தமிழ்த் தொலைக்காட்சி வரலாற்றில் முதல் முறையாக சீரியலிலிருந்து வெளியேறிய நடிகை ஒருவர், மீண்டும் சீரியலுக்குள் வந்துள்ளார். `` 'சின்னத்தம்பி' குஷ்பு மாதிரினு சொன்னாங்க... ஆனா கடைசியில பார்த்தா...'' என்கிற டைட்டிலில் விகடனில் சில தினங்களுக்கு முன் வெளியான பேட்டியில் நம்மிடம் பேசியிருந்தார் 'அழகு' சஹானா. அதில், `சீரியல்ல என்னுடைய கேரக்டர் டெவலப் ஆகாம அப்படியே இருக்கு; சும்மா அட்மாஸ்ஃபியரா வந்து நின்னுட்டுப் போறதுல எனக்கு விருப்பமில்ல, அதனால தொடர்ல இருந்து நான் வெளியேறிட்டேன்' எனச் சொல்லியிருந்தார்.
இந்நிலையில் சஹானா நடிக்கும் காட்சிகள் சீரியலில் மறுபடியும் ஒளிபரப்பாகத் தொடங்க, 'என்ன நடந்தது' என அவரிடமே கேட்டேன்..
``ஆமாங்க, சேனல்ல இருந்து எங்கிட்டப் பேசி, 'என்ன நடந்தது'னு கேட்டாங்க. என்னோட வருத்தத்தைச் சொன்னேன். தயாரிப்புத் தரப்புல பேசறதா சொன்னாங்க. பிறகு சீரியல் யூனிட்ல இருந்து பேசி, 'உங்களுக்கு முக்கியத்துவம் இருக்கற மாதிரி ட்ராக் இருக்கும், அதனால ஷூட்டிங் கிளம்பி வாங்க'னு சொன்னாங்க. ரேவதி மேடம் மாதிரியான சீனியர்கள் நடிக்கிற சீரியல்ல ஒரு சாதாரண கேரக்டர் நான். ஆனா, என்னோட பிரச்னையையும் காது கொடுத்துக் கேட்டதே பெரிய விஷயமில்லையா, அதனாலதான் மறுபடியும் சீரியலுக்குள் வந்துட்டேன்'' என்கிறார் சஹானா.