Published:Updated:

``கொஞ்ச நாளைக்கு ஊர்ப்பக்கம் வராதனு சொல்றாங்க"- ஜெய்பீம் படத்துக்கு ஆதரவாகப் பேசிய ’சந்திரலேகா’அருண்

சூர்யா சாரை அடிச்சா ஒரு லட்சம் தர்றேன்னு அறிவிச்சவங்க எங்க ஊர்க்காரர்தான். அந்த ஊரைச் சேர்ந்தவனா இருந்துட்டு நான் இப்படிப் பேசினதுல அவங்க கடுப்புல இருக்காங்கன்னு கேள்விப்பட்டேன்.. - அருண்

‘ஜெய்பீம்’ பட விவகாரம் அவ்வளவு சீக்கிரத்தில் ஓயாது போலிருக்கிறது.

படத்தின் ஒரு காட்சியில் இருந்த காலண்டர் குறிப்பிட்ட ஒரு சமூகத்தைக் களங்கப்படுத்தி விட்டதாக கொந்தளிப்பு ஏற்பட விவகாரம் அப்படியே அரசியல்வாதிகள் கைக்குப்போனது. தொடர்ந்து தினம்தினம் ஆளுக்கொரு அறிக்கை என பரபரப்பானது. அப்போது `நடிகர் சூர்யாவை யாராவது தாக்கினால் அவர்களூக்கு ஒரு லட்சம் பரிசாக வழங்கப்படும்’ என அறிவித்தார் குறிப்பிட்ட அரசியல் கட்சியின் மயிலாடுதுறை மாவட்டச் செயலாளர். தொடர்ந்து நடிகர் நடிகைகளும் இதில் கருத்து தெரிவிக்கத் தொடங்கினர். சமூக வலைதளங்களில் ’Standwithsurya’ ட்ரெண்டானது. இந்த விவகாரத்தில் நடிகர் சந்தானம் தெரிவித்த கருத்தும் பரபரப்பாகப் பேசப்பட்டது. இந்த நிலையில் ’சந்திரலேகா’, ‘பூவே உனக்காக’ சீரியல்களில் நடித்து வரும் நடிகர் அருணும் இந்த விவகாரம் தொடர்பாக வீடியோ ஒன்று வெளியிட்டிருந்தார்.

Jai Bhim Movie
Jai Bhim Movie

அதுகுறித்து அருணிடம் பேசினேன். ‘ நானும் அந்தப் பகுதியைச் சேர்ந்தவன்தான். வேண்டுமென்ற திணிச்சு அந்தக் காட்சியை வச்சிருப்பாங்கனு எனக்குத் தோணலை. அப்படியே வச்சிருந்தாலும் படம் பேசற மெயின் விஷயத்தை மட்டும் எடுத்துட்டுக் கடந்து போயிடறதுதான் நல்லது. பூதக்கண்ணாடி வச்சு குற்றம் குறைகளைத் தேடிப் பிடிச்சு விவகாரமாக்கத் தேவையில்லை. இந்த விவகாரம் இப்படியே போயிட்டிருக்கிறது சினிமாவுக்கும் சமூகத்துக்குமே நல்லதில்லை, வெறுப்புதான் வளரும். அதனாலேயே வீடியோ பதிவிட நினைச்சேன். பொதுவா நம்ம சார்ந்த சமூகத்தை வெளிப்படையாச் சொன்னா முத்திரை குத்தப்படலாம். ஆனா ஒரு நல்ல விஷயத்துக்காகச் சொல்றது தப்பில்லைனுதான் நான் வெளிப்படையாப் பேசினேன். நான் வீடியோ வெளியிட்டதுமே கமென்ட்ல திட்டத் தொடங்கிட்டாங்க.

‘சூர்யாகிட்ட வாய்ப்பு வாங்கத்தானே இந்த வீடியோ’னு கேக்கறாங்க. நான் சீரியல்ல நடிச்சிட்டிருக்கேன். அவர் என்ன சீரியலா தயாரிச்சிட்டிருக்கிறார்? என்னுடைய ஜாதிப் பின்னணியில இருந்து திட்டி எக்கச்சக்க கமென்ட்ஸ். இதுல ஹைலைட் என்னன்னா, சூர்யா சாரை அடிச்சா ஒரு லட்சம் தர்றேன்னு அறிவிச்சவங்க எங்க ஊர்க்காரர்தான். அந்த ஊரைச் சேர்ந்தவனா இருந்துட்டு நான் இப்படிப் பேசினதுல அவங்க கடுப்புல இருக்காங்கன்னு கேள்விப்பட்டேன், ஊர்ல இருந்து நண்பர்கள் சிலர் கொஞ்ச நாளைக்கு ஊர்ப்பக்கம் வந்துடாதனு அக்கறையாக் கேட்டுக்கிட்டாங்க. என் மனசுக்குப் பட்டதைப் பேசியிருக்கேன். அதனால எதைப் பத்தியும் கவலை இல்லை’’ என்கிறார் அருண்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு