Published:Updated:

`சித்ராவுக்கு சில ஆசைகள், கனவுகள் இருந்தது... ஆனா, இப்ப?!" - மறைவால் கலங்கும் பிரபலங்கள்

நடிகை சித்ரா
நடிகை சித்ரா

சித்ராவுடன் நெருங்கிப் பழகிய சின்னத்திரை பிரபலங்கள் சிலரிடம் பேசினோம்.

டிகை மற்றும் தொகுப்பாளர் சித்ராவின் திடீர் மறைவு சின்னத்திரை வட்டாரத்தைப் பெரிதும் அதிர்ச்சிக்கும் வேதனைக்கும் உள்ளாக்கியுள்ளது. `சின்ன பாப்பா பெரிய பாப்பா', `பாண்டியன் ஸ்டோர்ஸ்' உள்ளிட்ட சீரியல்கள் மூலம் பிரபலமான சித்ராவுக்கு, விரைவில் திருமணம் நடக்கவிருந்தது.

`மாறாத சிரிப்பு, கனிவான பேச்சு, சுறுசுறுப்பான உழைப்பு... இவை சித்ராவின் பிரதான குணங்கள்' என்கிறார்கள், சித்ராவை நன்கு அறிந்தவர்கள். மரணத்துக்குச் சில மணிநேரம் வரை ஷூட்டிங் பணிகளில் இருந்தவர், அதே பகுதியில் இருந்த தனியார் ஹோட்டலில் தங்கினார்.

நடிகை சித்ரா
நடிகை சித்ரா

அங்கு என்ன நடந்தது என இதுவரை தெரியவில்லை. சித்ரா தற்கொலை செய்துகொண்டதாகக் காலையில் செய்திகள் வேகமாகப் பரவத் தொங்கின. உடல்நிலை சரியில்லாமல் சமீபத்தில் மரணமடைந்த வடிவேலு பாலாஜியின் இழப்பிலிருந்து இன்னும் மீளாத சின்னத்திரைக்கு, சித்ராவின் மறைவு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சித்ராவுடன் நெருங்கிப் பழகிய சின்னத்திரை பிரபலங்கள் சிலரிடம் பேசினோம்.

சித்ரா நடித்துவரும் `பாண்டியன் ஸ்டோர்ஸ்' சீரியலில் அவருக்கு அம்மாவாக நடித்துவரும் சாந்தி வில்லியம்ஸ் கலக்கத்துடன் பேசினார். ``சில நிகழ்ச்சிகளில் சித்ராவும் நானும் பழகியிருக்கோம். ஆனா, `பாண்டியன் ஸ்டோர்ஸ்' சீரியல்ல நான் நடிக்க ஆரம்பிச்ச பிறகுதான் எங்களுக்குள் நட்பு அதிகரிச்சது. நான் பெக்காத பொண்ணு அவ. அந்த உரிமையில, ஒருமையிலதான் அவளைக் கூப்பிடுவேன். `அம்மா'ன்னு மனதார என்கிட்ட பழகினா. என் மடியில உட்கார்ந்து பேசுவா. சாப்பாடு ஊட்டிவிடுவேன். அவ்ளோ பாசமா பழகினோம்.

vj chitra
vj chitra

கணவரை இழந்து நான் கஷ்டப்பட்டு வந்தது பெரிய சோகக்கதை. அது பத்தி அவ்வப்போது என்கிட்ட கேட்டு, ஆறுதலாவும் தன்னம்பிக்கையாவும் பேசுவா. போலீஸ் ஆக ஆசைப்பட்டு அது நடக்காம போனது, ஆரம்பகால சின்னத்திரை பயணத்துல போராடி மேல வந்தது பத்தி அடிக்கடி சொல்லுவா. எப்போதும் சிரிச்ச முகத்தோடுதான் எல்லார்கிட்டயும் பழகுவா. அவ முகத்துல ஏதாச்சும் கவலையோ, ஏக்கமோ தெரிஞ்சிருந்தாகூட அதைப் பத்திக் கேட்டுச் சரிபடுத்தியிருக்கலாம். ஆனா, அப்படி அவ வருத்தப்படவேயில்லை.

