இதர போட்டியாளர்கள் சொல்வது போல் மணிகண்டன் நிச்சயம் ஒரு ஆல்ரவுண்டர். சமையல் தொடர்பாக பல்வேறு விஷயங்களை அறிந்திருப்பதோடு வேகமாகவும் சமைக்கக்கூடியவர். ஆனால் அவருடைய ஆர்வக்கோளாறும் சற்று அகந்தையான குணாதிசயமும் சமயங்களில் அவருக்கே எதிராக அமைந்து விடுகிறது.
எபிசோட் 26-ல் என்ன நடந்தது?
இறுதிப் போட்டிக்கு தேர்வாகிவிட்ட போட்டியாளர்களிடம் “மணி, வின்னி பற்றிச் சொல்லுங்க” என்று கேட்டார் விசே. “மணிக்கு நெறைய விஷயம் தெரியும். ஆனா நெறய பண்ணனும்-னு நெனச்சு குழம்பிடுவாரு” என்றார் நித்யா, வின்னியைப் பத்தி சொல்லும் போது “சாதிக்கணும்னு வெறி இருக்கறவங்க. லட்சியத்தை அடைஞ்சே ஆகணும்னு போராடுவாங்க” என்றார்.
கிருத்திகாவும் தேவகியும் ஏறத்தாழ இதையேதான் சொன்னார்கள். “வின்னி பிளேட்டிங்கில் கில்லி. எப்படித்தான் யோசிப்பாங்கன்னு தெரியாது. ஓவியம் மாதிரி இருக்கும்” என்றார் கிருத்திகா. “போட்டியப்ப பயங்கர டென்ஷன் ஆகும் இத்தோட விட்டுடலாம். போதும்னு தோணிடும். எனக்கு அப்படி பலமுறை ஆகியிருக்கு. வின்னி பதற்றப்படாம செஞ்சாங்கன்னா இன்னிக்கு வின் பண்ணிடுவாங்க” என்று டிப்ஸ் கொடுத்தார் தேவகி.
உண்மையில் சக போட்டியாளர்களுக்கு இவர்கள் தந்த அறிவுரை மிக மிக பயனுள்ளது. இதை மணிகண்டன் சற்று காது கொடுத்துக் கேட்டிருக்கலாம்.
“ஓகே... இன்னிக்கு போட்டிக்குள்ள போயிடலாம். இது ஒரு Open Challenge. என்ன வேணா சமைக்கலாம். ஆனால் ஒருத்தர்தான் ஃபைனலுக்கு போக முடியும். இதற்கான நேரம் 60 நிமிஷம். Pantry திறந்துதான் இருக்கும். உங்களுக்கே வேணுங்கிற பொருள் எடுத்துக்கலாம்” என்று விதிமுறைகளை நீதிபதிகள் அறிவித்தார்கள். "பைனலிஸ்ட் தேர்விற்கு இவ்வளவு எளிதான விதிமுறைகளா?” என்று உள்ளூற ஆச்சரியமும் புழுக்கமும் அடைந்தார் நித்யா.

ஆனால் மாஸ்டர் செஃப் என்றால் அதில் பயங்கரமான உள்குத்து ஒன்றை வைத்திருப்பார்கள்தானே? அப்படியே ஆயிற்று. ‘ஓகே... ஜூட்...’ என்றதும் மணியும் வின்னியும் Pantry-க்குள் ஓடினார்கள். ஆனால் அன்று மார்க்கெட் லீவு போலிருக்கிறது. அனைத்துக் கடைகளும் அடைத்திருந்தன. அடிப்படையான பொருள்கள் மட்டும் இருந்தன. “ரெண்டு பச்சைப் பிள்ளைங்களை வெச்சு எப்படி வெளையாடறாங்க பாரேன்” என்பதுபோல் இருவரும் திகைத்துப் போய் நின்றிருக்க “வாங்க. சொல்றேன்” என்று நமட்டுச் சிரிப்புடன் அவர்களை வெளியில் அழைத்துச் சென்றார் விசே.

