Published:Updated:

காலையில 6 மணி... கொக்கரக்கோன்னு கோழி கூவுச்சு.... ஆரி குறைகள் கூற ஆரம்பித்தார்! பிக்பாஸ் – நாள் 94

பிக்பாஸ் – நாள் 94

ஏழாம் இடத்திற்கு தேர்வான ஆரி ‘மக்கள் என் பக்கம்’ என்று சொல்லி விட்டுச் சென்றார். ஆறாம் இடத்திற்கு வந்த பாலாஜியும் அதையே வழிமொழிந்தார். பிக்பாஸ் வீட்டில் நடந்தது என்ன? – நாள் 94

Published:Updated:

காலையில 6 மணி... கொக்கரக்கோன்னு கோழி கூவுச்சு.... ஆரி குறைகள் கூற ஆரம்பித்தார்! பிக்பாஸ் – நாள் 94

ஏழாம் இடத்திற்கு தேர்வான ஆரி ‘மக்கள் என் பக்கம்’ என்று சொல்லி விட்டுச் சென்றார். ஆறாம் இடத்திற்கு வந்த பாலாஜியும் அதையே வழிமொழிந்தார். பிக்பாஸ் வீட்டில் நடந்தது என்ன? – நாள் 94

பிக்பாஸ் – நாள் 94
"எனக்கு பேசும் போது கொஞ்சம் திணறும்" என்று பிக்பாஸ் வீட்டிற்கு வந்த சமயத்தில் சோம் சொன்னார். ஆனால் அவர் இன்று சொன்ன ஒரு கமென்டைக் கேட்டு நாம்தான் ஆச்சர்யத்தில் திணற வேண்டியிருந்தது. சிரித்து சிரித்துக் கொண்டாட வேண்டியிருந்தது. ஆம்... அப்படி சில பல ‘நச்’ கமென்ட்களை ஆர்ப்பாட்டமில்லாமல் வீசி விட்டுச் சென்றார் சோம்.

சக போட்டியாளர்களிடமுள்ள குறைகளைக் கண்டுபிடிக்க வேண்டும் என்கிற ஒரு டாஸ்க்கை இன்று தந்தார் பிக்பாஸ். அதில் சோம் பேசும் போது "ஃபைனல் நெருங்கற சமயத்துலதான் பிக்பாஸ் இந்த டாஸ்க்கை நமக்குத் தந்திருக்காரு. ஆனா அவர் சொல்லாமலேயே வந்த நாள்ல இருந்தே இதைப் பண்ணிக்கிட்டு இருக்கிறவர் ஆரிதான்" என்ற போது ஆரி ஆர்மியே ஒரு கணம் இந்த வெடிகுண்டு தாக்குதலைக் கண்டு அஞ்சி நின்றிருக்கும். அப்படியொரு மரண அடி.

பிக்பாஸ் – நாள் 94
பிக்பாஸ் – நாள் 94

“இங்க இருக்குற எழுபது கேமராக்களைத் தாண்டி இன்னொரு கேமராவும் இருக்கு. அதுதான் ஆரி" என்று சோமுவின் புன்னகை வெடிகள் வெடித்துக் கொண்டேயிருந்தன. ஆரியும் இதைக் கேட்டு சிரித்துக் கொண்டிருந்தார் என்பதுதான் விசேஷம். (இதுவே பாலாஜி சொல்லியிருந்தால் கலவரமாகியிருக்கும்).

இதைப் போலவே ஆரியின் குறையாக ரம்யா இன்று அடுக்கிய பாயின்ட்களும் அத்தனை அட்டகாசம். குழந்தை டாக்டர் இன்று அறுவைச் சிகிச்சை செய்யும் அளவிற்கு முன்னேறிவிட்டார். சோமுவிற்கே சிரித்த ஆரி, ரம்யாவிற்கு சிரிக்காமல் இருப்பாரா என்ன? ‘வலிக்கலையே’ என்பது மாதிரியே புன்னகை மாறாமல் அமர்ந்திருந்தார். பிறகென்ன, செய்வது... சொல்வது ரம்யாவாயிற்றே?!

