லைஃப்ஸ்டைல்
தொடர்கள்
தன்னம்பிக்கை
Published:Updated:

“சிசிடிவி தவிர எல்லா டி.விலயும் பேசியிருக்கேன்!” - திருச்சி அன்னலெட்சுமி!

திருச்சி அன்னலெட்சுமி!
பிரீமியம் ஸ்டோரி
News
திருச்சி அன்னலெட்சுமி!

முதன்முதல்ல கலைஞர் டி.வில `அழகிய தமிழ்மகள்' நிகழ்ச்சில கலந்துகிட்டேன். தொடர்ந்து சன் டி.வில `அரட்டை அரங்கம்'ல கலந்துகிட்டேன்.

ஆசிரியர் பணி டு ஸ்டாண்ட் அப் காமெடியில் தடம் பதித்து வெற்றிபெற்றவர்கள் வரிசையில் திருச்சி அன்னலெட்சுமிக்கும் இடமுண்டு. பேச்சு நிகழ்ச்சிகள், பட்டிமன்றம், ஸ்டாண்ட் அப் காமெடி ஷோ என்று சுழன்றுகொண்டிருக் கிறார்.

“சிசிடிவி தவிர எல்லா டி.விலயும் பேசியிருக்கேன். முதன்முதல்ல கலைஞர் டி.வில `அழகிய தமிழ்மகள்' நிகழ்ச்சில கலந்துகிட்டேன். தொடர்ந்து சன் டி.வில `அரட்டை அரங்கம்'ல கலந்துகிட்டேன். அதுல கலந்துகிட்ட இந்துமணி என்பவர்தான் பட்டிமன்றத்துல பேச வாய்ப்பு குடுத்தாரு. `அரட்டை அரங்கம்’ நிகழ்ச்சிக்கு பத்தாவது முயற்சியிலதான் வாய்ப்பு கிடைச்சுது...” - ஆரம்ப கால நிகழ்ச்சிகளோடு ஆசிரியர் பணி அனுபவமும் பகிர்ந்தார்.

“10 வருஷம் தனியார் பள்ளிகள்ல டீச்சரா வேலை பார்த்தேன். ஒரு ரூபாயாவது கவர்ன் மென்ட் சம்பளம் வாங்கிடணும்னு ஆசை. அதனால நிறைய எக்ஸாம் எழுதுவேன். பட்டிமன்றம் பேசப் போற இடத்துல எல்லாம் படிச்சுட்டே இருப்பேன். பட்டிமன்றம் பேசிட்டு அரைத்தூக்கத்துல போய் எக்ஸாம் எழுதிட்டு வந்திருக்கேன். அப்பதான் டி.வி வாய்ப்புகள் வர ஆரம்பிச்சுது. அதுல கலந்துக்க ஸ்கூல்ல லீவு கேட்டதுக்கு டி.வியா, ஸ்கூலான்னு நீங்களே முடிவு பண்ணிக்கோங்கன்னு சொன்னாங்க. அந்த நேரத்துல என் குடும்பத்தைப் பார்த்துக்க டீச்சர் வேலையில கிடைச்ச 1,800 ரூபா சம்பளம் எனக்கு வேண்டியிருந்தது’’ - டீச்சர் வேலையைத் தொடர்ந்தவர், ஒருகட்டத்தில் அதை விட்டுவிட்டு கலைத்துறையில் கால் பதித்திருக்கிறார். 13 ஆண்டுகளில் 5,000-க்கும் மேற்பட்ட மேடைகளைக் கண்டிருக்கிறார்.

“சிசிடிவி தவிர எல்லா டி.விலயும் பேசியிருக்கேன்!” - திருச்சி அன்னலெட்சுமி!

