Published:Updated:

பாஸ்மதியா பாத்ரூமா? ரியோ v சுரேஷ்; சென்டிமென்ட் நிஷா... பிக்பாஸ் வீட்டில் நடந்தது என்ன? – நாள் 8

பிக்பாஸ் - நாள் 8

ஆச்சர்யகரமாக பெண்கள் பிரிவில் வென்றவர் ஷிவானி. விவேகானந்தரை மேற்கோள் காட்டியது ‘வொர்க்அவுட்’ ஆகி விட்டது போல. ‘பேசாத பெண்ணுக்குப் பேச்சுப் போட்டியில் பரிசு’. என்னவொரு விநோதம்?! - பிக்பாஸ் வீட்டில் நடந்தது என்ன? – நாள் 8

Published:Updated:

பாஸ்மதியா பாத்ரூமா? ரியோ v சுரேஷ்; சென்டிமென்ட் நிஷா... பிக்பாஸ் வீட்டில் நடந்தது என்ன? – நாள் 8

ஆச்சர்யகரமாக பெண்கள் பிரிவில் வென்றவர் ஷிவானி. விவேகானந்தரை மேற்கோள் காட்டியது ‘வொர்க்அவுட்’ ஆகி விட்டது போல. ‘பேசாத பெண்ணுக்குப் பேச்சுப் போட்டியில் பரிசு’. என்னவொரு விநோதம்?! - பிக்பாஸ் வீட்டில் நடந்தது என்ன? – நாள் 8

பிக்பாஸ் - நாள் 8

பிக்பாஸ் வீட்டில் ஏழரையைத் தாண்டிய எட்டாவது நாள். கந்தனுக்கு ‘அரோகரா’ என்பது போல் சில போட்டியாளர்கள் முகத்தில் சந்தனத்தை (?!) தடவியிருந்தார்கள். ‘லக்ஸரி பட்ஜெட்’ தருணம். டீம் லீடர் சுரேஷ் இது குறித்து ஏற்கெனவே ‘பலத்த எச்சரிக்கை’ செய்து வைத்திருந்தார். எனவே ஏதோ ராக்கெட் லாஞ்ச் செய்யப்போவது போல மக்கள் பரபரப்பாக இருந்தார்கள். 3200 புள்ளிகள் கையில் இருந்தன. (‘இந்த வீடு என்ன விலைன்னு கேளு… அந்த ரோடு என்ன விலைன்னு கேளு...)

அலார்ம் அடித்ததும், 'சிக்கனு... மட்டனு... காஃபி தூளு’ என்று குரல்கள் ஆவலுடன் அலைபாய்ந்தன. அனிதா பொருட்களை தேர்ந்தெடுக்க, சனம் அதை போர்டில் எழுத, ரியோ அதற்கான மதிப்புகளைக் கூட்டினார். நீட் தேர்வு மாதிரி கவனமாக செய்யப்பட்ட இந்த ஏற்பாடுகள் அத்தனையும் வீண்.

பிக்பாஸ் - நாள் 8
பிக்பாஸ் - நாள் 8

இந்த இடத்தில்தான் பிக்பாஸ் ஒரு டிவிஸ்ட் வைத்தார். “பாஸ்மதி ரைஸ் வேணுமா, படுக்கை, பாத்ரூம் வேணுமா?” என்கிற அடிப்படையான கேள்வி வந்தது. ‘பரோட்டா சூரி’ போல எழுதிய அத்தனை கோட்டையும் அழித்து பெட்ரூமை தேர்ந்தெடுத்தார்கள்.