ஒகே... நாள் 94-ல் என்ன நடந்தது?!

மழை நாள் என்பதால் விடிந்தும் வெளிச்சம் வரவில்லை. காலையில் ஒலித்த பாடலுக்கு ரம்யா ஆடிய ஆட்டமும்... ‘செடில முதல் பூ பூத்திருக்கு… ஒரு ஹாய் சொல்லிடுங்க’ என்று கேமராவைப் பார்த்த சொன்ன ‘க்யூட்’தனமும் அவர் ஒரு ஹீரோயின் மெட்டீரியல் என்பதை நிரூபித்தன. (அவரைப் புகழ்வதாக நினைத்து உடனே கடுப்பாக வேண்டாம். தமிழ் சினிமாவின் பெரும்பாலான ஹீரோயின்களின் குணாதிசயம் என்பது ‘லூஸூப் பொண்ணு’ என்பதுதான்).

“டேய்... நம்ம நாதஸ் இருக்கான்லே… திருந்திட்டானாமாடா... பாவம்ல... ஒரு காலத்துல எப்படில்லாம் டெரரா இருந்தவன்” என்பது போல் பாலாஜியைப் பற்றி ரியோவும் சோமுவும் கரிசனத்துடன் பேசிக் கொண்டிருந்தார்கள். " 'பாட்டி சொல்லைத் தட்டாதே' டாஸ்க் வரைக்கும் ஒரு மார்க்கமாகத்தான் சுத்திட்டு இருந்தான். அப்புறம் ஆளே சைலன்ட் ஆயிட்டான். வெளியே இருந்து வந்தவங்க ‘பழைய பன்னீர்செல்வம்தான் வேணும்’ன்னு ரீப்பீட்டடா சொன்னதால மறுபடியும் கத்தியைத் தூக்கிட்டான் போலிருக்கு... பாவம். அவனைத் திருத்தறதுக்கு இந்த உலகத்துல யாருமே இல்லையா?” என்று இருவரும் மழைச் சாரலில் நனைந்து கொண்டே பாலாஜியைப் பற்றிப் பேசி குளிர் காய்ந்து கொண்டிருந்தார்கள்.

பிக்பாஸ் – நாள் 94
பிக்பாஸ் – நாள் 94

இந்த எலிகள் ஏன் அம்மணமாக சுற்றுகின்றன என்று யோசித்தால் அது ஆரிக்கு எதிராக பாலாஜியை முன்னிறுத்துவதற்காக இருக்கலாம் என்று தோன்றுகிறது. அர்ச்சனாவின் நிழலில் சொகுசாக வளர்கிற வரை இவர்கள் இதர மனிதர்களைப் பற்றி கவலைப்பட்டது போலவே தெரியவில்லை. எனில் ஏன் இந்த திடீர் அக்கறை?

‘'வெளில பெய்யுது ரெயினு... எனக்கு குடிக்க வேணும் வொய்னு... நான் ஆவேன் ஷைனு...” என்று சோம், ரம்யா, பாலாஜி, ஷிவானி ஆகியோர் அடுக்கு மொழியில் மொக்கை போட்டு நிஷா இல்லாத குறையைப் போக்க முயன்றார்கள். ஆரிகூட இதில் கலந்து கொண்டு ‘No Pain, No Gain’ என்று இறுக்கமாகச் சொல்லிவிட்டு பின்குறிப்பாக புன்னகைக்க முயன்றார். ஆனால் பாழாய்போன அந்தப் புன்னகைதான் வரவில்லை. ஆரியே சிரிக்க முயலும் போது பிக்பாஸ் சும்மா இருப்பாரா?

