
எங்க ஃபேமிலியில் யாரும் மீடியா சார்ந்தவங்க கிடையாது. ஆரம்பத்துல அவங்ககிட்ட எதுவும் சொல்லாம மீடியாவிற்கு ட்ரை பண்ணிட்டு இருந்தேன். அவங்களுக்குத் தெரிஞ்சதும் என் விருப்பத்துக்கு சம்மதம் சொல்லிட்டாங்க.
`விகடன் டெலிவிஸ்டாஸ்' நிறுவனத்தின் புதிய படைப்பு, `சிறகடிக்க ஆசை.' திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9.30 மணிக்கு இந்தத் தொடர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிக்கொண்டிருக்கிறது.
எதிர்பாராத சூழ்நிலையில் திருமணம் செய்துகொள்ளும் மீனா மற்றும் முத்துக்குமாரை மையப்படுத்தி இந்தத் தொடரின் கதை நகர்கிறது. மீனாவாக கோமதி பிரியாவும், முத்துவாக வெற்றி வசந்த்தும் நடிக்கிறார்கள். ஷூட்டிங் இடைவேளையில் இருவரையும் சந்தித்துப் பேசினோம்.
‘`விஜய் டி.வி-யில் ஒளிபரப்பான `மிஸ்டர் & மிஸஸ் சின்னத்திரை' நிகழ்ச்சியில் ஒரு சின்ன ரோல் பண்ணினேன். அப்படித்தான் மீடியாவில் என் கரியர் ஆரம்பமாச்சு. இப்ப அதே தொலைக்காட்சியில் மூன்றாவது முறையாக கதாநாயகியா நடிக்கிறது ரொம்பவே சந்தோஷமா இருக்கு’' என உற்சாகமாய்ப் பேசத் தொடங்கினார் கோமதி பிரியா.


‘‘எங்க ஃபேமிலியில் யாரும் மீடியா சார்ந்தவங்க கிடையாது. ஆரம்பத்துல அவங்ககிட்ட எதுவும் சொல்லாம மீடியாவிற்கு ட்ரை பண்ணிட்டு இருந்தேன். அவங்களுக்குத் தெரிஞ்சதும் என் விருப்பத்துக்கு சம்மதம் சொல்லிட்டாங்க. ‘ஓவியா’ சீரியல் முடிஞ்சதும் தமிழில் ஒளிபரப்பான `திருமதி ஹிட்லர்' சீரியலுடைய தெலுங்கு ரீமேக்கிற்கு என்னைக் கதாநாயகியா கூப்பிட்டாங்க. தெலுங்கு சுத்தமா பேசத் தெரியாது. ஆனாலும், ஏதோ ஒரு நம்பிக்கையில் அந்த புராஜெக்ட்டுக்கு ஓகே சொல்லிட்டேன். என்கிட்ட ஒரு யூடியூப் சேனல் இருக்கு. அதுல இப்ப பெரும்பாலும் தெலுங்குல பேசிதான் வீடியோ பண்ணுறேன்னா பார்த்துக்கோங்க! அந்த அளவுக்கு சுத்தமா தெலுங்கு கத்துக்கிட்டேன்’’ என்றவரிடம் `சிறகடிக்க ஆசை' குறித்துக் கேட்டோம்.
``வேலைக்காரன் சீரியல் முடிஞ்சதும் பிரேக்ல இருந்தேன். அப்பதான் இந்த சீரியல் வாய்ப்பு கிடைச்சது. எங்க வீட்ல நான்தான் மூத்த பொண்ணு. எனக்குப் பிறகு ஒரு தம்பி, தங்கச்சி இருக்காங்க. இந்த சீரியலிலும் அப்படித்தான். கோமதி பிரியாவுக்கும் மீனாவுக்கும் நிறைய இடங்களில் ஒத்துப் போகும்! முத்துவுக்கும் வெற்றிக்கும் எனக்குத் தெரிஞ்ச வரைக்கும் சுத்தமா ஒத்துப்போகாது! சரிதானே வெற்றி?’' என வெற்றியைப் பார்க்க ‘`அது என்னவோ உண்மை தாங்க!'’ என்றவாறு வெற்றி பேசத் தொடங்கினார்.


