Published:Updated:

``உங்கள் அடிமைன்னேன்... பொழைச்சுப்போனு `லவ் யூ டூ' சொல்லிட்டா..!'' - கலைவாணர் வீட்டு விசேஷம்

Ramya N.S.K and Sathya
Ramya N.S.K and Sathya

''ஒரு கெட் டுகெதர்ல 'உனக்கென நான்' பாடினாங்க. அட, வாய்ஸ் அப்படியே இருக்கேன்னு ஆச்சர்யப்பட்டேன். அதுக்கப்புறம்தான் அந்தப் பாட்டை பாடினதே ரம்யாதான்னு தெரிஞ்சுது.''

'தேவதைக் கதைகளுக்கு சற்றும் குறைந்ததில்லை உன் காதலும் கல்யாணமும்' - சில தினங்களுக்கு முன்னால் காதல் திருமணம் முடித்த கலைவாணர் பேத்தியும் பாடகியுமான ரம்யாவுக்கு, அவருடைய தோழி ஒருவர் ட்விட்டரில் இப்படித்தான் தன் வாழ்த்துகளைத் தெரிவித்திருந்தார். அந்த தேவதைக் கதையைத் தெரிந்துகொள்வதற்காகப் புதுமணத் தம்பதியிடம் பேசினோம்.

Ramya NSK wedding
Ramya NSK wedding

''ஒரு டிவி நிகழ்ச்சியிலதான் நானும் சத்யாவும் முதல் தடவை மீட் பண்ணோம். ரெண்டுபேருக்கும் நடுவுல பொதுவான ஃப்ரெண்ட்ஸ் நிறைய பேர் இருந்ததால, இயல்பா பேச ஆரம்பிச்சோம். அப்படியே சின்னதா ஒரு நட்பு உருவாச்சு. அப்புறமென்ன லவ்தான்...''  என்று சிரிக்கிற ரம்யாவின் குரலும் வெட்கப்படுகிறது. ரம்யாவின் நிஜ ஹீரோவான சத்யா, நீலக்குயில் சீரியலின் ஹீரோவும்கூட. தற்போது சில தமிழ் மற்றும் தெலுங்குப் படங்களிலும் நடித்து வருகிறார்.

சத்யாதான் முதலில் தன் காதலை ரம்யாவிடம் வெளிப்படுத்தியிருக்கிறார். வழக்கம்போல பையன்தான் முதலில் காதலைச் சொல்லியிருக்கான் என்று ரம்யா - சத்யா காதலை நினைத்துவிட முடியாது. இந்த இடத்தில்தான் இவர்கள் காதலில் அந்த தேவதைக் கதை சம்பவம் நடந்திருக்கிறது. அதை ரம்யா நம்மிடம் பகிர்ந்துகொண்டார்.

Ramya wedding
Ramya wedding

''ஒரு நாள், 'இன்னிக்கு  உங்க அம்மாகிட்டே பேசணும்'னு சொன்னார். நானும் வீட்டுக்குக் கூட்டிட்டுப் போனேன். என்னோட ஒருபக்கம் அம்மா உட்கார்ந்திருந்தார். இன்னொரு பக்கம் சத்யா. அவர் பேசிட்டிருக்கார், அம்மா கேட்டுக்கிட்டிருக்காங்க. நான் லெஃப்ட், ரைட்னு ரெண்டு பேரையும் திரும்பித் திரும்பிப் பார்த்துக்கிட்டிருந்தேன். ஆரம்பத்துல தன்னைப்பத்தி பேசிக்கிட்டிருந்தவர், டக்குனு 'உங்க மகளை நான் லவ் பண்றேன். அவளைப் பத்தி எனக்கு எல்லாமே தெரியும். ரம்யாவை நல்லா பார்த்துப்பேன்'னு சொல்லிட்டார். அம்மா பாவம். பயங்கர ஷாக்காயிட்டாங்க. ஏன்னா, இவங்களைப் பத்தி அம்மாகிட்டே அதுக்கு முன்னாடி பேசினதேயில்லை'' என்று சிரிக்கிறார் ரம்யா. சத்யாவின் இந்த அப்ரோச் பிடித்துப்போனதால், ரம்யாவின் அம்மாவும் இவர்களின் காதலுக்கு உடனே சம்மதம் தெரிவித்திருக்கிறார்.

''நான் அப்பா பாசமே தெரியாம வளர்ந்த பொண்ணு. இவரு என் மேல அன்புகாட்டறப்போவும் அக்கறையா இருக்கிறப்போவும் 'ஓ... இப்படியெல்லாம் லவ்வைக் காட்ட முடியுமான்னு எனக்கு ஆச்சர்யமா இருக்கும். அவரும் என்னை மாதிரியே ஃபீல் பண்றாருன்னு அப்புறம்தான் தெரிஞ்சுது. ஏன்னா, அவருக்கு அம்மா கிடையாது. நான் அவர்மேல பாசமா இருக்கிறது அவருக்கு ரொம்ப சந்தோஷத்தைக் கொடுத்திருக்கு. சிம்பிளா சொல்லணும்னா அவர் என்னை குழந்தை மாதிரி பார்த்துக்கிறாரு; நான் அவரை குழந்தை மாதிரி பார்த்துக்கிறேன்'' என்று உணர்ச்சிவசப்பட்ட ரம்யாவை இடைமறித்து, சத்யா பேச ஆரம்பித்தார்.

Ramya and sathya
Ramya and sathya

''லவ் பண்ணி மாட்டிக்கிட்டா பிரின்சிபால்கிட்டேதானே போகணும். நாம அதை ஃபர்ஸ்ட்லேயே செய்யலாமேன்னுதான் ரம்யாவோட அம்மாகிட்டே முதல்ல என் காதலை பத்தி சொன்னேன். அந்த நேரம் ரம்யாவுக்கும் ஒண்ணும் புரியலை. அதுக்கப்புறம்தான், ரம்யாவை டின்னர் கூட்டிட்டுப்போய், கேக் கட் பண்ண வைச்சு, 'இன்று முதல் நான் உங்கள் அடிமை; தாயே என்னை ஏத்துக்கோ'ன்னு புரொபோஸ் பண்ணேன். சிரிச்சுட்டா... 'சரி பொழைச்சுப்போ'ன்னு சொல்லிட்டு, அவளும் 'லவ் யூ டூ'ன்னு சொல்லிட்டா. அப்புறமென்ன, எங்கக் காதல் பயணத்தை ஸ்டார்ட் பண்ணிட்டோம்'' என்றவர் தொடர்ந்தார்.

''ரம்யாவை முதன்முதலா பார்த்தப்போ அவளை யாருன்னே தெரியாது. அவங்க குடும்பப் பின்னணி, பிக்பாஸ்ல கலந்துகிட்டது இப்படி எதுவுமே தெரியாது. ஆனா, ரம்யாகிட்டே பேசறது ரொம்பப் பிடிச்சிருந்துச்சு. ஒரு நாள் என் ஃப்ரெண்ட் ஒருவன் 'ரம்யா நல்லாப் பாடுவாங்க'ன்னு சொன்னான். உடனே நான், 'ஆயிரத்தில் ஒருவன் படத்துல வர்ற மாலை நேரம் பாட்டைப் பாடேன்'னு கேட்டேன். பாடினாங்க. ரொம்ப நல்லாயிருந்தது. அதுக்கப்புறம் ஒரு கெட்  டுகெதர்ல 'உனக்கென நான்' பாடினாங்க. அட, வாய்ஸ் அப்படியே ஒரே மாதிரியே இருக்கேன்னு ஆச்சர்யப்பட்டேன். அதுக்கப்புறம்தான் அந்தப் பாட்டை பாடினதே ரம்யாதான்னு தெரிஞ்சுது.

Ramya and Sathya
Ramya and Sathya

அச்சச்சோ... நம்ம ஆளுக்கு இந்த விஷயம் தெரிஞ்சா அசிங்கமாயிடுமேன்னு கூகுள் பண்ணிப்பார்த்தேன். அதுக்கப்புறம்தான் பிக் பாஸ், பிளேபேக் சிங்கர்னு என் ஆளு பெரிய ஆளுன்னு தெரிஞ்சுது. அந்த பிக்பாஸ் நேரத்துல நான் ஹைதராபாத்துல இருந்தேன். அதனாலதான், ரம்யாவைத் தெரியலை'' என்கிற சத்யா, "இவையெல்லாம் தெரியறதுக்கு முன்னாடியே நான் ரம்யாகிட்ட லைட்டா விழுந்துட்டேன்'' என்று சிரிப்பவர், ''அவளோட குணம் ரொம்ப ரொம்ப அழகுங்க. உண்மையா இருப்பா, நேர்மையா இருப்பா, எனக்கு எல்லாம் தெரியும்கிற கர்வம் அவ குரல்லகூட இருக்காது'' என்றபடியே காதல் மனைவியைக் கையணைவுக்குள் கொண்டு வருகிறார்.

வாழ்த்துகள் லவ் பேர்ட்ஸ்!

அடுத்த கட்டுரைக்கு