Published:Updated:

விகடன் TV: “சமையல் மந்திரத்தில் நான் பண்ணுனது நடிப்புதான்!”

“ `சமையல் மந்திரம்’ பண்ணிட்டிருந்தப்பவே ஜெயா டிவியில ஆன்மிகம் தொடர்பான ஒரு ஷோ பண்ணினேன். அதை யாரும் கண்டுக்கலை.

பிரீமியம் ஸ்டோரி

கேப்டன் டிவியின் `சமையல் மந்திரம்’ நிகழ்ச்சியையும் அதில் வந்த கிரிஜாஸ்ரீயையும் யாரும் அவ்வளவு சீக்கிரம் மறந்திருக்க மாட்டார்கள். திருமண வாழ்வில் அடியெடுத்து வைத்திருக்கும் கிரிஜாவிடம் வாழ்த்துச் சொல்லிப் பேசினேன்.

``ஓஹோன்னு விளம்பரம்தான், ஆனா எப்படிப்பட்ட விளம்பரம்? இந்தத் தேதி வரைக்கும் அந்த ஷோவை வச்சு என்னைத் தப்புத் தப்பாப் பேசறவங்க, எழுதறவங்க அவங்க வேலையை விடாமச் செய்துட்டேதானே இருக்காங்க? அவங்களை நான் என்ன சொல்ல முடியும்? ஒரு பெண்ணை போதைப் பொருளா மட்டுமே பார்க்கிறவங்களை நாம ஒரு நாளும் திருத்தவே முடியாது. அவங்க பார்வையில கோளாறு. என்னைப் பொறுத்தவரை கேமரா முன்னாடி பண்ணுகிற எல்லாமே நடிப்புதான். அதனால அந்த ஷோ பண்றதுக்கு நான் சம்மதிச்சதை இப்ப வரைக்கும் தப்பான முடிவுன்னு சொல்லவே மாட்டேன். வி.ஜே-வா அந்த நிகழ்ச்சியில நான் பண்ணினது நடிப்புதான். ஆனா ஷோவைப் பார்த்துட்டு அதுல இருந்த மாதிரியேதான் நிஜ வாழ்க்கையிலயும் இருப்பேன்னு முடிவு பண்ணினா, அதுக்கு நான் என்னங்க செய்ய முடியும்? அப்படி நினைக்கிறவங்கதான் அதிகமா இருக்காங்க. அதுதான் எனக்கு வருத்தமா இருக்கு. வேற வழியில்ல, அமைதியாக் கடந்து போயிட்டிருக்கேன்.’’

விகடன் TV:  “சமையல் மந்திரத்தில் நான் பண்ணுனது நடிப்புதான்!”

அந்த நிகழ்ச்சிக்குப் பிறகு டிவியிலயே பார்க்க முடியலையே, இப்ப என்ன செய்துட்டிருக்கீங்க?

“ `சமையல் மந்திரம்’ பண்ணிட்டிருந்தப்பவே ஜெயா டிவியில ஆன்மிகம் தொடர்பான ஒரு ஷோ பண்ணினேன். அதை யாரும் கண்டுக்கலை. அதுக்கு முன்னாடி பிரபலங்கள் படித்த பள்ளிகளுக்கு விசிட் செய்து ஒரு ஷோ பண்ணினேன். அதையும் யாரும் பேசலை. இந்த நிகழ்ச்சி எனக்கு பெரிய கிளாமர் முத்திரை குத்தினதுல சினிமாவுல கிளாமர் ரோலுக்குத்தான் கேட்டாங்க. `போதும் சாமி’ன்னு கும்பிடு போட்டுட்டு மும்பைக்குப் போயிட்டேன். அங்க போய் கொஞ்ச நாள் மேக்-அப், காஸ்மெடாலஜி தொடர்பா படிச்சேன். முடிச்சுட்டு வந்து ‘ரேடா’ங்கிற பேர்ல ஸ்டூடியோ திறந்து இப்ப அந்த பிசினஸ்தான் போயிட்டிருக்கு. இப்பவும் பட வாய்ப்புகள் வருது. `அந்த நிகழ்ச்சியை வச்சுக்கிட்டு என்னை அணுகாதீங்க, நல்ல ரோல் கொடுத்தீங்கன்னா பண்றேன்’னு தெளிவா முதல்லயே பேசிட்டுதான் சம்மதிக்கிறேன். ‘எஃப்.எம்’ங்கிற படத்துல ஒரு நல்ல கேரக்டர் பண்ணியிருக்கேன். ஜி.வி.பிரகாஷ் படத்துலயும் சின்ன ரோல்ல நடிச்சிருக்கேன். சீரியலுக்கோ, அல்லது, வேறு ஷோக்களுக்கு ஆங்கரா கேட்டோ வாய்ப்புகள் வரலை.’’

