒருவர் இருக்கும் வரை அவரது நல்ல இயல்புகளைச் சுட்டிக் காட்டாமல் குறைகளை மட்டுமே பெரிதுப்படுத்தும் சமூகம், அவர் சென்றபிறகுதான் அவரைக் கொண்டாட ஆரம்பிக்கும். ரேகாவிற்கும் அதுவே நடந்தது. அவரது நல்ல குணங்களையும் நட்பையும் மக்கள் நினைவுகூர ஆரம்பித்தார்கள்.

பிக்பாஸ் - நாள் 14
பிக்பாஸ் - நாள் 14

இந்த வெளியேற்றத்திற்கு ரேகா மனதளவில் தயாராகவே இருந்தார் என்று தோன்றுகிறது. சுரேஷிடம் முன்பே இதைப் பற்றி சொல்லிக் கொண்டிருந்தார். ‘நாம் நிறையப் பார்த்து விட்டோம்... இளைய தலைமுறை வளர வேண்டும்’ என்று அவர் மனதாரவே நினைக்கிறார். எனவே அவர் அதிகம் அலட்டிக் கொள்ளவில்லை. அதே உற்சாகத்துடன் கமலிடம் இருந்து விடைபெற்றார் ரேகா. சென்று வாருங்கள் மீன்குட்டி!

என்னவொன்று, கமல்தான் கடைசி வரை அந்த கடலை உருண்டையைத் தராமலே ஏமாற்றி விட்டார் போலிருக்கிறது.

‘புன்னகை மன்னன்’ படத்திலும் ரேகாவைத் தள்ளி விட்டு கமல்தான் மட்டும் தப்பித்துக் கொண்டார். இப்போதும் அப்படியே நடக்கிறது’ என்று கமலைப் பற்றி ஜாலியாக மக்கள் புறணி பேச ஆரம்பித்திருக்கிறார்கள்.

‘எஸ்.பி.பியின் மறைவு.. அக்ஷராவின் பிறந்த நாள், கிரேஸி மோகனின் பிறந்த நாள், கண்ணதாசனின் நினைவு நாள்... என்று கலவையான உணர்வுகளுடன் நாட்கள் கடந்து கொண்டிருக்கின்றன’ என்று அவர்களை நினைவு கூர்ந்தார் கமல்.

‘வாரம் ஒரு புத்தகம் அறிமுகம்’ – இந்தப் பிரிவில் கமல் இன்று அறிமுகப்படுத்தியது மிக முக்கியமான புத்தகம். ''பொதுவாக நாம் மேற்கத்திய எழுத்தாளர்களை அதிகம் கொண்டாடுவோம். பிரமிப்பாக பார்ப்போம். ஆனால் அருகிலேயே இருக்கும் ரத்தினங்களை தவற விட்டு விடுவோம். எழுத்தாளர் ஜெயமோகன் நம்மிடையே இருக்கும் அப்படியொரு அரிய ரத்தினம்.

அவர் 25,000 பக்கங்களில் எழுதி முடித்த அசுர சாதனை என்று ‘வெண்முரசு’ நாவல் வரிசையைச் சொல்லலாம். இதை அவர் துவங்கிய காலத்தில் ‘மகாபாரதத்தை மீண்டும் எழுத வேண்டுமா?' என்று சிலர் கேலி விமர்சனம் செய்தார்கள். ஆனால் தான் செய்யப் போகும் பணியைப் பற்றிய முக்கியத்துவம் குறித்து ஜெயமோகனுக்குத் தெரிந்திருந்தது.

பிக்பாஸ் - நாள் 14
பிக்பாஸ் - நாள் 14

இந்தியப் பண்பாடு, கலாசாரம், நாகரிகம் போன்றவை அதன் சடங்குகளிலும் தொன்மங்களிலும் உறைந்திருக்கிறது என்று தீவிரமாக நம்புபவர் ஜெயமோகன். அவற்றை மறுமறுபடி நினைவுகூர்வது அவசியம் என்று நினைப்பவர். எனவே ‘மகாபாரத’ இதிகாசத்தை தன்னுடைய பாணியில் நவீன மீட்டுருவாக்கம் செய்திருக்கிறார். தமிழக மக்கள் இந்த நூல் வரிசையை வாங்கி வாசித்து நம் காலத்தின் நாயகனை கொண்டாட வேண்டும்.

துச்சாதனன் துகில் உரியும் பகுதி பற்றி புதிய கோணத்தில் ஜெயமோகன் எழுதியது ஆச்சரியமாக இருந்தது. அதைப் பற்றி இதுவரை சொல்லப்பட்ட மாயாஜால விளக்கங்களைக் கழற்றி விட்டு கவுரவர்களின் மனைவியர் கொண்ட அறச்சீற்றம்தான் அப்படி துணியாக வந்திருக்குமோ’ என்று எழுதி பிரமிக்க வைத்திருக்கிறார்” என்று அந்த நூலின் ஒரு பகுதியை மேற்கோள் காட்டி ஆச்சர்யப்பட்டார் கமல். ('இது ஜெயமோகனே சொன்னது’ என்றார் கமல். அப்ப நீங்க படிக்கலையா உலக நாயகரே?!).

ஆக... பிக்பாஸ் வீட்டின் எண்ணிக்கைகளுள் ஒன்று குறைந்திருக்கிறது. பல உணர்ச்சி முட்டல்களுக்குப் பிறகு இது ஒவ்வொன்றாக வரும் வாரங்களில் குறையும். என்ன நடக்கிறதென்று பார்ப்போம்.