'சரவணன் மீனாட்சி' சீரியலின் 'மைனா' கேரக்டர் மூலம் பிரபலமான நந்தினிக்கும் சீரியல் நடிகர் யோகேஷ்வராம்-க்கும் சென்னை சேப்பாக்கத்தில் கோயில் ஒன்றில் எளிமையான முறையில் இன்று காலை திருமணம் நடந்தது. திருமணத்தில் இரு வீட்டாரின் நெருங்கிய சொந்தங்கள் கலந்துகொண்டனர். முன்னதாக நேற்று மாலை நடந்த திருமண வரவேற்பில் சின்னத்திரை, சினிமா பிரபலங்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
மதுரையைச் சேர்ந்த நந்தினி அங்கு உள்ளூர் சேனலில் ஆங்கராக மீடியா பணியைத் தொடங்கியவர். பிறகு சினிமா மற்றும் விளம்பர வாய்ப்புகள் வரத் தொடங்க, சென்னைக்கு வந்தார். வெள்ளித்திரையில் சில படங்களிலும் நடித்திருக்கிறார். ஆனாலும் 'சரவணன் மீனாட்சி' சீரியலே அவருக்குப் பெயர் வாங்கித் தந்தது. அதில் ஹிரோயின் ரச்சிதாவின் தோழியாக வந்து இவர் பேசிய மதுரை ஸ்லாங் சீரியல் ரசிகர்களால் பெரிதும் ரசிக்கப்பட்டது.
சீரியல்களில் பிஸியாக இருந்தபோதே, சென்னையில் ஜிம் நடத்தி வந்த கார்த்திக் என்பவரைக் காதலிக்க, சில வருடங்களுக்கு முன் இவர்களுக்கு மதுரையில் திருமணம் நடந்தது. ஆனால், இந்தத் திருமண வாழ்க்கை சிறப்பானதாக இல்லை. இருவரிடையே கருத்து வேறுபாடு உண்டாக, அதன் தொடர்ச்சியாகப் பிரிந்து வாழ்ந்தனர். பின்னர் திடீரென கார்த்திக் தற்கொலை செய்து கொண்டார்.
முதல் திருமண வாழ்க்கை தந்த கசப்பான அனுபவத்துக்குப்பின் சில மாதங்கள் டிவி, சினிமாவை விட்டு ஒதுங்கியிருந்த நந்தினியைக் குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் தேற்றி மறுபடியும் டிவி பக்கம் வரவழைத்தனர். பழையபடி சீரியல்கள், தொடர்ந்து 'டான்ஸ் ஜோடி டான்ஸ்' உள்ளிட்ட ரியாலிட்டி ஷோக்களில் பங்கேற்றார். அப்படியொரு ரியாலிட்டி ஷோவில்தான் யோகேஷ்வராம் நந்தினிக்கு அறிமுகமானார்.
மேற்கொண்டு நந்தினியுடனான நட்பு குறித்தும் அது திருமணத்தில் முடிந்தது குறித்தும் யோகேஷ்வராம் விவரிக்கிறார்...

''ஆரம்பத்துல எங்களுக்குள் நட்பு மட்டுமே இருந்தது. போகப்போக அது எனக்கு காதலா மாறுச்சு. ஆனாலும் அந்த விருப்பத்தை அவங்ககிட்ட சொல்லத் தயக்கமா இருந்தது. கடந்த கால வாழ்க்கை தந்த வலியில இருந்து அவங்க மீண்டு வந்துட்டாங்களா இல்லையானு தெரியாத சூழல்ல 'காதல்'ங்கிறதையெல்லாம் எப்படி எடுத்துப்பாங்களோன்னு தோணுச்சு. அதனால என்னுடைய விருப்பத்தை முதல்ல என் வீட்ல சொன்னேன். அப்ப ஒரேயொரு கண்டிஷன் மட்டும் போட்டேன். 'எனக்கு அவங்களைப் பிடிச்சிருக்குதான்; அதேநேரம் நந்தினிக்கும் முழுச் சம்மதம்னா மட்டுமே திருமணம் பத்திப் பேசுங்க'ன்னு சொன்னேன். எங்க வீட்டுப் பெரியவங்க அதேமாதிரி நந்தினி வீட்டுல பெரியவங்ககிட்டப் பேச, கல்யாணம் உறுதியாச்சு'' என்கிறார் யோகேஷ்.
முன்னதாக ஹோட்டலில் நடந்த வரவேற்பில் அமித் பார்கவ்-ஶ்ரீரஞ்சனி, மணிமேகலை - ஹுசைன், ரியோ - ஸ்ருதி, என சின்னத்திரைத் தம்பதியினர் ஜோடி ஜோடியாக வந்திருந்தனர். நடிகைகள் அம்பிகா, ஆனந்தி, ஜூலி, ஜெனிஃபர், நடிகர்கள் சுப்பு பஞ்சு, போஸ் வெங்கட், சாய்சக்தி, குமரன் என டிவி, சினிமா நட்சத்திரங்கள் பெரிய அளவில் திரண்டிருந்தனர்.
நந்தினியை அவரது வீட்டில் செல்லமாக பாப்பா என அழைப்பார்களாம். அறிமுகமான நாளிலிருந்தே யோகேஷும் அப்படியேதான் அழைக்கிறாராம்.