அவரும் இந்த ஜோதியில் கலந்து கொள்ளும் முயற்சியில் ‘விடாம பெய்யுது ரெயின். இப்படியே பேசினா எனக்கு வரும் பெயின்’ என்று அவரும் மொக்கை போட ஆரம்பிக்க, பறக்கும் முத்தங்களை அள்ளி வீசிய ரம்யா ‘வெல்கம் டூ அவர் கிளப்’ என்று உற்சாகமாக கத்தினார்.
பிக்பாஸ் – நாள் 94
பிக்பாஸ் – நாள் 94

டிக்கெட் டு பினாயில்... ச்சே... FINALE-வில் TASK 5 தொடங்கியது. டாஸ்க்குகளை யோசிக்கிறவர் எத்தனை சுமாராக யோசித்தாலும் ஆர்ட் டிபார்ட்மென்ட்டில் இருக்கிறவர்கள் அதற்காக சிரத்தையாக உழைக்கிறார்கள். கையில் ஒரு வளையம் தரப்படுமாம். அதற்குள் ஒரு பந்தை வைத்து சுழற்றிக் கொண்டே இருக்க வேண்டுமாம். சுற்றுவதை நிறுத்தினாலோ அல்லது பந்து கீழே விழுந்தாலோ அவுட். இறுதி வரைக்கும் தாக்குப் பிடிக்கிறவர் வெற்றியாளர்.

விளையாட்டு ஆரம்பித்த சில நிமிடங்களிலேயே ஷிவானி அவுட். ‘மில்க் ஷேக்’ குடிக்க நேரமாகி விட்டது போலிருக்கிறது. அடுத்ததாக ஆரியும் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தார். ரம்யா அவுட் ஆனபோது அந்தப் பந்தே ஷாக்காகியிருக்கும்.

பிக்பாஸ் – நாள் 94
பிக்பாஸ் – நாள் 94

தையல் மிஷின் சத்தம் மாதிரி ‘ரொய்ங்... ரொய்ங்’ என்று சத்தம் வரும் வகையில் சுற்றிக் கொண்டிருந்த போட்டியாளர்களை மேடையில் இருந்து கீழே இறங்கச் சொன்னார் பிக்பாஸ். இப்போது கேபி அவுட். மீதமிருந்தவர்களில் ஒருவரான சோம் சில நிமிடங்களுக்குப் பிறகு சுற்றுவதை நிறுத்தி திகைத்து நின்று விட்டார். '‘பால் கீழேதானே விழக்கூடாது?” என்று அவர் லாஜிக் பேச ‘சுற்றுவதையும் நிறுத்தக் கூடாது’ என்று சொன்னவுடன் அவரும் அவுட் ஆனார்.

ஆக மீதமிருந்தவர்கள், பாலாஜி மற்றும் ரியோ. பாலாஜியோடு ஒப்பிடும் போது ரியோ உடல் பலம் குறைந்தவர் என்றாலும் பாலாவோடு பல சமயங்களில் சரியான டஃப் தருகிறார். பலூன் டாஸ்க்கிலும் பாலாஜியோடு நன்றாகவே மல்லுக் கட்டினார். வியர்வை முகத்தில் வழிய வளையத்தை கடகடவென்று சுற்றிக் கொண்டிருந்த இருவரையும் ‘மேடையில ஏறுங்க... இறங்குங்க’ என்று தொடர்ந்து இம்சித்துக் கொண்டிருந்தார் பிக்பாஸ். அப்படியும் அவர்கள் சமாளிக்கிறார்களா என்பதற்காக இந்தச் சோதனை.

ஒரு கட்டத்தில் பாலாஜி பந்தைத் தவற விட்டுவிட ரியோ வென்றார். வளையம் இடையில் உடைந்துவிட்ட போதிலும் அதை வைத்துக் கொண்டே ரியோ ஜெயித்தது சிறப்பு. அரை மணி நேரத்திற்கும் மேலாக அவர்கள் சுற்றிக் கொண்டிருந்ததாக பிக்பாஸ் அறிவித்தார்.
TASK 6 துவங்கியது. – ‘கெட்டதுன்னா தட்டிக் கேட்பேன்’ என்பது இதன் தலைப்பு. ஒவ்வொருவரும் சக போட்டியாளர்களின் முகமூடிகளைக் கழற்றி அவர்களின் குறைகளை எடுத்துரைக்க வேண்டும்.

