Published:Updated:

``சர்வரா இருந்தேன்... சினிமா கை கொடுக்கலை!" - 'சரவணன் மீனாட்சி' இர்ஃபான்

'தம்பி, நீங்க 'சரவணன் மீனாட்சி' இர்ஃபானா'ங்கிறார். என்னோட வாய்ஸை வச்சுக் கண்டுபிடிச்சுட்டார். அக்கம்பக்கத்துல இருந்தவங்களுக்குக் கூட அவர் சொன்னது கேட்டுடுச்சு. விறுவிறுன்னு அந்த இடத்தைவிட்டு நகர்ந்து ரூமுக்குள்ள ஓடினவன், அன்னைக்கு மாதிரி அதுக்கு முன்ன ஒரு நாளும் அழுததில்லை.

irfan
irfan

இர்ஃபானை நினைவிருக்கிறதா?

'கனா காணும் காலங்கள்' முதல் சீஸனில் அறிமுகமாகி, அதில் கிடைத்த புகழால் 'சரவணன் மீனாட்சி' இரண்டாவது சீஸனில் ஹீரோவானவர். 'இளமை ததும்பிய 'இர்ஃபான்-ரச்சிதா ஜோடி'யால் அந்த சீஸனும் பிக்கப் ஆகத் தொடங்கிய சில மாதங்களில், திடீரென சீரியலிலிருந்து வெளியேறினார். இவர் விலகிய அடுத்த சில மாதங்கள் சீரியலே டல் அடித்தது நினைவிருக்கலாம்.

'சீரியலிலிருந்து சினிமா நோக்கிப் பயணித்த இர்ஃபான் தற்போது எங்கு என்ன செய்துகொண்டிருக்கிறார்?’ தேடியபோது, இணையத்தில் தென்பட்டது, தான் இயக்கி நடிக்கும் வெப் சீரிஸுக்கு நிதி கேட்டு இர்ஃபான் பேசும் அந்த வீடியோ.

ஐந்தாறு ஆண்டுகளுக்கு முன் சந்தித்த, அதே அபார்ட்மென்டின் பேச்சிலர் ஃபிளாட்டில் இர்ஃபானைச் சந்தித்தோம்.

''பிசினஸைப் பின்னணியாகக் கொண்ட குடும்பத்துல இருந்து சினிமாவைத் தேடிப் புறப்பட்ட பையன் நான். `மெர்க்குரி பூக்கள்' படத்துல ஜூனியர் ஆர்ட்டிஸ்டா ஸ்க்ரீனுக்கு வந்தேன். அந்த நாள் இன்னைக்கும் ஞாபகமிருக்கு. ஆனா என்னோட டார்கெட் என்னவோ டைரக்‌ஷன்தான். பெங்களூருவுல டைரக்‌ஷன் கோர்ஸ் படிச்சேன். ஷார்ட் ஃபிலிம் எடுத்தேன். அந்த அனுபவம் போதும்கிற ஒரு அறியாமையில எந்த இயக்குநர்கிட்டயும் உதவி இயக்குநராகச் சேரலை. நிதின் சத்யாவை வச்சு முதல் படமும் கமிட் ஆச்சு. ஆனா நிதிப் பிரச்னை; பூஜையோட படம் முடக்கிடுச்சு. காலம்தான் நம்மளை வேற வேற ரூட்ல இயக்கணும்னு இருந்திருக்கே!

saravanan meenakshi irfan
saravanan meenakshi irfan

விஜய் டிவியில ஒளிபரப்பான 'கனா காணும் காலங்கள்'தான் மக்கள்கிட்ட என்னை முதன்முதலாகக் கொண்டு சேர்த்தது. தொடர்ந்து 'சரவணன் மீனாட்சி' சீரியல்ல ஹீரோ. டிவியில ரீச் ஆனதுமே சினிமா வாய்ப்புகள் வரத் தொடங்கின. எல்லாருமே நடிக்கத்தான் கூப்பிட்டாங்க. 'நீதான் தம்பி ஹீரோ'னு சில இயக்குநர்களும் தயாரிப்பாளர்களும்கூட ரெடியா இருந்தாங்க. 'சரி ஹீரோ ஆகணும்னுதான் எழுதியிருக்குதோ என்னவோ'ன்னு நானும் பெரிய நம்பிக்கை வச்சு, 'சரவணன் மீனாட்சி'யில இருந்து வெளியேறினேன்.

