Published:Updated:

`பாஸி' அர்ச்சனா, `விஷப்பூச்சி' அனிதா, `சீரியஸ்' ஆரி... ராஜாளி நீ காலி! பிக்பாஸ் – நாள் 66

பிக்பாஸ் – நாள் 66

நிஷா மனம் புண்பட்டு அழுது... அர்ச்சனாவும் மன்னிப்பு தந்து விட்ட விஷயத்தை இப்போது டாஸ்க்காக மாற்றினால் நிஷா செய்ததற்கும் அர்ச்சனா செய்ததற்கும் வித்தியாசமே இல்லை என்றுதான் பொருள். பிக்பாஸ் வீட்டில் நடந்தது என்ன? – நாள் 66

Published:Updated:

`பாஸி' அர்ச்சனா, `விஷப்பூச்சி' அனிதா, `சீரியஸ்' ஆரி... ராஜாளி நீ காலி! பிக்பாஸ் – நாள் 66

நிஷா மனம் புண்பட்டு அழுது... அர்ச்சனாவும் மன்னிப்பு தந்து விட்ட விஷயத்தை இப்போது டாஸ்க்காக மாற்றினால் நிஷா செய்ததற்கும் அர்ச்சனா செய்ததற்கும் வித்தியாசமே இல்லை என்றுதான் பொருள். பிக்பாஸ் வீட்டில் நடந்தது என்ன? – நாள் 66

பிக்பாஸ் – நாள் 66
நேற்று எதிரணியினர் அர்ச்சனாவை விதம் விதமாக இம்சித்தும் மனவுறுதியுடன் அவர் தாங்கிக் கொண்டதைப் பாராட்டியிருந்தேன் அல்லவா? அந்தப் பாராட்டு அப்படியே ஒருபக்கம் இருக்கட்டும். அதைப் பற்றி கொஞ்சம் பேச வேண்டும்...

இக்கட்டான நேரத்தில் ஏற்படும் உணர்ச்சிகளை ஒருவர் புரிதலுடனும் மனமுதிர்ச்சியுடனும் கடந்து செல்வது வேறு. ஆனால் பல்லைக் கடித்துக் கொண்டு உள்ளுக்குள் அடக்கிக் கொள்வது வேறு. முன்னது புத்திசாலித்தனம். பின்னது ஆபத்தானது. ஒருவர் தொடர்ந்து தன் உணர்ச்சிகளை அடக்கிக் கொண்டேயிருந்தால் அது தீவிரமான மனச்சிக்கலுக்கு இட்டுச் சென்று விடும்.

அடுப்பில் ஏற்றப்பட்ட குக்கர் மாதிரிதான் உணர்ச்சிகளும். அவ்வப்போது சற்று ரிலீஸ் செய்தால் ஓகே. அப்படியே அடக்கி வைத்தால் எதிர்பாராத கணத்தில் வெடித்து விடும். அர்ச்சனாவின் நிலைமையும் அப்படித்தான் ஆயிற்று.

காலையில் இருந்தே எதிரணியினர் அவரை விதம் விதமாக இம்சித்துக் கொண்டிருந்தார்கள். அந்த அழுத்தம் அர்ச்சனாவிற்கு கூடிக் கொண்டே சென்றது. நிஷா அவரது தந்தையின் மரணத்தைப் பற்றி பேசியது, அர்ச்சனாவிற்கு ஒரு பிரேக்கிங் பாயின்டாக இருக்கலாம். எனவேதான் யாரும் சமாதானப்படுத்த முடியாத அளவிற்கு வெடித்து அழுதார்.

பிக்பாஸ் – நாள் 66
பிக்பாஸ் – நாள் 66

தன்னை விதம் விதமாக கொடுமைப்படுத்தி சிலுவையில் ஏற்றிய போதும் ‘'இவர்கள் தங்களின் அறியாமையால் செய்கிறார்கள். இந்தப் பாவிகளை மன்னித்தருளும் ஆண்டவரே!'’ என்று இயேசுவால் அவர்களுக்காக பிரார்த்தனை செய்ய முடிந்தது. அது ஞானிகளுக்கே உரித்தான புரிதல். சராசரி மனிதர்கள் அந்த முதிர்ச்சியை சற்று பயில முயலலாம்.

ஒரு நகைச்சுவைக் காட்சியில் போலி ரவுடியான விவேக், வில்லனிடம் ‘ஏரியா பிரிக்கும்’ வேலைக்குக் கெத்தாக செல்வார். அவர் திரும்பி வரும் போது முன்புற உடை இயல்பாக இருக்கும். ஆனால் ஊமைக்குத்தாக நிறைய வாங்கியதால் அவர் பின்புறம் முழுக்க ரத்தக்காயத்துடன் கிழிந்து போயிருப்பது அப்புறம்தான் தெரியும்.

அர்ச்சனாவின் நிலைமையும் அப்படித்தான் ஆனது. அடிப்படையில் இதுவொரு விளையாட்டு. இதற்கு ஏன் இத்தனை தீவிரமாக ‘தம்’ கட்ட வேண்டும் என்று அவர் யோசித்திருக்கலாம். அதே சமயத்தில் எதிரணியும் இதை எல்லை மீறாமல் நடத்தியிருக்க வேண்டும் என்பதும் முக்கியமான விஷயம்.

ஓகே... 66-ம் நாளில் என்ன நடந்தது?!

65-ம் நாளின் தொடர்ச்சி காட்டப்பட்டது. பாதிக்கப்பட்ட அர்ச்சனா ஒரு பக்கம் அழுது கொண்டிருக்க, பர்ஃபாமென்ஸில் கமலையே மிஞ்சத் துடிக்கும் ‘தேவர் மகன்’ வடிவேலு மாதிரி இன்னொரு பக்கம் அர்ச்சனாவையே தாண்டிச் சென்று அழுது கொண்டிருந்தார் நிஷா.

நிஷா அடிப்படையில் ஒரு வெகுளியான பெண்மணி. நிச்சயம் இதை அவர் திட்டமிட்டெல்லாம் செய்திருக்க மாட்டார். டாஸ்க்கில் வெற்றி பெற வேண்டும் என்கிற உணர்ச்சி வேகத்தில் செய்திருப்பார். இந்த முதலாளித்துவ சமூகம் நமக்குக் கற்றுத் தரும் பாடமும் இதுதான். எவனையாவது எப்படியாவது மிதித்துக் கொண்டு போ... வெற்றிதான் முக்கியம். மிக ஆபத்தான போக்கு இது. இந்த டாஸ்க்கை வயதில் இளையவர்களான கேபி, ரம்யா போன்றோர் இயல்பாக கடப்பதில் இருந்து அர்ச்சனாவும் நிஷாவும் பாடம் கற்றுக் கொள்ளலாம்.

பிக்பாஸ் – நாள் 66
பிக்பாஸ் – நாள் 66

நிஷாவிடமிருந்து எழுந்து சென்று சோமுவிடம் ஓடிச் சென்ற அர்ச்சனா, "என்னால இதை கையாள முடியலை.. வீட்டுக்குப் போகணும்..." என்று கதறியழுதது பரிதாபமான காட்சி. முன்பே சொன்னதுதான். இது ஒரு விளையாட்டு. இத்தனை தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை. மனஉறுதி ஒரு பக்கம் இருந்தாலும் சமயோசிதமும் கூடவே மிக முக்கியம்.

அர்ச்சனாவை சமாதானப்படுத்திய சோம் பதிலுக்குச் சொன்ன ஒரு தகவல் சற்று அதிர்ச்சியாகத்தான் இருந்தது. "ஆரியும் இதே போலத்தான் என்னை நோண்டிட்டு இருந்தார். குட்டுவைப் பற்றி பேசிட்டே இருந்தார். ‘அது வீட்ல இல்லைன்னா என்ன பண்ணுவே... செத்துப் போச்சின்னா என்ன பண்ணுவே?’-னுல்லாம் கேட்டுட்டு இருந்தார்” என்று அவர் சொன்ன போது சற்று திகைப்பாகத்தான் இருந்தது. தன் வளர்ப்பு நாயை மகளைப் போல சோம் அணுகும் விதம் அனைவருக்கும் தெரியும். அப்படியிருந்தும் ஆரி இப்படிக் கேட்டிருந்தால் அது நுண்ணுணர்வற்ற விஷயம். மிக மிக தவறு ஆரி ப்ரோ!

“நீங்க ஒரு வார்த்தை சொல்லி என்னைத் தடுத்திருந்தா நான் அப்படிப் பேசியிருக்க மாட்டேன்" என்கிற காரணத்தைச் சொல்லி அர்ச்சனாவின் மடியில் படுத்து அழுது தீர்த்தார் நிஷா. பிறகு சாப்பிட வராமல் அடம்பிடித்த நிஷாவை, ஒரு அம்மா போல சமாதானப்படுத்தி அர்ச்சனா அழைத்துச் சென்ற காட்சி நம் வீட்டில் நடக்கும் சம்பவங்களை நினைவுப்படுத்தியது. '‘எங்கப்பாதான் மழையா வந்திருக்கார்'’ என்று ஆறுதல்படுத்தும் வகையில் அர்ச்சனா சொல்ல ‘'அப்பா... சாரிப்பா...'’ என்று மழையை மிரட்டும் வகையில் நிஷா கதறிய போது சற்று பதற்றமாகத்தான் இருந்தது. நாம் மனச்சிக்கலில் இருக்கும் போது என்னவெல்லாம் விநோதமாக செய்து விடுகிறோம்?!

