Published:Updated:

``நிலத்துக்குப் பத்திரப்பதிவு முடிஞ்சிடுச்சுய்யா... விகடனுக்கு நன்றி!'' - `சரிகமப' ரமணியம்மாள்

`சரிகமப' நிகழ்ச்சியில் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலம் தனக்குக் கிடைத்துவிட்டதாகக் கூறி, விகடனுக்கு நன்றி சொல்கிறார் ரமணியம்மாள்.

`சரிகமப' ரமணியம்மாள்
`சரிகமப' ரமணியம்மாள்

ஜீ தமிழ் சேனலில் கடந்த ஆண்டு ஒளிபரப்பான `சரிகமப' மியூசிக் ரியாலிட்டி ஷோவில் இரண்டாம் இடம் பிடித்தவர், ரமணியம்மாள். சென்னையில் வீட்டு வேலை செய்துவரும் இவருக்கு வயது 63. வீடுகளில் பாத்திரங்கள் தேய்க்கும்போது, பாடிக்கொண்டே வேலை செய்வது இவரது வழக்கம். அப்படி இவர் பாடக் கேட்ட ஒரு வீட்டு உரிமையாளர், 'சரிகமப' ஷோவில் இவர் பங்கு கொள்ள வழிகாட்டினார். வெள்ளந்தியான பேச்சால் அந்த நிகழ்ச்சியில் எல்லோரையும் கவர்ந்த இவரை, 'ராக் ஸ்டார்' எனப் பட்டமே கொடுத்துக் கொண்டாடினார்கள்.

ரமணியம்மாள்
ரமணியம்மாள்

அந்த சீஸனின் இறுதிச் சுற்றில் வர்ஷா டைட்டில் வின்னர் ஆனாலும், ரமணியம்மாளுக்கும் அதிகப்படியான பொதுமக்கள் ஓட்டு போட்டனர். இவருக்குப் பரிசாக ஐந்து லட்சம் ரூபாயும், ஐந்து சென்ட் நிலமும் வழங்கப்படும் என நிகழ்ச்சியில் அறிவிக்கப்பட்டது.

அதன்படி, அடுத்த சில மாதங்களில் பரிசுத் தொகை கிடைத்துவிட, அதைத் தன் ஏழு பிள்ளைகளுக்கும் சரி சமமாகப் பிரித்துக் கொடுத்துவிட்டார். 'எனக்கு எதுக்குய்யா பணம். பிள்ளைங்க நல்லா இருக்கட்டும். நான் உடல்ல தெம்பு இருக்கிற வரைக்கும் வீட்டு வேலை செய்வேன். போதாக் குறைக்கு, இப்போ அங்கங்க பாடக் கூப்பிடுறாங்க. நாலு எம்.ஜி.ஆர் பாட்டு பாடினா, இருபதாயிரம் ரூபாய் வரைக்கும் தர்றாங்க. ஒரு மனுஷிக்கு இது போதாதா, உழைக்க முடியாத நிலை வந்தா, ஏழு பிள்ளைகள்ல ஒண்ணு, ரெண்டாவது என்னைப் பார்த்துக்காதா என்ன?!" என்றார், ரமணியம்மாள்.

Vikatan

பரிசுத் தொகை கிடைத்த அதேநேரம், ரமணியம்மாளுக்குத் தரப்படும் என அறிவிக்கப்பட்ட நிலம் அவருக்குக் கிடைக்காமலேயே இருந்தது. நிகழ்ச்சி முடிந்து கிட்டத்தட்ட ஒராண்டு கடந்த நிலையில், அதுகுறித்து நம்மிடம் பேசியிருந்தார். 'பரிசுத் தொகையில பத்துப் பைசா எடுக்கலை; கொடுத்த நிலம் எனக்கு வரலை!'' என்ற தலைப்பில் மூன்று மாதங்களுக்கு முன் அவரது பேட்டியை வெளியிட்டிருந்தது, விகடன் இணையதளம்.

அந்தக் கட்டுரை வெளியான அடுத்த சில மணி நேரங்களில் ஜீ தமிழ் சேனலிலிருந்து தொடர்புகொண்டு, 'ரமணியம்மாள் நிலத்துக்கான பத்திரப்பதிவு தாமதமாவது ஏன்?' என்பதை விளக்கினார்கள். 'பத்திரப் பதிவுக்குத் தேவையான சில ஆவணங்கள் ரமணியம்மாளிடம் இல்லாததே இந்தத் தாமதத்துக்குக் காரணம்' என சேனல் தரப்பில் சொல்லப்பட்ட அந்த விளக்கத்தையும் நாம் உடனே வெளியிட்டிருந்தோம்.

ரமணியம்மாள்
ரமணியம்மாள்

சேனல் நிர்வாகமும் நிலம் வழங்குவதாக அறிவித்திருந்த நிறுவனமும் (ஷோவின் டைட்டில் ஸ்பான்சர்) நிலத்தை ரமணியம்மாளுக்கு விரைந்து வழங்க நடவடிக்கை எடுப்பதாக அறிவித்திருந்த நிலையில், தற்போது அந்த ஐந்து சென்ட் நிலத்தின் பத்திரப் பதிவு முடிவடைந்துவிட்டதாகக் கூறியுள்ளார், ரமணியம்மாள்.

இதுகுறித்து மேற்கொண்டு பேசியபோது, ``இந்த மாசம் 13-ம் தேதி பத்திரப்பதிவு நடந்துச்சுய்யா. சேனல் ஆள்கள் வந்து காரிலேயே திண்டிவனம் கூட்டிக்கிட்டுப் போனாங்க. அங்கே நிலம் தர்றதா சொன்ன கம்பெனி ஆள்களும் இருந்தாங்க. எல்லோருமா பத்திர ஆபீஸுக்குப் போக, என் பெயரிலேயே அந்த நிலத்தைப் பத்திரப் பதிவு செஞ்சு தந்துட்டாங்க.

Vikatan
"சேனல் ஆள்கள் காரிலேயே என்னைக் கூட்டிக்கிட்டுப் போனாங்க. எல்லோருமா பத்திர ஆபீஸுக்குப் போய், அங்கே என் பெயரிலேயே நிலத்தைப் பத்திரப் பதிவு செஞ்சு தந்துட்டாங்க!"
ரமணியம்மாள்

இந்த நேரத்துல, நான் இந்த நிகழ்ச்சியில கலந்துக்க உதவி செஞ்சவங்க, என்னைச் சேர்த்துக்கிட்ட சேனல், என்கரேஜ் பண்ணவங்க, எனக்கு ஆதரவளிச்ச என்னோட ரசிகர்கள், பரிசா பணமும், நிலமும் தந்தவங்க, அந்த நிலம் எனக்குக் கிடைக்கணும்னு அக்கறைப்பட்ட விகடன் எல்லோருக்கும் நன்றி சொல்லணும்யா!" என நெகிழ்ந்தார், ரமணியம்மாள்.