சினிமா
கட்டுரைகள்
Published:Updated:

கனவு மேடையில் கலக்கும் சிங்கர்ஸ்!

சூப்பர் சிங்கர் டீம்
பிரீமியம் ஸ்டோரி
News
சூப்பர் சிங்கர் டீம்

பெஸ்ட் பர்ஃபாமர், பர்ஃபாமர் ஆஃப் தி வீக்னு ஒவ்வொரு வாரமும் ஒவ்வொருத்தரைத் தேர்வு செய்து பரிசு கொடுப்பாங்க. அந்த வரிசையில், பெஸ்ட் லிரிசிஸ்ட்னு பரிசு கொடுத்தா, அந்தப் பரிசு அனந்துவுக்குத்தான் எல்லா வாரமும் கிடைக்கும்

பத்துப் பேருக்கு முன்பாக உங்கள் திறமையை, நீங்கள் செய்யும் வேலையைக் குறை சொன்னால் உங்களுக்கு எரிச்சல் ஆகும்தானே! ஆனால், விஜய் டி.வி-யில் ஒளிபரப்பாகும் ‘சூப்பர் சிங்கர்’ நிகழ்ச்சி இதற்கு நேர் எதிர். ‘நம்மகிட்ட இருக்கிற தப்பைச் சொல்லமாட்டாங்களா’ என்று போட்டியாளர்கள் ஏங்குவார்கள். ‘ஒரு சங்கதி மிஸ்ஸிங்’, ‘ரெண்டாவது சரணத்துல லைட்டா ஸ்ருதி மாறிடுச்சு’ என ஜட்ஜ்கள் சொல்லும்போது… ‘அட ஆமாம்ல’ என்று இருக்கும். காரணம், மார்க் போடுவது லெஜெண்ட்கள்! ‘சூப்பர் சிங்கர்’ நிகழ்ச்சியில் ஜொலித்த போட்டியாளர்கள் இன்று சினிமாவில், மேடைக் கச்சேரிகளில், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பெரிய பாடகர்களாக சிம்பொனி பாடிக் கொண்டிருக்கிறார்கள். பிரபுதேவாவின் ‘ஏ மச்சான்… என்ன மச்சான்…’ பாடிய செந்தில் கணேஷ்–ராஜலட்சுமி, சிவகார்த்திகேயனின் ‘டான்’ படத்தின் ‘பே… கண்ணால திட்டிடாதே’ பாடி ஹிட் கொடுத்த ஆதித்யா என்று பலரை உதாரணம் சொல்லலாம்.

இதை ‘ரியாலிட்டி ஷோ’ என்பதைவிட, பாடகர்களை உருவாக்கும் ரியல் ஷோ எனலாம். ஷோ பார்க்க பூந்தமல்லி தாண்டியுள்ள ஈவிபி செட்டுக்குப் போனால், கிளாஸிக்கல், வெஸ்டர்ன், கானா என்று கலந்துகட்டிக் காதுக்கு விருந்து வைத்துக் கொண்டிருந்தார்கள் போட்டியாளர்கள்.

ஹரி விக்னேஷ், அனந்த கோபன்
ஹரி விக்னேஷ், அனந்த கோபன்

‘‘வெல்கம் டு சூப்பர் சிங்கர் சீசன் 9’’ என்று மலையாளம் கலந்த தமிழிலும் ஆங்கிலத்திலும் வரவேற்றார் அனந்தகோபன். வெறித்தனமாக ப்ராக்டீஸ் செய்துகொண்டிருந்த அனந்தகோபன், கேரளாக்காரர். ``கேரளாவுல இப்படி நிகழ்ச்சி இல்லையான்னு நீங்க மைண்ட் வாய்ஸ்ல நினைக்கிறது எனக்கு சத்தமாவே கேட்குது'' எனச் சிரித்தவர், ‘‘அங்க நான் ட்ரை பண்ணாத மேடையில்லை. ஆனா, எந்த வாய்ப்பும் அமையல. என் ஃப்ரெண்ட் சொன்னானேன்னு இங்க ட்ரை பண்ணினேன். டாப் 20 போட்டியாளரா தேர்வும் ஆகிட்டேன். இப்ப இந்த மேடை எனக்கு ஒவ்வொண்ணா கத்துக் கொடுத்துட்டு இருக்கு’’ என்றதும் அவருடைய நண்பரும் போட்டியாளருமான ஹரி விக்னேஷ் என்ட்ரி கொடுத்தார்.

