Published:Updated:

அப்போ இப்போ- 4: என் கல்யாணத்தப்போ எனக்கு 40 வயசு; என் கணவருக்கு 50 வயசு - `சூலம்' நிர்மலா

நிர்மலா

`புதிய முகம்' திரைப்படம், `சூலம்' சீரியல் என 90ஸ் கிட்ஸ் பலருக்கும் அறிமுகமானவர் நிர்மலா.

அப்போ இப்போ- 4: என் கல்யாணத்தப்போ எனக்கு 40 வயசு; என் கணவருக்கு 50 வயசு - `சூலம்' நிர்மலா

`புதிய முகம்' திரைப்படம், `சூலம்' சீரியல் என 90ஸ் கிட்ஸ் பலருக்கும் அறிமுகமானவர் நிர்மலா.

Published:Updated:
நிர்மலா

` 90களில் பல தொடர்களில் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் நிர்மலா. வெள்ளித்திரை, சின்னத்திரை என வலம் வந்தவர். தற்போது பிசினஸில் கவனம் செலுத்தி வருகிறார். ஒரு மழைப் பொழுதில் அவருடைய அலுவலகத்தில் அவரை சந்தித்துப் பேசினோம்.

நிர்மலா
நிர்மலா

``என் அப்பா ரொம்ப ஸ்ட்ரிக்ட். ஸ்கூல் படிக்கும்போது அப்பாவுக்குத் தெரியாம ஃபேஷன் ஷோ ஒன்றில் கலந்துக்கிட்டேன். நடிகர் ஜெய்சங்கர் எங்க ரிலேஷன். அவர் மூலமா எங்க கான்டாக்ட் கண்டுபிடிச்சு கே.எஸ் ரவிக்குமார் சார், மெளனம் ரவி பிஆர்ஓ எல்லாரும் எங்க வீட்டுக்கு வந்துட்டாங்க. என் அம்மா, அப்பாகிட்ட என்னை நடிக்க வைக்க சொல்லி கேட்டு அவங்ககிட்ட பர்மிஷன் வாங்கினாங்க. அப்புறம் பேமென்ட் எல்லாம் பேசினாங்க. ஒரே வாரத்துல முடிவானதுதான் `புத்தம் புது பயணம்' திரைப்படம். எனக்கு ஷூட்டிங் போகணும், அதுமட்டும்தான் அந்த டைம் மனசுல ஓடிட்டு இருந்துச்சு. கே.எஸ் ரவிக்குமார் சார் ஷூட்டிங் ஸ்பார்டில் என்ன சொல்லிக் கொடுக்கிறாரோ அதை அப்படியே உள்வாங்கி நடிப்பேன். இப்ப அந்தப் படத்தைப் பார்க்கும்போது குழந்தை மாதிரி நடிச்சிருக்கேன்னு தோணும்.

அந்தப் படத்தைத் தொடர்ந்து `புதிய முகம்' பட வாய்ப்பு கிடைச்சது. அந்தப் படத்தில் ஹிட்டான `ஜூலை மாதம்' பாடல்தான் முதலில் ஷூட் பண்ணினாங்க. அந்தப் படம் எடுக்கும்போது அந்தப் படத்திலுள்ள எல்லா பாட்டும் ஹிட் ஆகும்னு நாங்க யாருமே எதிர்பார்க்கல. படம் ரிலீஸான பிறகுதான் அதை உணர்ந்தோம். ஏ ஆர் ரஹ்மான் இந்தப் படத்துக்குதான் முதலில் இசையமைச்சதாகவும், ரோஜா படம் முதலில் ரிலீஸானதால அந்தப் படம் அவருடைய முதல் படமாகிடுச்சுன்னு சொன்னாங்க.. ஆனா, அது நிஜமான்னு எனக்குத் தெரியல.