ஒளித்து வைக்கப்பட்ட இரண்டு கேஸ் பர்னர்கள், பெட்ரூம் மற்றும் பாத்ரூம் சாவிகள் வந்தன. இனி ஆண் போட்டியாளர்களுக்கு நிம்மதியாக இருக்கும். திருமண ஹாலில் இரவு தங்கும் விருந்தினர்கள் போல கிடைத்த இடத்தில் படுக்க வேண்டிய அவஸ்தையில்லை. ‘வீடு முழுமையாக செயல்படத் துவங்கி விட்டது’ என்று பெருமையுடன் அறிவித்தார் பிக்பாஸ். ஏதோ தாஜ்மஹாலை சுற்றிப் பார்ப்பது போல் ஆண்கள் பெட்ரூமை அதிசயத்துடன் வலம் வந்தார்கள். ‘சுரேஷ் இனிமேல் இந்த பெட்ரூம் பக்கம் வரமாட்டார்’ என்கிற நிம்மதியினாலோ, என்னமோ... தரையில் சாஷ்டாங்க நமஸ்காரம் செய்து தன் பிரார்த்தனையைத் தெரிவித்தார் ரேகா.

அது கிச்சன் ஏரியா. எனவே மறுபடியும் பஞ்சாயத்து. சனம் ஏதோவொரு சந்தேகத்தை சுரேஷிடம் கேட்க “சொல்லித் தரும் போது ஒழுங்கா கவனிக்கறதில்லையா?” என்று எரிந்து விழும் வாத்தியார் மாதிரி சுரேஷ் கோபிக்க, “எதுக்கு சுள்ளுன்றீங்க?” என்று சனம் பதிலுக்கு மல்லுக்கட்ட கேமரா ஆவலுடன் அவர்களை ஃபோகஸ் செய்தது. பிக்பாஸிற்கு அதுதானே வேண்டும்?

சனத்தை சமாதானப்படுத்தும் நோக்கில் “இல்ல ராஜாத்தி” என்று சுரேஷ் போலியாக செல்லம் கொஞ்ச, "இந்த சர்க்கரை போட்ட கபசுர நீர்லாம் என் கிட்ட வேண்டாம்” என்று சிடுசிடுத்தார் சனம். இவர்களின் அலப்பறைகளைப் பார்த்த நிஷா, “இவனுங்கள குழம்பு வைங்கடான்னா... நம்மள குழம்ப வெச்சிட்டிருக்கானுங்க” என்று அனத்திக் கொண்டிருந்தார்.

அடுத்தது முக்கியமான பகுதி. பிக்பாஸ் வீட்டின் முதல் நாமினேஷன். அவரவர்களின் மனங்களில் ஒளித்து வைத்திருந்த கத்திகளும் அரிவாள்களும் ரணக்கொடூரமாக வெளிப்படும் தருணம். சுரேஷ் வீட்டின் தலைவர் என்பதால், அவர் நாமினேஷன் பட்டியலில் இருந்தாலும், அவர் பெயரைச் சொல்ல முடியாது. (எஸ்கேப் ஆயிட்டார்டா!).

பிக்பாஸ் - நாள் 8
பிக்பாஸ் - நாள் 8

எதிர்பார்த்தபடியே சனத்தின் பெயர்தான் அதிக முறை உச்சரிக்கப்பட்டது. ‘எதற்கெடுத்தாலும் சண்டை... சிடுசிடுவென்று பேசுகிறார்... தான் கவனிக்கப்பட வேண்டும் என்பதற்காக வீண் விவாதம் செய்கிறார்’ என்பது போன்ற ஒரே மாதிரியான புகார்கள் சொல்லப்பட்டன. எனவே அதிகபட்சமாக சனம் 11 வாக்குகள் பெற்று முன்னிலையில் நின்றார்.

‘அதிகம் பேசுகிறார்’ என்று சனத்திற்கு கூறப்பட்ட காரணம், ஷிவானியின் விஷயத்தில் தலைகீழாக மாறியது. ‘பேசவே மாட்டேன்கிறார்... மிங்கிள் ஆக மாட்டேன்கிறார்’ என்று கூறி ஷிவானியின் பெயரும் அதிகம் அடிபட்டது.