‘‘பெஸ்ட் பர்ஃபாமர், பர்ஃபாமர் ஆஃப் தி வீக்னு ஒவ்வொரு வாரமும் ஒவ்வொருத்தரைத் தேர்வு செய்து பரிசு கொடுப்பாங்க. அந்த வரிசையில், பெஸ்ட் லிரிசிஸ்ட்னு பரிசு கொடுத்தா, அந்தப் பரிசு அனந்துவுக்குத்தான் எல்லா வாரமும் கிடைக்கும்’’ எனக் சொல்லி ஹரி சிரித்தார். அனந்தகோபன், ‘‘எனக்குத் தமிழ் தெரியாது. தமிழ் வார்த்தைகளைக் கேட்டு, பழகி, புரிஞ்சிக்க கொஞ்சம் கஷ்டம். அதனால பாடும்போது நானே சொந்தமா புது லிரிக் போட்டு என் ஸ்டைலில் பாடிடுவேன். அதைத்தான் சொல்றான் ஹரி’’ என்றதும் ஹரி தலையசைத்தவாறு தொடர்ந்தார்.

சந்திரன், அபிஜித், பிரியா ஜெர்சன்
சந்திரன், அபிஜித், பிரியா ஜெர்சன்

‘‘இந்த செட்ல எல்லாரும் ஃப்ரெண்ட்ஸா இருப்போம். ஒவ்வொருத்தரும் அவங்க முழுத் திறமையையும் காட்டணும்னு நினைப்போமே தவிர ஒருத்தரையொருத்தர் போட்டியா நினைக்க மாட்டோம். நான் பிசியோதெரபிஸ்ட் ஆக இருக்கேன். நானும், இன்னொருத்தரும் இந்த சீசனில் நடுவுல என்ட்ரியானோம். இதுவரை அப்படியொரு என்ட்ரி சூப்பர் சிங்கர் வரலாற்றில் நடந்திருக்கான்னு எனக்குத் தெரியல’’ என்றதும், அனந்தகோபன் குறுக்கே புகுந்து, ‘‘ஹரிக்கு கேர்ள் ஃபேன்ஸ் அதிகம். இப்பவே நிறைய ஃபேன் பேஜ் இவனுக்கு வச்சிருக்காங்க’’ என்று ஆதங்கத்துடன் சொன்னார்.

செட்டிற்குப் பின்னால் ஸ்டோன் பெஞ்சில் சீரியஸாக ப்ராக்டீஸ் செய்துகொண்டிருந்தார்கள் அருணாவும், கார்த்திக்கும். அவர்கள் பக்கம் திரும்பினோம். ‘‘கோயில்களில் திருமுறைப் பாடல்கள் பாடுவேன். இதுவரைக்கும் பக்திப் பாடல்கள் மட்டும்தான் பாடியிருக்கேன். சினிமாப் பாடல்களை மேடை ஏறிப் பாடுறது இதுதான் முதன்முறை. கச்சேரியில் பாடுறப்ப ‘நீங்க நல்லா பாடுனீங்க’ன்னு சொல்லிட்டு, `நாங்க இந்த ஜாதி... நீங்க என்ன ஜாதி'ன்னு கேட்பாங்க. மனசுக்குக் கஷ்டமா இருக்கும். திறமையை வாழ்த்துனா போதுமே! இனியாவது அந்த ஒரு சிலர் அந்த மாதிரி கேட்கிறதைத் தவிர்க்கணும்’’ என்றார் அருணா.

சூப்பர் சிங்கர் சீசன் 9-ல் பெஸ்ட் ஆகப் பாடி மேடையில் உள்ள சிறப்பு இருக்கையில் அமர்பவர்களுக்கு `ஸ்டார் சிங்கர்' என ஸ்டார் பேட்ஜ் கொடுப்பார்கள். அருணா நான்கு ஸ்டார் குத்தியிருந்தார். ‘‘தொடர்ந்து நல்ல பர்ஃபாம் பண்ணி அடுத்த ஸ்டார் வாங்கணும்.. இதெல்லாம் பத்தாது!’’ என்றார்.

