Published:Updated:

``சீரியல் முடியட்டும்னு இருந்தா அறுபதாம் கல்யாணம்தான்!'' - காதலரைக் கைபிடித்த `செம்பருத்தி' ஜெனிஃபர்

'செம்பருத்தி' சீரியல் நடிகை ஜெனிஃபர் காதலரைக் கைப்பிடித்திருக்கிறார்.

Sembaruthi Jennifer
Sembaruthi Jennifer

'செம்பருத்தி' சீரியலில் ஹீரோ ஹீரோயினான ஆதி - பார்வதி ஜோடிக்கு நடந்த கல்யாணம் குறித்து ஆதியின் அம்மா அகிலாண்டேஸ்வரிக்கு இன்னும் தெரியாது. 'அதை எப்பத்தான்யா காட்டுவீங்க' என உங்களுக்குக் கேட்கத் தோன்றிய அதே கேள்வியைப் பொறுப்பானவர்களிடம் கேட்டால், "சீரியல் ரொம்ப நாளா போயிட்டிருக்குன்னு இப்பத்தானே 'செம்பருத்தி செலிப்ரேஷன்'னே கொண்டாடியிருக்கோம். சொல்லப்போனா இப்பத்தான் செகண்டு இன்னிங்ஸ் தொடங்குது. அதனால சட்டுபுட்டுனெல்லாம் அதைச் சொல்லிட்டா எப்படிங்க?" என்கிறார்கள்.

யுவனின் இசை, பக்கவிளைவில்லாத போதை மருந்து..! #HBDYuvan

சரிதான், ஆதி-பார்வதி கல்யாணத்தை இவங்க எப்ப வேணாலும் ரிவீல் பண்ணட்டும். ஆதி மீது ஆசைப்பட்ட வனஜா மகள் உமாவுக்கு (ஜெனிஃபர்) நிஜத்துல நடந்த கல்யாணம் பத்தி நாம் தெரிஞ்சுக்கலாமா? கடந்த 25-ம் தேதி சென்னையில் ஒரு கோயிலில் வைத்து எளிமையான முறையில் நடந்த இந்தத் திருமணம் 'மதங்களைக் கடந்த காதல் திருமணம்.'

இது குறித்து ஜெனிஃபரிடம் பேசினோம்...

"மூணு வருஷத்துக்கு முன்னாடி நான் காலேஜ் படிச்சிட்டிருந்தப்போ, சென்னையில இருந்து கார் பிடிச்சு மதுரைக்கு ஒரு ஃபங்ஷனுக்காகக் குடும்பத்தோட போனோம். அந்தக் காரை ஓட்டினது யாருன்னா... யெஸ்... அவரேதாங்க இனி வாழ்க்கைங்கிற படகை ஓட்ட என்னோடு கை கோத்திருக்கிறவர். பேரு சரவணன். 'அட, டிரைவரா'னு ஈஸியா கமென்ட் பண்ணிடாதீங்க. அந்த விஷயத்தை வச்சேதான் அவரை எனக்குப் பிடிச்சது. பயணத்தின்போது பேசிகிட்டே போனதுல (வீட்டுல எல்லார் முன்னிலையிலும்தான்) அவர் டிரைவரான கதையைக் கேட்டேன்.

Sembaruthi Jennifer
Sembaruthi Jennifer

பி.இ முடிச்சுட்டு கனவுகளோட வேலைக்குக் காத்திட்டிருந்திருக்கார். ஒரு பெரிய கம்பெனியில வேலையும் கிடைச்சிருக்கு. சம்பளம் பத்தாயிரம்னு சொல்லியிருக்காங்க. 'இன்ஜினீயரிங்' முடிச்சிருக்கேன்'னு சொன்னதுக்கு, `அதுக்கு மவுசு போய் பல வருஷமாச்சே'னு சொல்லிட்டாங்களாம். அதனால வேற வழியில்லாம நாலஞ்சு மாசம் வேலை பார்த்திட்டிருந்தவர், ஒருகட்டத்துல 'இந்தச் சம்பளத்துக்கு ராப்பகலா உழைக்கறதைவிட சொந்தமா ஏதாச்சும் செய்யலாமே'னு வேலையை விட்டுட்டார்.