“நான் ஒருத்தர் பேரை சொல்லலாம்-னு இருந்தேன். நீங்கதான் சொல்லக் கூடாதுன்னு சொல்லிட்டீங்களே” என்று வாக்குமூல அறையில் நிஷா குறிப்பிட்டதில், அவர் சுரேஷ் மீது கொலைவெறியில் இருக்கிறார் என்பது புரிந்து போயிற்று.

இப்படியாக எவிக்ஷன் பட்டியலில் இடம் பெற்றவர்களின் பெயர்கள், அதிக எண்ணிக்கையின் வரிசையில் பின்வருமாறு அமைந்தது. சனம், ஷிவானி, சம்யுக்தா, ரேகா, கேபி, ஆஜித் மற்றும் ரம்யா.

அடுத்தது ஃபேஷன் ஷோவாம். சும்மா சொல்லக்கூடாது... மக்கள் அனைவரும் வண்ணமயமான, நேர்த்தியான ஆடை மற்றும் ஒப்பனையில் பார்க்கவே அட்டகாசமாக இருந்தார்கள். தனது மாடலிங் துறை சார்ந்த தோரணையில் சனம் அழகாக இருந்தார். இவரும் பாலாஜியும் இந்தப் போட்டியின் நடுவர்களாம்.

திருவல்லிக்கேணி ஹைஸ்கூல் ஹெட்மாஸ்டர் போன்ற தோற்றத்துடன் நெற்றியில் திருமண், வேட்டி, கையில் குடை என்று வித்தியாசமாக வந்தார் சுரேஷ். ‘தலப்பாகட்டி’ விளம்பரம் போன்று தலையில் டப்பாகட்டுடன் வேல்முருகன்.

பிக்பாஸ் - நாள் 8
பிக்பாஸ் - நாள் 8

மக்கள் ஒவ்வொவரும் ஸ்டைலாக மேடையில் நடந்து வந்தார்கள். ‘சிறந்த முறையில் ஆடையை அணிந்தவராக’ ரமேஷூம் சம்யுக்தாவும் தேர்ந்தெடுக்கப்பட, ‘Best Attitude’ பிரிவில் ஷிவானியும் ஆரியும் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். பிறகு சிறிது நேரம் கழித்து ‘தப்பா சொல்லிட்டம்ப்பா” என்று ஷிவானியிடமிருந்து பிடுங்கி ரேகாவிற்கு அளித்தார்கள். (பாவம்ப்பா… அந்தப் பொண்ணு... எங்க போனாலும் கேட்டை சாத்தறாங்க...).

அடுத்தது ஆடல். பாடல். போட்டியாளர்கள் தங்களுக்கு விருப்பமான திறமைகளைக் காட்டலாம். சில போட்டியாளர்கள் சினிமாப்பாடல்களுக்கு ரகளையாக ஆடினார்கள்.

அடுத்து வந்தார் அனிதா. ‘பராசக்தியில் சிவாஜி பேசிய நீண்ட வசனம் மாதிரி, நல்ல தமிழில் ஒரு நீண்ட சொற்பொழிவை ஆற்றினார். உலகமெங்கும் பெண்கள் செய்த சாதனைகளின் பட்டியலாக அவரது பேச்சு இருந்தது. பட்டிமன்றத்தில் பேசும் பெண் மாதிரியே அசத்திய அனிதா, இடையில் ‘நடுவர்.. அவர்களே... நான் என்ன சொல்ல வர்றேன்னா’ என்று சொல்லி விடுவாரோ என்று கூட தோன்றியது.

சங்கப் பாடல்களில் இருந்து இரண்டை மனப்பாடமாக எடுத்து கடகடவென்று சொல்லி விட்டால், ‘அது புரியவில்லை’ என்றாலும் அந்தக் காரணத்திற்காகவே நம்மாட்கள் படபடவென்று கைத்தட்டி விடுவார்கள். எனவே அனிதாவிற்கு Standing Ovation கிடைத்தது. தமிழ் மொழியின் பயன்பாடு இளைய தலைமுறையிடம் குறைந்து கவலையை ஏற்படுத்திக் கொண்டிருக்கிற சூழலில் அனிதா போன்ற பேச்சாளர்களின் சேவை அவசியம் தேவை.