அதாகப்பட்டது போட்டியாளர்கள் அடிப்படையான விஷயங்களை வைத்து சமையலை ஆரம்பிக்க வேண்டும். ஒவ்வொரு பத்து நிமிடத்திற்கு ஒருமுறை இரண்டு கவுன்ட்டர்கள் திறக்கப்படுமாம். அவை எந்தெந்த கவுன்ட்டர்கள் என்பதை இறுதிப் போட்டிக்குத் தகுதியான போட்டியாளர்களும் ஒரு நீதிபதியும் தீர்மானிப்பார்கள். இதில் இரண்டு சிக்கல்கள் இருக்கின்றன. குறிப்பிட்ட பத்து நிமிடத்தில், அந்தக் கவுன்ட்டர்களில் என்ன கிடைக்கும் என்பதைப் பொறுத்து இவர்கள் சமையலை அதற்கேற்ப திட்டமிட வேண்டும். இவர்களுக்கு சக போட்டியாளர்கள் நெருக்கடி தர வேண்டுமென்று ஒருவேளை நினைத்தால், தேவைப்படாத பொருள்கள் உள்ள கவுன்ட்டரைத் திறந்து இவர்களைத் திக்குமுக்காடச் செய்யலாம். ஆக... என்ன பொருள் கிடைக்கும் என்று தெரியாமலேயே இவர்கள் சமையலைத் தொடர்ந்து செய்ய வேண்டும்.
ஆனால், இங்கு ஒரு விஷயத்தைப் பாராட்டியே ஆக வேண்டும். இறுதிப் போட்டிக்குத் தகுதியானவர்கள் நினைத்திருந்தால், இந்த இரண்டு பேரையும் சிக்கலில் மாட்டித் திண்டாட வைத்திருக்கலாம். ஆனால் அந்த மூன்று பேருமே, இவர்கள் சமைக்கத் திட்டமிட்டதை சரியாகப் புரிந்து கொண்டு அதற்கேற்ற கவுன்ட்டர்களை திறந்ததை விளையாட்டில் அவசியம் தேவைப்படுகிற ஒரு நற்பண்பாக சொல்லலாம்.
"இந்த ‘Lock Pantry Challenge’ –ல் நீங்க சமையலை போகப் போக இம்ப்ரூவ் பண்ணிட்டே போகணும். அதற்கேற்ப நீங்கள் திட்டமிடுவது அவசியம்.” என்று எச்சரித்தார் ஹரீஷ். ‘ஒரு செமயான ஸ்வீட் பண்ணி அசத்திடணும்’ என்று திட்டமிட்டுக் கொண்ட வின்னி, Ghevar என்னும் ராஜஸ்தானி வகை இனிப்பிற்கான அஸ்திவாரத்தை போட ஆரம்பித்தார்.
முதல் பத்து நிமிடங்கள் கடந்ததும் முதல் கவுன்ட்டரை கிருத்திகா திறந்தார். வின்னிக்கு மாவு தேவைப்படும் என்பதால் அந்த கவுன்ட்டரையும், தானியங்களைத் திறந்துவிட்டால் இருவருக்குமே உதவும் என்கிற நல்லெண்ண அடிப்படையில் அவர் செயல்பட்டார். மணிக்கு நட்ஸ் & சீட்ஸ் தேவைப்பட்டது. அதற்காகக் காத்திருந்தார். அதற்குள் மாவை வைத்து ரொட்டி செய்ய ஆரம்பித்தார். மணி எதிர்பார்த்தபடியே அடுத்து வந்த நித்யா சம்பந்தப்பட்ட கவுன்ட்டரை திறக்க பாய்ந்து ஓடினார் மணி. “அவங்களுக்கு கஷ்டம் கொடுக்கக்கூடாதுன்னு நினைச்சேன்” என்றார் நித்யா.
“வின்னி உங்க பிளான் எப்படி போயிட்டு இருக்கு?” என்று கெளஷிக் விசாரிக்க “பழங்கள் மட்டும் தேவை. அதுக்காகக் காத்துக்கிட்டு இருக்கேன். மத்த வேலைகள்லாம் போயிட்டு இருக்கு” என்று வின்னி சொல்ல “அது கிடைக்கலைன்னா என்ன பண்ணுவீங்க. பேக்அப் பிளான் இருக்கா” என்று கேட்டு பீதியைக் கிளப்பினார் கெளஷிக். “வின்னி... உங்க கைல்லாம் நடுங்குது. ரிலாக்ஸ்” என்று மேலேயிருந்து குரல் தந்து ஆதரவு அளித்தார் கிருத்திகா.

