Published:Updated:

``புதுசா வந்த ஹீரோகிட்ட பிடிக்காத ஒரே விஷயம்!’’ - `ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி' அஸ்வினி

அய்யனார் ராஜன்

ஹீரோ மாறிய பின் சீரியலின் போக்கு குறித்து 'ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி' அஸ்வினி

‘ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி’ அஸ்வினி
‘ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி’ அஸ்வினி

ஹீரோக்களும் ஹீரோயின்களும் மாறுவதென்பது சீரியல்களில் சகஜம். ஜீ தமிழ் சேனலில் பிரைம் டைமில் ஒளிபரப்பாகி வருகிற 'ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி'யையும் இந்த ஆள் மாற்றம் விட்டு வைக்கவில்லை. இதில் 'இனியன்' என்கிற கேரக்டரில் ஹீரோவாக நடித்துக்கொண்டிருந்த வசந்த் கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியேறினார். தனிப்பட்ட காரணங்களுக்காக வெளியேறியதாகச் சொன்னார். தற்போது தொடரின் ஹீரோவாக புவி கமிட் ஆகி நடித்து வருகிறார்.

ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி யூனிட்
ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி யூனிட்

பொதுவாகவே 'இவருக்குப் பதில் இவர்' என ஹீரோயின்கள் மாறுகிற போது அது ஹீரோக்களை அவ்வளவாகப் பாதிப்பதில்லை. ஆனால், ஹீரோக்கள் மாறுகிற போது, அந்த சீரியலின் ஹீரோயின்கள் ரொம்பவே சங்கடப்படுகின்றனர். சமூக வலைதளங்களில் மனம் புண்படும் அளவுக்குத் தவறான அர்த்தத்துடன் கேலி கிண்டலுக்கு ஆளாவதாகக் குமுறியிருக்கின்றனர் சில ஹீரோயின்கள். ' 'சரவணன் மீனாட்சி' கடைசி சீசனில் நடிக்க ஒப்புக்கொண்டது நான் எடுத்த தவறான முடிவு' என அதன் ஹீரோயின் முன்பு நம்மிடமே இந்தப் பிரச்னை குறித்துப் பேசியிருந்தார்.

மதிய உணவு இடைவேளையில் அஸ்வினியைச் சந்தித்தோம்.

'’இந்த சீரியல் மத்த சீரியல் மாதிரி இல்லை. இதுல நடிக்கிறதுல நான் ரொம்பவே பெருமைப்படறேன். ஒரு குண்டு பொண்ணு சந்திக்கிற பிரச்னைகளைச் சொல்லணும்னா ஹீரோயினா அப்படியொரு குண்டு பொண்ணுதான் வேணும்னு மாசக்கணக்குல தேடியலைஞ்சு, என்னைக் கண்டுபிடிச்சு சீரியலைத் தொடங்கினாங்க. ஓவர் நைட்டுல தமிழ்நாட்டு மக்கள் என்னை அவங்க வீட்டுப் பொண்ணா நினைக்கத் தொடங்கினாங்க. 'நானும் நடிகையாகிட்டேன்'ங்கிற சந்தோஷத்துல இருந்த நேரத்துலதான் திடீர்னு ஹீரோ சேஞ்ச் ஆனார். 'என்னடா இது எனக்கு வந்த சோதனையா'னு நினைச்சேன். ’புதுசா வர்ற ஹீரோ எப்படியிருப்பாரோ'ங்கிற ஒரு பயமும் இருந்தது. ஆனா புவி நான் நினைச்ச மாதிரி பயப்பட வேண்டிய ஆள் இல்லை. பார்க்கறதுக்கு ரொம்ப பேசாதவர் போலத் தெரிஞ்சாலும், பழகிட்டா அவ்வளவு கலகலப்பானவர். வெறும் வார்த்தைக்காக இதைச் சொல்லலை, நிஜமாகவே சொல்றேன், வசந்தை விட புவி கூட ரொம்பவே எனக்கு கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகிடுச்சு. இப்படிச் சொன்னதும், உடனே ஏதாவது புரளியைக் கிளப்பி விட்டுடாதீங்க. சீரியல்ல எங்க கேரக்டர்களுக்கிடையிலான கெமிஸ்ட்ரினு சொல்ல வந்தேன்’' என்றவர், '’அதேநேரம் புவியிடம் எனக்கு ஒரு விஷயம் மட்டும் பிடிக்கலை'’ என்றார்.

அது என்னவாம்?

புவி அஸ்வினி இயக்குநருடன்
புவி அஸ்வினி இயக்குநருடன்

''அவர் ஒரு டீ - டோட்டலராம். இந்தக் காலத்துல இப்படியொரு மனுஷன். யூனிட்ல ஏதாச்சும் கெட் டு கெதர் நடந்தா ஹீரோ கம்பெனி தரலைன்னா என்னங்க அர்த்தம்' என்கிறார்.