இன்னும் 25 நாள்களே இருக்கின்றன. இந்தப் பம்பாய் நகரத்தைக் காப்பாற்றுங்கள் சர்தாஜ் சாஹிப்!கணேஷ் கய்டொண்டே
ஒரு போன் கால். மனைவியுடன் விவாகரத்து, உயரதிகாரிகள் நிகழ்த்திய போலி என்கவுன்டரில் பங்கேற்றதற்கான குற்றவுணர்ச்சி என மன அழுத்தத்துடன் பணியாற்றும் சர்தாஜ் சிங் என்ற காவல்துறை அதிகாரியின் வாழ்க்கையை மாற்றுகிறது.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
15 ஆண்டுகளாகத் தேடப்பட்டு வந்த கேங்க்ஸ்டர் கணேஷ் கய்டொண்டே, சர்தாஜ் சிங்கை அழைத்து மும்பை அழியப்போவதைச் சொல்கிறான். சர்தாஜ் சிங்கின் கண்முன்னே தற்கொலை செய்துகொள்கிறான்.
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALSசர்தாஜ் சிங் தனது உயரதிகாரிகளுக்குத் தெரியாமல், உளவுத்துறை அதிகாரி அஞ்சலி மாதுரின் உதவியோடு கணேஷ் கய்டொண்டே வழக்கை விசாரிக்கிறான். இரு நபர்களுக்கிடையில் தொடங்கிய உரையாடல் எதிர்வர இருக்கும் மிகப்பெரிய ஆபத்தை விளக்கியபடியே விரிவடைகிறது. அஞ்சலி மாதுர் கொல்லப்படுகிறார். சர்தாஜ் சிங்கின் கட்டை விரல் வெட்டப்படுகிறது. மும்பையைக் காப்பாற்ற இன்னும் 13 தினங்களே இருக்கின்றன. முதல் சீசன் முடிவு பெறுகிறது.
மற்றொரு ட்ராக்கில், கணேஷ் கய்டொண்டேவின் கதை சொல்லப்படுகிறது. கய்டொண்டே 70களில் பம்பாய் நகருக்குள் வந்தவன். தொடக்க காலத்தில் சிறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு, சில ஆண்டுகளில் மும்பையின் மிகப்பெரிய கேங்ஸ்டராக மாறுகிறான். 1992ஆம் ஆண்டு, பாபர் மசூதி இடிப்பிற்குப் பிறகு, மும்பையில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் கய்டொண்டே கைதுசெய்யப்பட்டு சிறையில் சித்ரவதை செய்யப்படுவதோடு முதல் சீசனில் கய்டொண்டேவின் கதை முடிகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
முதல் சீசன் முடிந்த இடத்திலிருந்தே தொடங்குகிறது இரண்டாவது சீசன். கைவசம் இருக்கும் 13 நாள்களில் மும்பையைக் காப்பாற்ற முயல்கின்றனர் சர்தாஜ் சிங்கும், காவல்துறையினரும். பாகிஸ்தான் உளவாளி ஷாஹித் கான் மும்பையை அழிப்பதற்காக மிக பலம்வாய்ந்த அணு ஆயுதத்தை நுழைந்திருப்பதைக் கண்டுபிடிக்கின்றனர். சர்தாஜ் சிங் மும்பை மீதான இந்தத் தாக்குதல் திட்டத்தின் பின்னணியில் குருஜியின் ஆசிரமம் இருக்கலாம் என விசாரணையில் இறங்குகிறான்.
முதல் பாகத்தில் அனைவரையும் ஈர்த்த கதாபாத்திரம் கய்டொண்டே, இரண்டாம் பாகத்தில் இந்திய அரசின் ஏவல் அடியாளாக மாற்றப்படுகிறான். இந்திய அரசின் நலன்களுக்காக நிகழ்த்தப்படும் நிழலுலக டீல்களை நிறைவேற்றும் அடியாளாக, குசும் தேவி யாதவ் என்ற ரா அதிகாரியின் கட்டளைகளை நிறைவேற்றும் கய்டொண்டே ஒரு கட்டத்தில் அவரிடமிருந்து தப்பிக்கிறான். அவனுக்குப் புகலிடம் தருவது குருஜி.

கணேஷ் கய்டொண்டே, சர்தாஜ் சிங், ஷாஹித் கான் எனப் பலரையும் இணைக்கும் ஒரே தொடர்பு குருஜி. இப்படியான பின்னணியில் மும்பைக்கும் குருஜிக்கும் என்ன தொடர்பு, கய்டொண்டே ஏன் தற்கொலை செய்துகொண்டான், சர்தாஜ் சிங் மும்பையைக் காப்பாற்றினானா, மும்பையின் முடிவு என்ன என்பதைப் பேசுகின்றன 8 எபிசோடுகள்.
சர்தாஜ் சிங்காக சைப் அலி கான். முதல் பாகத்தில் அவரது நடிப்பின் மீது வைக்கப்பட்ட விமர்சனங்களை சரிசெய்து, சர்தாஜ் சிங்காக மாறியிருக்கிறார். சின்ன க்ளு கூட கிடைக்காத விசாரணையில் விரக்தியடைவது, குருஜியின் ஆசிரமத்தில் அளிக்கப்படும் போதை மருந்துக்கு அடிமையாகித் தடுமாறுவது, தீவிரவாதிகளுடன் டீலிங்கில் இருக்கும் மஹாராஷ்ட்ரா உள்துறை அமைச்சரிடம் சண்டையிடுவது என முதல் பாகத்திற்கும், இரண்டாம் பாகத்திற்கும் இடையில் பெரியளவில் மாற்றங்களோடு வந்திருக்கிறார் சைப் அலி கான்.

