Published:Updated:

"`பொண்ணை ரோட்டுல ஆட விட்டுட்டியா'ன்னு என் அம்மாவைக் காயப்படுத்தினாங்க!" - `ரோஜா' காவ்யா

காவ்யா

"'திருமதி செல்வம்' சீரியல் பண்ணும்போதெல்லாம் பெரிய அளவுல வரவேற்பு கிடைச்சது. அந்த டைமெல்லாம் நான் பாசிட்டிவ் கேரக்டர் பண்ணிட்டு இருந்தேன்." - காவ்யா

Published:Updated:

"`பொண்ணை ரோட்டுல ஆட விட்டுட்டியா'ன்னு என் அம்மாவைக் காயப்படுத்தினாங்க!" - `ரோஜா' காவ்யா

"'திருமதி செல்வம்' சீரியல் பண்ணும்போதெல்லாம் பெரிய அளவுல வரவேற்பு கிடைச்சது. அந்த டைமெல்லாம் நான் பாசிட்டிவ் கேரக்டர் பண்ணிட்டு இருந்தேன்." - காவ்யா

காவ்யா
மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்ற `ரோஜா' தொடர் சமீபத்தில் முடிவடைந்தது. அதில் வில்லியாக நடித்து பலரது பாராட்டைப் பெற்றவர் காவ்யா. நடிகையாக மட்டுமின்றி ஆர்கெஸ்ட்ராக்களில் தற்போதுவரை பாடிக் கொண்டிருக்கிறார்.

இவர் ஆரம்ப காலகட்டத்தில் தொகுப்பாளினியாகவும் வலம் வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. கிட்டத்தட்ட இருபது ஆண்டுகளுக்கும் மேலாக சின்னத்திரையில் பயணித்துக் கொண்டிருப்பவரை நம் அலுவலகத்தில் சந்தித்துப் பேசினோம்.

காவ்யா
காவ்யா

"சின்ன வயசில ஏதோ சொந்தக்காரங்க கல்யாணத்துல ஆடச் சொன்னாங்க. அப்படி ஆடினதைப் பார்த்துட்டு தொடர்ந்து ஆடச் சொன்னாங்க. கல்யாண வீடுகளில், கோயில் திருவிழாக்களில் கச்சேரிகளுக்குத்தான் ஆடப் போனேன். அப்ப நான் ஏழாம் வகுப்பு படிச்சிட்டு இருந்ததால தொடர்ந்து என்ன பண்ணுவ, எப்படி பெரியப் பொண்ணாகி ஆடுவன்னுலாம் வீட்ல சொல்ல ஆரம்பிக்கவும் ஆடத் தானே கூடாது, அப்பப் பாடுறேன்னு ஆரம்பச்சதுதான் சிங்கிங். எங்க வீட்ல யாருக்கும் மியூசிக் பற்றித் தெரியாது. எனக்குத் தாள ஞானம் நேச்சராகவே இருந்தது. ஆனா, ஸ்ருதிதான் சேரல. ஆரம்பத்தில் ஸ்ருதில பாடுன்னு சொல்லுவாங்க. 'ஸ்ருதின்னா என்ன?'ன்னு கேட்டுட்டு இருப்பேன். அதுக்கப்புறம் நானாகக் கேள்வி ஞானத்துல பாட்டு கத்துக்க ஆரம்பிச்சேன்.

ஒரே ஆர்கெஸ்ட்ராவில் கிட்டத்தட்ட 4 வருஷமா கோரஸ் மட்டும் பாடிட்டு இருந்தேன். பாட்டு பாடுனா நான் தப்பா பாடுறேன்னு கூட எனக்குத் தெரியாது. சிங்கரைப் பொறுத்தவரைக்கும் வாய்ஸ் மிகப்பெரிய பிளஸ். முறையா பாட்டு கத்துக்காம கேள்வி ஞானத்தை மட்டும் வச்சிகிட்டு பாடுறதுங்கிறது கடவுளுடைய ஆசிர்வாதம்னுதான் சொல்லணும். பல பாடல்கள் கேட்டு, கேட்டு பாட ஆரம்பிச்சேன். ரொம்ப ஈஸியாலாம் இந்த இடத்துக்கு வரலைங்க. ரொம்ப கஷ்டப்பட்டுத்தான் ஒவ்வொரு இடத்துக்கும் வந்தேன்" என்றவரிடம் சீரியல் குறித்துக் கேட்டோம்.