அருணா
அருணா

‘‘என்னோடது கரடுமுரடான பாதை. வேதனை, சோதனையெல்லாம் நீங்குறதுக்கு இதுல சாதனை படைக்கணும்னு வந்திருக்கேன்’’ என ரைமிங்கில் டிஆரையும் மிஞ்சினார் கார்த்திக். ‘‘சின்ன வயசில இருந்தே நாட்டுப்புறப் பாடல்கள் பாடுவேன். பி.எட் முடிச்சிருக்கேன். ஆசிரியர் வேலைக்குப் போகல. முழு நேரமும் பாட்டு... பாட்டு... கொரோனா காலகட்டத்தில் கச்சேரிகள் இல்லாம குடும்பச் சூழலால கொத்தனார் வேலைக்குப் போயிட்டு இருந்தேன். கிட்டத்தட்ட 12 வருஷமா மேடைகளில் மக்களிசைப் பாடல்கள் பாடிட்டு இருக்கேன். இந்த மேடை என் வாழ்க்கையில் மாற்றத்தை நிகழ்த்தும் என்கிற நம்பிக்கையில் வந்திருக்கேன்’’ என்றார் உறுதியாக.

பிரசன்னா, யாழினி, தினேஷ் மூவரும் கேங்காக வந்து மிரட்டினார்கள். கேஷூவலாக நம்மிடம் பேசத் தொடங்கினார் யாழினி.

கார்த்திக்
கார்த்திக்

‘‘சூப்பர் சிங்கர் ஜூனியரில் ஏற்கெனவே போட்டியாளரா பங்கெடுத்திருக்கேன். சின்ன வயசில ஜட்ஜஸ் சொன்ன கமெண்ட்ஸ் எல்லாம் எனக்குப் புரிஞ்சதான்னுகூடத் தெரியல. இப்ப அவங்க சொல்ற ஒவ்வொரு கமெண்ட்டும் எனக்கு ரொம்ப யூஸ்ஃபுல்லா இருக்கு. தொடர்ந்து கத்துட்டே இருக்கேன்’’ என்றார். ‘‘நமக்குன்னு ஒரு அங்கீகாரம் கிடைக்கணும்னா அதுக்கு இந்த மேடை மட்டும்தான் ஒரே வழியாக இருக்கும்னு தொடர்ந்து ஆடிஷனில் கலந்துகிட்டே இருந்தேன். ரெண்டு முறை வாய்ப்பு கை நழுவிப் போச்சு. கடைசியா இப்ப கனவு நிறைவேறிடுச்சு’’ என்று ஃபீலிங்குடன் சொன்னார் பிரசன்னா.

‘‘நான் ஒரு துப்புரவுப் பணியாளர். சும்மா குப்பை அள்ளிட்டே தெருவுல பாடிட்டு இருந்தேன். இந்த மாதிரி பிரமாண்ட மேடையில பாடுவேன்னு நினைச்சுக்கூடப் பார்க்கல. அன்புக்காக ரொம்பவே ஏங்கியிருக்கேன். ஆனா, இப்ப மக்கள் மனசுல இடம் பிடிச்சிருக்கேன். எதையும் எதிர்பாராம என் மேல அன்பு காட்டுறாங்க... இதெல்லாம் ரொம்ப சந்தோஷமா இருக்கு’’ என எமோஷனல் ஆனார் தினேஷ்.

பிரசன்னா, யாழினி, தினேஷ்
பிரசன்னா, யாழினி, தினேஷ்

இந்த சீசனில் பூஜாவுக்கு ஏகப்பட்ட ஃபேன் பாலோயர்ஸ். ஸ்பெஷலா பாட்டுப் போட்டுத்தான் டி.ஜே பிளாக் இவங்களை மேடைக்கு வர வைப்பார். ‘‘டாப் 20-ல் செலக்ட் ஆவேன்னு நான் கொஞ்சமும் எதிர்பார்க்கல. இவ்வளவு தூரம் பயணிக்கிறதையே பெரிய விஷயமா நினைக்கிறேன்’’ என சிம்பிளாக சொன்னவரை நிறுத்தி, ‘‘டிஜே பிளாக் உங்களுக்கு மட்டும் ஏன் அப்படி மெனக்கெட்டு பாட்டு போடுறார்?’’ என்றேன். ‘‘இந்தக் கேள்வியை நீங்க டிஜே பிளாக்கிட்டதான் கேட்கணும். அவர் பாட்டு போட்டா நான் என்ன பண்ணுறது?’’ என பூஜா குழம்ப, சஷாங்க் பேச ஆரம்பித்தார்.

