Published:Updated:

``என்னை ராட்சசியா மாத்திட்டாங்க!” மகன் தொடர்பான செய்திகள்... கொதிக்கும் சாந்தி வில்லியம்ஸ்

சாந்தி வில்லியம்ஸ்
சாந்தி வில்லியம்ஸ்

சந்தோஷ் மரணம் குறித்து சில ஊடகங்களில் வெளியான சில செய்திகள் சாந்தி வில்லியம்ஸை மிகவும் காயப்படுத்தியிருக்கின்றன.

`வியட்நாம் வீடு' படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடிக்கத் தொடங்கி, தொடர்ந்து `மாந்தோப்பு கிளியே', `மூடுபனி' உள்ளிட்ட படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தாலும், `மெட்டி ஒலி' சீரியலில் நடித்ததன் மூலம் தமிழகத்தின் பட்டிதொட்டியெங்கும் பிரபலமானவர் சாந்தி வில்லியம்ஸ். அவரின் மூன்றாவது மகனான ஆப்ரஹாம் சந்தோஷ் கடந்த 5-ம் தேதி மாரடைப்பால் உயிரிழந்தார். இதனையடுத்து சந்தோஷ் மரணம் குறித்து சில ஊடகங்களில் வெளியான சில செய்திகள் சாந்தி வில்லியம்ஸை மிகவும் காயப்படுத்தியிருக்கின்றன. அப்படி செய்தி வெளியிட்டவர்களைக் கண்டித்து தன் முகநூல் பக்கத்தில் ஆதங்கமாகப் பதிவிட்டுள்ளார் சாந்தி வில்லியம்ஸ்.

பெரும் சோகத்திலிருந்த சாந்தி வில்லியம்ஸுக்கு ஆறுதல் கூறி இதுகுறித்துப் பேசினோம், ``போன வாரம் சனிக்கிழமை எங்க வீட்ல பெருமாளுக்கு சாமி கும்பிட்டோம். அப்போ, `நான்தான் சாமி என் கால்ல விழுங்க, நான் ஆசீர்வாதம் பண்றேன்'னு என் புள்ள விளையாட்டா பேசிக்கிட்டிருந்தான். ஞாயிற்றுக்கிழமை காலையில என் பேத்தியோடு ஹால்ல விளையாடிட்டு இருந்திருக்கான். அப்புறம் அவளை வெளியில அழைச்சுகிட்டுப் போயிருக்கான். பாதியிலயே `எனக்கு டயர்டா இருக்கு, நாம வீட்டுக்குப் போயிரலாம்'னு சொல்லி அவளைத் திரும்பவும் வீட்டுக்கே அழைச்சுகிட்டு வந்திருக்கான். வீட்டுக்கு வந்ததும், ``எனக்கு ஒரு மாதிரி இருக்கு நான் போய் படுக்கறேன்"னு சொல்லிப் படுத்திருக்கான்.

அவனுக்கு எந்தப் பிரச்னையும் கிடையாது. ரெண்டு நாள் முன்னாடி அம்மா எனக்கு இடது கை வலிக்குதுன்னு என்கிட்ட சொன்னான். டாக்டர்கிட்ட போகலாம் ஒரு ஸ்கேன் எடுத்துரலாம். ஈ.சி.ஜி-யும் பாத்திரலாம்னு சொல்லியிருந்தேன். ஆனா, அதுக்கு அவன் சிரிச்சுகிட்டே, ``ஃப்ரைடு ரைஸ் சாப்பிட்டேன்ல. கேஸ்ட்ரிக் பிரச்னையா இருக்கும்மா. பயப்படாதீங்க"ன்னு சொல்லிட்டான். ஆனாலும், அவனை டாக்டர்கிட்ட கூட்டிகிட்டுப் போகணும்னு நான் நினைச்சிருந்தேன். அதுக்குள்ள இப்படி ஆகிருச்சு. அவனை மாதிரி குழந்தைத்தனமான ஒருத்தனைப் பார்க்கவே முடியாது. நாலு பிள்ளைகள். அதுல மூணாவதா பிறந்த அவன் எனக்கு எப்போதுமே ஸ்பெஷல்தான். ஏன்னா அவன் அவங்க அப்பா மாதிரியே இருப்பான். எல்லோருக்கும் ஆறுதல் சொல்லுவான். யாரும் யாரையும் குறை சொன்னா அவனுக்குப் பிடிக்காது. அடுத்தவங்களை தப்பா பேசக்கூடாதுன்னு சொல்லுவான். செக்யூரிட்டிகள் வெயில்ல நிக்கறாங்கன்னு சொல்லி கூல் ட்ரிங்ஸ் வாங்கிக் கொடுப்பான். இப்படி அவனைப் பத்தி சொல்லிக்கிட்டே இருக்கலாம். அவ்வளவு தங்கமான பையன்" என்றவரின் குரல் சோகத்தில் உடைகிறது.