அனிதா மடை திறந்த வெள்ளமாக பொங்கிக் கொண்டிருந்த போது, ‘இது எந்த லேங்வேஜ்ப்பா..?’ என்பது போல் பிரமிப்புடன் கூர்ந்து பார்த்துக் கொண்டிருந்தார் ஷிவானி.

அடுத்து நிகழ்ந்த ஒரு கொடுமையை பரதநாட்டியக் கலைஞர்கள் நிச்சயம் மன்னித்து அருள வேண்டும். "பரதநாட்டியம் எப்படி உருவாகியிருக்க வேண்டும்?” என்பதை ஒரு கற்பனை நகைச்சுவையாக ‘மாங்காய் பறித்து’ ஆடிக் காட்டினார் சுரேஷ். அவர் கீழே விழுந்து வைத்து விடுவாரோ என்று நமக்குத்தான் பதற்றமாக இருந்தது. அதை விடவும் பதற்றம், அவரின் வேட்டி கழன்று விடுமோ என்று.

பிக்பாஸ் - நாள் 8
பிக்பாஸ் - நாள் 8
இந்தப் பிரிவில், எதிர்பார்த்தபடியே ‘அனிதா’ வென்றார். ‘Miss Talented’ என்கிற லேபிளை நடுவர் கட்டிய போது, இடைமறித்த அனிதா, “ஒரு முக்கியமான விஷயம்.. நான் ‘Mrs. Talented’ என்று மொக்கை போட்டார். ஆண்கள் பிரிவில் ‘சுரேஷ்’ வென்றதை காலத்தின் கோலம் என்றுதான் சொல்ல வேண்டும்.

இந்தப் பிரிவிலும் சரி, பின்வரப் போகும் கேள்வி-பதில் பகுதியிலும் சரி. சில போட்டியாளர்கள் தொடர்பான காட்சிகள் மட்டுமே காட்டப்பட்டன. இதர போட்டியாளர்கள் தொடர்பான காட்சிகள் நிறைய காட்டப்படவில்லை. அவை சுவாரஸ்யமாக அமையவில்லை போல.

அடுத்தது கேள்வி நேரம்... ‘கரகோஷங்களை எழுப்புங்கள்’ என்று அடிக்கடி பிரசங்கம் செய்யும் ரியோ, நிகழ்ச்சியை தொகுத்தளிக்கும் உற்சாகத்துடன் வந்தார். எனவே இந்தப் பிரிவில் அவரேதான் முதல் பலியாடு.

“நீங்கள் இந்தப் போட்டியில் வெற்றி பெறுகிறீர்கள் என்றால் உங்களின் எந்தத் தகுதியை வைத்து அந்த வெற்றி அமைய வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?” இதுதான் ரியோவிடம் கேட்கப்பட்ட கேள்வி.

“ஒவ்வொருவருக்கும் பல முகங்கள் இருக்கும். என்கிட்ட இருக்கிற சில விஷயங்களை நான் எப்பவுமே மறைச்சுப்பேன். எங்கயும் அதை சொன்னதில்லை. ‘ரியோ ஜாலியாவும் இருப்பான். வேலைன்னு வந்துட்டா... பொறுப்பாவும் இருப்பான்’ன்னு ஊர் சொல்லணும். மொத்தத்துல, 'நான் ஒரு ஃபர்பெக்ட் ஜென்டில்மேன்' என்கிற அடிப்படையில் வெற்றி பெற்றா சந்தோஷம்" என்று சொல்லி விடைபெற்றார் ரியோ.