இன்னொரு பக்கம் வேறு பஞ்சாயத்து ஓடிக் கொண்டிருந்தது. ‘குண்டு ரோபோ’ என்று பாலாஜி அழைத்து விட்டதால் ஷிவானி கோபமாக இருக்கிறார் போல. ஆனால் அதை வெளிப்படையாக பேசாமல் தன் வழக்கமான பாணியில் சூசகமாக சொல்லி பாலாஜியை அலைய விட்டுக் கொண்டிருந்தார் ஷிவானி.

பிக்பாஸ் – நாள் 66
பிக்பாஸ் – நாள் 66
உருவக்கேலி எத்தனை கொடுமையான விஷயம் என்பதைப் பற்றிய உரையாடல்கள் பெருகி வருகின்றன. நிஷாவைப் போலவே பாலாஜியும் ஏதோ ஒரு ஜாலி மூடில் செய்திருக்கலாம். ஆனால், "டாஸ்க்கு... என்ன பண்றது..?” என்றெல்லாம் அவர் நியாயப்படுத்த முடியாது. பிறகு ஷிவானியிடம் சென்று ‘சாரி’ கேட்ட பாலாஜி, அடுத்த நாளில் இதையே வேறு விதமாக செய்தது முறையற்ற விஷயம்.

தனக்குத் தெரிந்த ஒரே கானா பாடலை, அதே வழக்கமான முறையில் பாடி சூழலை இலகுவாக்க முயன்றார் பாலாஜி. கூட தாளம் போட்டார் சோம்.

நள்ளிரவைத் தாண்டி சோமுவும் அர்ச்சனாவும் வெளியே பேசிக் கொண்டிருந்தார்கள். "எங்கப்பாவிற்கு என்னைப் பிடிக்காதுன்னு நீண்ட காலம் நினைச்சிருக்கேன். என் கூடதான் நிறைய சண்டை வரும். ஆனா அவர் மரணப்படுக்கைல இருந்தபோது என் போட்டோ மட்டும்தான் இருந்தது" என்று சோமுவிடம் நெகிழ்வாக அர்ச்சனா சொல்லிக் கொண்டிருந்ததில் ஒரு அழகான சிறுகதை இருந்தது.

அப்போது பாலாஜி அங்கு வர இருவரும் பேச்சை மாற்றி நிலாவை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது போல் உரையாடலை மாற்றியது சுவாரஸ்யமான காட்சி.

நாள் 66... ‘ராஜாளி. நீ காலி…’ என்கிற ரகளையான பாடலுடன் விடிந்தது. ‘நீ காலி’ என்பது இன்றைக்கு அணி மாறும் போது மற்றவர்கள் செய்யப்போகும் இம்சைகளுக்கான குறியீட்டு வார்த்தை என்று எடுத்துக் கொள்ளலாம். பாலாஜியை எழுப்பி ‘குட் மார்னிங்’ சொல்வதின் மூலம் அவரின் மீது கோபமில்லை என்பதை செய்கையால் உணர்த்தினார் ஷிவானி.

கிச்சன் ஏரியாவில் நின்று கொண்டிருந்த ரம்யா, குழந்தைத்தனமான சிரிப்புடன் பாடலுக்குத் தலையாட்டிக் கொண்டிருந்த காட்சி, பார்க்க ‘க்யூட்டாக’ இருந்தது’ என்று எழுதினால் இதை கொலைவெறியுடன் ஆட்சேபிக்க நூறு பேர் கமென்ட் பாக்ஸில் கிளம்பி வருவார்கள் என்பதால் இந்த வாக்கியத்தை எச்சில் தொட்டு அழித்து விடவும்.

"எனக்கு முட்டை ஸ்மெல்னா அலர்ஜி-ன்னு அர்ச்சனா அக்காவிற்கு தெரியும். எனவே என்னைத்தான் டார்க்கெட் பண்ணுவாங்க" என்று பீதியுடன் யூகித்துக் கொண்டிருந்தார் அனிதா. "நம்மளை தொடக்கூடாதுன்னு சொல்லிடுவோம்" என்று எதிரணி இப்போதே பயத்துடன் வியூகம் வகுத்துக் கொண்டிருந்தது. அணி மாறும் போது, "நம்மளை வெச்சு செஞ்சிடுவாங்க" என்பது குறித்து அவர்கள் இப்போதே நடுங்கிக் கொண்டிருந்தார்கள்.