கணேஷ் கய்டொண்டேவாக நவாசுதீன் சித்திகி. முதல் பாகத்தில் அட்டகாசமான கதாபாத்திரமான நவாசுதீனுக்கு, இதில் கொஞ்சம் `அடக்கி வாசிக்கும்' வேடம். கணேஷ் கய்டொண்டேவின் மாஸ் சீன்கள் பெரிதாக எதுவும் இல்லையென்றாலும், கதையில் அவரது முக்கியத்துவத்தை ஏற்று நடித்திருக்கிறார் நவாசுதீன்.
இரண்டாவது சீசனின் மிகப்பெரிய ஆச்சர்யம், குருஜியாக நடித்திருக்கும் பங்கஜ் திரிபாதி. அமைதியாக அமர்ந்து, சொற்பொழிவு நிகழ்த்துவதைத் தவிர, பெரிதாக எதையும் செய்யாமலேயே மிரட்டியிருக்கிறார் பங்கஜ் திரிபாதி. `சேக்ரெட் கேம்ஸ்' இரண்டாவது சீசனில் நிச்சயமாக இவர்தான் ஹீரோ. பங்கஜ் திரிபாதிக்கும், நவாசுதீனுக்கும் இடையிலான அந்த உறவு இதுவரை இந்திய சினிமா பார்க்காதது.

குருஜியின் முதன்மை சீடராக, பத்யா ஏபல்மேன் கதாபாத்திரத்தில் கல்கி கோச்லின், கய்டொண்டேவின் தொலைதூரக் காதலி ஜோஜோவாக சுர்வீன் சாவ்லா, ரா அதிகாரி குசும் யாதவ் வேடத்தில் அம்ருதா சுபாஷ் என முன்னணிப் பெண் கதாபாத்திரங்கள் சிறப்பாகத் தங்கள் பங்கை செய்திருக்கின்றன.
`சேக்ரெட் கேம்ஸ்' சீரிஸின் கதைக்கரு `மதம்'. மக்களால் புனிதமாகக் கருதப்படும் மதம் மீது பொருளாதார, அரசியல் காரணிகள் நிகழ்த்தும் விளையாட்டுகளே 'சேக்ரெட் கேம்ஸ்'. விக்ரம் சந்திராவின் நாவலை, மிகச்சிறந்த திரைக்கதையாக மாற்றியிருக்கின்றனர் வருண் க்ரோவர் உள்ளிட்ட நால்வர் குழுவினர். சர்தாஜ் சிங்கின் கதையும், கணேஷ் கய்டொண்டேவின் கதையும் முதல் சீசனின் முதல் எபிசோடிலேயே சந்தித்துக் கொள்கின்றன. சர்தாஜ் சிங்கின் பார்வையில் நிகழும் அந்தக் காட்சியை, கய்டொண்டேவின் பார்வையில் இணைப்பது மிகச்சிறந்த திரைக்கதைக்கான உதாரணம்.

இயக்குநர்களாக அனுராக் காஷ்யப் மற்றும் நீரஜ் கய்வான் இணைந்து பணியாற்றியுள்ளனர். இந்தியாவின் அரசியல் வரலாற்றையும், சம கால அரசியலையும் இந்தக் கதைக்குள் பொருத்தி, பார்வையாளர்களை அசர வைத்திருக்கிறது இந்த இருவர் காம்போ. முதல் சீசனில் எமர்ஜென்சி, இந்திரா காந்தி படுகொலை, பாபர் மசூதி இடிப்பு, மும்பைக் கலவரம் ஆகியவற்றோடு கதையைப் பொருத்திய `சேக்ரெட் கேம்ஸ்' குழுவினர், இரண்டாவது சீசனில், 9/11 இரட்டை கோபுரத் தாக்குதல், 26/11 மும்பைத் தாக்குதல், தற்போது சிறுபான்மையினர் மீது நிகழ்த்தப்படும் கும்பல் படுகொலை முதலான பல உண்மையான சம்பவங்களைத் தொட்டுச் செல்கிறது.
கிரிக்கெட் விளையாட்டில் ஏற்பட்ட பிரச்னையை மதப் பிரச்னையாக மாற்றி, இஸ்லாமிய சிறுவன் ஒருவனை கும்பலாக இணைந்து மற்ற சிறுவர்கள் கொல்லும் அந்தக் காட்சி பார்வையாளர்களுக்கு அச்சத்தைத் தருகிறது. `சேக்ரெட் கேம்ஸ்' இரண்டாவது சீசனின் ஒட்டுமொத்த 'டார்க்' தன்மையின் உச்சமாக, அந்த ஒற்றைக் காட்சி அமைந்திருக்கிறது.
முதல் சீசனில் ராஜீவ் காந்தியை அவதூறு செய்ததாக சர்ச்சைகள் எழுந்தன. தற்போதைய இரண்டாவது சீசனில், சீக்கிய மத அடையாளங்களை இழிவுசெய்திருப்பதாக சர்ச்சைகள் எழுந்துள்ளன.
இரண்டு சீசன்கள், மிகவும் நுட்பமான திரைக்கதை, பல கதாபாத்திரங்கள், ஏறத்தாழ 1 ஆண்டு இடைவெளி எனப் பல்வேறு எதிர்பார்ப்புகள் இருந்த போதும், இப்படியான க்ளைமாக்ஸ் காட்சி பார்வையாளர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. எனினும் `சேக்ரெட் கேம்ஸ்' சொல்வது இதுதான் - இந்த விளையாட்டில் சர்தாஜ் சிங்கிற்கோ, கணேஷ் கய்டொண்டேவிற்கோ, ஷாஹித் கானுக்கோ வெற்றி இல்லை; இந்த விளையாட்டிற்கு மட்டுமே வெற்றி!