Published:Updated:

ஏழாம் தேதி கல்யாணம்... இதுக்கு மேல போனா அவர் பாவம்! - `ராஜா ராணி' ஷப்னம்

அய்யனார் ராஜன்

திருமண தேதியை அறிவித்திருக்கிறார் `ராஜா ராணி' ஷப்னம்

ஷப்னம் நிச்சயதார்த்தத்தின் போது
ஷப்னம் நிச்சயதார்த்தத்தின் போது

`` `ராஜா ராணி' சீரியல் முடிவடைஞ்சதும், கொஞ்ச நாள் ரெஸ்ட் எடுக்கலாம்னு நினைச்சேன். அதுக்குள்ளயே இன்னொரு சீரியலுக்குக் கேட்டாங்க. முறைப்படி கமிட் ஆகி ஷூட்டிங் போறதுக்கு சில நாள்கள் ஆகலாம். அதுக்குள்ள கல்யாணத்தை முடிச்சிடலாம்னு முடிவு பண்ணிட்டாங்க. எல்லாரும் சேர்ந்து எடுத்த முடிவுதான். நிச்சயதார்த்தம் முடிஞ்சு சரியா ரெண்டு வருஷம் ஆச்சுங்க. இதுக்கு மேலயும் தள்ளிப் போட்டு ஆர்யன் பாவமில்லையா'' - குறும்புச் சிரிப்புடன் பேசுகிற ஷப்னத்துக்கு அடுத்த மாதம் ஏழாம் தேதி திருமணம் நடக்கிறது. மறுநாள் சென்னை வடபழனியிலுள்ள பிரபல ஹோட்டலில் வரவேற்பாம்.

ஷப்னம்
ஷப்னம்

ஆர்யன் ஷப்னத்தின் தூரத்து உறவு முறைதான் என்றாலும் இவர்களின் திருமணம் லவ் கம் அரேஞ்ச்டு என்கிறார்கள். 2017 செப்டம்பரில் இவர்களின் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. மறுவருடம் அதாவது 2018 பிப்ரவரி 14 அன்று காதலர் தினத்தில் திருமணம் நடைபெறும் என முதலில் சொல்லப்பட்டது. ஆனால், சொன்னபடி நடைபெறவில்லை.

தொடர்ந்து மேலும் இருமுறை தள்ளிப் போனது. தொடர்ந்து சீரியல்களில் கமிட் ஆகி ஷப்னம் பிசியாக இருந்ததுதான் காரணம் என்றார்கள். தமிழ் சீரியல்களைத் தாண்டி சிங்கப்பூரில் இருந்து ஒளிபரப்பான ஒரு சீரியலிலும், விளம்பரப்படங்கள் சிலவற்றிலும் நடித்துவந்தார் ஷப்னம், `ராஜா ராணி'க்குப் பிறகு தற்போதும் அடுத்த சீரியல் தயாராக இருந்தாலும், இன்னும் காலம் தாழ்த்துவது நல்லதல்ல என்றே ஒருவழியாக திருமண தேதியை இறுதி செய்திருக்கிறார்கள்.

ஷப்னம்
ஷப்னம்

திருமணத்துக்குப் பிறகு ஷப்னம் சீரியல்களில் நடிப்பாரா என்கிற கேள்விக்கே அவசியமில்லை. ஏனெனில் திருமணம் முடிந்த சில தினங்களிலேயே அடுத்த சீரியலின் ஷூட்டிங் தொடங்கலாமெனத் தெரிகிறது. அதேபோல் திருமணத்துக்குப் பிறகு ஆர்யன் - ஷப்னம் குடியேற வேளச்சேரியில் புது ஃபிளாட்டும் ரெடி. மேற்படி ஃபிளாட் காதல் மனைவிக்கு ஆர்யனின் பரிசாம்.