பிக்பாஸ் - நாள் 8
பிக்பாஸ் - நாள் 8

ரியோவின் இந்த வாக்குமூலம் அடுத்த சில கணங்களில் அவருக்கே எதிராக மாறி வெடிக்கப் போகிறது என்பதை அவர் அப்போது அறிந்திருக்க மாட்டார்.

“உங்க வாழ்க்கை உலகத்திற்கு முன்னுதாரணமா இருக்கணும்னா... அது எந்த மாதிரி இருக்கணும்னு நெனக்கறீங்க?” என்கிற கனமான கேள்வி ஷிவானியிடம் வைக்கப்பட, “இங்க வந்த மொதோ நாள்ல இருந்து என்னை கடுப்பேத்திட்டுதான் இருக்காங்க. ஆனால் அவமானங்கள்தான் என்னை வளர்க்கும். நான் பிக்பாஸ் டைட்டிலை ஜெயிக்கும் போது ‘ஆ’ன்னு இவங்கதான் பார்க்கப் போறாங்க...” என்று ஷிவானி சொன்ன போது அவர் மனதில் ஒளித்து வைத்திருந்த கடுப்பெல்லாம் வெளியே கசிந்தது.

“விவேகானந்தர் (ன்னு நெனக்கறேன்) என்ன சொல்லியிருக்கார்னா ‘நீ எதுவாக ஆக நினைக்கிறாயோ. அதுவாகவே ஆகிறாய்” என்கிற மேற்கோளை ஷிவானி எடுத்து விடும் போது பிரமிப்பாகத்தான் இருந்தது. ‘ஆடு மேய்க்கற பையனுக்கு இம்பூட்டு அறிவா?’ன்னு எல்லோருக்கும் பொறாமைண்ணே..’ என்று செந்தில் ஒரு திரைப்படத்தில் கவுண்டமணியிடம் அனத்துவார். தொடர்பில்லாமல் அந்தக் காட்சி நினைவிற்கு வந்தது.

தன் வாழ்க்கையில் மேடு பள்ளத்தை சந்தித்த ரமேஷ், “முன்ன விளையாட்டுத்தனமா இருந்துட்டேன். இனிமே பொறுப்பா இருப்பேன். இனிமேல் சிந்தித்துதான் ஒவ்வொரு காலடியையும் வைப்பேன்" என்று திருந்திய பிள்ளையாக கூறிச் சென்றார்.

அடுத்த வந்த சம்யுக்தாவை ‘Single mother’ என்று பாலா குறிப்பிட, ‘am still married’ என்று தெளிவுப்படுத்தினார் சம்யுக்தா. (வட போச்சே!). "என்ன பிரச்னை வந்தாலும் ஒரு தாய்க்கு தன் குழந்தையை வளர்த்தெடுப்பதுதான் முக்கியமான பணி. பல வேலைகளை ஒரே சமயத்தில் செய்யும் திறமையுள்ள பெண்களால் சாதிக்க முடியும்” என்றார். தனது இளம் வயதில், குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்டிருந்த பாலா, சம்யுக்தாவின் பேச்சை மிகவும் ரசித்திருப்பார் என்று தோன்றுகிறது.

பிக்பாஸ் - நாள் 8
பிக்பாஸ் - நாள் 8

அடுத்து ஆரம்பித்தது அந்தப் பஞ்சாயத்து. பஞ்சாயத்து என்றாலே புரிந்து கொள்ள வேண்டாமா? வந்தவர் சுரேஷ் என்று.

“இந்த வீட்டில் யார் யாரெல்லாம் முகமூடி போட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்று நினைக்கிறீர்கள்?” என்று சுரேஷிற்கு வாகான கேள்வியை ‘கொளுத்திப் போட்டார்’ நடுவர் பாலா.

