சின்னத்திரை நடிகையாக நம்மிடையே பரிச்சயமானவர் லட்சுமி வாசுதேவன். இவர் அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கண்ணீர் மல்க வீடியோ ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார். அந்த வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது..

``என்னுடைய வாட்ஸ்அப் எண்ணில் உள்ள நண்பர்கள் எல்லாருக்கும் இந்தத் தகவலை சொல்லணும்னு தோணுச்சு. என்னைப் பற்றின தவறான புகைப்படத்தை யாரோ மார்பிங் பண்ணி வேற ஒரு புது நம்பரிலிருந்து என் கான்டாக்ட்டில் இருக்கும் எல்லாருக்கும் அனுப்பிட்டு இருக்காங்க. இது எப்படி ஆரம்பிச்சதுன்னு நான் சொல்லியே ஆகணும் ஏன்னா என்னை மாதிரி நான் பண்ணின தப்பை யாரும் பண்ணிடக் கூடாது. அதனால எல்லார்கிட்டேயும் சொல்றேன்! செப்டம்பர் 11 அன்னைக்கு நீங்க ஐந்து லட்சம் ரூபாய் ஜெயிச்சிருக்கீங்கன்னு ஒரு மெசேஜ் வந்துச்சு. அந்த மெசேஜூடன் சேர்த்து ஒரு லிங்க் இருந்துச்சு. அந்த லிங்கை நான் க்ளிக் பண்ணினேன். க்ளிக் பண்ணதும் ஒரு ஆப் என் போனில் இன்ஸ்டால் ஆச்சு. அந்த ஆப் டவுண்லோடு ஆனவுடன் என் போன் ஹேக் ஆகிருச்சு. அது அப்போ எனக்குத் தெரியல.
ஒரு மூணு, நாலு நாட்கள் கழிச்சு எனக்கு மெசேஜ் வர ஆரம்பிச்சது. நீங்க லோன் வாங்கியிருக்கீங்க அதனால அந்த லோனை உடனடியா அடைங்கன்னு தொடர்ந்து மெசேஜ், போன் வர ஆரம்பிச்சது. ரொம்ப மோசமா பேசி எனக்கு வாய்ஸ் நோட் அனுப்பினாங்க. நீங்க 5000 ரூபாய் லோன் கொடுக்கலைன்னா உங்க ஃபோட்டோவை எல்லாருக்கும் அனுப்புவோம்னு தொடர்ந்து மிரட்டல்கள் வர ஆரம்பிக்கவும்தான் இந்தப் பிரச்னையுடைய வீரியம் எனக்குப் புரிய ஆரம்பிச்சது. அதுக்குப்பிறகுதான் ஹைதராபாத்தில் சைபர்கிரைமில் கம்ப்ளைன்ட் கொடுத்தேன். அவங்க இது குறித்து விசாரிச்சிட்டு இருக்காங்க.
அதற்கிடையில் தான், என் வாட்ஸ் அப்பிலுள்ள சில கான்டாக்ட்ஸ்களுக்கு என் ஃபோட்டோகிராஃப் போயிருக்கு. என் கூட இருக்கிற எல்லாருக்குமே நான் எப்படிப்பட்டவன்னு தெரியும் என உடைந்து அழுதவர் சில நொடி மெளனத்திற்கு பின் தொடர்ந்து பேசினார்.
என் ஃப்ரெண்ட்ஸ், என்னோட பெற்றோர்களுக்குக் கூட இந்த ஃபோட்டோஸ் போயிருக்கு. என் கூட இருக்கிறவங்களுக்கு என்னைப் பற்றித் தெரியும் என்னை நான் நிரூபிக்கத் தேவையில்லை ஆனாலும் இந்த மாதிரி ஒரு தப்பான ஆப்பை டவுன்லோடு செய்ததனால் 2, 3 நாளா நான் என்னவெல்லாம் எதிர்கொள்கிறேன் என்பது எனக்குத்தான் தெரியும். எந்தத் தெரியாத நம்பரிலிருந்து மெசேஜ் வந்தாலும், நீங்க பணம் வின் பண்ணியிருக்கீங்க இந்த லிங்கை கிளிக் பண்ணுங்கன்னு சொன்னாலும் எந்த ஆப்பையும் டவுன்லோடு பண்ணாதீங்க. நமக்குத் தெரியாது எந்த ஆப் எப்படிப்பட்டதுன்னு. அதனால, லோன் ஆப், லக்கி டிரான்னு எந்த ஆப்பிலிருந்து வர்ற மெசேஜூம் க்ளிக் பண்ணாதீங்க. சைபர்கிரைமிலிருந்து நீங்க வீடியோ மெசேஜோ, வாட்ஸ் அப் ஸ்டேட்டஸோ போடுங்கன்னு சொன்னாங்க. அப்பத்தான் பலருக்கும் இதுகுறித்துத் தெரியும். நிறைய பேர் தற்கொலை பண்ணிக்கிறாங்க. இது ஒரு பெண்ணால எதிர்கொள்றது ரொம்பவே கடினம். எவ்ளோ போல்டான பர்சனாக இருந்தாலும் சரி அவங்களால இதை எதிர்கொள்ள முடியாம தவிப்பாங்க.

உங்களுக்கு வர்ற போட்டோஸை தயவு செய்து ரிப்போர்ட் பண்ணுங்க. நம்பர் எல்லாமே கூட இந்தியன் நம்பர்ஸ் இல்ல. ஐபி அட்ரஸ் மாறிட்டே இருக்கு. 20, 25 நம்பரில் இருந்து மெசேஜ் வந்தது. அது எல்லாமே ஆஸ்திரேலியா, ஶ்ரீலங்கா, அமெரிக்கா, லண்டன், சிட்னின்னு டிராக்கிங் மாறிட்டே இருக்கு. சைபர்கிரைம் அதுகுறித்து ஒர்க் பண்ணிட்டு இருக்காங்க. எனக்கு உங்க எல்லாருடைய சப்போர்ட்டும் தேவை!"