உழைக்க சோர்வடையாத பொண்ணு. கமிட்டான எந்த புராஜெக்ட்டா இருந்தாலும், அர்ப்பணிப்போடு வேலை செய்வா. எவ்வளவு நேரமானாலும், சரியா நடிச்சுக் கொடுத்துட்டுத்தான் கிளம்புவா. அவ இருக்கிற இடத்துல கலகலப்பு நிச்சயம் இருக்கும். டான்ஸ், பாடறது, டிக்டாக்ல வீடியோ பண்றதுனு ஆக்டிவா இருக்கிற பொண்ணு. அவகூட என்னையும் டப்ஸ்மாஷ் பண்ணச் சொல்லி வீடியோ எடுப்பா. சமீபத்துலதான் என் மகனை இழந்தேன். `பாண்டியன் ஸ்டோர்ஸ்' டீமுடன் என் வீட்டுக்கு வந்து ஆறுதல் சொல்லிட்டுப் போனா.

சித்ராவுடன் சாந்தி வில்லியம்ஸ்
சித்ராவுடன் சாந்தி வில்லியம்ஸ்

பெற்றோர் மேல அவளுக்கு அளவு கடந்த பாசம். அவங்களுக்காக மீடியா வேலையில சேர்த்த பணத்துல சொந்த வீடு கட்டிக்கொடுத்தா. அதைப் பலமுறை பெருமையா சொல்லியிருக்கா. பெற்றோரை நல்லா பார்த்துக்கணும், மீடியா துறையில புகழ் பெறணும்னு கனவுகளோட இருந்தா. அவ நிச்சயதார்த்தத்துக்குக்கூட போயிருந்தேன். எப்பயும்போல உற்சாகமாதான் இருந்தா. அவ வருத்தப்பட்டு நான் பார்த்ததில்லை. ஆனா, அவளுக்கு நேத்து நைட்டு என்ன ஆச்சுன்னு நினைச்சாதான் மனசு பதறுது.

கணவரை இழந்து இப்பவரை தவிக்கிறேன். சமீபத்துல மகனையும் இழந்து, அந்தச் சோகத்துல இருந்து இன்னும் மீண்டு வர முடியாம தவிக்கிறேன். இழப்பின் வலியை முழுமையா உணர்ந்தவ நான். சித்ராவின் மறைவால அவ பெற்றோருக்கு இருக்கும் அதே வேதனைகளை நானும் உணர்றேன். கடவுள் மேலதான் எனக்குக் கோபம். வாழ வேண்டிய பிள்ளைகளை இழந்து நாம தவிக்கிற மாதிரி செய்றதுல கடவுளுக்கு என்ன ஆகப்போகுதோனு ஆதங்கத்துல புலம்பிக்கிட்டு இருக்கேன். வசதி வாய்ப்புகளோடு நான் நல்லா வாழ்ந்த கதை பலருக்கும் தெரியாது. அந்த நிலை கணவர் மறைவுக்குப் பிறகு அப்படியே தலைகீழா மாறிடுச்சு.

சித்ரா
சித்ரா

இனி வாழ வேண்டாம்னு அப்போ நான் முடிவு பண்ணியிருந்தா, நானும் என் பிள்ளைகளும் இப்போ இருந்திருக்க மாட்டோம். எந்தக் கஷ்டத்துக்கும் மரணம் தீர்வே கிடையாது. அதை நாமளே ஒருபோதும் தேடிக்கக் கூடாது. வாழ வேண்டாம்னு முடிவு எடுக்கறத்துக்குப் பதிலா, வாழறதுக்கான அர்த்தமுள்ள காரணங்களை எப்பவும் நம்மகூட வெச்சுக்கணும். அப்படி இருக்குற யாரையும் நாம இழக்க மாட்டோம். இதுபோன்ற சோகச் செய்திகள் இதுவே கடைசியா இருக்கட்டும்..." என்று கண்ணீருடன் முடித்தார்.

சித்ராவின் நீண்டகால மீடியா நண்பர்களில் ஒருவரான மதுரை முத்து, ``எங்களை மாதிரியான சின்னத்திரை கலைஞர்கள் ஒரே நாள்ல புகழ் பெறுவதில்ல. அதுக்குப் பின்னாடி பல வருஷப் போராட்டங்களும் கஷ்டங்களும் இருக்கும். அதையெல்லாம் கடந்து நமக்குனு ஒரு அடையாளத்துடன் நிதானமா உட்காரும் நேரத்துல சில நட்சத்திரங்களை இழந்திடுறோம். இதுதான் வாழ்க்கையா, இதுக்குத்தான் இத்தனை வருஷப் போராட்டமா? இதே நிலைதான் சித்ராவுக்கும். சின்னச் சின்ன நிகழ்ச்சிகள்ல பங்கெடுத்து, இப்ப நல்ல டி.ஆர்.பி-ல இருக்கிற ஒரு சீரியல்ல நடிச்சு புகழுடன் இருக்கிறப்பவே சித்ராவின் வாழ்க்கை முடிவுக்கு வந்திடுச்சு.

