Published:Updated:

`250 ரூபாய்..!' `சூப்பர் சிங்கர்' சோனியா இப்போது எப்படி இருக்கிறார்?

விஜய் சேதுபதியுடன் சோனியா
விஜய் சேதுபதியுடன் சோனியா

`சூப்பர் சிங்கர்' சோனியா இப்போது எப்படியிருக்கிறார்?!

விஜய் டிவி `சூப்பர் சிங்கர்' நிகழ்ச்சி புகழ் சோனியா, தற்போது வெளிநாட்டுக் கச்சேரிகளில் பிஸியாக இருக்கிறார். குடும்ப வறுமையுடன் போராடி, தன் இசைத் திறமையை நிரூபித்தவர். கடந்த ஆண்டு திருமணம் நடந்த நிலையில், இசை வாழ்விலும் இல்லற வாழ்விலும் புது மலர்ச்சியுடன் பயணித்துக்கொண்டிருக்கிறார். தற்போது கச்சேரிக்காகக் கனடாவில் இருப்பவர், தன் இசைப் பயணம் குறித்து மகிழ்ச்சியுடன் பேசுகிறார். 

சோனியா
சோனியா

"நான் மலையாளி. வறுமையான குடும்பம். எனக்கும் அக்காவுக்கும் இசை ஆர்வம் அதிகமிருந்துச்சு. அதனால், ரொம்பப் சிரம்பப்பட்டு அம்மா எங்களை மியூசிக் டியூஷனுக்கு அனுப்புவாங்க. `இவ்வளவு கஷ்டத்தில் எதுக்குப் பிள்ளைகளை மியூசிக் கத்துக்க அனுப்பறீங்க?'னு பலரும் அம்மாகிட்ட கேட்பாங்க. `என் மகள்களின் திறமை வெளியுலகத்துக்குத் தெரியணும்'னு எங்கம்மா சொல்வாங்க. இசைப் போட்டிகளில் நான் வென்ற பரிசுக் கோப்பை, ஷீல்ட் எல்லாம் நாலு பொட்டிகளில் வைக்கிற அளவுக்கு இருக்கு.

`சூப்பர் சிங்கர்' நிகழ்ச்சிக்கு முன்னாடி, மலையாளத்தில் நாலு ரியாலிட்டி ஷோவுல போட்டியாளரா கலந்துகிட்டேன். அதுல `கந்தர்வ சங்கீதம்'ங்கிற இசை நிகழ்ச்சியில போட்டியாளரா கலந்துகிட்டேன். இறுதிப் போட்டியில, `ஏழு ஸ்வரங்களுக்குள்'ங்கிற தமிழ் பாடலைப் பாடினேன். நான்தான் வெற்றி பெறுவேன்னு எல்லோரும் எதிர்பார்த்தாங்க. ஆனா, எனக்கு மூணாவது பரிசுதான் கிடைச்சுது.

`நீங்க எதுக்குத் தமிழ் ரியாலிட்டி நிகழ்ச்சியில கலந்துக்கறீங்க?'னு சிலர் கேட்டாங்க. ஆனா, அதை நான் பொருட்படுத்திக்கலை. இசைக்கு மொழிப் பாகுபாடு உண்டா?
சோனியா

நான் ரொம்பவே வருத்தப்பட, பாடகர் யேசுதாஸ் சாரும் அவருடைய மகன் விஜய் யேசுதாஸ் சாரும் எனக்கு ஆறுதல் சொன்னாங்க. பிறகு, யேசுதாஸ் சார் சிபாரிசு செய்ய, 2006-ம் ஆண்டு `லேப் டாப்'ங்கிற மலையாளப் படத்தில் ரெண்டு பாடல்கள் பாடும் வாய்ப்பு கிடைச்சுது. வெளிநாட்டு வேலை சரியா அமையாததால, எங்கப்பா சொந்த ஊருக்கு வந்துட்டார். பிறகு, அவர் தொடங்கிய தொழிலும் நஷ்டமாகிடுச்சு. சொந்த வீட்டை வித்துட்டு, வாடகை வீட்டுல வசிச்சோம். அப்போ ஸ்கூல் படிச்சுட்டிருந்தேன். குடும்பக் கஷ்டத்துக்கு நான் நிறைய கச்சேரிகளில் பாடுவேன்.

ஒரு கச்சேரியில பாடினால், 250 ரூபாய்தான் கிடைக்கும். அந்தப் பணம் குடும்பத் தேவைக்குப் பெரிய உதவியா இருக்கும். கச்சேரிகள் இரவு நேரங்களில்தான் இருக்கும். அதனால இரவில் பாடியதால் உண்டான சோர்வில், பகலில் ஸ்கூல்ல தூங்கிடுவேன். இதனால், ஆசிரியர்கள் என்னைத் திட்டுவாங்க. கச்சேரிக்குப் போகும் நேரம், கச்சேரியில் கிடைக்கும் ஓய்வு நேரங்கள்ல படிச்சு, ஸ்கூல்ல நல்ல பெயர் எடுத்தேன்" என்பவர், தமிழ் இசையுல என்ட்ரி குறித்துப் பேசுகிறார். 

சோனியா
சோனியா

"கேரளாவில் புகழ்பெற்ற`ஸ்டார் சிங்கர்' இசை நிகழ்ச்சியில வெற்றி பெற்று, ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள வீட்டைப் பரிசாகப் பெற்றேன். எனக்குத் தமிழ் பாடல்கள் ரொம்பப் பிடிக்கும். அதனால, விஜய் டிவி `சூப்பர் சிங்கர்' நிகழ்ச்சியின் நான்காவது சீஸன்ல போட்டியாளரா கலந்துகிட்டேன். `நீங்க எதுக்குத் தமிழ் ரியாலிட்டி நிகழ்ச்சியில கலந்துக்கறீங்க?'னு சிலர் கேட்டாங்க. ஆனா, அதை நான் பொருட்படுத்திக்கலை. இசைக்கு மொழிப் பாகுபாடு உண்டா?

தமிழ் மொழி சரியா தெரியாட்டியும், சவாலா எடுத்துகிட்டு பாடினேன். `சூப்பர் சிங்கர்' நிகழ்ச்சியில பலரும் எனக்கு ஊக்கம் கொடுத்தாங்க. பல நாடுகளிலுள்ள தமிழ் மக்களும் எனக்கு ஆதரவு கொடுத்தாங்க. எந்தப் பொறாமையும் இல்லாம, சக போட்டியாளர்கள் ஒற்றுமையா இருந்தோம். அப்போ எஸ்.ஜானகி அம்மா, எஸ்.பி.பி சார், ஆஷா போஸ்லே அம்மா, எல்.ஆர்.ஈஸ்வரி அம்மா, ஏ.ஆர்.ரஹ்மான் சார் உட்பட பல ஜாம்பவான்களின் பாராட்டுகளைப் பெற்றேன். குறிப்பா, எஸ்.ஜானகி அம்மா கலந்துகிட்ட சுற்றில், `அழகு மலராட' பாடலைப் பாடினேன். என்னைக் கட்டிப்பிடிச்சு முத்தம் கொடுத்துப் பாராட்டினார் ஜானகி அம்மா. அதன் பிறகு நான் எங்க போனாலும், அந்தப் பாடலைப் பாடினதைப் பத்தியே பலரும் பாராட்டுவாங்க.