“எல்லோரும்தான் போட்டுட்டு இருக்காங்க... இப்ப ரியோ கூட சொன்னாரு..." என்று ரியோவின் பேச்சை சுரேஷ் மேற்கோள் காட்ட முற்பட, சர்ரென்று சூடானார் ரியோ. “என்னை உதாரணம் காட்டி நீங்க பேசக்கூடாது... கூடாதுன்னா... கூடாது” என்று கோபம் காட்டினார்.

“ஏண்டா.. இங்க எத்தனை பேரு இருக்காங்க.. அது ஏண்டா. என்னைப் பார்த்து அப்படியொரு கேள்வி கேட்ட?” என்று கரகாட்டக்காரன் கவுண்டமணி கேட்டது போலவே இருந்தது.

‘உங்களை உதாரணம் காட்டவில்லை... ஊன்றுகோலாக மட்டுமே பயன்படுத்தினேன்’ என்று சீனியர் சிட்டிஸன் ஸ்டேட்டஸை வைத்து சுரேஷ் சமாதானப்படுத்த முயன்றாலும் ரியோவின் கோபம் தணியவில்லை. “இப்ப பார்த்தீங்க இல்ல... இதுதான் இன்னொரு முகம்” என்று ரியோ சொன்னது, தனது முன்கோபத்தையோ என்பது போல் தோன்றியது.

“ஏ... எல்லோரும் ஏமாந்தீங்களா?’ என்று சிறிது நேரத்தில் ரியோ கபகபவென்று சிரிப்பார் என்று கூட நான் எதிர்பார்த்தேன். விஜய் டிவியின் ரியாலிட்டி ஷோக்களில் இந்த ‘வெள்ளாட்டு’ பழகினதொன்று. ஆனால் அப்படி நிகழவில்லை.

பிக்பாஸ் - நாள் 8
பிக்பாஸ் - நாள் 8

இந்த விஷயத்தில் ரியோவின் எதிர்வினையை ‘ஓவர்ஆக்ட்’ என்றுதான் சொல்ல வேண்டும். ‘ஆம். நான் சில விஷயங்களில் என்னை மறைத்துக் கொண்டிருக்கிறேன்’ என்று அவரே அளித்த சுயவாக்குமூலத்தை வைத்து சுரேஷ் உதாரணம் காட்டியதில் எவ்வித தவறுமில்லை.

ஆனால், ‘எனக்கு இது பிடிக்கவில்லை’ என்று ஒருவர் தன் அந்தரங்கமான குணத்தை முன்னிட்டு சொல்லும் போது ‘சரிப்பா.. ஏதோ ஒரு ப்ளோல சொல்லிட்டேன். மன்னிச்சுடு’ என்று விட்டுப் போகாமல் சுரேஷூம் பதிலுக்கு மல்லுக்கட்டினார்.

இந்த கேள்வி நேரம் பிரிவில் வென்று ‘Mr.Bigg Boss’ டைட்டிலைப் பெற்றார் ஜித்தன் ரமேஷ். மதிப்பெண் பெறுவதில் இவருக்கும் ஆரிக்கும் எப்போதும் சமமான போட்டி இருந்ததாம்.

ஆச்சர்யகரமாக பெண்கள் பிரிவில் வென்றவர் ஷிவானி. விவேகானந்தரை மேற்கோள் காட்டியது ‘வொர்க்அவுட்’ ஆகி விட்டது போல. ‘பேசாத பெண்ணுக்குப் பேச்சுப் போட்டியில் பரிசு’. என்னவொரு விநோதம்?! "அகர முதல எழுத்தெல்லாம் அறிய வைத்தாய் தேவி’’ என்று சிவாஜி பாடுவது போல ஷிவானி உணர்ந்திருக்கக்கூடும்.

