Published:Updated:

``என்னைக் கைது பண்ணாங்க ஓகே; ஆனா ஸ்டேஷன்ல என்ன நடந்துச்சு தெரியுமா?!" - ஜெயஶ்ரீ கணவர் ஈஸ்வர்

ஈஸ்வர் ஜெயஶ்ரீ
ஈஸ்வர் ஜெயஶ்ரீ

`எனக்கும் மகாலட்சுமிக்கும் தொடர்பு இருக்குறதா அவங்க சொல்ற மாதிரி என்னாலயும் சில விஷயங்களைச் சொல்ல முடியும். மகாலட்சுமியின் கணவரும் ஜெயஶ்ரீயும் நிறைய பார்ட்டிகள்ல கலந்துக்கிட்ட ஆதாரம் எல்லாம் என்கிட்ட இருக்கு.’

சீரியல் எபிசோடுகளைப் போலவே நாளொரு பரபரப்பும், பொழுதுக்கொரு புகாருமாய் போய்க்கொண்டிருக்கிறது டிவி தம்பதியான ஈஸ்வர் - ஜெயஶ்ரீயின் குடும்ப விவகாரம். ஈஸ்வர் தன்னைக் கொடுமைப்படுத்துவதாக ஜெயஶ்ரீ புகார் அளிக்க, காவல்துறையால் இரவோடு இரவாகக் கைது செய்யப்பட்டார் ஈஸ்வர். அதைத் தொடர்ந்து ஈஸ்வர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை தற்போதுவரை கூறிக்கொண்டிருக்கிறார் ஜெயஶ்ரீ.

`தேவதையைக் கண்டேன்' சீரியலின் வில்லியான மகாலட்சுமிக்கும், ஈஸ்வருக்கும் தொடர்பு இருப்பதாக கூறிய புகார்தான் முக்கியமான குற்றச்சாட்டு. இது தொடர்பாக ஜாமீனில் வெளியே வந்திருக்கும் ஈஸ்வரிடம் விரிவாகப் பேசினேன். 

 ஜெயஶ்ரீ ஈஸ்வர்
ஜெயஶ்ரீ ஈஸ்வர்

``சபையில முதல்ல பேசுறவங்க பேச்சுதான் எடுபடும்'னு ஒரு பழமொழி இருக்கு. அந்த மாதிரிதான் இப்போ நடந்துட்டிருக்கு. நான் கைதாகி ஜெயிலுக்குள்ள இருந்த ரெண்டு நாளும் என்னை எவ்வளோ அசிங்கப்படுத்த முடியுமோ அவ்வளவு அசிங்கப்படுத்திட்டாங்க ஜெயஶ்ரீ. ரொம்ப அநாகரிகமான முறையில அபாண்டமானக் குற்றச்சாட்டுகளையெல்லாம் என் மீது சுமத்தியிருக்காங்க. அவங்க அளவுக்கு நான் இறங்கிப் பேச மாட்டேன். இதுல என்னுடைய குழந்தையைத் தொடர்புபடுத்தி அவங்க பேசினதுக்கு எல்லாம் நான் பதில் சொல்ல விரும்பலை. அதுல எது நிஜம் எது பொய்னு கடவுளுக்குத் தெரியும்."

``ஆனா, இந்த விவகாரம் பொதுவெளிக்கு வந்ததால நானும் சில விஷயங்களைப் பேசிதான் ஆகணும். முதல்ல எங்க வீட்டுடைய விவகாரத்தை வெளியில கொண்டுவந்தது ஜெயஶ்ரீதான். நான் அவங்களை அடிச்சுக் காயப்படுத்தியதாகவும், அதனாலதான் என்னைப் போலீஸ் கைது செஞ்சதாகவும்தானே எல்லோரும் நினைச்சிட்டிருப்பாங்க. இது எல்லாமே ஜெயஶ்ரீ பக்காவா போட்ட ஸ்கெட்ச். விடியற்காலையில எங்க வீட்டுல என்னைக் கைது செஞ்சாங்க, நடு ராத்திரி ஜட்ஜ் வீட்டுக்குக் கூட்டிகிட்டுப் போய்ட்டாங்க, மறுநாள் அதிகாலை 3 மணிக்கு புழல் ஜெயில்ல என்னை அடைச்சாங்க. இதுதானே மத்தவங்களுக்குத் தெரியும். ஆனா, போலீஸ் ஸ்டேஷன்ல என்ன நடந்தது என எத்தனை பேருக்குத் தெரியும்?அங்க 70 லட்சம் பணம் கேட்டுப் பஞ்சாயத்து நடந்தது. அந்தப் பணத்தை மட்டும் ஏற்பாடு பண்ணிக் கொடுத்திருந்தா, இந்நேரத்துக்கு இது இவ்வளவு பெரிய பிரச்னையா மாறியிருக்காது. அவ்ளோ பெரிய தொகையை என்னால தர முடியலை, மறுத்ததால இவ்வளவு தூரம் வந்திருக்கு."

