Published:Updated:

`பாரதி கண்ணம்மா’ தொடரிலிருந்து வெளியேறினார் ரோஷினி... விலகலுக்கான காரணம் என்ன?!

அக்டோபர் 23 சனிக்கிழமை ஷூட்டிங்கில் கலந்து கொண்டவர் அன்றுடன் விடை பெறுவதாகச் சொல்லி விட்டுக் கிளம்பி விட்டாராம்.

சில மாதங்களாகத் தொடர்ச்சியாக முன்னணியில் இருக்கும் டாப் 5 ஹிட் சீரியல்களில் ஒன்று விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘பாரதி கண்ணம்மா’.

நிறைமாத கர்ப்பிணியாக இருந்த ஹீரோயின் கண்ணம்மா கணவனிடம் கோபித்துக் கொண்டு புகுந்த வீட்டைவிட்டு வெளியேறி எங்கு போவதெனத் தெரியாமல் ரோட்டில் நடந்து செல்லும் காட்சிகள் சமூக வலைதளங்களில் மீம்ஸாகத் தெறிக்க, அடுத்த சில எபிசோடுகள் அவரை நடையாக நடக்க வைத்தே ரசிகர்களிடம் அமோக ஆதரவை அள்ளினார்கள். ஹீரோயின் மட்டுமல்ல இந்த சீரியலின் வில்லி வெண்பா, மாமியார் கேரக்டர்களுமே கூட ரொம்பவே பேசப்படுபவைதான்.

பிரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியல் குறித்துதான் சின்னத்திரையில் தற்போது பரபர பேச்சு.

கண்ணம்மாவாக நடித்து வந்த ஹீரோயின் ரோஷினி ஹரிப்ரியன் தற்போது திடீரென சீரியலில் இருந்து வெளியேறியுள்ளார்.

ரோஷினி ஹரிப்ரியன்
ரோஷினி ஹரிப்ரியன்

நேற்று முன் தினம், அதாவது அக்டோபர் 23 சனிக்கிழமை ஷூட்டிங்கில் கலந்து கொண்டவர் அன்றுடன் விடை பெறுவதாகச் சொல்லிவிட்டுக் கிளம்பி விட்டாராம்.

மாடலிங்கிலிருந்து டிவிக்கு வந்த ரோஷினிக்கு ’பாரதி கண்ணம்மா’தான் முதல் சீரியல். பிரைம் டைமில் அதுவும் சீரியல் ஹிட்டாகப் போய், நல்ல ரீச் கிடைத்துக் கொண்டிருக்கும் சூழலில் திடீரென நிகழ்ந்திருக்கும் அவரது வெளியேற்றத்துக்கான காரணம் குறித்து டிவி ஏரியாவில் மாறுபட்ட பேச்சுகள் கேட்கின்றன.

"சீரியல் பிரபல்யத்தின் மூலம் சமீபமாக அவருக்குத் திரைப்பட வாய்ப்புகள் வந்தன; எனவே சினிமாவில் கவனம் செலுத்துவதற்காகவே வெளியேறி இருக்கிறார்" என்கிறார்கள் சிலர்.

பிக் பாஸ் - 22 | அடக்கம் அமரருள் உய்க்கும்… அடங்காமை அபிஷேக்குகளை ஆட்டத்தை விட்டே அகற்றும்!

ரோஷினியை அறிந்த சிலரிடம் பேசினேன்.

"மாடலிங்ல இருந்தாலும் ஆரம்பத்துல அவ்வளவு சுலபமா அவங்களால் டிவிக்குள் வர முடியலை. காரணம் அவங்களுடைய ட்ஸ்கி ஸ்கின். ஆனா இன்ஸ்டா மூலமா ’பாரதி கண்ணம்மா’ வாய்ப்பு வந்து அவங்களுடைய கேரக்டர் அதுல ரீச் ஆன பிறகு டிவி மட்டுமல்ல சினிமாவுலயுமே நிறைய வாய்ப்புகள் வந்தது நிஜம்தான். ஆனா அவங்க டக்னு அந்த வாய்ப்புகளை ஏத்துகிடணும்னு நினைக்கலை. நிதானமா யோசிச்சு முடிவெடுக்கலாம்னு இருந்தாங்க.

இந்த நிலையில சில பெரிய பேனர்ல இருந்து கேட்ட சிலர், ‘தொடர்ச்சியா நீங்க சினிமாவுல பண்ணலாம்; ஆனா சீரியல்ல ரெண்டு குழந்தைகளுக்கு அம்மாவா பண்ணிட்டிருக்கிற உங்களுடைய அந்த அடையாளத்தை சினிமா எப்படி எடுத்துக்கும்னு தெரியலை’ எனச் சொல்லியிருக்கிறார்கள். ஹீரோயினாகவோ அல்லது செகண்ட் ஹீரோயினாகவோ கூட வாய்ப்புகள் வரும்பட்சத்தில் அம்மாவாக நடித்த சீரியல், ரசிகர்கள் மனசுல வந்து நிக்குமே எனச் சொல்லியிருக்கிறார்கள். அதனால் கொஞ்ச நாளாகவே ஒரு குழப்பத்துல இருந்தவங்க, கடைசியில இப்படியொரு முடிவை எடுத்திருக்கணும்" என்று தெரிவித்தனர்.

'பாரதி கண்ணம்மா' ரோஷினி
'பாரதி கண்ணம்மா' ரோஷினி

ரோஷினியிடமே கேட்டு விடலாமென அவரைத் தொடர்பு கொண்டபோது, அவர் நம் அழைப்பை ஏற்கவில்லை.

சீரியலின் வில்லி ஃபரீனா (வெண்பா) தற்போது கர்ப்பமாக இருக்கிறார். விரைவில் டெலிவரிக்குச் செல்லும் அவருக்குப் பதிலாக வேறு யாரேனும் வருவார்களா அல்லது அவருடைய ட்ராக் இல்லாமலேயே போகுமா என்பது இதுவரை தெரியவில்லை.

இந்தச் சூழலில் ஹீரோயினும் சீரியலில் இருந்து வெளியேறி இருப்பது ’பாரதி கண்ணம்மா’ ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. சமூக வலைதளங்களில் தங்களது சோகத்தைப் பகிர்ந்து வருகிறார்கள்.

புதிய கண்ணம்மாவாக வரப்போவது யார் என்பது அடுத்த சில தினங்களில்தான் தெரியவரும்.
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு