Published:Updated:

`` `எப்படி கலர் ஆனீங்க’னு எல்லாரும் கேட்கிறாங்க..!’’ - ரச்சிதா

வே.கிருஷ்ணவேணி
RAVIKUMAR S

"'உங்களுக்கு மனசாட்சியே இல்லையா.. ஏன் போனீங்க'னு கேட்டாங்க. கொஞ்சம் கஷ்டமாக இருந்தது. அடுத்தகட்டமாக ஒரு விஷயத்தை எடுத்துச் செய்ய வேண்டிய பொறுப்பு எங்களுக்கு இருந்தது. அதற்கான நேரம் கூடிவரும்போது அதை மறுக்க முடியல'' என்கிறார் தினேஷ்.

தினேஷ் - ரச்சிதா
தினேஷ் - ரச்சிதா

ஜி தமிழில் ஜூன் 8 ம் தேதி முதல் ஒளிபரப்பாகிவரும் சீரியல் `நாச்சியார்புரம்'. விஜய் டி.வியில் ஒளிபரப்பான `பிரிவோம் சந்திப்போம்' சீரியலுக்குப் பிறகு, தற்போது `நாச்சியார்புரம்' சீரியலில் ஒன்றாக இணைந்திருக்கிறார்கள் தினேஷ்- ரச்சிதா ஜோடி. அவர்களுடன் ஒரு கலகல பேட்டி!

ரச்சிதா
ரச்சிதா

ரச்சிதாவிடம், `பிரிவோம் சந்திப்போம்' சீரியல் உங்களுக்கு முதல் தமிழ் சீரியல். அந்த நினைவுகளைப் பகிருங்கள்..?

"'பிரிவோம் சந்திப்போம்' என் கரியரில் மிக முக்கியமான சீரியல். அந்த சீரியலுக்குப் பிறகு இப்போவரைக்கும் நிறைய பேர், `எப்படி கலர் ஆனீங்க’னு கேட்பாங்க. அது மேக்கப் என சிரிச்சிட்டே நகர்ந்து போவேன். அந்த சீரியலில் நடித்தபோது கலராக இருந்தேன். இப்போதான் கருத்துட்டேன். `பிரிவோம் சந்திப்போம்’ சீரியல் டைரக்டரே `நீங்க இருந்த சீரியலில் நடிக்கறதுக்கு நாங்க கொடுத்து வச்சிருக்கணும்மா'னு சொல்லியிருக்காங்க. கலரா இருக்கிற பொண்ணுக்கு ப்ளாக் மேக்கப் போட்டு நடிக்க வைக்கிறது கஷ்டம். ஆனால், நான் மூன்று வருஷம் அந்த மேக்கப்போடு இருந்தேன்.’’

"'பி.ச' ஜோதிக்கும், `நாச்சியார்புரம்' ஜோதிக்கும் இடையே இருக்கும் வித்தியாசம்..?''

தினேஷ் - ரச்சிதா
தினேஷ் - ரச்சிதா

"கார்த்திக் - ஜோதி ஜோடி பெயர்கள்தான் நாங்க ரியல் ஜோடியாக இணைய காரணமா இருந்தது. சென்டிமென்ட்டாக அதே பெயரைத்தான் `நாச்சியார்புரம்' சீரியலிலும் வைத்திருக்கிறோம். தினேஷின் அப்பா, திருமணம் ஆன பிறகும் ரொம்ப நாள் என்னை `ஜோதி'னுதான் கூப்பிட்டுட்டு இருந்தார். ஜோதி என்கிற பெயர் தினேஷுக்கும் அவ்வளவு பிடிக்கும். எங்களைப் பொறுத்தவரை நாச்சியார்புரம் ஜோதியைவிட `பிரிவோம் சந்திப்போம்' ஜோதிதான் ரொம்பப் பிடிக்கும்'' என்றவரைத் தொடர்ந்து பேசுகிறார் தினேஷ்.

`நாச்சியார்புரம்' சீரியல் கதை என்ன..?

தினேஷ் - ரச்சிதா
தினேஷ் - ரச்சிதா

"'நாச்சியார்புரம்' கதை இதுவரை வராத ஒரு கதைனு சொல்ல முடியாது. இரண்டு குடும்பம், அதற்கு நடுவில் நடக்கிற சண்டை, காதல், பிரிவுதான் கதை. ஸ்பெஷல்னா நேட்டிவிட்டிதான். ஶ்ரீவில்லிபுத்தூரில்தான் ஷூட். நேட்டிவிட்டிக்காக இந்த சீரியலை அங்கு எடுக்கிறோம். எப்போதும் எடுக்கிற கதைதானே என்றில்லாமல், இந்தக் கதைக்கான வித்தியாசத்தையும் காண்பிக்கிறோம். இப்படியும் இதை சொல்லலாமானு ரசிகர்கள் யோசிப்பாங்க. அந்த ஃபீல் நிச்சயம் இந்தக் கதையில் இருக்கும்.''

இரண்டு பேரும் மீண்டும் இணைந்து நடிக்கிறது திடீர்னு எடுத்த முடிவா..?

தினேஷ்
தினேஷ்

"இல்லை. இரண்டு பேருமே சேர்ந்து ஒரு புராஜெக்ட் பண்ணணும்னு நீண்ட நாள் ஆசை. அதேபோல, நாங்க இரண்டு பேரும் ஒன்றாக இணைந்தது ஒரு புராஜெக்ட்லதான். ரச்சிதாவுக்கு தினேஷ் அறிமுகமானதும், தினேஷுக்கு ரச்சிதா அறிமுகமானதும் கார்த்தி, ஜோதி என்கிற பெயரால்தான். முதன் முதலில் ரச்சிதா அறிமுகமாகும்போது என் பெயர் கார்த்தினுதான் நினைச்சுட்டு இருந்தாங்க. மூன்று நாள்களுக்குப் பிறகுதான் தினேஷ் என்பதே தெரிந்தது. அப்படி நாங்க இணைந்த ஒரு புராஜெக்ட் போல இப்பவும் எங்களை நேசிக்க வைக்க ஒரு சீரியல் கிடைச்சிருக்கு. கிட்டத்தட்ட இரண்டரை வருடமாக முயற்சி செய்து அதை இப்போ சீரியலாக்கியிருக்கோம்.''