அடுத்து வந்த தேவகி, காய்கறிகள் இருக்கும் கவுன்ட்டரைத் திறக்க மணியும் வின்னியும் பாய்ந்து சென்று தேவையானதை அள்ளி வந்தார்கள். ‘புலவ்’ செய்யலாம் என்று திட்டமிட்டு அதற்கான வேலைகளை மடமடவென்று புயல் வேகத்தில் ஆரம்பித்தார் மணி. கடைசி கவுன்ட்டரை திறப்பதற்காக ஆர்த்தி வந்தார். இவர் ‘herbs’ இருக்கும் கதவை திறந்துவிட, கொத்துமல்லி, கருவேப்பிலை போன்ற கீரை வகைகளை அள்ளி வந்தார் மணிகண்டன். இருவரும் பரபரப்பாக இயங்கிய இந்தச் சமையலின் நேரம் முடிவிற்கு வந்தது. உணவுகள் பரிசோதனை மேடைக்கு வரத் துவங்கின.
முதலில் அழைக்கப்பட்டவர் மணிகண்டன் ‘என்னுடைய இதயத் துடிப்பு’ என்று தனது மெனுவிற்கு பெயர் வைத்திருந்தார் மணி. “இதுதான் எனக்கு கிடைத்திருக்கும் கடைசி வாய்ப்பு. இது போச்சுன்னா. என் இதயமும் நின்னுடும்" என்று உருக்கமான காரணத்தைச் சொன்னார் மணி. பன்னீர் கிரேவி + புலவ் + ரொட்டி என்கிற காம்பினேஷனில் இவரது சமையல் அமைந்திருந்தது.
ஆனால் எடுத்த எடுப்பிலேயே கெளஷிக்கிடமிருந்து சற்று காட்டமான கமெண்ட் வெளிப்பட்டது “தோற்றம் இன்னமும் பெட்டரா இருந்திருக்கலாம். வெறும் வெங்காயத்தையா வெட்டி வெக்கறது. இது இறுதிப் போட்டிக்கான தகுதித் தேர்வு இல்லையா. மணி?” என்று அவர் கேட்க, மணியின் முகம் பீதியில் வெளிறிப் போனது. “எனக்குப் பிடிச்சிருந்தது. தாபால சாப்பிட்ட ஃபீல் வந்தது. அங்க இப்படித்தான் கொடுப்பாங்க. பன்னீரை அவ்வளவு அற்புதமா வெட்டியிருக்கீங்க. வாயில் நல்லா கரைஞ்சது” என்று ஆர்த்தி சொன்ன கமெண்ட்தான் மணியை சற்று நிம்மதியாக மூச்சு விட வைத்தது.
“ரொம்ப பிடிச்சது மணி. ரொட்டின்னு சொன்னீங்க இல்லையா. எனக்கு பராத்தா மாதிரி இருந்தது. கிரேவி ஈஸ் குட்” என்று பாராட்டினார் ஹரீஷ். “உங்க இதயத்துடிப்பு நல்லா இருந்தது. நீங்க ஹெல்த்தியாதான் இருக்கீங்க” என்று பாராட்டி மணியை அனுப்பி வைத்தார் விசே.
அடுத்து வந்த வின்னி, தன் மெனுவிற்கு ‘என் கனவு’ என்று பெயர் சூட்டியிருந்தார்கள். “அடடா!.. ரெண்டு பேருமே எமோஷனலா பெயர் வெச்சிருக்கீங்களே?!” என்று வியந்தார் விசே. “இதைத்தான் செய்யப் போறேன்னு ஆரம்பத்திலேயே முடிவு பண்ணிட்டீங்களா?” என்று கெளஷிக் கேட்டதற்கு “ஆம்” என்று ஆமோதித்தார் வின்னி. “ஓகே... சுகர் சிரப் போட்டு இனிப்பு செய்யும்போது பொதுவா திகட்டும். ஆனா உங்க ஸ்வீட் அப்படி இல்ல. சரியான அளவுல இருக்கு” என்று பாராட்டினார் கெளஷிக். அதே காரணத்தைச் சொல்லி “வின்னி... உங்க ஸ்வீட் கொஞ்சம் கூட திகட்டலை. பேலன்ஸ்டா இருக்கு” என்று ஆர்த்தியும் பாராட்டியதும் உச்சி குளிர்ந்தார் வின்னி. ஏனெனில் இந்த விஷயத்தில் அவர் எப்போதுமே கவனமாக இருப்பாராம். நீதிபதிகள் அதைச் சரியாக சுட்டிக் காட்டி பாராட்டியதும் அம்மணிக்கு குஷியாக இருந்தது.