நிர்மலா
நிர்மலா

எனக்கு ரேவதி மேம் கூட நடிக்கணும்னு ஆசை. அந்தப் படத்தில் அவங்க கூட நடிச்சது ரொம்பவே ஹாப்பியா இருந்துச்சு. அந்தப் படத்துக்குப் பிறகு கன்னடம், மலையாளப் படங்களில் நடிச்சேன். முதல் படத்தில் நடிக்கும்போது நான் ஸ்கூல் படிச்சிட்டு இருந்தேன். அப்பா முதலில் படிப்புக்குத்தான் முக்கியத்துவம் கொடுக்கணும்னு உறுதியா சொல்லிட்டார். அதனால பட்டப் படிப்பு படிக்கிறதுக்காக பிரேக் எடுத்தேன். அதுக்குப்பிறகு பட வாய்ப்பே வரல. ஒரு ஆறு மாசம் சும்மா வீட்டிலேயே இருந்தேன். அப்பதான் ஏர் ஹோஸ்டர்ஸ் வேலைக்கு அப்ளை பண்ணினேன். 60,70 பேருடன் நேர்காணல் பண்ணி டிரைனிங், வைவா டெஸ்ட் எல்லாம் கிளியர் பண்ணி ஏர் ஹோஸ்டர்ஸ் ஆனேன். மூணு வருஷம் அங்கேயே ஒர்க் பண்ணி சீனியர் ஏர் ஹோஸ்டர்ஸ் ஆக இருந்தேன். ரேவதி மேடமுடைய தங்கச்சி அங்க என்னுடைய கோ - பைலட் ஆக இருந்தாங்க. பல சினிமா பிரபலங்கள் நான் ஏர் ஹோஸ்டராக இருந்த சமயம் டிராவல் பண்ணியிருக்காங்க. பலரை சந்திச்சிருக்கேன். மூணு வருஷத்துக்குப் பிறகு நான் ஒர்க் பண்ணின ஏர்லைனை குளோஸ் பண்ணிட்டாங்க. அப்ப இன்னொரு ஏர்லைன்ஸ் -க்கு அப்ளை பண்ணி பாம்பேவில் வேலை கிடைச்சது. எங்க வீட்ல பாம்பேக்கு அனுப்ப மாட்டேன்னு சொல்லிட்டாங்க. மறுபடியும் வீட்ல சும்மா உட்கார வேண்டிய நிலை வந்தது.

அப்பதான் ரேவதி மேம் சீரியல் பண்றாங்கன்னு கேள்விப்பட்டேன். நான் எங்க போனாலும் எனக்கும், ரேவதி மேமிற்கும் ஏதோ ஒரு கனெக்ட் இருந்துட்டே இருக்கும். அங்க எனக்குத் தெரிஞ்சவங்க தான் மேனேஜராக இருந்தாங்க. அவங்ககிட்ட சொல்லி டைரக்டரை மீட் பண்ணினேன். அவர் பார்த்ததும் நீங்க படத்துல நடிச்சிருக்கீங்க தானேன்னு கேட்டார். பிறகு, நேரடியா ஷூட்டிங்கிற்கு வர சொல்லிட்டார். அங்க போனதுக்குப் பிறகுதான் அது நெகட்டிவ் கதாபாத்திரம்னே எனக்குத் தெரிஞ்சது. அந்தத் தொடரில் சமுத்திரக்கனி தான் அசிஸ்டண்ட் டைரக்டராக இருந்தார். எனக்கு அவர்தான் ரொம்ப லக்கி. அவர் எப்படி டயலாக் சொல்லி எந்த பாடிலாங்குவேஜ்ல நடிக்கிறாரோ அதை அப்படியே உள்வாங்கி நடிச்சா போதும்! அப்படித்தான் `நிறங்கள்' தொடரில் நடிச்சேன். தொடர்ந்து 20க்கும் மேற்பட்ட தொடர்களில் நடிச்சிட்டேன்.

நிர்மலா
நிர்மலா

சன் டிவியில் ஒளிபரப்பான `சூலம்' சீரியலில் நல்ல வரவேற்பு கிடைச்சது. பலருக்கு என்னுடைய நிஜப் பெயரே தெரியாது. சூலம் சீரியலில் நடிச்சிட்டு இருந்த சமயம் என் ஃப்ரெண்ட் கூட நல்லி சில்க்கிற்கு ஷாப்பிங் போயிருந்தேன். ஷாப்பிங் முடிச்சிட்டு வெளியில டிரைவர் காரை எடுத்துட்டு வர்றதுக்காக வெயிட் பண்ணிட்டு இருந்தேன். அந்த சமயம் ரெண்டு பெண்கள் என்னைப் பார்த்து ஏதோ பேசிட்டு இருந்தாங்க. திடீர்னு ஒருத்தங்க என்கிட்ட வந்து, நீதான அந்த வில்லின்னு சொல்லி என் கன்னத்துல பளார்னு அறைஞ்சிட்டாங்க. சரியான அடி விழுந்துச்சு! என் கண்ணெல்லாம் கலங்கி கண்ணீர் தேம்பி நின்னுச்சு. என் ஃப்ரெண்ட் அவங்ககிட்ட கோபமா சண்டைக்குப் போறாங்க.. நான் அவங்க கையைப் பிடிச்சிட்டு விடு நாம கிளம்பலாம்னு கூட்டிட்டு வந்துட்டேன். அந்த இடத்துல நான் நடிகையா இருந்ததால என்னால கோபப்பட முடியல. நான் அவங்களை திருப்பி அடிச்சா அது நியூஸ்.. அவங்க என்னை அடிச்சது இப்ப நான் சொன்னா தான் பலருக்கும் தெரியும் என்கிற புரிதல் இருந்ததால ரொம்பவே அமைதியா இருந்தேன். அன்னையிலிருந்து ஷாப்பிங்கிற்கு எங்கேயும் போக தயங்குவேன் என புன்னகைத்தவரிடம் பர்சனல் லைஃப் குறித்துக் கேட்டோம்.

நான் நிச்சயமா அரேஞ்சிடு மேரேஜ் பண்ண மாட்டேன் என்பதில் உறுதியா இருந்தேன். எப்ப எனக்கானவரைத் தேடி கண்டு பிடிக்கிறேனோ அப்பதான் கல்யாணம் பண்ணிப்பேன்னு இருந்தேன். எங்க வீட்ல, சொந்தக்காரங்கன்னு எல்லாரும் எப்ப கல்யாணம், எப்ப கல்யாணம்னு கேட்டு, கேட்டு ஒரு பாய்ண்ட்ல கேட்கிறதையே விட்டுட்டாங்க. எனக்கானவரை என் 38 வயதில் சந்திச்சேன். ரெண்டு வருஷம் நண்பர்களாக இருந்தோம். அவர் திருமணமே வேண்டாம்னு என்னை பார்க்கிறதுக்கு முன்னாடி வரை சொல்லிட்டிருந்துருக்காரு. என்னோட 40வது பிறந்தநாள் அன்னைக்கு தான் எங்களுடைய நிச்சயதார்த்தம் நடந்துச்சு. கல்யாணம் பண்ணும்போது எனக்கு 40 அவருக்கு 50.

நிர்மலா
நிர்மலா

பாசிட்டிவ், நெகட்டிவ்னு ரெண்டு விதமான விமர்சனங்களையும் எங்க கல்யாணத்தப்ப எதிர்கொண்டேன். இந்த கிழவிக்கு கல்யாணமான்னு என் காதுப்படவே பேசினாங்க. நான் சிங்கிள் லேடி.. சிங்கிள் பையனைத்தானே கல்யாணம் பண்ணியிருக்கேன்..அதனால அந்த விமர்சனங்களையெல்லாம் நான் பெருசாவே எடுத்துக்கல!

இப்ப `studio N' என்கிற நிறுவனத்தை வெற்றிகரமா நடத்திட்டு இருக்கேன்.. தவிர, என் கணவர் ஆர்க்கிடெக்ட். அவருடனும் சேர்ந்து ஒர்க் பண்றேன். செளந்தர்யா ரஜினிகாந்த் வீடு நாங்க பண்ணிக் கொடுத்ததுதான்.. இப்ப ஒரு பெரிய புராஜெக்ட் ஒர்க் போயிட்டு இருக்கு!" எனப் புன்னகைத்தார் நிர்மலா.

படங்கள் - இ. பிரவின் குமார்