சினிமா
Published:Updated:

விகடன் TV: “ஒரு போட்டோஷூட் பண்ணினது குத்தமா?”

ஷிவாங்கி
பிரீமியம் ஸ்டோரி
News
ஷிவாங்கி

படம்: கிரண்சா

`சூப்பர் சிங்க’ரில் அறிமுகமாகி, ‘குக்கு வித் கோமாளி’யில் பிரபலமாகி, இப்போது பின்னணிப் பாடகி, நடிகை என பிசியாக வலம் வருகிற ஷிவாங்கி கிருஷ்ணகுமாரை சென்னையின் ஃபீனிக் மால் வளாகத்தில் ஒரு மாலைப் பொழுதில் சந்தித்தேன்.

‘‘இப்பல்லாம் நாஸ்டாலஜியை ரொம்பவே விரும்பறாங்க மக்கள். எல்லாருக்குமே தங்களுடைய கடந்த காலத்தைத் திரும்பிப் பார்க்கறதுன்னா பிடிக்கும்தானே? எண்பதுகளில் வெளியாகி ஹிட் ஆன படங்களின் பாடல்களை விஜய் டி.வி சார்பா சில மாதங்களுக்கு முன்னாடி ரசிகர்களுக்காகப் பாடினோம். சென்னையில் நடந்த அந்த நிகழ்ச்சிக்கு அவ்வளவு வரவேற்பு கிடைச்சது. அதேபோல ஒரு நிகழ்ச்சிதான் இங்கேயும். இங்க 90கள் மற்றும் 2000-த்தின் முற்பகுதியில் வெளியாகி பட்டைகிளப்பின படங்களில் பாடல்கள் பாடினேன். வாய்ப்பிருந்தா, தொடர்ந்து இந்த மாதிரி கான்செப்ட்டா எடுத்துப் பண்ணலாம்னு நினைக்கிறேன்’’ என்றவரிடம் உரையாடலைத் தொடர்ந்தேன்.

``கைவசம் வரிசையாகப் படங்கள் இருக்கிறபோதும் இந்த மாதிரி வார இறுதி நிகழ்ச்சிகளிலும் பாடுறீங்க போல?’’

‘‘இந்த மாதிரி ஸ்டேஜ்ல ரசிகர்கள் மத்தியில் பாடுகிறபோது, அவங்களுடைய மகிழ்ச்சியைக் கண்கூடாப் பார்க்க முடியுது. அப்ப எனக்குமே ரொம்ப சந்தோஷமா இருக்கும். என்னுடைய உற்சாகம் பலமடங்கு கூடும். மிக்ஸ் அண்ட் மேட்ச் பண்ணிப் பாடும்போது சில ரசிகர்கள் மெய்மறந்து ரசிக்கிறதையும், கூடப் பாடறதையும் பார்க்கிறப்ப சமயத்துல என்னை அறியாமலேயே கண்ணுல தண்ணி வந்திடும். இது எல்லாமே எனக்கு ரசிகர்கள் கொடுத்த வாழ்க்கை. பாடகியா இருந்த எனக்கு நடிகையாக புரமோஷன் கொடுத்ததும் அவங்கதான். அதனால அவங்களுக்காக அவங்க முன்னாடி தொடர்ந்து பாடிட்டே இருப்பேன். ஒருவேளை நாளைக்கு நான் ஒரு பெரிய நடிகையா ஆனாலுமே பாடறதை நிறுத்த மாட்டேன்.’’

விகடன் TV: “ஒரு போட்டோஷூட் பண்ணினது குத்தமா?”

``சினிமா?’’

‘‘இப்ப ‘காசேதான் கடவுளடா’. ‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ ஆகிய படங்களின் ரிலீஸுக்காகக் காத்திருக்கிறேன். இந்தப் படங்களில் நல்லாப் பண்ணியிருக்கேன்னு எனக்கு நம்பிக்கை இருக்கு. மிச்ச ரிசல்ட் ரசிகர்கள் கையிலதான் இருக்கு.’’

``ஹீரோயினாகப் போறீங்கன்னு ஒரு பேச்சு அடிபடுதே, நிஜமா?’’

‘‘ஏங்க, ஒரு போட்டோஷூட் பண்ணினது குத்தமா? எல்லாருமே பண்றாங்களேன்னு நானும் போட்டோ எடுத்துக்கிட்டு சோஷியல் மீடியாவுல வெளியிட்டேன். அதை வச்சு ஆளாளுக்கு எடுத்து விடறாங்க. கேக்கறதுக்கு சந்தோஷமாத்தான் இருக்கு. ஆனா அதெல்லாம் இல்லை. இப்போதைக்கு தமிழ் சினிமாவுல நல்லவொரு கேரக்டருக்கு வெயிட் பண்ணிட்டிருக்கேன், அவ்ளோதான்!’’

``புகழ் கல்யாணத்துக்குப் போனீங்கதானே... என்ன பரிசு வாங்கித் தந்தீங்க?’’

‘‘கடைசியில ஒருவழியா புகழண்ணா கல்யாணம் பண்ணிக்கிட்டதுல எங்க கேங்குக்கே ரொம்ப ஹேப்பி. வரவேற்புக்குப் போய் நல்லா சாப்பிட்டுட்டு வந்தோம். பரிசு பத்தியெல்லாம் பொதுவெளியில பேசக் கூடாது.’’

``பிக் பாஸ் 6-வது சீசன்ல கலந்துக்கறீங்களா?’’

‘‘எனக்கும் அந்த நிகழ்ச்சியில கலந்துதான் பார்க்கலாமேன்னு ஆசை இருக்கு. ஆனா அதுக்கான காலம் இன்னும் வரலை. அதனால இந்த சீசன்ல நிச்சயமா நான் இல்லை.’’