ஆப்ரஹாம் சந்தோஷ்
ஆப்ரஹாம் சந்தோஷ்

``இது கொரோனா பீரியட்ங்கிறதால சாதாரணமா செத்தாலும் இப்போ போஸ்ட்மார்ட்டம் பண்ணிடுறாங்க. என் மகனின் உடலையும் போஸ்ட்மார்ட்டம் செஞ்சோம். வேறு எந்தப் பிரச்னையும் இல்லை. மாரடைப்புதான்னு சொல்லிட்டாங்க. அவன் உடலையும் நாங்க நல்லபடியா அடக்கம் பண்ணிட்டோம். ஆனா, மீடியா இவ்வளவு கேவலமா நடந்துக்கக் கூடாது. சில செய்தி சேனல்களும் யூடியூப் சேனல்களும், ``அவர் குடும்பத்துல பிரச்னை. மனைவி கூட வாழல. மர்மமான முறையில் மரணம்" என்றெல்லாம் இஷ்டத்துக்கு செய்தி வெளியிடுறாங்க. ஏன் இப்படி கேவலமா நடந்துக்கிறாங்க. எந்த அடிப்படையில இப்படியெல்லாம் செய்தி போடுறாங்க. அவனுக்குக் கல்யாணம் ஆகி, அவனோட மனைவி அவன்கூட இல்லைங்கிறது உண்மை. ஆனா, அந்தப் பொண்ணு எங்க வீட்டைவிட்டுப் போய் நாலு வருஷம் ஆச்சு. அந்தப் பொண்ணு எங்கே இருக்காங்கன்னுகூட எங்களுக்குத் தெரியாது. ஒருகட்டத்துக்கு மேல அதைப் பத்தியெல்லாம் என் மகன் பெருசா கவலைப்படலை. ரொம்ப ஹேப்பியாதான் இருந்தான்.

உங்க மகன் எப்படி இறந்தார்னு என்னைக் கேட்டா நான் சொல்ல மாட்டேனா? செலிபிரிட்டியா இருந்தா எல்லாரோட பர்சனலுக்குள்ளயும் எந்த அனுமதியும் இல்லாம மூக்கை நுழைப்பாங்களா? எஸ்.பி.பி சார் எவ்வளவு பெரிய மனுஷன். அவர் இறந்தப்போ அப்படித்தான், ஹாஸ்பிட்டல் பணம் கட்ட முடியலையான்னு எஸ்.பி.பி சரணைப் பார்த்துக் கேள்வி கேக்குறாங்க. அப்பாவைப் பறிகொடுத்து இருக்கிற புள்ளையைப் பார்த்து கேக்குற கேள்வியா அது. அவங்க பணம் கட்டினா என்ன… கட்டலைன்னா என்ன? உங்களுக்கு அதுல என்ன பிரச்னை?

சாந்தி வில்லியம்ஸ் உருக்கம்
சாந்தி வில்லியம்ஸ் உருக்கம்

முன்னாடியெல்லாம் தான் தமிழ்நாட்டுக்காரின்னுதான் சொல்லுவேன். இப்போ சொல்றேன் நான் கேரளாக்காரி. ஏன்னா கேரள ஊடகங்கள் நேர்மையா இருக்காங்க. என்ன நடந்ததுன்னு என்னைக் கேட்டு செய்தி போடுறாங்க. ஆனா, இங்கே அப்படி இல்லை. அது போதாதுன்னு ஆளாளுக்கு யூடியூப் சேனலை ஓப்பன் பண்ணி வெச்சுகிட்டு புரொமோஷனுக்காக என்னென்னவோ செய்யறாங்க. இதனாலேயே இந்த மீடியாவுல இருந்து வெளிய போயிடலாம்னு இருக்கு. அவ்வளவு வேதனை. அடுத்தவனுடைய உயிரை மதிக்க மாட்டேங்குறாங்க… மரியாதையை மதிக்க மாட்டேங்குறாங்க. கேவலப்படுத்தறாங்க. என்னைக் கேட்காம தப்பா செய்தி போட்டவன் மட்டும் என் முன்னால வந்து நின்னான்… அவ்வளவுதான் நடக்கறதே வேற. இந்த சாந்தி வில்லியம்ஸை எல்லோரும் சாந்தமாத்தான் பாத்துருப்பாங்க. யாரும் என்னை ராட்சசியா பார்த்தது கிடையாது. இன்னைக்கு என்னை ராட்சசியா மாத்திட்டாங்க. அப்படி செய்தி போட்டவங்கமீது வழக்கு போட்டு அவங்களை உண்டு இல்லைன்னு பண்ணுவேன். அதுவரை என் கோபம் தீராது" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு