விஜய் டி.வி-யில் பிரைம் டைமில் ஒளிபரப்பாகிவரும் `ராஜா ராணி' தொடரில் ஹீரோயின் மாற்றப்பட்டதன் சலசலப்பு இன்னும் ஓய்ந்தபாடில்லை. இதுவரை ஹீரோயினாக நடித்துக்கொண்டிருந்த ரியா மாற்றப்பட்டு அவருக்குப் பதிலாக இப்போது ஆஷா கௌடா நடிக்கத் தொடங்கியிருக்கிறார்.
ரியா மாறியதன் அல்லது மாற்றப்பட்டதன் பின்னணியாக ஆளுக்கொரு காரணத்தைச் சொல்லிவருகிறார்கள், சின்னத்திரை ஏரியாவில். 'அவராகவே வெளியேறினார்' என்றும், 'இல்லை, வெளியேற்றப்பட்டார்' என்றும் இருவேறு தகவல்கள் உலா வருகின்றன.

"ரியா வெளியூர் சென்றிருந்த நேரத்துல ஷூட்டிங் கூப்பிட்டிருக்காங்க. அவரால வர முடியலை. ஆனாலும் கைவசம் ஒளிபரப்ப வேண்டிய எபிசோடுகள் இல்லாததால், உடனடியா ஷூட்டிங் வரச் சொல்லி, யூனிட் வற்புறுத்த, 'என்னால அப்படி உடனடியா வர முடியாது'ன்னு அவங்க சொன்னதாகவும், 'அப்படீன்னா நாங்க வேறு ஹீரோயினைக் கமிட் செய்யறதைத் தவிர வேற வழி இல்லை'ன்னு ஆஷா கமிட் ஆனதாகவும் சிலர் சொல்கிறார்கள்.
இந்தத் தகவல்கள் எல்லாம் உண்மையா, உண்மையில் நடந்தது என்ன என்று அறிய ரியாவையே தொடர்பு கொண்டு பேசினோம்.
"ஹீரோயின் மாற்றம் தொடர்பா எங்கிட்ட யாரும் எதுவுமே பேசலைங்க. எனக்குத் தெரியாமத்தான் இந்த மாற்றம் நிகழ்ந்திருக்கு. அதாவது ஒவ்வொரு மாசமும் 15-ம் தேதியில இருந்து 30-ம் தேதி வரைக்கும்தான் சீரியலுக்கான ஷூட்டிங் ஷெட்யூல். 1 முதல் 14-ம் தேதி வரை எனக்கு ஷூட்டிங் ஷெட்யூலே கிடையாது.

'ஷூட்டிங் இல்லாத இந்த நாள்கள்ல எனக்கு பர்சனல் வேலை இருக்கு,வெ ளியூர் போற திட்டமும் இருக்கு'ன்னும் ஒரு மாசம் முன்னதாகவே யூனிட்டுக்குத் தெரிவிச்சிருந்தேன். அப்ப எல்லாம் 'சரி'ன்னுதான் சொன்னாங்க. ஆனா என்ன நடந்ததுன்னு தெரியலை, எனக்குத் தெரியாமலேயே 'டக்'னு ஆளை மாத்திட்டாங்க.
'ஏன்', 'என்ன நடந்துச்சு'ன்னு நான் சம்பந்தப்பட்டவங்ககிட்ட கேட்டதுக்கு 'கம்யூனிகேஷன் பிரச்னை'ன்னு சொல்றாங்க. ஒண்ணுமே புரியலை. ரொம்பவே வருத்தமாவும், வெறுப்பாவும் இருக்கு. அதனால இந்த விஷயம் தொடர்பா மேற்கொண்டு எதுவும் பேச வேண்டாம்னும் முடிவு செய்துட்டேன்" என்கிறார் இவர்.
'ராஜா ராணி' விஜய் டி.வி-யில் ஒளிபரப்பான ஹிட் சீரியல். தொடரின் முதல் பாகத்தின் வெற்றி காரணமாகவே அதில் ஹீரோயினாக நடித்த ஆல்யா மானசாவை வைத்தே இரண்டாம் பாகத்தைத் தொடங்கினார்கள். ஆனால் ஆல்யா மானசா பிரசவத்துக்காகப் போக, அப்போது அவருக்கு மாற்றாக சந்தியா வேடத்தில் நடிக்க ரியா சீரியலுக்குள் வந்தார்.
அப்போதே குழந்தை பெற்ற பிறகு ஆல்யா திரும்பவும் சீரியலுக்குள் வருவாரா, அப்படி வந்தால் ரியா என்னாவார் என்ற கேள்விகள் அடிபட்டன.

ஆனால் ஆல்யா மானசா குழந்தை பெற்ற பிறகு சன் டி.வி-யின் புதிய சீரியல் ஒன்றில் கமிட்டாகிச் சென்றுவிட்டார். இந்தப் பின்னணியில்தான் தற்போது ரியாவின் வெளியேற்றம் நிகழ்ந்திருக்கிறது.
இந்தப் பிரச்னை குறித்தும், ரியா பேசியது குறித்தும் சீரியலின் இயக்குநரான பிரவீன் பென்னட்டைத் தொடர்பு கொண்டோம். "சமீபமாக நான் அந்த சீரியலை இயக்கவில்லை. அதனால ஹீரோயின் மாறுன விஷயத்துல என்ன நடந்துச்சுனு எனக்குத் தெரியல!" என்று சுருக்கமாக முடித்துக்கொண்டார்.