“ஜீ தமிழ்ல ஞாயிறு பட்டிமன்றம் நிகழ்ச்சியில நான்தான் டைட்டில் வின்னர். டாக் ஷோவா போகுதே... இன்னும் வேற பரிமாணங்கள் எல்லாத்தையும் முயற்சி பண்ணிப்பாக்கணும்னு நினைச்சுதான் விஜய் டி.வில `கலக்கப்போவது யாரு சீஸன் 5', சன் டி.வில `காமெடி ஜங்ஷன்' நிகழ்ச்சிகள்ல கலந்துகிட்டேன். இப்போ கலைஞர் டி.வில `காமெடி பேட்டை' பண்ணிக்கிட்டு இருக் கேன். வடிவேல் மாதிரி பாடிலாங்வேஜ் இருக்குன்னு பேர் கிடைச்சிருக்கு’’ எனும் அன்னலெட்சுமிக்கு `ஜூனியர் மனோரமா' என்ற அடையாளமும் இருக்கிறது.

“நான் நாடோடி பழங்குடியினர் மாதிரி நல்லா பேசுவேன். ஒரு மேடையில அப்படித்தான் ‘அரே சாமியோ’ன்னு பேசிட்டு இருந்தேன். பேசி முடிச்சதும் கணவன், மனைவி, குழந்தைன்னு நாடோடி பழங்குடியினர் குடும்பமா மேடையில ஏறுனாங்க. கும்மப் போறாங்கன்னு நினைச்சா, அவங்க என் பேச்சைப் பாராட்டி ரெண்டு மணிமாலை கொடுத்துட்டு, என்கூட சேர்ந்து டான்ஸ் ஆடிட்டு கீழே இறங்குனாங்க. அன்னலெட்சுமி ஹேப்பி அண்ணாச்சி” என்பவர், முகம் சுளிக்க வைக்கிற காமெடி செய்வதில்லை என கொள்கை வைத்திருக்கிறாராம்.

“இந்தத் துறையில தடம் பதிக்க விரும்புற பெண்களுக்கு ஒரு அட்வைஸ். சின்ன வாய்ப்பா இருந்தாலும் சிபாரிசு இல்லாம நேரடியாதான் போகணும். அதுமட்டும்தான் வாழ்நாள் முழுக்க நமக்கு மதிப்பையும் மரியாதையையும் கொடுக்கும்” - சீரியஸ் டு சிரிப்பு மோடுக்கு மாறி, சுவாரஸ்யமான நிகழ்ச்சி ஒன்றைப் பகிர்ந்தார்.

“ஒரு நிகழ்ச்சிக்குப் போறதுக்காக கடலூர் பஸ் ஸ்டாண்டுல வெயிட் பண்ணிக் கிட்டிருந்தேன். ஒரு குடிகாரர் தள்ளாடிக்கிட்டே பக்கத்துல வந்தாரு. ‘யாருடா சொன்னா நயன்தாரா அழகுன்னு... இங்க இருக்கு பாருடா நயன்தாரா. வெயில்ல உட்கார்ந்திருக்கியே கறுத்துப் போயிட மாட்டியா’ன்னாரு... எனக்கு பயம் தாங்கல.

செல்போனை எடுத்து டயல் பண்ணாமலே ‘ஹலோ! எஸ்.ஐ சண்முகம் சாரா...கொஞ்சம் பஸ் ஸ்டாண்டு பக்கம் வாங்க சார்’னு சொன் னேன். அவ்ளோதான், ‘இந்தா... இப்போ எதுக்கு போலீஸுக்கெல்லாம் போன் பண்ற... 10 ரூபா இருந்தா குடு... சைடிஷ் வாங்கணும்’னு சொன்னாரு. அடப்பாவி!

10 ரூபாய்க்காடா என்ன நயன்தாரானெல்லாம் சொன் னன்னு தலையில அடிச்சிக் கிட்டேன்” என்றவருக்கு இப்போது கவர்ன்மென்ட் சம்பள ஆசை இல்லையாம்.

“ஒவ்வொரு மேடையுமே ஒரு பேச்சாளனுக்கு போர்க் களம்தான். பேசி முடிச்சு கைதட்டல் வாங்கிட்டு இறங்குனாதான் மூச்சே வரும். என் ரசிகர்கள் கொடுக்கிற கைதட்டல்கள் எனக்கு கவர்ன்மென்ட் சம்பளத்தைவிட பெருசு”

- மனம் நிறைந்து பேசுகிறார் அன்னலெட்சுமி.