முதலில் ஆரம்பித்தவர் ஆரி. இவர் எப்போது பேச ஆரம்பித்தாலும் பிக்பாஸ் டீமிலுள்ள கேமரா டீமிற்கு உற்சாகம் வந்துவிடும் என்று தோன்றுகிறது. "மச்சான்... ஆரி எப்படியும் அரை மணி நேரத்திற்கு பேசுவார். பொசிஷன் மாத்த தேவையில்லை. நான் போயி ஒரு டீ சாப்பிட்டுட்டு வந்துர்றேன்" என்று கேமரா டீமிற்குள் பேசிக் கொள்வார்கள் என நினைக்கிறேன்.

பிக்பாஸ் – நாள் 94
பிக்பாஸ் – நாள் 94

ஏற்கெனவே ஆவேசமாக ஆடுபவருக்கு காலில் சலங்கையை வேறு கட்டி விட்டது மாதிரி, மற்றவர்களின் குறைகளை லென்த்ததாக சொல்லிக் கொண்டே சென்றார் ஆரி. ‘நியாயத்தை தட்டிக் கேட்கவில்லை’ என்பதை சோமுவிற்கும் ‘போராட்டக் குணம் சமயங்களில் குறைந்து விடுகிறது’ என்பதை கேபிக்கும் ‘முழுமையான முகம் தெரியலை’ என்பதை ரியோவிற்கும் ‘கூட்டணியா வெளயாடறாங்க’ என்பதை ஷிவானிக்கும் ‘ஏன் சேஃப் கேம்னு சொல்றாங்கன்னு யோசிக்கணும்’ என்பதை ரம்யாவிற்கும் ‘காயப்படுத்திடறாரு... வயசுக்கு மரியாதை தரலை’ போன்றவற்றை பாலாஜிக்கும் குறைகளாக சொல்லி வந்து அமர்ந்தார் ஆரி. (டீ சாப்பிடப் போனவர் அப்படியே லன்ச்சையும் முடித்துவிட்டு வந்ததாக கேள்வி!).

இப்படியே ஒவ்வொருவரும் இட்ட பட்டியல்களை பதிவு செய்தால் அதுவே பத்து பக்கத்திற்கு நீளும். எனவே இதில் நிகழ்ந்த முக்கியமான, சுவாரஸ்யமான விஷயங்களைப் பற்றி மட்டும் பார்ப்போம்.

ரியோவிற்கான குறையை ஆரி சொன்னவுடன் அதற்கு விளக்கம் அளிக்க முன்வந்தார் ரியோ. “கோர்ட்ல விளக்கம் சொல்ல எனக்கு வாய்ப்பு கிடைக்கல. அப்புறமா சொன்னா பிரச்னை ஆயிடுமோன்னு விட்டுட்டேன்" என்பதுதான் ரியோவின் விளக்கம். இதுவே ஒருவகையில் சுயவாக்குமூலம்தான். சொல்ல வந்ததை ஆரி மாதிரி அவ்வப்போது ‘பதிவு’ செய்து கொண்டே இருக்க வேண்டும் என்பதைதான் மற்றவர்களும் சுட்டிக் காட்டுகிறார்கள். (வரலாறு முக்கியம் அமைச்சரே!).

"நான் வாய்ப்பிற்காக ரோடு ரோடா அலைஞ்சிருக்கேன். பாலாஜியும் அதே மாதிரி கஷ்டப்பட்டிருக்காரு... இப்ப பாருங்க... பிக்பாஸ் வீட்டுக்குள்ள வந்து கால் மேல கால் போட்டு ஜம்முன்னு பாலாஜி உக்காந்திருக்காரு" என்று ஆரி சொன்னதும் காலைப் பணிவாக இறக்கி விட்டுவிட்டார் பாலாஜி. (பணிவுல உன்னை யாரும் மிஞ்சவே முடியாது அமாவாசை!).