விகடன் TV:  “சமையல் மந்திரத்தில் நான் பண்ணுனது நடிப்புதான்!”

திருமணம், கணவர் குறித்து...

‘`மீடியாவுல என்னுடைய கரியர் தொடங்கினப்ப பக்கத்துல இருந்தவர்தான் முத்துராஜ். எடிட்டிங், போட்டோகிராபின்னு அவருடைய வேலையும் மீடியா வேலைதான். நண்பர்களா இருந்தோம். ஒரு கட்டத்துல அவர் என்னை விரும்பி வீட்டுல வந்து பொண்ணு கேட்டார். அப்ப எங்க வீட்டுல மறுத்துட்டாங்க. வருஷங்கள் ஓடுச்சு. எனக்குத் திருமணம் குறித்த புரிதல் வந்தப்ப, அறிமுகமில்லாத ஒருத்தருடன் வாழ்க்கையைப் பகிர்ந்துக்கிடறதுல எனக்கு விருப்பமில்லை. அதனால மறுபடி நான் போய் அவர்கிட்ட விருப்பத்தைத் தெரிவிச்சேன். கொஞ்சம் தயங்கினார். பிறகு ரெண்டு பேரும் உட்கார்ந்து பேசினோம். ஏற்கெனவே என்னைப் பிடிச்சிருக்குன்னு சொன்னவர்தானே, அதனால கடைசியில ஓகே ஆகிடுச்சு. பிறகு ரெண்டு பேர் வீட்டுலயும் சம்மதம் கிடைக்க, கொரோனா ஊரடங்கு காரணமா சிம்பிளா நடத்த வேண்டியதாகிடுச்சு. 12 வருஷ நண்பரே வாழ்க்கைத்துணையாக் கிடைச்சது எனக்கு இன்னொரு விஷயத்துல சந்தோஷமா இருக்கு. அவருக்கு என்னையும் தெரியும், ‘சமையல் மந்திரம்’ நிகழ்ச்சி பத்தியும் தெரியும்கிறதால தேவையில்லாத பிரச்னைகள் வர வாய்ப்பில்லை.’’

விகடன் TV:  “சமையல் மந்திரத்தில் நான் பண்ணுனது நடிப்புதான்!”

நீங்க நடத்தின ப்ரீ வெட்டிங் போட்டோஷூட்டும் வைரலாகியிருக்கே?

“அதுலயும் பாருங்க, சில போட்டோக்களை மட்டும் ஷேர் செய்து ‘ஆஹா, மறுபடியும் வந்துட்டாங்க’ன்னு பேசறாங்க. எனக்குப் பிடிச்ச காஸ்ட்யூம்லெல்லாம் போட்டோ எடுக்கறேன், அதுல என்னங்க தப்பு இருக்கு? அந்தப் புகைப்படங்கள்ல எனக்கொண்ணும் தப்பாத் தெரியலை. ஏன்னா கணவரும் பக்கத்துலயே இருக்கார். போட்டோ எடுக்கறப்ப சுத்தி டெக்னீஷியன்கள் இருக்காங்க. அவங்க கண்ணுக்கெல்லாம் தப்பாத் தெரியாதப்ப, சிலருக்கு மட்டுமே வேற மாதிரி தெரிஞ்சா நான் ஏற்கெனவே சொன்னதுதான்... பார்க்கவறவங்க கண்ணுல கோளாறு. அதுக்கு நாம ஒண்ணும் பண்ண முடியாது. அவங்க பாட்டுக்குப் பேசிட்டுப் போகட்டும், நாம பாட்டுக்கு நம்ம வேலையைப் பார்த்திட்டிருப்போம், அவ்ளோதான்.’’

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு