Election bannerElection banner
Published:Updated:

``இவங்கதான் என் மனைவியாகப் போறாங்கன்னு அப்போ தெரியாது!'' - `சூப்பர் சிங்கர்' சாய்சரண் ஷேரிங்ஸ்

சாய்சரண் - நந்தினி
சாய்சரண் - நந்தினி

``எங்க ரிலேஷன்ஷிப் மேட்ரிமோனியலில் ஆரம்பிச்சு, நட்பாகி, அப்புறம் காதலாகி, இப்போ கல்யாணத்தில் முடிஞ்சிருக்கு’’ என்று இன்ட்ரெஸ்ட்டிங் ஓப்பனிங் கொடுக்கிறார் சாய்.

சமூக வலைதளங்கள் எங்கும் கலர்ஃபுல்லாக வலம் வந்துகொண்டிருக்கின்றன `சூப்பர் சிங்கர்’ சாய்சரண் - நந்தினி ஜோடியின் திருமண புகைப்படங்கள். சூப்பர் சிங்கர் சீஸன் மூன்றின் டைட்டில் வின்னரான சாய்சரண், அதன் பிறகு `சாட்டை', `வத்திக்குச்சி', `ஜில்லா', `மருது' போன்ற படங்களில் பின்னணி பாடியிருக்கிறார். தற்போது சில திரைப்படங்களுக்கு இசையமைத்தும் வருகிறார். திருமண வாழ்த்துகள் சொல்லி அவரிடம் பேசினோம்.

``எங்க ரிலேஷன்ஷிப் மேட்ரிமோனியலில் ஆரம்பிச்சு, நட்பாகி, அப்புறம் காதலாகி, இப்போ கல்யாணத்தில் முடிஞ்சிருக்கு’’ என்று இன்ட்ரெஸ்ட்டிங் ஓப்பனிங் கொடுக்கிறார் சாய்.

``மேட்ரிமோனியலில் எங்க ரெண்டு பேரோட பெற்றோரும் எங்க பெயர்களை ரெஜிஸ்டர் பண்ணி வெச்சிருந்தாங்க. அந்த வகையில் எதேச்சையா நான் நந்தினியோட போட்டோவை மேட்ரிமோனியல் புரொஃபைல்ல பார்த்திருக்கேன். அப்போ, இவங்கதான் நான் கல்யாணம் பண்ணிக்கப்போற பொண்ணுனு எனக்குத் தெரியவே தெரியாது. மேட்ரிமோனியல் புரொஃபைல்ல நந்தினியும் என் போட்டோவை பார்த்திருக்காங்க.

இதுவொரு பக்கம் நடந்துக்கிட்டிருக்க, இன்னொரு பக்கம் நானும் நந்தினியும் இன்ஸ்டாகிராம்ல ஃபிரெண்ட்ஸ் ஆனோம். எல்லா நண்பர்களையும் மாதிரி அவங்களும் சோஷியல் மீடியாவுல எனக்கு மெசேஜ் பண்ணாங்க. நானும் ரிப்ளை பண்ணேன். அப்புறம் பரஸ்பரம் மொபைல் நம்பர்களை ஷேர் பண்ணிக்கிட்டோம். அவங்க என்கிட்ட முதல் முதல்ல பேச ஆரம்பிச்சப்போ, என்னைப் பத்தி, சூப்பர் சிங்கர் பத்தியெல்லாம் இவங்களுக்குத் தெரிஞ்சிருக்கும். அதைப் பத்திதான் ஏதோ பேசப்போறாங்கன்னு நினைச்சேன். ஆனா, அவங்க `மேட்ரிமோனியல்ல உங்க புரொஃபைல் பார்த்தேன்’னு சொல்லிட்டுதான் பேச ஆரம்பிச்சாங்க. அப்பவும் நான் மேட்ரிமோனியல்ல பார்த்த அதே நந்தினிதான் இவங்கன்னு எனக்குத் தெரியாது. நேரடியா மேரேஜ்னு போறதைவிட ஒருவரையொருவர் புரிஞ்சுக்க டிரை பண்ணுவோம்னு தோணுச்சு. அதுக்கப்புறம் ரெண்டு பேரும் நிறைய பேச ஆரம்பிச்சோம். ரொம்ப ரொம்ப அழகான தருணங்கள் அவை.

சூப்பர் சிங்கர் சாய்ஷரண் திருமணம்
சூப்பர் சிங்கர் சாய்ஷரண் திருமணம்

எங்க ரெண்டு பேரோட எண்ணங்களும் ஒரே மாதிரி இருக்கிறது தெரிஞ்சது. அந்த எண்ணங்களே எங்க ரெண்டு பேருக்குள்ள ஓர் இறுக்கமான நட்பை ஏற்படுத்திடுச்சு. அந்த நட்புல சின்னதா காதல் எட்டிப்பார்க்க ஆரம்பிச்சப்போ, வீட்ல சொல்லலாம்னு முடிவு பண்ணினோம். ரெண்டு குடும்பங்களுக்கும் பிடிச்சுப் போச்சு. இதுக்கு நடுவுல, நான் மேட்ரிமோனியல்ல பார்த்த நந்தினியும் இவங்களும் ஒண்ணுதான்னு தெரிஞ்ச மொமன்ட் எல்லாம் செம சர்ப்ரைஸா இருந்துச்சு’’ என்கிற சாய்சரண், அந்த நாளின் நினைவுகளில் மலர்ந்து சிரிக்கிறார்.

மனைவி நந்தினியைப் பற்றிச் சொல்லுங்களேன் என்றோம்.

``அவங்க பிறந்து வளர்ந்தது எல்லாம் பாண்டிச்சேரியில். சாஸ்தா யுனிவர்சிட்டியில் பயோ டெக்னாலஜி படிச்சிருக்காங்க. போன மாசம் வரைக்கும் அமேசான்ல வேலை பார்த்திட்டிருந்தாங்க. இப்போ கல்யாணத்துக்காக சின்ன பிரேக் எடுத்திருக்காங்க.

சூப்பர் சிங்கர் சாய்சரண் மனைவி நந்தினியுடன்
சூப்பர் சிங்கர் சாய்சரண் மனைவி நந்தினியுடன்

நந்தினி பெரிய மியூசிக் லவ்வர். நல்லா பாடுவாங்க. ஆனா, என் எதிர்ல மட்டும் பாட மாட்டேங்கிறாங்க. கொரோனா உச்சத்துல இருந்த நேரத்துல நிச்சயதார்த்தம் நடந்துச்சு. அதனால, நிச்சயத்தை கிராண்டா செய்ய முடியலை. கல்யாண நேரத்துலயும் கொரோனா விட்டபாடில்லை. இருந்தாலும், வீட்டுப் பெரியவங்க ரொம்ப கவனமா சமூக இடைவெளியெல்லாம் கடைப்பிடிச்சு கல்யாணம் பண்ணி வெச்சிருக்காங்க. உங்க எல்லாரோட வாழ்த்துகளும் எங்களுக்கு அவசியம்!'' என்கிறார் சாய் சரண்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு