Published:Updated:

``காலேஜ்ல பாடகி... ஷூட்டிங்ல டாக்டர்... எல்லாம் கனவு மாதிரி இருக்கு!” - `சூப்பர் சிங்கர்’ பிரியங்கா

பிரியங்கா
பிரியங்கா

``படிப்பு, இசைத்துறை ரெண்டையும் பேலன்ஸ் பண்ணணும்னு பி.டி.எஸ் படிச்சேன். அந்த டைம்லதான் திடீர்னு பிரபலமானேன். அதுக்குப் பின்னாடி சுவாரஸ்யமான கதை இருக்கு.” - சஸ்பென்ஸுடன் இடைவெளி விடுகிறார்.

`சின்னச் சின்ன வண்ணக்குயில்’ பாடல் புகழ் பிரியங்காவுக்குத் தனி ரசிகர்கள் பட்டாளமே உண்டு. ஒரே பாடலில் ஓஹோவென புகழ்பெற்றவர், இசைத்துறையிலும் படிப்பிலும் பிஸியாக இருந்தார். பல் மருத்துவப் படிப்பை முடித்திருப்பவர், விரைவில் டாக்டராகப் பணியாற்ற இருக்கிறார். வாழ்த்துகள் கூறி பிரியங்காவிடம் பேசினோம். தனது இசைப் பயணம் முதல் பர்சனல் வரை நிறைய விஷயங்களைப் பகிர்ந்தார். பிரியங்காவின் மென்மையான பேச்சுகூட இசையாக ஒலிக்கிறது.
பிரியங்கா
பிரியங்கா

``சின்ன வயசுல இருந்தே இசை கத்துக்கிறேன். எட்டாவது படிக்கும்போது `சூப்பர் சிங்கர் ஜூனியர்’ சீஸன் 2-ல் கலந்துகிட்டேன். இயல்பா அந்த நிகழ்ச்சியில் பாடினேன். `டாப் 6’ போட்டியாளரா இடம் பிடிச்சேன். ஃபைனலுக்குக்கூட போக முடியலையேனு வருத்தப்பட்டேன். மக்கள்கிட்ட அப்போ நான் பெரிசா ரீச் ஆகலை. நான் டாக்டர் ஆகணும்ங்கிறது என் பெற்றோரின் கனவு. அந்த ஆசை எனக்கும் இருந்ததால படிப்புக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தேன். ப்ளஸ் டூ முடிச்சதும், எம்.பி.பி.எஸ் படிக்கும் வாய்ப்பு கிடைச்சது. ஆனா, படிப்பு, இசைத்துறை ரெண்டையும் பேலன்ஸ் பண்ணணும்னு பி.டி.எஸ் படிச்சேன். அந்த டைம்லதான் திடீர்னு பிரபலமானேன். அதுக்குப் பின்னாடி சுவாரஸ்யமான கதை இருக்கு.” - சஸ்பென்ஸுடன் இடைவெளி விடுகிறார்.

``ஸ்கூல் படிச்சுட்டு இருக்கும்போது, நேரம் கிடைக்கிறப்போ மட்டும் விஜய் டிவியின் இசை நிகழ்ச்சிகள்ல கலந்துகிட்டுப் பாடினேன். ப்ளஸ் ஒன் படிக்கிறப்போ, `டி20 20’னு விஜய் டிவி நிகழ்ச்சியில கலந்துகிட்டேன். இசை நிகழ்ச்சிகள்ல அதிகம் பாடப்படாத பாடலைப் பாடலாமேன்னுதான், `சின்னச் சின்ன வண்ணக்குயில்’ பாடலை செலக்ட் பண்ணிப் பாடினேன்.