‘`எங்க வீட்ல அம்மா, அப்பா, தங்கச்சி மூணு பேருமே செம ஃப்ரெண்ட்லி. அவங்ககிட்ட எதையுமே மறைக்க மாட்டேன். 2015-ல் நடிக்கப்போறேன்னு சென்னைக்குப் புறப்பட்டு வந்தேன். இந்த வருஷம் நாம நடிகனாகிடுவோம்னே ஒவ்வொரு வருஷமும் ஓடுச்சு. அப்ப நடிக்க ஆசைப்படும் எல்லோரும் செய்யும் முதல் விஷயம் `டப்ஸ்மாஷ்'தான். நானும் அதைத்தான் பண்ணிட்டு இருந்தேன். அதைப் பார்த்துட்டு நாக் அவுட் சேனலில் நடிச்சுட்டிருந்த குரு கூப்பிட்டார். அவர் மூலமா நாக் அவுட் சேனலுக்குப் போனேன். அந்த யூடியூப் சேனல் ஹெட் ராஜா அண்ணா எனக்கு நடிக்க வாய்ப்பு கொடுத்தார். அதைப் பார்த்துட்டுதான் குமரன் சார் இந்தக் கேரக்டருக்கு என்னை செலக்ட் பண்ணியிருக்கார்.

நடிக்க வாய்ப்பு தேடிட்டு இருக்கும்போதே அசிஸ்டென்ட் டைரக்டர், செட் அசிஸ்டென்ட், செட் இன்சார்ஜ், டப்பிங்னு எல்லா ஒர்க்கும் பண்ணியிருக்கேன். `சர்கார்' படத்துல விஜய் சார் கூட இருந்த எஸ்கார்டு டீம்ல நானும் ஒருத்தன்! எல்லா கஷ்டத்தையும் கடந்து இன்னைக்கு ஒரு நல்ல வாய்ப்பு கிடைச்சிருக்கு. அதை சரியாப் பயன்படுத்திக்கணும். எனக்கு டப்பிங் பேச ரொம்பப் பிடிக்கும். அதனால என் கேரக்டருக்கு நானே டப்பிங் பேசுறேன். அது மூலமா டப்பிங் நுணுக்கங்களையும் கத்துட்டிருக்கேன். கிட்டத்தட்ட 30 எபிசோடு வரைக்கும் ஷூட் பண்ணியிருக்காங்க. இதுவரைக்கும் கிளிசரின் பயன்படுத்தவே இல்ல. ஃபேமிலி கனெக்ட் அதிகமா இருக்குங்கிறதனால இயல்பாகவே அழுக வந்துடுது’' என்கிறார். இருவரிடமும் சீரியலுக்காக மெனக்கெட்ட விஷயங்கள் குறித்துக் கேட்டோம்.


‘`ஸ்கூல் படிக்கும்போது சைக்கிள் ஓட்டியிருக்கேன். பிறகு டச் விட்டுப் போச்சு. ஆனா, இந்தத் தொடரில் நான் சைக்கிள் ஓட்டணும்னு டைரக்டர் சார் சொல்லிட்டாங்க. அதனால, சொந்தமா சைக்கிள் வாங்கி தினமும் ஓட்டிட்டு இருக்கேன்... இப்ப சூப்பரா ஓட்டப் பழகிட்டேன்’’ என்ற கோமதி பிரியாவைத் தொடர்ந்து, ‘`நான் சொந்தமா காரெல்லாம் வாங்கலைங்க... மெதுவா அவங்க கொடுத்த காரிலேயே ஓட்டக் கத்துக்கிட்டேன். இந்தத் தொடருக்கு முன்னாடி எனக்கும் கார் ஓட்டத் தெரியாது!’' என வெற்றி புன்னகைத்தார். ஷூட்டிங் ஸ்பாட்டிலிருந்து அழைப்பு மணி வந்ததும் இருவரும் விடைபெற்றார்கள்.