அடுத்து வந்தவர் ஷிவானி. இவர் பேசுவதை நிறைய சமயங்களில் கவனித்திருக்கலாம். எங்கேயோ அவசரமாக வேலையிருப்பதைப் போல நாமினேட் செய்யும் சமயங்களில் சுருக்கமாகச் சொல்லி விட்டு டக்கென்று திரும்பிப் போய் சோஃபாவில் அமர்ந்து கொண்டு மற்றவர்களைக் கூர்ந்து பார்த்துக் கொண்டிருப்பார். எனவே இப்போதும் அதே பாணியில் சுருக்கமாகக் குறைகளைச் சொன்னார். சமயங்களில் இவர் சுட்டிக் காட்டும் குறைகள் இவருக்கே பொருத்தமாக இருக்கும். அது இவருக்கே தெரியும் என்பதால் தனக்குள் புன்னகைத்துக் கொள்வார்.

"தம்பி வந்து போன பிறகு ரம்யாவின் முகத்தில் இப்போதெல்லாம் மரண பீதி தெரிகிறது. அவரது புன்னகையே தொலைந்துவிட்டது" என்று ஷிவானி குறிப்பிட்டது நல்ல அப்சர்வேஷன்.

பிக்பாஸ் – நாள் 94
பிக்பாஸ் – நாள் 94

அடுத்து வந்த கேபி, "ஆரி ப்ரோ 90 சதவிகிதம் கேமைப் பற்றியே யோசிக்கிறார். கொஞ்சம் பொதுவாகவும் யோசிச்சா நல்லாயிருக்கும்" என்றது சரியான காரணம். (எப்பப்பாரு ‘நான் கருத்தைப் பதிவு பண்றேன்’ன்னு ஒருத்தர் அனத்திக்கிட்டே இருந்தா உண்மையிலேயே கொஞ்சம் நமக்கும் கூட காண்டாவுது. இப்படி பதிவு பண்ணிட்டே இருந்தா ரிஜிஸ்டிரார் ஆஃபிஸ் பக்கத்துலதான் வீடு பார்க்கணும்.).

சோம் சொன்னதில் சுவாரஸ்யமான விஷயத்தைக் கட்டுரையின் ஆரம்பத்திலேயே பார்த்தோம். இதைப் போலவே கேபியைப் பற்றி இவர் சொன்னதும் முக்கியமானது. "நீ நாமினேஷன்ல அதிகம் வரலை. சேஃப் கேம் ஆடினியா... அது உன் உத்தியான்னுல்லாம் தெரியலை. நீ இருக்கறதே தெரியலை. இப்ப நாலு வாரமாத்தான் உன்கிட்ட இருந்து நிறைய சத்தம் வருது" என்று அவர் சொன்னது அவருக்கே நன்கு பொருந்தும். கேபியும் சோமுவும் அர்ச்சனா என்னும் அன்பு மரத்தில் கூடு கட்டி வாழ்ந்த பறவைகள்தானே?! "கோபத்தை கன்ட்ரோல் பண்ணா பாலாஜியோட கிராஃப் மேலே போகும்" என்பதுபோல் சோம் சொன்னதும் நல்ல பாயின்ட்.

"இப்பல்லாம் சோமுவிற்கு கோபத்தை கன்ட்ரோல் பண்ணத் தெரியலை" என்று கேபி சொன்ன கமென்ட் சோமுவை புண்படுத்திவிட்டது போல. எனவே கேபியும் சோமுவும் இதற்காக பிறகு சிறிய வாக்குவாதத்தில் ஈடுபட்டார்கள். (சப்ஜெக்ட் கிட்ட அசைவு வந்தா அது நல்ல அறிகுறிதானே?!).

அடுத்த வந்த ரியோ, "ஒரு சைடை மட்டுமே கேட்டுட்டு முடிவு பண்ணிடறாங்க. ரெண்டு பக்கம் கேட்டா நல்லா இருக்கும்" என்று சொன்னது ரம்யாவைப் பற்றி.