பிரியங்கா
பிரியங்கா

நடுவர்கள், நண்பர்கள் எல்லோரும் நான் நல்லா பாடினதா பாராட்டினாங்க. இயல்பான விஷயமா அந்தத் தருணம் கடந்துபோச்சு. ஆனா, காலேஜ்ல மூணாவது வருஷம் படிச்சுகிட்டு இருந்தபோது, முன்பு நான் பாடின `சின்னச் சின்ன வண்ணக்குயில்’ பாட்டு மட்டும் சமூக வலைதளங்கள்ல பலராலும் பகிரப்பட்டு, ரசிக்கப்பட்டு, பாராட்டப்பட்டு வைரலாச்சு. இது எனக்கே நம்ம முடியாத ஆச்சர்யம்தான்.

ஏ.ஆர்.ரஹ்மானுடன் பிரியங்கா
ஏ.ஆர்.ரஹ்மானுடன் பிரியங்கா

பிறகு வழக்கம்போல விஜய் டிவி நிகழ்ச்சியில பாடினாலும், என்மீது எதிர்பார்ப்பு உருவாச்சு. விஜய் டிவி டெலிவிஷன் விருது நிகழ்ச்சியில எனக்கு விருது கிடைச்சுது. அந்த மேடையிலும், `சின்னச் சின்ன வண்ணக்குயில்’ பாடலின் சில வரிகளைப் பாடினேன். அதுவும் வைரலாச்சு. மேடைக் கச்சேரிகள்ல பாடும் வாய்ப்புகள் நிறைய கிடைச்சுது. தொடர்ந்து மியூசிக்கும் கத்துகிட்டேன். அதனால, தூக்கம் இழந்து படிப்பிலும் இசைத்துறையிலும் கவனம் செலுத்தினேன். காலேஜ்ல என்னைக் கொஞ்சம் ஸ்பெஷலா பார்த்தாங்க. எனக்குக் கூச்சமாவும் சிரிப்பாவும் இருக்கும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

காலேஜ்ல ஃபிரெண்ட்ஸ் அடிக்கடி என்னைப் பாடச் சொல்லிக் கேட்பாங்க. அங்க கல்ச்சுரல் நிகழ்ச்சி தொடங்கி டிபார்ட்மென்ட்ல புது லேப் திறக்கிற நிகழ்ச்சிவரை எல்லாத்துலயும் என்னைப் பாடச் சொல்வாங்க. அதேபோல விஜய் டிவி நிகழ்ச்சிகளுக்குப் போனா, பலரும் என்கிட்ட பல் பராமரிப்புக்கு டிப்ஸ் கேப்பாங்க. அந்த செட்லயே சிலர் வாய்ல டார்ச் லைட் அடிச்சுப் பார்த்து ஆலோசனை கொடுப்பேன். அப்போ சிரிப்பா இருக்கும். அந்த நாள்கள் பரபரப்பாவும் சுவாரஸ்யமாவும் ஓடின. இப்போகூட சின்னத்திரை பிரபலங்கள் பலரும் போன்ல பல் பராமரிப்புக்கு என்கிட்ட ஆலோசனை கேட்பாங்க” என்று குலுங்கிச் சிரிக்கிறார்.

டி.டி உடன் பிரியங்கா
டி.டி உடன் பிரியங்கா

அதிர்ந்துகூடப் பேசாத இயல்பு கொண்ட பிரியங்காவுக்கு, நடிப்பு வாய்ப்புகளும் அணி வகுக்கின்றனவாம். இதுகுறித்துப் பேசுபவர், ``இசை வாய்ப்புகளுக்கு இடையே, ஆக்டிங் வாய்ப்புகளும் தொடர்ந்து வருது. என்னோட அமைதியான கேரடக்டருக்கு நடிப்பு செட் ஆகாது. அதில்லாம இசை, படிப்புக்கு இடையே நடிப்புக்கு நேரம் ஒதுக்கிறது சிரமம். விஜய் சேதுபதி சார் பட வாய்ப்பு வந்தும் மறுத்தோம். அதேபோல, பார்த்திபன் சார், லாரன்ஸ் சார் உட்பட சிலர் என்னை நேரில் அழைச்சுப் பாராட்டியதுடன் நடிக்கவும் கேட்டாங்க. நேரமின்மையால் மறுக்கவே, அதை அன்புடன் ஏத்துக்கிட்டாங்க.