வீஜே சித்ரா
வீஜே சித்ரா

கொரோனா பிரச்னை இருந்தும்கூட, ராமநாதபுரத்துல சில மாதங்களுக்கு முன்பு நடந்த திருமண நிகழ்ச்சியில தொகுப்பாளரா கலந்துகிட்டாங்க. அந்த நிகழ்ச்சியில நானும் கலந்துகிட்டேன். அந்த நிகழ்ச்சி உட்பட பல இடங்கள்ல சித்ராவின் தொழில் அர்ப்பணிப்பைப் பார்த்து ஆச்சர்யப்பட்டிருக்கேன். அதுக்கு சமீபத்திய உதாரணம்தான் இந்த வாரம் விஜய் டிவியில ஒளிபரப்பான `கலக்கப்போவது யாரு' நிகழ்ச்சி. `நான் உங்களுக்குப் பாட்டு சொல்லிக் கொடுக்கிற மாதிரி ஒரு ஸ்க்ரிப்ட்'டுன்னு மட்டும்தான் சொன்னேன். அடுத்த சில நிமிஷத்துல சித்ரா சிறப்பா நடிச்சுட்டாங்க. அந்த ஸ்க்ரிப்ட் மக்கள்கிட்ட பெருசா பேசப்பட்டுச்சு.

பெண் கலைஞர்கள் தொகுப்பாளரா பெயர் எடுக்குறது ரொம்பவே கஷ்டம். அவங்க வெளிநிகழ்ச்சிகள்ல மேடை ஏறினாலே, பலரின் பார்வையும் பலவிதமா இருக்கும். ரசிகர்களோடு எடுத்துக்கொள்ளும் ஒரு போட்டோகூட, இந்த சோஷியல் மீடியா காலத்துல பல்வேறு சிக்கல்களை உருவாக்கக்கூடும். இந்த விஷயத்துல ஆண் கலைஞர்களைவிடவும், பெண் கலைஞர்களுக்குத்தான் அதிக பிரச்னை. இத்தனையும் தாண்டி, அவங்களுக்குத் தனிப்பட்ட குடும்ப வாழ்க்கைனு வரும்போது மறுபடியும் புதுப்புது பிரச்னைகள். ஒருகட்டத்துல சட்டுனு நம்பிக்கை இழந்து தவறான முடிவுகளைத் தேடிக்கிறாங்க.

சித்ராவுடன் மதுரை முத்து
சித்ராவுடன் மதுரை முத்து

சினிமா, சின்னத்திரை கலைஞர்கள் வெறும் டயலாக் டெலிவரி பண்ற நபரா மட்டும் இருக்கக் கூடாது. பலவித திறமைகளை வெளிப்படுத்தணும். அதுக்கு சித்ரா சிறந்த உதாரணம். நகைச்சுவை உட்பட பல தளத்திலும் திறமையை வெளிப்படுத்தியிருக்காங்க. குழந்தைத்தனமா பாசாங்கு இல்லாம எல்லார்கிட்டயும் அன்போடு பழகுவாங்க. விஜய் டிவியில சிறந்த நடிகைக்கான விருது வாங்குறதுதான் சித்ராவின் பெரிய ஆசையா இருந்துச்சு.

சித்ரா ரொம்பவே தைரியமான பொண்ணு. என்ன ஆச்சுன்னு தெரியலை. சித்ரா தற்கொலைதான் செய்துகிட்டாங்களான்னு இன்னும் உறுதியாகலை. அதை நம்பவும் மனசு ஏத்துக்கலை. இப்படியான இழப்புச் செய்திகள் மனசை ரொம்பவே திணறடிக்குது. `நம்ம கலை வாழ்க்கை இப்படி இருக்கே, தொடர்ந்து நம்ம கலைஞர்களை இழந்துகிட்டே இருக்கோமே'ன்னு நண்பர்கள் வட்டாரத்துல இன்னிக்குப் பேசிக்கிட்டிருந்தோம். இதுபோன்ற இழப்புகள் சித்ராவுடன் முடியணும். இனி எந்தக் கலைஞரும் இப்படி நம்மைவிட்டுப் போகக்கூடாது" என்று வருத்தத்துடன் முடித்தார்.

தற்கொலை எந்தத் துயரத்துக்கும் முடிவல்ல. அது துயரத்தை மற்றவர்களுக்குக் கைமாற்றிச் செல்லும் கொடிய ஆரம்பம்.

அடுத்த கட்டுரைக்கு