ரம்யாவின் முறை வந்த போது ‘பாலாஜி பழிக்குப் பழி வாங்கி விடுவார்’ என்பதை ஒரு பாயின்ட்டாக வைத்தார். ஆரியைப் பற்றி பேசும் போது ஆரிக்கும் மேலாக பேசி அயர வைத்தார் ரம்யா. “நீங்க விளையாடற பாணி ஓகே. அதே மாதிரிதான் மத்தவங்களும் விளையாடணும் எதிர்பார்க்கறது சரியில்ல" என்ற ரம்யா, "மத்தவங்க கிட்ட குறையைப் பார்க்கறதையே உங்க ப்ளஸ்ஸா நெனச்சுக்கறீங்க" என்று சொன்னது திருவாசகம்.

பிக்பாஸ் – நாள் 94
பிக்பாஸ் – நாள் 94

“பாலாஜியைப் போலவே உங்களுக்கும் கோபம் வருது. அதைக் கன்ட்ரோல் பண்ணிக்கலாம். நீங்க நினைக்கற நியாயத்தைப் பொதுவாக்கி அதைப் பத்தி பேசி பேசி பேசி மத்தவங்களை மட்டுமல்லாம உலகத்தையே நம்ப வைக்க முயற்சி பண்றீங்க. நியாயம்-ன்றது எதிர்தரப்பைப் பொறுத்தும் சூழலைப் பொறுத்தும் மாறும். ஞாபக சக்தின்ற பேர்ல பழைய விஷயங்களையெல்லாம் அப்படியே பாதுகாத்து வெச்சுக்குறீங்க” என்று ஆரியைப் பற்றி சொல்லிக் கொண்டே போனார் ரம்யா. (சக்தி என்பதை இவர் ‘ஷக்தி’ என்று உச்சரித்தபோது ரஜினிகாந்த்தின் ஞாபகம் வந்தது).

அடுத்த வந்த பாலாஜி முதலிலேயே தன் பிரியமான எதிரியைப் பற்றி ஆரம்பித்தார். அது ஆரியைப் பற்றியது. “நான் முதல்லயே சொல்லிட்டேன். நீங்க அட்வைஸ் பண்றது எனக்குப் பிடிக்கலைன்னு. இருந்தாலும் சொல்லிட்டே இருக்காரு. ஆஜித்தை நான் கெடுத்தேன்னு சொன்னாரு. சோம்பேறின்னு சொன்னாரு'’ என்று சொல்லும் போதே பாலாஜிக்கு கண்கலங்கி விட்டது. ‘சோம்பேறி’ என்று ஆரி ஒரு முறை சொன்னதை இவர் மீண்டும் மீண்டும் சொல்லும் போது அது பதிவாகிக் கொண்டே இருக்கும் என்பது கூட பாலாஜிக்குத் தெரியவில்லை. (முன்பு அனிதாவிற்கு ரியோ தந்த அட்வைஸைத்தான் இப்போது பாலாஜிக்கும் தர வேண்டும்போல).

ரியோவை ‘Confused entertainer’ என்று வர்ணித்த பாலாஜி, ''அவர் அடிக்கற ஜோக்குல்லாம் கூட பாதுகாப்பாக இருக்கும். யாரையும் காயப்படுத்தாது" என்றார். ஒருவகையில் இது குறையே அல்ல. நிறைதான். நகைச்சுவை என்பது மற்றவர்களையும் புன்னகைக்க வைப்பதுதான். கோபம் வருவது போல் செய்வதற்குப் பெயர் காமெடி அல்ல. காண்டாக்கி விடுவது.

ஆனால், பாலாஜியின் நேர்மையை ஒருவகையில் பாராட்ட வேண்டும். "ரம்யா நான் செஞ்ச குறைகளை வெளிப்படுத்தாம இருந்தாங்க. அது சரியான விஷயம் இல்ல. இனியாவது மாத்திக்கணும்" என்று சேம் சைட் கோல் போட்ட பாலாஜி, ரம்யாவையும் கூடவே சபையில் போட்டுக் கொடுத்தார். பின்குறிப்பாக ‘சுயநலம் இல்லாத நல்ல மனதுடையவர்’ என்று ரம்யாவிற்கு சான்றிதழும் வழங்கினார்.