இளையராஜா சார், ஏ.ஆர்.ரஹ்மான் சார், இமான் சார், ஜி.வி.பிரகாஷ் சார் உட்பட பல இசையமைப்பாளர்களுக்கும் பாடியிருக்கேன். நிறைய மேடை நிகழ்ச்சிகளிலும் பாடிட்டேன். அதில், கடந்த வருஷம் மலேசியாவுல எஸ்.பி.பி சார்கூட சேர்ந்து பாடியது ஸ்வீட் மெமரி. என்கிட்ட அன்பா பேசி, நிறைய டிப்ஸ் கொடுத்தார். அவர் சீக்கிரமே உடல்நலம் குணமாகி திரும்பி வரணும். அவர்கூட மீண்டும் நான் பாட காத்துக்கிட்டிருக்கேன். எனக்கான இந்த வாய்ப்புகள் எல்லாத்துக்குமே `சின்னச் சின்ன வண்ணக்குயில்’ பாட்டுதான் காரணம். அந்தப் பாடலை இதுவரை நூற்றுக்கணக்கான இடங்கள்ல பாடிட்டேன். ஆனாலும், இப்பவரை போற இடங்கள்ல தவறாம பாடச் சொல்வாங்க.

எஸ்.பி.பி உடன் பிரியங்கா
எஸ்.பி.பி உடன் பிரியங்கா

சின்ன வயசுல உரிய அங்கீகாரம் கிடைக்காம வருத்தப்பட்ட நிலையில், சம்பந்தமே இல்லாம திடீர்னு எப்படிப் புகழ் கிடைச்சுதுனு அடிக்கடி யோசிப்பேன். குழப்பமாகி சிரிச்சுட்டு அடுத்த வேலையைப் பார்க்கப் போயிடுவேன். திறமைக்கு என்னைக்காவது ஒருநாள் பலன் கிடைக்கும்னு சொல்வாங்கள்ல. அதுக்கு உதாரணமா, என் வாழ்க்கையில் நிகழ்ந்த மாற்றத்தை நினைச்சுப்பேன்.” - மென்மையாகச் சிரிக்கும் பிரியங்கா, பல்வேறு திரைப்படங்களில் 20-க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியிருக்கிறார்.

பிரியங்காவின் பாதுகாப்பு அரண், அவரின் அப்பா. உள்ளூர், வெளியூர் எதுவானாலும் அப்பாதான் பிரியங்காவுக்கு துணை. ``எனக்கு விவரம் தெரிஞ்ச காலத்துல இருந்து இப்பவரை எங்கேயும் நான் தனியா போனதில்லை. பெற்றோர்ல யாராச்சும் ஒருவர் எனக்குப் பாதுகாப்புக்காக உடன் வருவாங்க. என் நிழலும் அவங்கதான். பெற்றோர் இல்லாம சொந்தக்காரங்க, ஃபிரெண்ட்ஸ் உட்பட யார் வீட்டுக்கும் இதுவரை நான் போனதில்லை. பக்கத்துல கடைக்குப் போகணும்னாகூட வீட்டுல யாராச்சும் ஒருவர் என்கூட வருவாங்க. சின்ன வயசுல இருந்தே இப்படியே பழகிட்டதால, என் பாதுகாப்புக்குக் கூட ஒருத்தர் வருவது எனக்குப் பிடிச்சுப்போச்சு.

பெற்றோருடன் பிரியங்கா
பெற்றோருடன் பிரியங்கா

என்னோட பர்சனல் உலகமும்கூட ரொம்பவே எளிமையானதுதான். அதிகமா பேச மாட்டேன். கோபப்பட மாட்டேன். எந்தக் கவலையும் எனக்குள் தங்காம சிரிப்பால கடந்துடுவேன். அம்மா கர்னாட்டிக் மியூசிக் டீச்சர் கம் பாடகி. எனக்காக அவங்க தன் இசைப் பயணத்தையே நிறுத்திட்டாங்க. பியானோ கலைஞரான அப்பா, எப்போதும் எனக்குப் பாதுகாப்பு அரணா இருப்பார். நான் சின்னதா வருத்தப்பட்டால்கூட துடிச்சுடுவார். இப்படிப்பட்ட பெற்றோர் கிடைக்க நான் கொடுத்து வெச்சிருக்கணும்.” - நெகிழ்ச்சியாகக் கூறும் பிரியங்காவின் பேச்சு, லாக்டெளன் காலகட்டத்துக்குள் திரும்பியது.

``2018-ல் படிப்பை முடிச்சேன். பிறகு, தொடங்கிய இன்டர்ன்ஷிப் கடந்த மார்ச் மாசம்தான் முடிஞ்சது. புது கிளினிக் தொடங்கலாம்னு திட்டமிட்டிருந்த நேரத்துலதான், கொரோனா பிரச்னை உருவாச்சு. அதனால, அந்தத் திட்டம் தள்ளிப்போகுது. அதேநேரம் தெரிஞ்சவங்களுக்கு மருத்துவ ஆலோசனைகள் கொடுத்துக்கிட்டிருக்கேன். ரூட் கெனால் பத்தி சின்ன கோர்ஸ் படிக்கவும் திட்டமிட்டிருக்கேன். லாக்டெளன்ல சமையல் கத்துக்கிட்டேன். நிறைய ஓய்வுநேரம் கிடைச்சதால, பல மொழி படங்களைப் பார்த்தேன்.

பிரியங்கா
பிரியங்கா

இதுக்கிடையே, நாலு வருஷ படிப்பை முடிச்சதும் ஒருமாத விடுமுறைக்காகக் கனடாவுல இருக்கிற சொந்தக்காரங்க வீட்டுக்குப் போயிருந்தோம். அங்க குடும்ப நண்பர்கள் உதவியுடன், `நியூயார்க் நகரம்’, `காதல் சடுகுடு’ உட்பட சில பாடல்களை நான் பாடி ஷூட் பண்ணினோம். அதில் ஆடியோ கரெக்ஷன்ஸ் செய்ய வேண்டியது இருந்துச்சு. பிறகு, நேரமின்மையால் அந்த வேலைகள் தள்ளிப்போச்சு. போன வருஷம்தான் எடிட் பண்ணி, ஒவ்வொரு பாடலா என்னோட யூடியூப்ல பதிவிட்டேன். பல லட்சம் வியூஸ் கிடைச்சாலும், இப்பவரை நாலு பாடல்கள்தான் பதிவிட்டிருக்கேன். அதேபோல வெளிநிகழ்ச்சிகள்ல நான் பாடும் பாடல்களில் சிலவற்றை செலக்ட் பண்ணி தனி யூடியூப் சேனல்ல பதிவிடறேன்.

இனி தொடர்ந்து தனி ஆல்பம் மாதிரி திரையிசைப் பாடல்களைப் பாடி ரிலீஸ் பண்ணத் திட்டமிட்டிருக்கேன். என்னோட குரலுக்கு மெலடி பாடல்கள் பொருத்தமா இருக்கும். மக்களுக்குப் பிடிக்கும்படியா சினிமாவுல மெலடி பாடல்கள் அதிகம் பாடணும்னு ஆசை. என்ன நடக்குதுனு பொறுத்திருந்து பார்ப்போம்” - கலகலவென குயில்போலச் சிரிக்கிறார் பிரியங்கா!

அடுத்த கட்டுரைக்கு