ஜீ தமிழ் சேனலில் சமீபத்தில்தான் ஒளிபரப்பாகத் தொடங்கியது `சீதாராமன்' சீரியல். சன் டிவியில் வருடக்கணக்கில் ஒளிபரப்பாகி சில மாதங்களுக்கு முன் நிறைவடைந்த ஹிட் தொடரான `ரோஜா' தொடரில் நடித்த பிரியங்காவை அதிக சம்பளம் கொடுத்து இந்தத் தொடரின் கதாநாயகியாகக் கமிட் செய்தார்கள்.

சீரியலின் முதல் ப்ரோமோ வெளியாகி மில்லியன் பார்வையாளர்களைத் தொட்டது. பிரியங்கா தவிர, ரேஷ்மா, சாக்ஷி சிவா, வினோதினி உள்ளிட்ட மேலும் சிலரும் நடிக்க பிரமாதமாகத் தொடங்கியது.
டி.ஆர்.பி.யிலும் நல்ல ரேட்டிங் கிடைக்கத் தொடங்கிய சூழலில்தான் தற்போது தொடரிலிருந்து ஹீரோயின் பிரியங்கா வெளியேறவிருக்கிற தகவல் வெளியாகி, அந்த சீரியலின் ரசிகர்கள் மற்றும் சேனல் வட்டாரத்தில் அதிர்ச்சியைக் கிளப்பி விட்டிருக்கிறது.
முன்னதாக கடந்த மார்ச் மாதம்தான் பிரியங்காவுக்கு ராகுல் என்பவருடன் திருமணம் நடந்தது. ஆந்திராவைச் சேர்ந்த ராகுல் ஆரம்பத்தில் தெலுங்கு சீரியல், சினிமாக்களில் நடித்து வந்தவர். தற்போது மலேசியாவில் செட்டில் ஆகி விட்டது அவர் குடும்பம். ராகுலுக்கும் பிரியங்காவுக்கும் இடையில் மலர்ந்த காதல் கல்யாணத்தில் முடிந்தது. ஆனாலுமே இந்தக் காதலை இரு வீட்டாரும் சேர்ந்து ஏற்றுக் கொள்ளாத நிலைதான் இப்போதுவரை நிலவி வருவதாகச் சொல்லப்படுகிறது.
தற்போதைய பிரியங்காவின் வெளியேற்றத் தகவல் உண்மையானதுதானா என சீரியல் யூனிட்டில் சிலரிடம் பேசினோம். ''ஆமாம், நீங்க கேள்விப்பட்டது நிஜம்தான். இனி ஓரிரு ஷெட்யூல்தான் அவங்க நடிப்பாங்கன்னு தோணுது. கல்யாணம் முடிஞ்சதுமே கணவருடன் மலேசியா போயிட்டாங்க அவங்க. இப்ப ஷூட்டிங்கிற்குமே மலேசியாவுல இருந்தே வந்து போயிட்டிருந்தாங்க. அநேகமா இந்த மாசக் கடைசி வரைக்கும்தான் அவங்க இந்த சீரியலில் இருப்பாங்கனு நினைக்கிறோம்' என்கிறார்கள் இவர்கள்.

பிரியங்காவுக்கு சீரியலில் நடிக்க வேண்டுமென்பதுதான் விருப்பமாம். ஆனால் கணவருக்குதான் பிரியங்கா தொடர்ந்து நடிப்பதில் உடன்பாடில்லையாம். 'நான் இங்க நல்லா சம்பாதிக்கிறேன். அதனால நீ நடிச்சது போதும்'னு கணவர் சொன்னதை மீற முடியவில்லையாம் பிரியங்காவுக்கு.
பிரியங்கா தரப்பிலேயே தகவல் குறித்துக் கேட்ட போது,
'' `சீதாராமன்' நல்லபடியா போயிட்டிருக்கறதால அந்த சீரியலில் இருந்து வெளியேற மனசில்லைதான். ஆனாலும் கணவர் சொல்கிறபோது அதைத் தட்ட முடியாதுங்கிறதால வேற வழியில்லை. அதனாலதான் தொடரிலிருந்து விலக முடிவு செய்திருக்காங்க'' என்கிறார்கள்.
சேனலிலுமே பிரியங்காவுக்குப் பதில் அந்தக் கேரக்டருக்கு வேறு ஆள் தேடத் தொடங்கி விட்டார்களாம்.