ஏற்கெனவே 'பட்டாளம்' வெளியாகிருந்த நிலையில 'சுண்டாட்டம்', 'ரூ', 'பொங்கி எழு மனோகரா'ன்னு அடுத்தடுத்து படங்கள் வெளியாகின. ஆனாலும், சினிமாவுல நான் தேடிய இடம் அமைஞ்சபாடில்லை. சீரியல் தந்த பாப்புலாரிட்டியைக்கூட நான் ஹீரோவா நடிச்ச படங்கள் தரலை. நல்லா போயிட்டிருந்த சீரியலையும் வம்படியா விட்டுட்டு வந்தாச்சு. இதுக்குப் பிறகான சில நாள்கள்தான், நான் இதுவரையான வாழ்க்கையில் சந்திச்ச மோசமான் நாள்கள்'' என்ற இர்ஃபான் சில நிமிட மௌனத்துக்குப் பின் தொடர்ந்தார்.

'என்னதான் ஃபேமிலி சப்போர்ட் இருந்தாலும், எதுக்கும் ஒரு கால அளவு இருக்கில்லையா? நிரூபிச்சுக் காட்டின பிறகு கிடைக்கற மதிப்புதானே அழகு? கையில இருந்த காசு கரைஞ்சு என் தேவைக்கே திண்டாடற ஒரு சூழல். எதுவும் பண்ணாம வீட்டுல இருந்து பணம் வாங்கவும் தயக்கம். ஃப்ரெண்ட் ஒருவன் சென்னையில மார்டனா ஒரு ஹோட்டல் ஆரம்பிச்சிருந்தான். 'மச்சான் அதுல ஏதாச்சும் ஒரு வேலை கொடுடா'னு கேட்டேன். 'ஹோட்டல்ல என்னடா செய்வ'னு கேட்டான். பண உதவி தரவும் தயாரா இருந்தான். அப்படி வேணாம்னுட்டு அந்த ஹோட்டல்ல சர்வரா சேர்ந்துட்டேன். சீரியல் மூலமா மக்கள்கிட்ட நல்லா ரீச் ஆன பிறகு ஒரு சர்வரா அந்த மக்களையே சந்திக்கறது எப்படி இருக்கும்?

irfan
irfan

மூக்கு வரைக்கும் மறைச்சு, மாஸ்க் போட்டபடி சர்வ் பண்ணத் தொடங்கினேன். ஹோட்டல்ல ஒருநாள் ஒரு கஸ்டமருக்கு அவர் கேட்காததைத் தந்துட்டதா பிரச்னை. கன்னா பின்னானு கத்துறார். 'ஸாரி சார்'னு சொல்லிட்டே இருக்கேன். கத்திட்டே இருந்தவர் சில செகண்ட்ல திடீர்னு அமைதியானார். அடுத்த நொடி, 'தம்பி, நீங்க 'சரவணன் மீனாட்சி' இர்ஃபானா'ங்கிறார். என்னோட வாய்ஸை வச்சுக் கண்டுபிடிச்சுட்டார். அக்கம்பக்கத்துல இருந்தவங்களுக்குக் கூட அவர் சொன்னது கேட்டுடுச்சு.

விறுவிறுன்னு அந்த இடத்தைவிட்டு நகர்ந்து ரூமுக்குள்ள ஓடினவன், அன்னைக்கு மாதிரி அதுக்கு முன்ன ஒரு நாளும் அழுததில்லை. அந்த நிமிஷத்தோட சரி, என் ஃப்ரெண்டும் 'போதும் மச்சி உன் சர்வர் வேலை'னு சொல்லி அனுப்பிவச்சுட்டான்.

அதுக்குப் பிறகு இப்ப வரைக்கும் எப்படியோ நாள்கள் ஓடிட்டிருக்கு. மறுபடியும் 'ராஜா ராணி' சீரியலுக்குக் கேட்டாங்க. ஏன் இன்னைக்கும் நான் 'பேக் டூ பெவிலியன்'னு சீரியல் பக்கம் வர முடிவெடுத்துட்டா நாளைக்கே உங்க வீடுகளுக்குள் வந்துடுவேன். ஆனா என்னோட அந்த ஆரம்ப நோக்கம்? இனியாச்சும் அதை மட்டுமே நோக்கி ஓடுவோம்னு தீர்மானமா ஒரு முடிவு பண்ணிட்டுதான் 5, 6 ஸ்க்ரிப்ட் ரெடி பண்ணியிருக்கேன். இதுக்கிடையில, சினிமாவுக்குப் போறதுக்கு கை கொடுக்கும்னுதான் இப்போ வெப் சீரிஸ் பண்றதுக்கு பிளான் பண்ணிட்டு இருக்கேன்.

irfan
irfan

யார் என்ன சொன்னாலும் கவலை இல்ல ப்ரோ. மனசளவுல நான் டைரக்டராகிட்டேன். அதனால ஒருநாள் நிச்சயம் டைரக்டராகவும் பேட்டி தருவேன்'’ - நம்பிக்கையுடன் முடிக்கிறார் இர்ஃபான்.