பிக்பாஸ் – நாள் 66
பிக்பாஸ் – நாள் 66

"செயல் இழந்த இயந்திரங்கள் சில விநோதமான விஷயங்களைச் செய்ய வேண்டும்'’ என்கிற பிக்பாஸின் அறிவிப்பு வந்தது. '‘ஒரு வார்த்தை தமிழிலும் இன்னொரு வார்த்தையை ஜிப்ரீஷிலும் பேச வேண்டும்'’ என்பது உள்ளிட்ட கோக்குமாக்கான விதிகள் இணைக்கப்பட்டன.

கிச்சன் ஏரியாவில் இருந்த அனிதா, தான்தான் கேப்டன் என்கிற காரணத்தினால் “அக்கா... நீங்க டாஸ்க்கிற்காக டிரஸ் மாத்தணும்” என்று நினைவுப்படுத்த சுள்ளென்று எரிந்து விழுந்தார் அர்ச்சனா. Bossy ரோபோ என்று தொடர்ந்து அழைக்கப்படுவது அவருக்கு எரிச்சல் ஊட்டுகிறது போல. ‘'என்னுடைய தனிப்பட்ட காரணத்தை தொட்டதுதான் தவறு. மற்றபடி டாஸ்க்கிற்காக நான் எதை வேண்டுமானாலும் பொறுத்துக் கொள்வேன்'’ என்று அவர் முன்னர் சொன்னதை அவரே இப்போது பொய்யாக்கி விட்டார்.

“உங்களுக்கு கோபம் வந்தா வெளிப்படையா அதைக் காட்ட மாட்டீங்க" என்று அர்ச்சனா குறித்து, அனிதா சொன்னது மிகச் சரியான அப்சர்வேஷன். இப்படி உணர்ச்சிகளை சட்டென்று வெளிப்படையாக காட்டாதவர்கள் சற்று ஆபத்தானவர்கள். ‘Bossy’ என்பது அப்படியொன்றும் அவச்சொல் இல்லையே?! மேலும் கோபத்தை வரவழைப்பதுதானே டாஸ்க்கின் ஒரு பகுதி?!

'‘விடுங்க... அனிதாவிற்கு ‘விஷப்பூச்சி சோம்பேறி’ன்னு ஒரு பேரு கொடுத்துடலாம்” என்று அர்ச்சனாவை சமாதானப்படுத்திக் கொண்டிருந்தார் ‘ராஜா வீட்டுக் கன்னுக்குட்டி’. “ஆமாம்.. நாளைக்கு இருக்கு" என்று அர்ச்சனாவும் கறுவினார். (செலக்டிவ் அம்னீசியா போல அன்பையும் செலக்ட்டிவ்வாகத்தான் அர்ச்சனா தருவார் போல).

அர்ச்சனா சென்றுவிட்ட பிறகும் அனிதா தன் அனத்தலைத் தொடர்ந்த போது "அவங்க போய் அரைமணி நேரமாச்சு" என்று கிண்டல் செய்தார் பாலாஜி. "அவங்களுக்கு கேட்கும்" என்று அந்தச் சமயத்தில் அனிதா சொன்ன பதில் நுட்பமானது. அது பெண்களுக்கு மட்டுமே புரியும் என்று நினைக்கிறேன். தூரமாகச் சென்று விட்டாலும் அர்ச்சனாவின் காது இங்குதான் இருக்கும் என்று அனிதாவிற்குத் தெரியும். பாலாஜி சொன்ன கிண்டலை "என்னது ஸ்ட்ராட்டஜியா..?" என்று தவறாக புரிந்து கொண்டு வந்தார் அர்ச்சனா.

பிக்பாஸ் – நாள் 66
பிக்பாஸ் – நாள் 66

‘ரோபோ’ டாஸ்க் தொடர்ந்தது. அதென்னமோ ஷிவானி ரோபோவிற்கு மட்டும் வழக்கமான கவர்ச்சியான உடை தரப்பட்டிருந்தது. “நூவண்ட்டே நாக்கு சால இஷ்டம்" என்று சோமு சொல்ல, "சரி... இருந்துட்டுப் போகட்டும்... ஹா... ஹா... ஹா" என்று ஷிவானி, ரம்யா, கேபி ஆகியோர் பதில் சொல்ல வேண்டுமாம். இப்படியொரு இம்சையான டாஸ்க்கை ரியோவும் பாலாஜியும் சேர்ந்து தர சோம் அதைச் சொல்லும் பாணியில் ஷிவானிக்கும் ரம்யாவிற்கும் சிரிப்பு தாங்கவில்லை. பக்கத்திலிருந்த அர்ச்சனாவும் ரமேஷூம் கூட தலையைக் குனிந்து அடக்க மாட்டாமல் சிரித்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் கடமை வீரரான கேபி மட்டும் முகத்தை சீரியஸாக வைத்துக் கொண்டு சொல்லிக் கொண்டிருந்தார்.

