
முதல்ல அஞ்சு வருஷம் சினிமாவுல இருந்தேன். ‘பைரவா’ல நடிச்சேன். ‘ஈட்டி’ படத்துல நடிச்சேன்.
பரதா நாயுடு... சினிமாவிலிருந்து சீரியலுக்கு வந்தவர். ‘செம்பருத்தி’ சீரியலில் நடித்துக்கொண்டிருந்தபோது யூனிட்டுடன் ஏற்பட்ட பிரச்னையால் தொடரிலிருந்து வெளியேறினார். அதிலிருந்து சீரியலுக்கு பிரேக் விட்டிருந்தவர், இப்போது `தாலாட்டு’ மூலம் சன் டி.வி பக்கம் வந்திருக்கிறார்.
‘‘மறுபடியும் சினிமாவுல கவனம் செலுத்தலாம்னுதான் நினைச்சிருந்தேன். ஆனா கோவிட் சூழல் அதுக்குத் தடை போட்டுடுச்சு. சினிமா மறுபடியும் நார்மலுக்கு வர இன்னும் எத்தனை மாசம் ஆகும்னு தெரியலை. அதுக்குள் மக்கள் முகத்தை மறந்துடக் கூடாதில்லையா? அதுவும்போக முதல் முறையா சன் டிவி.
இன்னொரு முக்கியமான விஷயமும் இருக்கு. ‘செம்பருத்தி’யில ஒரு பெரிய ஜமீன் குடும்பத்துல இருக்கிற பொண்ணா ரிச் லுக்ல நடிச்சிருந்தேன், நெகட்டிவ் கேரக்டர். ஆனா ‘தாலாட்டு’ல அதுக்கு நேரெதிரா வேலைக்காரப் பொண்ணு கேரக்டர். இந்த ரீச்சும் எப்படி இருக்குன்னு பார்க்கலாமே!’’ என்கிறார்.
``சீரியல் தந்த புகழை சினிமா தரலைன்னு வருத்தப்பட்டிருந்தீங்களே..?’’
‘‘ஆமாங்க. முதல்ல அஞ்சு வருஷம் சினிமாவுல இருந்தேன். ‘பைரவா’ல நடிச்சேன். ‘ஈட்டி’ படத்துல நடிச்சேன். இந்தப் படங்களெல்லாம் பத்து நாள் வரைக்கும் கால்ஷீட் தந்து நடிச்சேன், நல்ல சம்பளம், கேரவன்லாம் தந்தாங்க. ஆனா ஒரு நடிகையா அங்கீகாரம் கிடைக்கலை. ஆனா சீரியல்ல சம்பளம் குறைவுன்னாலும் நம்ம கேரக்டர் ஹிட் ஆகிடுச்சுன்னா ரீச் பெரிசா இருக்கு. சீரியல், சினிமா ரெண்டுலயுமே ஒரே நேரத்துல பிஸியா இருக்கறதுங்கிறதும் நடக்கற விஷயமில்லை. அதனால சீரீயல்ல லீடு ரோல்தான் பண்ணுவேன்னு கொஞ்ச நாள் வந்த வாய்ப்புகளையெல்லாம் மிஸ் பண்ணி அடம் பிடிச்சிட்டிருந்ததை விட்டாச்சு. இனி அந்தத் தவற்றை ஒருபோதும் பண்ண மாட்டேன்.’’
`` ‘செம்பருத்தி’யில உங்க கேரக்டரை முடிச்ச விஷயத்துல உங்களுக்கு அதிருப்தின்னு சொன்னாங்களே..?’’
‘‘நடிக்க கமிட் ஆகறதுக்கு முன்னாடியே அந்த சீரியலின் ரசிகை நான். அப்படி இருந்த சமயத்துல என்னுடைய கேரக்டரை திடீர்னு முடிச்சது வருத்தமா இருந்தது. ஆனா எனக்குப் பிறகும் அடுத்தடுத்து சிலர் அதுல இருந்து வெளியேறியதைப் பார்க்கிறப்ப இன்னும் வருத்தமா இருக்கு. அங்க என்ன நடக்குதுன்னு வெளியில வந்த பிறகு கருத்து சொல்றது நல்லா இருக்காது. அந்த சீரியல் மறுபடியும் டி.ஆர்.பி லிஸ்டுல வரணும்னு நானுமே ஆசைப்படறேன்.’’
``சிலம்பம் கத்துக்கிட்டு வர்றீங்களாமே?’’
‘‘உடல் எடையைக் குறைக்க ஆசைப்பட்டேன். அதுக்கு சிலம்பம் நல்ல பயிற்சின்னு சொன்னாங்க. தவிர பொண்ணுங்களுக்குப் பாதுகாப்புக்கும் சிலம்பம் உதவும்னு நம்புறேன்.’’