“வின்னி... இதை வெட்டவே மனசு வரலே. தோற்றம் அத்தனை சிறப்பா இருந்தது” என்றார் ஹரீஷ். “ஆமாம்... உங்க கேவர் பார்க்கறதுக்கு பூச்சரம் மாதிரி இருந்தது. இனிப்போட அளவு சரியா இருந்தது” என்று விசேவும் பாராட்டினார்.

ஆக... முடிவு அப்போதே ஒரு மாதிரியாக தெரிந்து போயிற்று. என்றாலும் காரணங்களோடு நீதிபதிகள் அதை அறிவிக்கத் தொடங்கினார்கள். “ரெண்டு பேருமே சமமான அளவுல இருக்கீங்க. முடிவு எடுக்கறதுக்கு எங்களுக்கு சிரமமா இருந்தது. ஆனா ஒண்ணை மறந்துடாதீங்க. நீங்க டாப் 5-ல இருக்கீங்க” என்று நீதிபதிகள் பீடிகையிட்டதும் “அய்யா முடிவைச் சொல்லிடுங்கய்யா” என்பது போல் இருவரும் பதற்றமாக நின்றிருந்தார்கள். குறிப்பாக மணியின் முகத்தில் எக்ஸ்ட்ரா டென்ஷன்.
ஒரு சிறிய சஸ்பென்ஸிற்குப் பிறகு கடைசி ஃபைனலிஸ்ட்டின் பெயர் அறிவிக்கப்பட்டது. அது ‘வின்னி’. இதைக் கேட்டதும் வின்னியிடம் கை கொடுத்து பாராட்டினார் மணி. ஆனால் அவரது முகம் அழாத குறையாக மாறியது. “ரொம்பவும் கம்மி மார்ஜின்லதான் நீங்க தோத்திருக்கீங்க” என்று மணியை நோக்கிச் சொன்ன நீதிபதிகள் அவர் செய்திருந்த பிழைகளைச் சுட்டிக் காட்டினார்கள். “தோற்றம் இன்னமும் பெட்டரா இருந்திருக்கலாம்” என்றார் கெளஷிக். “இன்னும் கொஞ்சம் கிரியேட்டிவிட்டி இருந்திருக்கணும்” என்றார் ஆர்த்தி. “முடிவெடுக்க எங்களுக்கு கஷ்டமா இருந்தது" என்றார் ஹரீஷ்.
அடுத்ததாக வின்னி எவ்வாறு தேர்வானார் என்பதற்கான காரணங்கள். ‘One of the Best Ghevar’ என்ற நற்சான்றிதழ் வின்னிக்குக் கிடைத்தது. “பொதுவா நான் இனிப்பு சாப்பிட்டா பேப்பர்ல கையைத் துடைப்பேன். உங்க இனிப்பை சாப்பிட்டப்புறம் அது தேவைப்படலை” என்றார் ஹரிஷ். “உங்க கேவர்ல ஒரு தப்பு கூட இல்ல. ஃபெர்பக்ட்டா இருக்கு” என்றார் ஆர்த்தி. “நீங்க இதை பல முறை பிராக்டிஸ் பண்ணியிருக்கீங்கன்னு நல்லா தெரியுது. உங்க comfort zone-ல விளையாடியிருக்கீங்க. ஆனா தோற்றம் மிகப்பிரமாதம். அதுல நல்ல வித்தியாசம் காட்டியிருக்கீங்க” என்று பாராட்டினார் கெளஷிக்.
தன்னுடைய மாஸ்டர் செஃப் பயணம் இங்கு நிறைவிற்கு வந்ததை எண்ணி மிகவும் துயரம் அடைந்தார் மணி. “நாங்க டிபன் கடை வெச்சிருக்கோம். நான் வயத்துல இருந்தபோது எங்க அம்மா இட்லி ஊத்தற சத்தம் கேட்டு வளர்ந்தவன்னு சொல்லுவாங்க. சமையல் மேல எனக்கு அத்தனை ஈடுபாடு. மாஸ்டர் செஃப் இந்திக்கு ஐந்து முறை போய் கலந்திருக்கேன். மாஸ்டர் செஃப் லோகோ–ன்றது என் இதயம். நான் அதிகம் படிக்கலை. ஆனா செஃப் ஆகணும்றதுதான் என் வாழ்க்கையோட லட்சியமே” என்று மணி உருகிப் பேசியதை நீதிபதிகள் கனிவோடு கவனித்தார்கள்.
