Published:Updated:

``யூனிஃபார்ம்ல வீடியோ போட்ட நான் தீவிரவாதின்னா, சாத்தான்குளம் போலீஸ் யார்?'' - நடிகை நிலானி

 நடிகை நிலானி
நடிகை நிலானி

"`இந்த யூனிஃபார்மைப் போடுறதுக்கு எனக்குக் கூசுது’னு நான் பேசினது போலீஸ் யூனிஃபார்மைக் களங்கப்படுத்திடுச்சுன்னாங்க. கூடுதலா, நான் தீவிரவாதத்தைத் தூண்டியதாவும் ஒரு பிரிவை வழக்குல சேர்த்துக்கிட்டாங்க." - நடிகை நிலானி

சீரியல் நடிகை நிலானியை நினைவிருக்கிறதா?

2018-ம் ஆண்டு தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கெதிரான போராட்டத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டைக் கண்டித்து போலீஸ் சீருடையில் வீடியோ வெளியிட்டுக் கைதானாவர் நடிகை நிலானி.

அந்த வழக்கு நடந்துகொண்டிருந்த நிலையில், தொடர்ந்து குடும்பப் பிரச்னையிலும் சிக்கி, செய்திகளில் அடிபட்டார். கொஞ்ச நாள் மீடியாக்களில் இருந்து ஒதுங்கியே இருந்தவர் தற்போது மறுபடியும் சீரியலுக்கு வந்திருக்கிறார். ‘இதயத்தைத் திருடாதே’ சீரியலில் அவருக்கு அரசியல்வாதி கேரக்டர். வில்லியாக நடிக்கிறார்.

நிலானியிடம் பேசினேன்.

நிலானி
நிலானி

''முதன்முதலா வில்லி கேரக்டர்ல நடிக்கிறீங்க போல?''

''ஆமாங்க. இதுவரை சுமார் 13 சீரியல்கள்ல நடிச்சிருக்கேன். ஆனா நெகட்டிவ் கேரக்டர் அமைஞ்சதே இல்லை. சீரியல்களைப் பொறுத்தவரைக்கும் வில்லி கேரக்டர்ல வந்து நாலு பேரை மிரட்டிட்டே இருந்தாத்தான் ரேட்டிங்கும் கிடைக்கும், சீரியல்லயும் தாக்குப் பிடிக்க முடியும். அதனால வில்லி கேரக்டர் மேல எனக்கு ஒரு கண் இருந்துகிட்டே இருந்தது. ஆனா 'தென்றல்’ சீரியல்ல நான் காமெடி கேரக்டர்ல நடிச்சிருந்ததைப் பார்த்துவிட்டு வில்லி ரோல் தர்றதுக்கே பயந்தாங்க.

ஒரு சேனல்ல கடைசி நேரத்துல வாய்ப்பு கை நழுவிப் போச்சு. அதனால ஒரேயொரு வாய்ப்பு கிடைக்காதான்னு இருந்த நேரத்துலதான் இந்த அரசியல்வாதி கேரக்டர் கிடைச்சது’’ என்றவர் லாக்டெளன் நாள்களில் நடந்த சீரியல் ஷூட்டிங்கிலும் கலந்துகொண்டார்.

‘’சீரியல் உலகமே கொரோனாவால பெரும் கஷ்டத்துல இருக்கு. நிறைய ஆர்ட்டிஸ்டுகளுக்கு வேலை இல்லை. முன்னணி சேனல்கள்ல ஒளிபரப்பாகுற ஹிட் சீரியல்கள்லயே கூட புது எபிசோடு ஒளிபரப்ப முடியாத நிலை உண்டாச்சு. ஆனா ரொம்ப நாளைக்குப் பிறகு நான் திரும்ப சீரியலுக்கு வந்த நேரமா அல்லது என்னுடைய அதிர்ஷ்டமான்னு தெரியல, என்னுடைய சீரியலுக்கு அந்த நிலைமை வரலை. இருந்தபோதும் ஷூட்டிங் இல்லாம சில நாள்கள் இருந்தோம். திரும்ப நிறைய கண்டிஷன்களோடு ஷூட்டிங் நடந்தது. நாலு நாள் நடந்த அந்த ஷூட்டிங் அனுபவமே வித்தியாசமா இருந்த்து. ஒருத்தர் முகத்தை ஒருத்தர் பார்க்குறதுக்கே பயந்தோம். டயலாக் சொல்ல உதவி இயக்குநர் பக்கத்துல வர்றப்ப அவருக்கும் பயம், எனக்கும் பயம். இன்னும் எத்தனை நாளைக்கு இந்தக் கூத்துனு நினைச்சோம். மறுநாளே முழு லாக்டௌன் அறிவிச்சிட்டாங்க. அடுத்த சில நாள்கள்ல மறுபடியும் அதே மாதிரியான ஷூட்டிங் தொடங்கும்னு தெரியுது. நினைக்கிறப்பவே பீதியாத்தான் இருக்கு'' என்றவரிடம் தூத்துக்குடி பிரச்னையின்போது நடந்த சம்பவங்கள் குறித்துக்கேட்டேன்.

நிலானி
நிலானி

‘’போலீஸ் ஸ்டேஷன், கோர்ட்னு அலைஞ்சதெல்லாம் இன்னும் மறக்கலை. பிறகு ஃபேமிலில சில கசப்பான நிகழ்வுகள்... எல்லாத்தையும் கடந்து வந்திருக்கேன்.

அப்போ 13 பேர் பலியானது நாடு முழுக்க பெரும் கொந்தளிப்பை உண்டாக்குச்சு. நானும் ஒரு எமோஷன்ல என்னுடைய உணர்வை வெளிப்படுத்த ஷூட்டிங் ஸ்பாட்ல போலீஸ் கெட்-அப்ல இருந்தபடியே பேசி வீடியோ வெளியிட்டேன். அது என்னுடைய பேச்சு சுதந்திரம். ஆனா கைது செஞ்சு 7 நாள் புழல் ஜெயில்ல போட்டுட்டாங்க.

‘நீங்க பேசினது தப்பில்லை. அந்த யூனிஃபார்ம்ல இருந்தபடி பேசியிருக்கக் கூடாது’ன்னாங்க. ’இந்த யூனிஃபார்மைப் போடுறதுக்கு எனக்குக் கூசுது’னு நான் பேசினது போலீஸ் யூனிஃபார்மைக் களங்கப்படுத்திடுச்சுன்னாங்க. கூடுதலா, நான் தீவிரவாதத்தைத் தூண்டியதாவும் ஒரு பிரிவை வழக்குல சேர்த்துக்கிட்டாங்க.

மீண்டும் சீரியஸ் லாக்டெளன், மீண்டும் சீரியல் ஷூட்டிங் நிறுத்தம்! - புது எபிசோடுகள் ஒளிபரப்பாகுமா?!

போலீஸ் யூனிஃபார்முக்கு ஒரு களங்கம்னா வழக்கை தீவிரவாதத்துடன்லாம் கோத்து விட்டவங்க, இப்ப என்னப் பண்ணியிருக்காங்கப் பாருங்க. அதே யூனிஃபார்ம்ல சாத்தான்குளத்துல நிஜ போலீஸார் நடந்துகிட்ட விதத்தால் நாடு தாண்டி, உலக அளவுல தமிழ்நாட்டுக் காவல்துறையின் பேருக்கு களங்கம் உண்டாயிருக்கே, இதுக்கு என்ன சொல்றாங்க? சாத்தான்குளம் சம்பவம் என்னைப் பொறுத்தவரை ரொம்பவே கொடுமையான சம்பவம். காரணமானவங்க நிச்சயம் தண்டிக்கப்பட்டே ஆகணும்'' என்றார்.

அடுத்த கட்டுரைக்கு