இவர்கள் செய்வதைப் பார்த்து தூரத்திலிருந்து ரியோ, பாலாஜி, ஆஜீத் ஆகியோரும் அடக்க மாட்டாமல் சிரித்தார்கள். உண்மையில் இது ஒரு உத்தி. தானே கிண்டலடித்து விட்டு தானே அடக்க மாட்டாமல் சிரித்தால் எதிராளிக்கு அந்தச் சிரிப்பு நிச்சயம் பரவி விடும்.

இந்த டாஸ்க்கை இப்படி காமெடியாக செய்வதை விட்டுவிட்டு ஏன் அடித்துக் கொள்கிறார்கள் என்பதுதான் புரியவில்லை. நேற்றைய சூட்டில் இருந்து பாடம் கற்றுக் கொண்டதால் இன்றைய டாஸ்க் நிறைய காமெடிகளுடன் நடந்தது.

‘மாப்பு எனக்கு இன்னிக்கு ஆப்பு... ஜா ஜிங் ச்சா... ஜிக்கிஜிக்கிச்சா’ என்கிற வசனத்தை குழந்தையைக் கொஞ்சுவது போல சொல்ல வேண்டும். இதுதான் ரமேஷிற்கு ஆரி தந்த டாஸ்க். சாப்பிட்டுக் கொண்டிருந்த ரியோவிடம் சென்று ரமேஷ் இதைச் சொல்ல, இதை எதிர்பார்க்காத அவர் திடுக்கிட்டுப் பார்த்தது சுவாரஸ்யமான நகைச்சுவை. நிஷாவால் இந்த வசனத்தை எதிர்கொள்ளவே முடியவில்லை. தாங்க முடியாமல் சிரித்துத் தீர்த்தார். ‘இருங்க நாளைக்கு அவங்களுக்குத்தான் ஆப்பு’ என்று பல்லைக்கடித்துக் கொண்டு சிரிப்புடன் ரமேஷிடம் ரகசியம் பேசினார் அர்ச்சனா.

பிக்பாஸ் – நாள் 66
பிக்பாஸ் – நாள் 66

இதை விடவும் கேபியிடம், ரியோவும் ஆஜீத்தும் செய்தததுதான் ரகளையான காமெடி. தங்களுக்கு ஆரஞ்சு பழம் ஊட்டச் சொல்லி கேபியை இருவரும் இம்சித்துக் கொண்டிருந்தார்கள். ஒரு கட்டத்தில், "சரி... நீயும் ஒண்ணு சாப்பிட்டுக்கோ" என்று ரியோ சொல்ல கேபியும் இயல்பாக வாயில் போட்டுக் கொண்டார். "எவ்ள நேரம் வெயிட் பண்ண. இப்படி நான் சொல்வேன்னு?” என்று அந்தச் சமயத்தில் ரியோ சொன்ன டைமிங்கான வசனம் கேபியை சற்று சிரிக்க வைத்து விட்டது. ஆனால் சட்டென்று முகத்தை மாற்றிக் கொண்ட அவர் ‘நான் சிரிக்கவில்லை’ என்று சாதித்தார். "ஒத்துக்கடி... அம்மா சத்தியமா சொல்லு" என்று கேட்ட ரியோ, பிறகு பயந்து போய் "அதெல்லாம் தப்பு" என்று சத்தியத்தை எச்சில் தொட்டு அழித்தார்.

"பப்பி நாய் எப்படி குரைக்கும்... வெறி பிடிச்ச நாய் எப்படி குரைக்கும். செஞ்சு காட்டுங்க பார்க்கலாம்..." என்று ரம்யாவை இம்சிக்கத் துவங்கினார் அனிதா. ரம்யா அதைச் செய்து காட்டிய போது அனிதாவின் சிரிப்பு பாணிதான் நினைவிற்கு வந்தது. சொந்த செலவில் சூன்யம் வைத்துக் கொண்டதை தானே அறியாத அனிதா ‘சமர்த்து ரோபோ... சொன்னதெல்லாம் செய்யுது’ என்று ISO சான்றிதழை அந்த ரோபோவிற்கு வழங்கினார்.

ரியோ ஒளிந்திருந்து பயமுறுத்தியும் கேபி மசியவில்லை. "இவ்ளோ முயற்சி செய்றேனே... அந்த மரியாதைக்காவது கொஞ்சூண்டு சிரிச்சிடேன்" என்று பரிதாபமாகக் கெஞ்சிக் கொண்டிருந்தார் ரியோ. ஆஜீத் அப்போது விளையாட்டாக சிறிது தண்ணீரை கேபியின் முகத்தில் விசிறியடித்தார். பிறகு அது பெரிய குற்றச்சாட்டாக தன் மீது வரப்போகிறது என்பதை அப்போது அவர் எதிர்பார்த்திருக்க மாட்டார்.

‘கூல் டவுன் பாஸி ரோபோ’ என்பதை அர்ச்சனாவிடம் சோம் திருப்பிச் திருப்பி சொல்ல வேண்டும். இதுதான் பாலாஜி தந்த டாஸ்க். ‘Bossy’ என்கிற வார்த்தை அர்ச்சனாவை ஆழமாக புண்படுத்துகிறது போல. எனவே கண்ணீர் விட்டு அழத் துவங்கி விட்டார். "இது நம்ம எமோஷனை சோதிக்கற விளையாட்டு. அப்படித்தான் இருக்கும்" என்று பிறகு சமாதானம் சொன்னார் பாலாஜி. அனிதாவும் வந்து அர்ச்சனாவை அணைத்துக் கொண்டார். (டாஸ்க் திரும்பும்போது வெச்சு செஞ்சா என்ன பண்றது?!).

இந்த வார்த்தையை அர்ச்சனா நேர்மறையாக எடுத்துக் கொண்டால் புண்படவே தேவையிருக்காது. தலைமைப் பொறுப்பிற்கான உணர்வுடன் ஒரு பெண் இருப்பது ஆரோக்கியமான விஷயம். ஒரு காலத்தில் மனித குலமே தாய்வழி சமூகமாகத்தான் இருந்தது. அர்ச்சனாவிடம் தலைமைப் பண்பு இயல்பாகவே இருக்கிறது. அதை ஏன் அவமதிப்பாக எடுத்துக் கொள்கிறார் என்று தெரியவில்லை.

பிக்பாஸ் – நாள் 66
பிக்பாஸ் – நாள் 66

சோம் ரோபோவை விட்டு ஷிவானி ரோபோ சரியாக இயங்குகிறதா என்று சோதனை செய்யச் சொன்னார் பாலாஜி. இதில் ஷிவானி சிரித்து விட்டதால் ஒரு இதயம் பிடுங்கப்பட்டது. பாலாஜி சொன்ன கணக்கை சோம் மாற்றிக் கேட்டதால், "ரெண்டு மொக்கை ரோபோ பேசினா... இப்படித்தான் இருக்கும்" என்று பாலாஜி கிண்டலடிக்க ஷிவானியால் சிரிப்பை அடக்க முடியவில்லை. பக்கத்திலிருந்த அர்ச்சனாவும் சிரித்தார். (மத்தவங்களை கிண்டல் பண்ணும் போது மட்டும் சிரிப்பு வருதே மேடம்!).

‘குண்டு ரோபோ’ என்று சொல்வது ஷிவானிக்குக் கோபத்தை ஏற்படுத்தும் என்று தெரிந்தும் அது சார்ந்த கிண்டலை பாலாஜி மறைமுகமாக செய்ய, இப்போது கோபித்துக் கொண்ட ஷிவானி தானே இதயத்தைப் பிடுங்கி வீசிச் சென்றார். "சிட்டிக்குக் கோபம் வருது" என்று அதையும் கிண்டல் செய்த பாலாஜி, "இது டாஸ்க்குதானே" என்று தானே சமாதானம் தேடினார்.

"நீங்க இந்தப் போட்டிக்குத் தகுதியானவர் கிடையாது" என்று சிலமுறை நிஷாவிடம் ஆரி முன்பு சொல்லியிருக்கிறார் போலிருக்கிறது. அதை நிஷா பல முறை சொல்லிப் புலம்பியிருக்கிறார்.

இதே ஆயுதத்தை இப்போது கேபியை கோபப்படுத்துவதற்காக சொல்லிக் கொண்டிருந்தார் ஆரி. அவரால் மற்றவரை சிரிக்க வைக்க முடியாது. ஆனால் எளிதில் கோபப்படுத்த முடியும்.

ஆரியின் சீண்டலால் கேபி உள்ளுக்குள் காண்டானாலும் வெளியில் காட்டிக் கொள்ளவில்லை. இந்தச் சந்தர்ப்பத்தை உபயோகித்துக் கொண்ட ஆரி, வீட்டில் நிகழும் ‘அன்பு அரசியல்’ உள்ளிட்டு தன் மனதில் இருந்த பல விஷயங்களையெல்லாம் கேபியிடம் கொட்டி தீர்த்துக் கொண்டிருந்தார். ‘'இனிமே இவ சிரிக்கமாட்டா'’ என்று தூரத்தில் சொல்லிக் கொண்டிருந்தார், கேபியின் நெருங்கிய தோழரான ஆஜீத்.

ஷிவானி ரோபோவை தங்கள் அணி எப்படி செயலிழக்க வைத்தது என்பதை கேமராவிடம் விளக்கிக் கொண்டிருந்தார் பாலாஜி. அதிலிருந்த முரணை ஷிவானி சொல்லிய சில நிமிடங்களுக்குள் இந்த டாஸ்க் முடிந்ததற்கான பஸ்ஸர் அடித்தது. தன்னை இம்சித்த ஆஜீத்தை கொலைவெறியுடன் ஜாலியாக துரத்திச் சென்றார் ரம்யா. டாஸ்க் முடிந்தும் சீரியஸ் மோடிலிருந்து இறங்காமல் கெத்தாக நின்றார் கேபி. (சாமி மலையிறங்க டைம் எடுத்துக்கும் போல!).

பிக்பாஸ் – நாள் 66
பிக்பாஸ் – நாள் 66

“ஆரி தன்னை வார்த்தைகளால் டார்ச்சர் செய்தார்" என்பதை அர்ச்சனாவிடம் ரகசிய புகாராக பிறகு சொல்லிக் கொண்டிருந்தார் கேபி. "ரெண்டு ஹார்ட்டும் அப்படியேதான் இருந்ததுல்ல. நீ சிரிச்சிருந்தா விட்டிருப்போம் இல்லையா?" என்று சமாதானம் சொல்லிக் கொண்டிருந்தார் ரியோ.

இப்போது ஆட்டம் மாறியது. "ராஜாளி... நீ காலி..." என்று காலையில் ஒலித்த பாடலை அரங்கேற்றுவதற்கான வேளை. பாலாஜி அணி மூன்று இயந்திரங்களை செயலிழக்க வைத்திருக்கின்றன. எனவே இப்போது அர்ச்சனா அணி மூன்று இயந்திரங்களுக்கும் மேலாக செயலிழக்க வைத்தால் வெற்றி கிட்டும்.

முதல் அணியைப் போலவே இவர்களும் கூடி ‘எப்படியெல்லாம் இம்சைகளை மேற்கொள்ளலாம்?’ என்று சதியாலோசனை நடத்தினார்கள். ‘நோ கிச்சு கிச்சு... No physical touching... ஓகேவா...?’ என்று எதிரணி பாதுகாப்பு வியூகத்தை கெஞ்சிக் கொண்டிருக்க "அதெல்லாம் முடியாது... நேத்து நீங்க எங்களுக்கு என்னெல்லாம் செஞ்சீங்களோ.. பதிலுக்கு அதெல்லாம் செய்வோம்" என்று சூளுரைத்தது புதிய அணி “ஆஜீத் என் மூஞ்சுல தண்ணி தெளிச்சான்" என்று அதைப் பெரிய புகாராக பதிவு செய்து கொண்டிருந்தார் கேபி.

"பாலா, ஆரிக்கு வேலை கொடுத்துட்டே இருப்போம். மத்தவங்களை டார்க்கெட் பண்ணலாம்" என்கிற ஆலோசனையை முன்வைத்தார் லீடர் அர்ச்சனா. ஆனால் டாஸ்க் துவங்கியவுடனேயே சிரித்து தன் இதயத்தை இழந்தார் பாலாஜி. உண்மையில் அவர் இதயத்தை அணிந்து வரவில்லை. இருந்தால்தானே பிடுங்குவார்கள்?! என்கிற திட்டம் போல.

அர்ச்சனா அத்தனை தம் கட்டி பிறகு அழுது அவதிப்பட்டுக் கொண்டிருந்த விஷயத்தை பாலாஜி துவக்கத்திலேயே தகர்த்து விட்டார். தன்னைத்தான் அதிகம் டார்க்கெட் செய்வார்கள் என்று அவர் நினைத்திருக்கலாம். பெற்றோரைச் சுற்றி வந்து ஞானப்பழத்தை பெற்றுக் கொண்ட விநாயகரைப் போல துவக்கத்திலேயே டார்ச்சரில் இருந்து தப்பித்து விட்டார் பாலாஜி. (என்ன இப்போ சிக்கன் கிடைக்காது... அவ்ளோதானே?!).

பாலாஜியிடமிருந்து ஒரு இதயத்தைப் பறித்து விட்டதால் அவரையே டார்க்கெட் செய்யலாம் என்று வியூகத்தை மாற்றினார்கள்.

பிக்பாஸ் – நாள் 66
பிக்பாஸ் – நாள் 66

ரோபோ உடையில் நிஷா வெளியே வந்த போது அனைவராலும் சிரிப்பை அடக்க முடியவில்லை. அதைப் பார்த்து நிஷாவும் உடனே சிரித்து விட அவரிடமிருந்தும் ஒரு இதயத்தைப் பறித்தார்கள். "எல்லாமே டம்மி ரோபோவா இருக்கே?!” என்று கிண்டலடித்தார் சோம்.

நிஷா சிரித்து விட்டதால் அடுத்து கோபப்படுத்தினால் இன்னொரு இதயத்தைப் பறித்து விடலாம். இதற்காக நேற்று நிஷா எடுத்த அதே ஆயுதத்தை எடுத்தார் அர்ச்சனா. “நேற்று நீ அழுதது நடிப்புதானே... சொல்லிடு... அந்த விஷயம் காமெடியா இருக்கா... அங்க போய் தொங்கு” என்று தான் நேற்று பாதிக்கப்பட்ட விஷயத்தையே இன்று இன்னொருவருக்கு ஆயுதமாகப் பயன்படுத்துவது சரியா என்பதை அர்ச்சனா யோசிக்க வேண்டும்.

அதிலும் நிஷா மனம் புண்பட்டு அழுது... அர்ச்சனாவும் மன்னிப்பு தந்து விட்ட விஷயத்தை இப்போது டாஸ்க்காக மாற்றினால் நிஷா செய்ததற்கும் அர்ச்சனா செய்ததற்கும் வித்தியாசமே இல்லை என்றுதான் பொருள். நிஷாவைத் தொடர்ந்து இம்சை செய்து இன்னொரு இதயத்தையும் பிடுங்கினார்கள்.

பாலாஜியை தண்டால் எடுக்கும் போஸில் படுக்க வைத்தார் சோம். அதை பாலாஜி சரியாக செய்யாமல் ‘file not found... battery low’ என்று சமாளித்துக் கொண்டிருக்க வம்படியாக இன்னொரு இதயத்தையும் பிடுங்கிச் சென்றார் அர்ச்சனா. "நீ செயலிழக்கப்பட்ட ரோபோ. அப்படியேதான் படுத்துக் கிடக்கணும்" என்ற ஆணையை மீறி எழுந்து சென்றது பாலாஜி ரோபோ.

பிக்பாஸ் – நாள் 66
பிக்பாஸ் – நாள் 66

"பத்து நிமிடத்திற்குள் பாத்ரூம் கழுவிடுவியா?" என்று அந்த வேலையில் சீனியரான ரமேஷ் ஆஜீத்திற்கு உத்தரவிட்டு பிறகு வில்லங்கமான நகைச்சுவையைச் சொல்ல அதற்கு விழுந்து விழுந்து சிரித்தார் கேபி. எனவே அந்தச் சிரிப்பு ஆஜீத்திற்கும் பரவி விட ஓர் இதயத்தை இழந்தார். பிறகு ‘முட்டையை வைத்து வாய் கொப்பளிக்க வேண்டும்’ என்கிற சங்கடமான விஷயத்தை ஆஜீத்திற்கு தர அதற்கு மிகவும் சங்கடப்பட்டார். ‘அப்ப ஹார்ட்டை கொடுத்துடு’ என்று பிடுங்கிச் சென்றார்கள்.

ஆக... அர்ச்சனா அணி மிக எளிதாக மூன்று இயந்திரங்களை செயலிழக்க வைத்து விட்டது. முதலில் ஆடும் ஆணி செய்யும் தவறுகளிலிருந்து பாடம் கற்றுக் கொண்டு இரண்டாவது அணி எளிதில் ஜெயிக்கலாம் என்பது இதிலுள்ள ஒரு விஷயம். மூன்று இயந்திரங்களுக்கும் மேல் செயலிழக்க வைத்தால் அர்ச்சனா அணி வெற்றி பெறும்.

என்ன நடக்கிறது என்று பார்ப்போம். இருப்பதிலேயே சிரமம் ஆரி ரோபோதான். அது இயற்கையிலேயே ஒரு சீரியஸ் ரோபோ!