நடிகை ரேவதி, 'தலைவாசல்' விஜய் உள்ளிட்டோர் நடித்து சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகிற 'அழகு' தொடரிலிருந்து திடீரென வெளியேறியுள்ளார் சஹானா. ரேவதியின் ஒரே மகளாக நடிக்கக் கிடைத்த வாய்ப்பை பெருமையாக நினைப்பதாகச் சொல்லி வந்தவர், திடீரென வெளியேறியது குறித்து அவரிடமே கேட்டேன்.

''ப்ரைம் டைம்ல ஒளிபரப்பாகப்போகுது; அதுவும் ரேவதியம்மா லீட் ரோல்னு சொல்லிக் கூப்பிட்டாங்க. நாலு அண்ணன் தம்பிங்களுக்கு ஒரே தங்கச்சி. அதாவது, 'சின்னதம்பி' குஷ்பு மாதிரி. அதனால உங்க கேரக்டருக்கு ரொம்பவே முக்கியத்துவம் இருக்கும்னு சொன்னாங்க. 'யாருக்குக் கிடைக்கும் இப்படியொரு சான்ஸ்'னு சந்தோஷமா நடிக்கப்போனேன். முதல் எபிசோடுல இருந்தே நடிச்சுட்டு வர்றேன். ஷூட்டிங் ஸ்பாட்லயும் 'சின்ன பொண்ணு'னு நினைக்காம சீனியர் ஆர்ட்டிஸ்டுகள்லாம் எனக்கு நல்ல அட்வைஸ் தந்து எங்கூட நல்லா பேசிப் பழகினாங்க.
200 எபிசோடு வரைக்கும் நல்லபடியாத்தான் போயிட்டிருந்தது. பிறகு, என்ன காரணம்னே தெரியல, என் கேரக்டர் அப்படியே 'டல்'லடிக்கத் தொடங்கிடுச்சு. 500 எபிசோடுகள் கடந்துவிட்ட பிறகும் கேரக்டர் தொய்வடைஞ்ச மாதிரியே இருக்க, ஒருவிதமான சலிப்பு உண்டாச்சு. எந்தவொரு சீரியல்லயும் கேரக்டர் டெவலப் ஆனாத்தான் நடிக்கிறவங்களுக்குப் பெருமை. அப்படியில்லாத பட்சத்துல அந்த சீரியல்ல நடிச்சிட்டிருக்கிறதுல அர்த்தமே இல்லை. 'அழகு'ல இருந்து நான் வெளியேறியதற்கு இதுதான் காரணம். 'என் கேரக்டரைக் கொஞ்சம் டெவலப் பண்ணுங்களேன்'னு சொல்லிப் பார்த்தேன். யாரும் காது கொடுக்கிற மாதிரி தெரியலை. வேற வழியில்லாம நானே விலகிட்டேன்'' என்கிறார் சஹானா.
"குஷ்புனு சொல்லி கமிட் பண்ணினாங்களா இல்ல நக்மானு சொல்லி கமிட் பண்ணினாங்களான்னெல்லாம் தெரியாது. ஆனா அந்தப் பொண்ணு நடிக்கிற கேரக்டர் டெவலப் ஆகாட்டியும் பரவால்லங்க. ஆனா டம்மியாகுற மாதிரிதான் கொஞ்ச நாளாவே போயிட்டிருந்தது. வசனம் எழுதறவர், இயக்குநர் மாறினா, அந்த நேரங்கள்ல சீரியல்கள்ல ஆர்ட்டிஸ்டுகள் சிலருக்கு இந்த மாதிரி பிரச்னைகள் சகஜம்தான். 'அட்மாஸ்பியராவே வந்து நின்னுட்டுப் போற மாதிரி இருக்கு'ன்னு அவங்க யூனிட்ல தொடர்ந்து சொல்லிட்டேதான் வந்தாங்க. அதுக்குப் பிறகும் பிரச்னை சரி செய்யப்படாததால போயிட்டாங்க'' என்கின்றனர் யூனிட்டில் சிலர்.
வேறு சிலரோ, ''இது ஒரு டிரெண்ட்டாகிப் போச்சுங்க. கையில எக்ஸ்ட்ரா ஒரு சீரியல் கமிட் ஆகிட்டா, என்னை ஹீரோயினா அங்க கூப்பிட்டாங்க, இங்க கூப்பிட்டாங்கனு சொல்ல ஆரம்பிச்சிடுறாங்க'' என்கிறார்கள்.
இந்தப் பிரச்னை குறித்து 'அழகு' தொடரின் இயக்குநர் செல்வம் என்ன சொல்கிறார்?

''தொடர்ல இயக்குநரா நான் கமிட் ஆகி கொஞ்ச நாள்கள்தான் ஆகுது. அதனால ஆரம்பத்துல அவங்களை என்ன சொல்லிக் கமிட் செஞ்சாங்கங்கிற விஷயமெல்லாம் எனக்குத் தெரியாது. அதேநேரம் இந்தத் தொடரைப் பொறுத்தவரை, ரேவதின்னு ஒரு பெரிய நடிகை, அடுத்து ஸ்ருதின்னு ஒரு நடிகை இருக்கிறாங்க. முக்கியமான எல்லா கேரக்டர்களையும் சரிசமமாக் கொண்டு போற மாதிரித்தான் ட்ராக் போயிட்டிருக்கு. சஹானா, ரேவதிக்கு கடைசி மகளா நடிக்கிறாங்க. அந்தக் கடைக்குட்டிப் பொண்ணு கேரக்டருக்கு என்ன முக்கியத்துவம் தரணுமோ, அதைத் தந்துதான் காட்சிகள் போயிட்டிருந்தது. இதுதான் உண்மை'' என்ற செல்வம்,
''கொஞ்ச நாளாகவே பர்சனல் காரணங்களுக்காக சீரியல்ல இருந்து வெளியேற விரும்பறதா அவங்க யூனிட்லயே பலர்கிட்டப் பேசினாங்கனும் என் காதுக்குத் தகவல் வந்தது'' என்றும் சொல்கிறார்.