டிரைவிங் தெரிஞ்சு வச்சிருந்ததால உடனே அதுதான் கை கொடுத்திருக்கு. கால் டிரைவரா கொஞ்ச நாள் இருந்திருக்கார். பிறகு டிரைவிங் சொல்லிக்கொடுத்திருக்கார். இப்போ ட்ராவல் லைன்ல ஆல் இன் ஆல். சொந்தமா பிசினஸ் பண்ணிட்டு இருக்கார்.

அவரோட இந்தக் கதை என்னை என்னவோ செய்தாலும், நானா அவர்கிட்ட முதல்ல புரொபோஸ் பண்ணலை. அவர்தான் முதல்ல சொன்னார். அதுவும் எப்படின்னு கேக்கறீங்க? மனுஷன் நேரா வந்து வீட்டுல பொண்ணு கேட்டுட்டார். இவரோட கதைனால, ஏற்கெனவே எங்க வீட்டுல எல்லாருக்கும் இவர் மேல ஒரு மரியாதையை உருவாக்கியிருந்ததால, அம்மா அப்பாவுடனும் தொடர்புலதான் இருந்தார். அந்தத் தைரியத்துல வந்து கேட்டுட்டார். 'எனக்குப் பொண்ணு பார்த்திட்டிருக்காங்க. எனக்கு உங்க பொண்ணைத் தெரியும். அவங்களுக்கும் என்னைத் தெரியும். அவங்களை எனக்குப் பிடிச்சிருக்கு. அவங்களுக்கு என்னைப் பிடிச்சிருந்தா எங்களை நீங்க சேர்த்து வைக்கலாமே'னு கேட்டார்.

Sembaruthi Jennifer
Sembaruthi Jennifer

அவரோட இந்த டீசன்டான அப்ரோச் எங்க வீட்டுக்காரங்களுக்கு முதல்ல பிடிச்சுடுச்சு. என்னைக் கேட்டாங்க. திடீர்னு இவர் இப்படி வந்து கேட்டதால எனக்கு என்ன பதில் சொல்றதுனே தெரியலை. அதனால ஒரு மாசம் டைம் வேணும்னு கேட்டேன். பிறகு யோசிச்சுப் பார்த்தேன். எனக்கும் அவரைப் பிடிக்காம இல்ல, வீட்டுலயும் பிடிச்சுடுச்சு. இன்னும் எதுக்கு யோசிக்கணும்'னு தோண, சம்மதிச்சேன். ஆனா 'கல்யாணம் இப்ப வேணாம்’னு சொன்னேன். சரின்னு எனக்காக சுமார் நாலு வருஷம் வரைக்கும் வெயிட் பண்ணினார்’' என்கிறார்.

ஜெனிஃபர் டிவி சீரியலுக்கு வரும்போது முதலில் சரவணன் எதிர்த்தாராம். 'சினிமா, சீரியல் இரண்டும் தனக்கு மிகவும் பிடித்த விஷயம்' என ஜெனிஃபர் எடுத்துச் சொன்னதும் புரிந்து கொண்டாராம்.

Sembaruthi Jennifer
Sembaruthi Jennifer

'’இன்டர்ன்ஷிப் பண்ணணும்னு அனுமதி கேட்டு சேனல் ஆபீஸுக்குப் போன இடத்துல 'செம்பருத்தி' சான்ஸ் கிடைச்சிடுச்சு. சீரியல்களையே விரும்பிப் பார்க்காத அவருக்கு 'செம்பருத்தி' மட்டும் பிடிக்கும். பிரேக் எடுக்க வேண்டியிருக்கும்னு நினைச்சு, ’இந்தத் தொடர் முடிஞ்சப் பிறகு நம்ம கல்யாணத்தை வச்சுக்கலாம்'னு சொன்னார். நான்கூட முதல்ல அந்த முடிவுக்குச் சம்மதிச்சேன். ஆனா, ஃப்ரெண்ட்ஸ்லாம் சீரியல் முடிஞ்சுதான் கல்யாணம்னா நேரா அறுபதாம் கல்யாணம்தான்'னு கிண்டலடிக்கத் தொடங்கினாங்க. ரெண்டு பேர் வீட்டுலயும் பெரியவங்களும் 'இப்ப பண்ணிடலாமே'னு ஆசைப்பட, அதுக்கு மதிப்புக் கொடுக்க வேண்டியிருந்ததால சட்டுனு மாலையை மாத்தியாச்சு" எனச் சிரிக்கிறார் ஜெனிஃபர்.