நள்ளிரவு... அதென்னமோ தன்னுடைய சொந்த விஷயங்களை கேமரா முன்பு 'ரகசியமாக' மட்டுமே சொல்கிறார் நிஷா. அவருக்கு மறுநாள் பிறந்த நாளாம். "எங்க அம்மாவை ரொம்ப மிஸ் பண்றேன்..” என்று கலங்கிய நிஷா, சட்டென்று சுதாரித்து "நானே எனக்கு விஷ் பண்ணிக்கறேன்” என்று உடம்பை குலுக்கி ஆடிய அந்த நடனம், அவருடைய பிரத்யேக பிராண்ட் நகைச்சுவை.

பிக்பாஸ் - நாள் 8
பிக்பாஸ் - நாள் 8

நிஷாவின் பிறந்த நாளையொட்டி ‘சர்ப்ரைஸ் கேக்’ கொடுத்தார். ‘அய்யய்யோ.. நீ அழகா பொறந்துட்டியே’ என்பதை ‘happy birthday to you’ பாடலின் மெட்டில் பாடி ரியோ கலாய்க்க, வீடு கலகலத்தது. அப்போதும் தன் அம்மாவை எண்ணி குழந்தை போன்ற முகபாவங்களுடன் நிஷா கலங்க. ‘சரி... சரி... அழக்கூடாது” என்று வழக்கம் போல் சமாதானம் செய்தார் ரியோ.

திடீர் ஆச்சரியமாக ‘அகம் டிவி’யில் நிஷாவின் அம்மாவும், நிஷாவின் செல்ல பாப்பாவும் தோன்ற உணர்ச்சிகளின் வெள்ளத்தில் நீந்தினார் நிஷா. விஜய் டிவிக்கு இது போன்ற தருணங்கள் எல்லாம் அல்வா சாப்பிடுவது போல. எனவே பேக்ரவுண்ட் மியூசிக் எல்லாம் போட்டு ஜமாய்த்தார்கள். டிவியின் அருகே ஓடிச் சென்று குழந்தைக்கு ‘முத்தா’ கொடுத்தார் நிஷா.

இதைப் பார்த்த சம்யுக்தா ஒரு பக்கம் கலங்க, இன்னொரு பக்கம் ஷிவானியின் அழுகை கட்டுக்கடங்காததாக இருந்தது. பிறகு தனிமையிலும் சென்று அழுதார். அவருடைய அம்மாவை ரொம்பவும் ‘மிஸ்’ செய்கிறார் போல. வீடியோவைப் பார்த்தவுடன் ஒவ்வொருவருக்கும் தன் உறவினர்களின் நினைவு வந்திருக்க வேண்டும்.

ஆக... நிஷாக்காவின் சென்ட்டிமென்ட் காட்சியோடு இன்றைய நாள் முடிந்தது.

பிக்பாஸ் - நாள் 8
பிக்பாஸ் - நாள் 8

"நட்புக்கூட்டணி வைத்து சிண்டிகேட் செய்கிறார்கள்” என்பது போல் பல புகார்கள் இருந்தாலும்... கடந்த சீஸனில் சாண்டி, கவின், முகேன், தர்ஷன், லாஸ்லியா கூட்டணி செய்த கலாட்டாக்கள் இப்போது தவிர்க்க முடியாமல் நினைவிற்கு வருகின்றன. கல்லூரி கேம்பஸில் அமர்ந்திருப்பது போன்று அத்தனை ஜாலியாக இருந்தது. குறிப்பாக சாண்டி செய்த ‘டப்பிங்’ கலாட்டாக்களை மறக்க முடியாது. கவின் அடித்த ஜாலி கவுண்ட்டர்கள் சுவாரஸ்யம்.

இந்த சீஸனிலும் இளைஞர்கள் இருந்தாலும் நகைச்சுவையுணர்வு குறைவாக இருக்கிறது. ரியோ, நிஷா மட்டுமே அவ்வப்போது சிறிது ஆறுதல் அளிக்கிறார்கள். மற்றபடி, ஒரு விசித்திரமான முதியோர் இல்லம் போன்ற உணர்வையே அளிக்கிறது நான்காம் சீஸன்.