‘‘காலேஜ் முடிச்சிட்டு ஒரு தனியார் கம்பெனியில் வேலைக்குப் போயிட்டு இருந்தேன்.. மியூசிக்கா, வேலையான்னு வரும்போது மியூசிக்னு முடிவெடுத்து வேலையை விட்டுட்டு இப்ப இதுல மட்டும்தான் கவனம் செலுத்தறேன்’’ என்றதும் அபர்ணா தொடர்ந்தார்.

‘‘சூப்பர் சிங்கரில் போட்டியாளராகக் கலந்து கொண்ட அஹானாவுக்குப் பயிற்சி கொடுத்துட்டு இருந்தேன். அப்பதான் இந்த ஷோவுல நாம ஏன் கலந்துக்கக் கூடாதுன்னு தோணுச்சு. இதுக்கு முன்னாடி பல மேடைகளில் பாடியிருக்கேன். ஆனா, போட்டியாளராக ஒரு ஸ்டேஜ்ல பாடுறது இதுதான் முதல்முறை. இந்த அனுபவமும் ரொம்பப் புதுசா இருக்கு. நடுவர்கள் முன்னாடி பாடுறதுக்கும், மக்களுக்கு முன்னாடி பாடுறதுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கு’’ என்றார்.

தூரத்தில் ஒரு ஆட்டோவில் மூன்று பேர் தீவிரமாகப் பயிற்சி எடுத்தபடி இருந்தனர். சந்திரன், அபிஜித், பிரியா ஜெர்சன் கேங் அது.

‘‘நான் கேரளா. போன சீசன் கோவிட் டைம்ங்கிறதால ஆடிஷனில் கலந்துக்க முடியல. இந்த சீசன் விட்டுடக் கூடாதுன்னு ட்ரை பண்ணி செலக்ட்டும் ஆகிட்டேன். என் கனவு மேடையில என்னால முடிஞ்ச பர்ஃபாமென்ஸ் கொடுத்துட்டு இருக்கேன்’’ என்ற அபிஜித்தைத் தொடர்ந்து, ‘‘நானும் இவனை மாதிரி பெரிய க்யூவுல நின்னு செலக்ட் ஆனேன். நான் இன்டிபென்டன்ட் சிங்கர். என் பாடல்களை மேடையில் பாடுறேன். அது மக்கள சென்றடையுறதுல ரொம்ப சந்தோஷம்’’ எனச் சந்திரன் அவர் குறித்துப் பகிர்ந்துகொண்டார்.

சூப்பர் சிங்கர் டீம்
சூப்பர் சிங்கர் டீம்
அபர்ணா,  சஷாங்க் , பூஜா
அபர்ணா, சஷாங்க் , பூஜா

பிரியா ஜெர்சனை எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கே என்று தோன்றியது. அவரிடமே கேட்டோம். ‘‘2016 சூப்பர் சிங்கர் சீசன் 5-ல் கலந்துகிட்டேன். பைனல்கிட்ட வந்து கடைசி நிமிடத்தில் வாய்ப்பை இழந்துட்டேன். இந்த முறை திரும்பவும் முயற்சி பண்ணிப் பார்க்கலாம்னு வந்திருக்கேன். இப்ப உள்ள ஃபார்மேட் வேற லெவலில் இருக்கு. 5 பேர் எல்லாம் டேஞ்சர் ஜோனில் நிற்க வைக்கிறாங்க. போட்டி ரொம்பவே கடினமா இருக்கு. இதுக்கு முன்னாடி கச்சேரிகளெல்லாம் பாடிட்டிருந்தேன். இதுக்குப் பிறகும் கச்சேரிகள் பண்ணுவேன். பெரிய பர்ஃபாமர் ஆகணுங்கிறதுதான் ஆசை’’ எனப் புன்னகைத்தார்.

போட்டியாளர்கள் அனைவருக்கும் `ஆல் தி பெஸ்ட்' கூறிவிட்டு புறப்பட்டோம்.