காவ்யா
காவ்யா

"எனக்கு 'சித்தி' சீரியல் ரொம்பப் பிடிக்கும். ஸ்கூல் படிக்கும்போது அந்த சீரியலை விடாம பார்த்துட்டு இருப்பேன். அந்த சீரியலில் அரிசி மூட்டையாக நான் பார்த்து சிரித்த தேவ் கூட 'ரோஜா' சீரியலில் சேர்ந்து நடிச்சேன். அந்த சீரியலில் நான் அவரை அடிக்கிற மாதிரியான காட்சிகள் எல்லாம் இருக்கும். அப்ப அவர், 'நான் நடிச்சதை ஓரமா உட்கார்ந்து வேடிக்கைப் பார்த்துட்டு இருந்த பொண்ணு இன்னைக்கு என்னை எப்படி அடிக்கிறா'ன்னு கேலியா சொல்லுவார். அதெல்லாம் ரொம்ப பெருமையான மொமன்ட்.

கச்சேரிகளில் பாடப் போகும்போது செலிபிரிட்டிகள் விருந்தினர்களாக வருவாங்க. அப்பவும் இப்ப மாதிரியே சீரியல் பிரபலங்களுக்கு ரசிகர்கள் அதிகம். அவங்க கல்யாண வீட்டுக்குள்ள நுழையும்போது அப்படி மாஸா இருக்கும். அந்த செலிபிரிட்டிகள் கூட நம்மளால போட்டோ கூட எடுக்க முடியாது. நாம ஓரமா மேடையில நின்னுட்டு பாடிட்டு இருப்போம்... கூட்டம் மொத்தமும் அவங்களைச் சூழ்ந்து போட்டோ எடுத்துட்டு இருப்பாங்க. அப்போதெல்லாம் நாம கச்சேரியில் பாடுறதனாலதான் நம்மளால செலிபிரிட்டிகளைப் பார்க்க முடியுதுன்னுலாம் நினைச்சுப்பேன். அப்படியெல்லாம் இருந்துட்டு, இப்ப நான் பாடகியா கச்சேரிக்குப் போகும்போது நிறைய பேர் என்னைப் பார்க்குறதுக்காகவே நிற்கிறாங்க... நம்ம லைஃப் எப்படி மாறிடுச்சுன்னு சந்தோஷமா இருக்கும். அதெல்லாம் லைஃப் டைம் பிரைடு மொமன்ட்! 

காவ்யா
காவ்யா
`திருமதி செல்வம்' சீரியல் பண்ணும்போதெல்லாம் ரொம்ப வரவேற்பு கிடைச்சது. அந்த டைமெல்லாம் நான் பாசிட்டிவ் கேரக்டர் பண்ணிட்டு இருந்தேன். பாசிட்டிவ் ரோல் பண்ணும்போது ஆடியன்ஸ் மத்தியில் அதிகமா அரவணைப்பு கிடைக்கும். நெகட்டிவ் பண்ணும்போது திட்டு கிடைக்கும்" என்றவர் தொடர்ந்து பேசினார்.