பிக்பாஸ் – நாள் 94
பிக்பாஸ் – நாள் 94

பாலாஜியை தனியாக ஓரங்கட்டிய ரியோ, "ப்ரோ... நீங்க சொன்னது ஒருவகையில் கரெக்ட்டு. நான் தனிநபரா நிறைய குழம்புபவன். ஆனால் ஒரு entertainer-ஆ குழம்பவே மாட்டேன். அது வேற. இது வேற" என்று தெளிவுப்படுத்தி விட்டுச் சென்றார்.

குறை சொல்லும் இந்த டாஸ்க்கை ஒட்டுமொத்தமாக சுருக்கிப் பார்த்தால், ‘மற்றவர்களிடம் குறை காண்பதையே பிழைப்பாக வைத்திருக்கிறார்’ என்பது ஆரிக்கும் ‘கோபம்’ என்பது பாலாஜிக்கும் ‘Comfort Zone’ என்பது ஷிவானிக்கும் ‘உணர்ச்சிகளை மறைக்கிறார்’ என்பது ரியோவிற்கும் ‘வெளிப்படையாக இருக்கலாம்’ என்பது ரம்யாவிற்கும் என்று இப்படி பொதுவான காரணங்கள் மீண்டும் மீண்டும் போட்டியாளர்களால் கூறப்பட்டன.

இந்த டாஸ்க்கின் இறுதியில் அவர்களுக்குள்ளாகவே வரிசைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று பிக்பாஸ் கோத்துவிட்டார். எனவே வாக்கெடுப்பின் அடிப்படையில் மதிப்பெண்கள் முடிவாகின.

ஏழாம் இடத்திற்கு தேர்வான ஆரி ‘மக்கள் என் பக்கம்’ என்று சொல்லி விட்டுச் சென்றார். ஆறாம் இடத்திற்கு வந்த பாலாஜியும் அதையே வழிமொழிந்தார்.

“நான் என் பலவீனங்களை மறைக்காம நான் நானாத்தான் இங்க இருந்திருக்கேன். இங்க நடிச்சா வெளில மக்கள் கிட்ட மாட்டிப்பேன். என் தவறுகளை நான் மாத்திக்கறதுலதான் என் வெற்றி இருக்கு'’ என்று உணர்ச்சிகரமாக பாலாஜி பேசிய போது நெகிழ்ந்து போய் கைத்தட்டினார் ஆரி. “கெட்டவனா பேர் வாங்கிய நல்லவன்டா நீ’' என்று பிறகு பாலாஜிக்கு பட்டம் கொடுத்தார். (நல்லவன்... கெட்டவன்னு மாத்தி மாத்தி சொல்லி கமல் குழப்பியது நினைவிற்கு வருகிறதா?).

பிக்பாஸ் – நாள் 94
பிக்பாஸ் – நாள் 94

வாக்கெடுப்பின் இறுதியில் சோம் முதல் இடத்திற்கு வந்து ஆச்சர்யப்படுத்தினார். "அம்பூட்டு நல்லவனாடா நீயி" என்று சோமை அனைவரும் பாராட்டினர்கள்.

ஆறாவது டாஸ்க்கின் இறுதியில் 29 மதிப்பெண்கள் பெற்று முன்னணியில் இருக்கிறார் ரியோ. அடுத்த இடத்தில் உள்ளவர் ரம்யா. அவரின் மதிப்பெண்கள் 27. 16 மதிப்பெண்கள் பெற்று கடைசியில் இருக்கிறார் கேபி. இதிலுள்ள ஒரு காமெடி என்னவெனில் 25 மதிப்பெண்கள் எடுத்திருக்கும் பாலாஜியை விடவும் ஒரு மதிப்பெண் அதிகமாகப் பெற்று அவரை முந்தியிருக்கிறார் ஷிவானி.

முயல் – ஆமை கதை போல பிக்பாஸ் கதையில் ஏதாவது அதிர்ச்சிகரமான கிளைமாக்ஸ் ட்விஸ்ட் ஏதும் இருக்குமா என்று தெரியவில்லை.