“படிப்பிற்கும் அதற்கும் சம்பந்தமில்லை. நீங்க ஆல்ரெடி ஒரு செஃப்தான் மணி” என்று மனமார பாராட்டிய கெளஷிக்கின் கால்களில் விழுந்து வணங்கினார் மணி. “இந்தியாவே திரும்பிப் பார்க்கற செஃப்பா நிச்சயம் ஒரு நாள் மாறுவேன். இதுக்காகத் தூங்க மாட்டேன். போராடுவேன்” என்று உணர்ச்சிவசப்பட்டு சொன்ன மணியிடம் “Hats off! சொன்னதை நிச்சயம் செய்ங்க” என்று ஊக்கப்படுத்தினார் கெளஷிக்.

“நான் சென்னைல ரெஸ்ட்டாரண்ட் திறந்தா அதுல நீங்கதான் செஃப்” என்று சர்ப்ரைஸ் தந்தார் ஆர்த்தி. “உங்க ஏப்ரனை என்னால கழட்ட முடியாது மணி. என் நினைவுப்பரிசா நீங்களே வெச்சுக்கோங்க” என்று பரிவு காட்டினார் விசே.
இங்கு ஒரு பிளாஷ்பேக். நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் நடந்த தகுதிச்சுற்றில் மணிக்கு தோல்வியே கிடைத்தது. ஆனால் அவரின் முகத்தில் தெரிந்த பரிதவிப்பையும் உணர்ச்சிக் கொந்தளிப்பையும் பார்த்த விஜய் சேதுபதி, தன்னுடைய பரிந்துரையின் பேரில் போட்டியாளராகச் சேர்த்தார். அங்கிருந்து தொடங்கிய மணியின் பயணம், டாப் 5 வரை தொடர்ந்ததை நிச்சயம் ஒரு சாதனை என்றே சொல்ல வேண்டும்.
நீதிபதிகளிடமும் சக போட்டியாளர்களிடமும் விடைபெற்ற மணி, விஜய் சேதுபதியைக் கட்டியணைத்துக் கொண்டு குழந்தை போல் குலுங்கி குலுங்கி அழ, “சரிடா. சரிடா... என்னை அப்புறம் வந்து பாரு” என்று ஆறுதல் சொல்லி வழியனுப்பினார். வின்னிக்கு செஃப் கோட் தர வேண்டிய நேரம். “சாரிம்மா. கொண்டாடுவதற்குத் தெம்பில்லை” என்று விசே சொன்னவுடன் “புரியது சார். எனக்கே அத்தனை கஷ்டமா இருக்கு” என்றார் வின்னி. பிறகு அவருக்கு செஃப் கோட் அளிக்கப்பட்டது.
வின்னி ஒரேயொரு உணவை மிகச் சரியாக திட்டமிட்டு அதற்காக மிகவும் மெனக்கெட்டு வசீகரமாக அலங்கரித்து பார்த்து பார்த்து செய்தார். ஆனால் மணியோ வழக்கம்போல் நாலைந்து உணவுகளைத் தயார் செய்ய வேண்டும் என்கிற பரபரப்பில் விழுந்ததுதான் அவரது தோல்விக்குக் காரணம் என்று தோன்றுகிறது.
ஆக… கிருத்திகா, நித்யா, தேவகி, வின்னி என்று நான்கு போட்டியாளர்கள் இறுதிப் போட்டிக்குத் தேர்வாகியிருக்கிறார்கள். இவர்கள் அனைவருமே பெண்கள் என்பதில் ஒரு முக்கியமான செய்தியுள்ளது. ஆம், அனைத்து துறைகளிலும் பெண்கள் சாதனை செய்து கொண்டு வருகிறார்கள். ஆண்களே பெரும்பாலும் கோலோச்சும் செஃப் துறையில், தன் பயணம் எத்தனை கடினமாக இருந்தது என்பதை ஆர்த்தி அவ்வப்போது நினைவுகூருவார். இந்த நோக்கில் மாஸ்டர் செஃப் தமிழின் அனைத்து ஃபைனலிஸ்ட்டுகளும் பெண்கள் என்பதில் ஒரு மனநிறைவும் நீதியும் இருக்கிறது.