`நான் உன் ரசிகன்'னு அவர் அடிக்கடி பாராட்டும்போதெல்லாம், எனக்கு வெட்கம் வந்துடும்.
சோனியா

வைரமுத்து சார் கலந்துகிட்ட ஒரு சுற்றுல, `நாதம் என் ஜீவனே' பாடலைப் பாடினேன். `நீங்கள் ஜானகி அம்மாவைத் தொட்டுவிட முடியாது. ஆனால், நெருங்கிவிட முடியும்'னு வாழ்த்தினார் வைரமுத்து சார். எனக்கு ஸ்கூல் நண்பர்களைவிட,`சூப்பர் சிங்கர்' நண்பர்கள்தாம் அதிகம். மேடை நிகழ்ச்சிகளில் நாங்க சந்திப்போம். தொடர்ந்து நட்பில் இருக்கிறோம்" - சந்தோஷமாக ஒலிக்கும் சோனியாவின் குரலில், ஒரு சோகம் இழையோடுகிறது.

"சமீபத்துல ரெண்டு விளம்பரங்களுக்குப் பாடியிருக்கேன். ஆனா, பின்னணிப் பாடகியா சொல்லிற அளவுக்கு எந்த வாய்ப்பும் வரலை. `ஸ்டார் சிங்கர்' வெற்றிக்குப் பிறகு, மலையாள இசையுலகில் எனக்கு நல்ல அடையாளம் கிடைச்சுது. எனக்கு நிறைய சினிமா பிரபலங்களும் வாழ்த்துச் சொல்வாங்க. ஆனா, இதுவரை பிரேக் கொடுக்கிற அளவுக்கு எந்தப் பாடல் வாய்ப்பும் வரலை. அதற்கான காரணமும் தெரியலை. தினமும் இசைப் பயிற்சி எடுத்துக்கிறேன். நல்ல வாய்ப்புகள் வருங்கிற நம்பிக்கையில், அதற்கு என்னைத் தயார்படுத்திக்கிறேன். 

சோனியா
சோனியா

விஜய் சேதுபதி சார் நடிக்கும் `இடம் பொருள் ஏவல்' படத்துல `குறுந்தோகை கொண்டாடும் காதல் மைந்தா'னு ஒரு பாடலைப் பாடியிருக்கேன். அந்தப் படம் ரிலீஸானதும், எனக்குப் பாடல் வாய்ப்புகள் வரும்னு உறுதியா நம்புறேன். இப்போ நிறைய வெளிநாடுகளுக்குப் போய் பாடிட்டிருக்கேன். இதுவரை 18 நாடுகளுக்குப் போய் பாடியிருக்கேன். அதன் மூலம்தான் பொருளாதார தேவையை ஓரளவுக்குப் பூர்த்தி செய்துக்க முடியுது. `டிராவல் சிங்கர்'னு நண்பர்கள் என்னைக் கிண்டல் பண்ணுவாங்க.

ஒருமுறை வெளிநாட்டு கச்சேரியில் இருந்தப்போதான், ஏ.ஆர்.ரஹ்மான் சார் இசையில் பாடும் வாய்ப்பு வந்து என்னால பாட முடியாம போச்சு. அதனால் இப்போவரை எனக்கு வருத்தமுண்டு. ஸ்கைப்பில் இசைப் பயிற்சியும் கொடுக்கிறேன்" என்கிற புதுப் மணப்பெண் சோனியாவின் முகத்தில் வெட்கம் தொற்றிக்கொள்கிறது.

கணவருடன் சோனியா
கணவருடன் சோனியா

"போன வருஷ இறுதியில்தான் எனக்கு கல்யாணமாச்சு. கணவர் அமோத் சக்ரபாணி, ரொம்பவே அன்பானவர். என் இசைப் பயணத்துக்கு அவருடைய சப்போர்ட் அதிகம் கிடைக்குது. என்னைப் பின்னணிப் பாடகியா பார்க்கணும்னு அவர் ரொம்பவே ஆசைப்படுகிறார். `நான் உன் ரசிகன்'னு அவர் அடிக்கடி பாராட்டும்போதெல்லாம், எனக்கு வெட்கம் வந்துடும்" என்று புன்னகையுடன் கூறுகிறார் சோனியா.

அடுத்த கட்டுரைக்கு