ஈஸ்வர்
ஈஸ்வர்

``எல்லோரும் நினைச்ச மாதிரி ஜெயஶ்ரீயைக் கொடுமைப்படுத்தி, அதுக்கு முறைப்படி நடவடிக்கை எடுத்திருந்தா சந்தோஷமா நானே தண்டனையை ஏத்துகிட்டிருந்துருப்பேன். ஆனா, குறுக்கு வழியில என்னை மிரட்டி பணம் பறிக்க நினைச்சாங்க. எங்க விவகாரம் வெளியில வர்றதுக்கு ரெண்டு வாரம் முன்னாடிதான் காவல் துறையில இருக்கிற ஒரு பெரிய அதிகாரியைப் போய் சந்திச்சாங்க ஜெயஶ்ரீ. அதோட விளைவுதான் நான் அரெஸ்ட்டானது. என்னைக் கைது செய்ய வந்தப்போ, `ஏன் சார் மிட்நைட்ல கூப்பிடுறீங்க. நானே காலையில வர்றேன்'னு சொன்னேன். அதுக்கு, `பெரிய இடத்துல இருந்து ப்ரெஷர்; பேசாம வந்திடுங்க'னு சொல்லிக் கூட்டிகிட்டு போனாங்க'' என்றார் ஈஸ்வர்.

``ஜெயஶ்ரீ எதற்காக உங்களிடமிருந்து பணம் கேட்கிறார்'' எனக் கேட்டதற்கு,  ``கொஞ்ச நாளாவே எங்க ரெண்டு பேருக்கும் நிறைய பிரச்னை. முறைப்படி விவாகரத்து பண்ணிடலாம்னு முடிவு பண்ணோம். அப்படிப் பிரியணும்னா அவங்க கேட்குற பணத்தைக் கொடுத்து செட்டில் பண்ணணும்னு சொன்னாங்க. `கோர்ட் என்ன சொல்லுதோ அதைப் பண்றேன்'னு சொன்னேன். கோர்ட்டுக்குப் போனா நானும் சில விஷயங்களைச் சொல்ல வேண்டியது வரும். அதாவது, எனக்கும் மகாலட்சுமிக்கும் தொடர்பு இருக்குறதா அவங்க சொல்ற மாதிரி என்னாலயும் சில விஷயங்களைச் சொல்ல முடியும். மகாலட்சுமியின் கணவரும் ஜெயஶ்ரீயும் நிறைய பார்ட்டிகள்ல கலந்துக்கிட்ட ஆதாரம் எல்லாம் என்கிட்ட இருக்கு. அதனால, கோர்ட்டுக்குப் போகாம பணத்தைப் பிடுங்கி, என்னை விரட்டியடிக்கிறதுக்குத்தான் இவ்வளவு டிராமா'' என்றார். 

மகாலக்ஷ்மி
மகாலக்ஷ்மி

``இந்தப் பிரச்னைகள் முடிந்தால் திரும்பவும் ஜெயஶ்ரீயுடன் சேர்ந்து வாழ வாய்ப்புள்ளதா'' எனக் கேட்டதற்கு பெரிய கும்பிடாகப் போட்டு பேட்டியை முடித்துக்கொண்டார். 

அடுத்த கட்டுரைக்கு