விஜய் டிவியில் பதினெட்டு போட்டியாளர்களுடன் அமர்க்களமாகத் தொடங்கியிருக்கிறது பிக் பாஸ் சீசன் 5. 'சர்வைவர்', 'மாஸ்டர் செஃப்' ஆகிய போட்டி சேனல்களின் நிகழ்ச்சிகளால் இந்த முறை பிக் பாஸ் வீட்டின் பிரம்மாண்டம் பல மடங்கு உயர்ந்துள்ளது.
நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தன்னுடைய கட்சி பெரிய தோல்வியைச் சந்தித்த பிறகு கமல் கலந்து கொள்ளும் சீசன் என்பதால் அவர் என்ன பேசுவார் என்பது ஒரு பெரிய எதிர்பார்ப்பாக இருக்கிறது.

சரி, 18 போட்டியாளர்களும் அந்த வீட்டுக்குள் என்ன செய்கிறார்கள், என்ன பேசுகிறார்கள் என்பதையெல்லாம் தினமும் இரவு 10 மணிக்கு எல்லோரும் பார்த்துவிடுவோம். ஆனால், பிக் பாஸ் பற்றி வெளியே எங்கும் தெரியாத பல பின்னணி தகவல்கள், சுவாரஸ்யங்கள், அதிர்ச்சிகள், ஆச்சர்யங்கள் இருக்கின்றன. அந்த சீக்ரெட்ஸ் தொடர்ந்து விகடனில் வெளியாகும்.
1. இமான் அண்ணாச்சியின் பிக்பாஸ் என்ட்ரி!
இமான் அண்ணாச்சி பிக் பாஸ் போனதில் பெரிய கதையே இருக்கிறதாம். முதல் சீசனுக்கே தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார் அண்ணாச்சி. அப்போது அக்ரிமென்ட் எல்லாம் கூடக் கையெழுத்தாகி விட்டதாம்.
கடைசி நேரத்தில் நிகழ்ச்சித் தயாரிப்பாளரான என்டமால் தரப்பிலிருந்து. "போட்டியாளர்களுக்கு அரசியல் பின்னணி இருக்கக் கூடாது" என ஸ்ட்ரிக்டாகச் சொல்லி இருக்கிறார்கள். அண்ணாச்சி அப்போதுதான் தி.மு.க-வில் சேர்ந்திருந்தார். நடிகை காயத்ரி ரகுராம் பாரதிய ஜனதாவில் இருந்தார். இருவரிடமும் 'கட்சி வேணுமா, பிக் பாஸ் வேணுமா என முடிவு செய்துக்கோங்க' எனச் சொல்லி இருக்கிறார்கள். காயத்ரி ரகுராம், "பிக் பாஸ் நிகழ்ச்சிதான் முக்கியம்" என அப்போது பாரதிய ஜனதா தலைவராக இருந்த தமிழிசை சௌந்தர்ராஜனிடம் தெரிவித்துவிட்டு தற்காலிகமாக, அதாவது பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காகவே கட்சியை விட்டு விலகினார்.

அண்ணாச்சியோ, 'இதென்ன பெருங்கொடுமையா இருக்கு, மூணு மாச நிகழ்ச்சிக்காக கட்சியை விடச் சொல்றீக, போதும்ணே உங்க நிகழ்ச்சி' எனச் சொல்லி விட்டு பிக் பாஸ் வாய்ப்பை உதறிவிட்டாராம்.
கொஞ்ச நாளில் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய கமலே கட்சி தொடங்கி விட, அதன்பிறகு, 'அரசியல் கட்சியிலில் இருப்பவர்களை அனுமதிப்பதில்லை' என்கிற விதிமுறையைத் தூக்கி எறிந்துவிட்டார்களாம்.
ஐந்தாவது சீசனில் கலந்து கொள்ள அக்ரிமென்ட்டில் கையெழுத்திட்ட அண்ணாச்சியிடம், 'சாதிச்சிட்டீங்கண்ணே... சாதிச்சிட்டீங்க' என இந்த விஷயத்தைச் சொல்லியே பலரும் வாழ்த்து சொன்னார்களாம்.