"கோரஸ் பாடிட்டு இருந்த சமயம், கச்சேரி இருந்த அன்னைக்கு ஆங்கரிங்கிற்காக ஷூட் போயிட்டேன்னு என்னை அந்த ட்ரூப்ல பாடுறதுக்கு வர வேண்டாம்னு சொல்லிட்டாங்க. அப்பலாம் ரொம்ப மனசு உடைஞ்சு உட்கார்ந்திருந்தேன். என் அம்மா கொடுத்த தன்னம்பிக்கையாலதான் ரிஜெக்‌ஷனைப் பெருசா எடுத்துக்காம இருக்கப் பழகிகிட்டேன். வாய்ப்புகள் இல்லாம வீட்ல சும்மா ஒரு வருஷம் இருந்திருக்கேன். வெறும் கச்சேரிகளுக்கு மட்டும் போயிட்டு வந்துட்டு இருப்பேன். கோவிட் சமயத்துல அந்த கச்சேரிகளும் குறைஞ்சிடுச்சு.

காவ்யா
காவ்யா

நிறைய சொந்தக்காரங்க ஆரம்ப காலகட்டத்தில் எங்க வீட்டுக்கு வர்றதையே தவிர்த்திருக்காங்க. 'வயசுக்கு வந்த பொண்ணை ஸ்டேஜ்ல ஆட விட்டிருக்க'ன்னுலாம் என் அம்மாகிட்ட கேட்டிருக்காங்க. 'எவ்ளோ பணக்கஷ்டம் வந்தாலும் பொண்ணை இப்படியா ரோட்டுல ஆட விடறது'ன்னுலாம் கேட்டிருக்காங்க. 'உன் பொண்ணால எங்க பரம்பரை மானமே போச்சு'ன்னுலாம் பேசியிருக்காங்க. ஆனா, என் அம்மா ரொம்ப போல்டான பெண்மணி. அவங்களைப் பார்த்துதான் நான் வளர்ந்தேன். அவங்க எனக்குப் பக்கபலமா நின்னாங்க. இப்ப அந்தச் சூழல் எல்லாம் மாறிடுச்சு. சொந்தக்காரங்க கொண்டாடுற அளவுக்கு நாம வளர்ந்துட்டோம்" என்றவரிடம் திருமண வாழ்க்கைக் குறித்துக் கேட்டோம்.

"எனக்கு முப்பது வயசுக்கு மேலதான் திருமணமாச்சு. அதனால, என் அம்மாகிட்ட அடிக்கடி, 'எனக்குக் கல்யாணம் ஆகுமா'ன்னுலாம் கேட்பேன். நமக்குக் கல்யாணமே ஆகாது போலன்னுலாம் என் மனசைத் தேத்திக்கிட்ட நாள்கள் எல்லாம் இருந்துருக்கு. அரேஞ்சிடு மேரேஜ்தான் எங்களுடையது. என்னைப் புரிஞ்சுகிட்ட நல்ல மனிதர் கணவரா அமைஞ்சது பாக்கியம். லேட்டா மேரேஜ் நடந்ததால குழந்தை பிறக்குமான்னு ரொம்ப பயந்தேன். என்னோட லைஃப்ல ரொம்ப எமோஷனல் தருணம்னா என் ட்வின்ஸ் குழந்தைங்க பிறந்த சமயம்தான்! எனக்கு ரெண்டு ட்வின் பசங்க இருக்காங்க. கோவிட் சமயத்தில் ரீ-என்ட்ரி மாதிரி `ரோஜா' சீரியல் வாய்ப்பு கிடைச்சது. கிடைச்ச வாய்ப்பைத் தவற விடக் கூடாதுன்னு அந்த சீரியலில் நடிச்சேன். அது நல்ல ரீச் கொடுத்துச்சு. என் கரியருக்காக பக்கபலமா என் கணவர் இருந்ததனால தொடர்ந்து நடிக்க முடியுது. இப்ப ஒரு வெப்சீரிஸில் லீட் ரோலில் நடிக்க கமிட் ஆகியிருக்கேன். தொடர்ந்து ஆர்கெஸ்ட்ராவில் பாடிட்டும் இருக்கேன்!" என்றார்.

காவ்யா
காவ்யா

இன்னும் பல விஷயங்கள் குறித்து காவ்யா நம்மிடையே பகிர்ந்து கொண்டார். அவற்றைக் காண லிங்கை கிளிக் செய்யவும்!