Published:Updated:

`ஏன் எந்த நிகழ்ச்சியிலயும் கலந்துக்கலை!?” - `சூப்பர் சிங்கர்' ஸ்பூர்த்தி

ஸ்பூர்த்தி
ஸ்பூர்த்தி

`சூப்பர் சிங்கர்' ஸ்பூர்த்தி இப்போது எப்படியிருக்கிறார்?

விஜய் டிவி `சூப்பர் சிங்கர்' புகழ் ஸ்பூர்த்தியைப் பலரும் மறந்திருக்க வாய்ப்பில்லை. அந்த நிகழ்ச்சியின் மூன்றாம் சீஸன் (ஜூனியர்) வெற்றியாளர். அழகிய குரலாலும் குழந்தைத்தனமான செயல்பாடுகளாலும் ரசிகர்களை வசீகரித்தவர். கடந்த சில ஆண்டுகளாக எந்த மீடியா நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்ளாமல் இருந்தார், இந்த க்யூட் பேபி. இந்நிலையில், நேற்று இரண்டரை மணிநேர இசை நிகழ்ச்சியை நடத்தியிருக்கிறார். தன் இசை ஆர்வம் மற்றும் படிப்பு குறித்து உற்சாகமாகப் பேசுகிறார் ஸ்பூர்த்தி.

``சில வருஷங்களுக்கு முன்பு நாங்க அமெரிக்காவுல வசிச்சோம். அப்போ என் அம்மா மியூசிக் கிளாஸ் எடுப்பாங்க. அவங்ககிட்ட ரெண்டரை வயசுல மியூசிக் கத்துக்க ஆரம்பிச்சேன். பிறகு, பெங்களூரில் குடியேறினோம். ஐந்தாம் வகுப்பு படிக்கிறப்போ, `சூப்பர் சிங்கர்' நிகழ்ச்சியில கலந்துகிட்டேன். அந்தப் பயணத்தை என்னால மறக்கவே முடியாது. வீட்டுக்குள்ள மட்டுமே பாடிட்டிருந்த என்னை, பலருக்கும் தெரிய வெச்சது அந்த நிகழ்ச்சி. 

ஸ்பூர்த்தி
ஸ்பூர்த்தி

அப்போ எனக்குத் தமிழ் மொழி சுத்தமா தெரியாது. கன்னடத்துல எழுதி வெச்சுதான் தமிழ் பாடல்களைப் பாடுவேன். `சூப்பர் சிங்கர் (ஜூனியர்)' நிகழ்ச்சியின் 4-வது சீஸன்ல முதல் பரிசு வாங்கினேன். சகோதரிகளான ரஞ்சனி-காயத்ரி ஆகியோரிடம் முறைப்படி இசைக் கத்துக்க ஆரம்பிச்சேன். ஓரளவுக்கு மியூசிக் கத்துகிட்டு, பிறகு மேடை நிகழ்ச்சிகள்ல பாடலாம்னு முடிவெடுத்தோம். கடந்து நாலு வருஷமா கர்னாட்டிக் மியூசிக் கத்துகிறேன். அதனால, `சூப்பர் சிங்கர்' நிகழ்ச்சிக்குப் பிறகு வெளிநிகழ்ச்சிகளில் எதிலும் நான் பாடலை.

அவ்வளவு ஏன்... நான் கலந்துகிட்ட சீஸனுக்குப் பிறகு நடந்த `சூப்பர் சிங்கர்' நிகழ்ச்சியின் சீஸன்களில்கூட நான் கலந்துக்கவேயில்லை. அதனால, நான் என்ன ஆனேன்னு தெரிஞ்சுக்க பலரும் ஆர்வம் காட்டினாங்க. நான் அமெரிக்காவுல குடியேற்றிட்டதா பலரும் நினைச்சுகிட்டாங்க. அது உண்மையில்லை. நான் சென்னையிலதான் வசிக்கிறேன். 

ஸ்பூர்த்தி
ஸ்பூர்த்தி

தொடர்ந்து வாழ்க்கை முழுக்க இசை கத்துக்கணும். ஆனா, இப்போ வெளிநிகழ்ச்சிகளில் முறையாவும் சரியாவும் பாடுவதற்கான அனுபவமும் பயிற்சியும் எனக்குக் கிடைச்சிருக்கு. அதனால இசை மேதைகள், பிரபல பின்னணிப் பாடகர்கள், சபா ஒருங்கிணைப்பாளர்கள்னு பலரையும் வரவழைச்சு ஒரு நிகழ்ச்சி பண்ணலாம்னு முடிவெடுத்தோம். நடனத்துல அரங்கேற்றம் பண்ணுவாங்கள்ல. அதுபோலதான் இந்த இசை நிகழ்ச்சியை நடத்தினோம்" என்கிற ஸ்பூர்த்தியின் முகத்தில் அழகிய புன்னகை.

``நேற்று (சனிக்கிழமை) இந்த நிகழ்ச்சி சென்னை ஆர்.ஆர் சபாவுல நடந்துச்சு. அதில், ரெண்டரை மணிநேரம் பாடினேன். நல்லி குப்புசாமி சார், நித்யஶ்ரீ மகாதேவன் மேடம், உன்னி கிருஷ்ணன் சார், ஶ்ரீநிவாஸ் சார், கர்னாடக இசைக் கலைஞர்கள், `சூப்பர் சிங்கர்' நண்பர்கள்னு நிறைய பேர் கலந்துகிட்டு, என் பாடலைக் கேட்டு ரசிச்சாங்க. என்னை வாழ்த்தினாங்க.

ஒன்பதாம் வகுப்பு படிக்கிறேன். படிப்புல நான் டாப். கடந்த வெள்ளிக்கிழமை என் ஸ்கூல்ல ஆண்டு விழா நடந்துச்சு. அதில், `அவுட்ஸ்டேண்டிங் ஸ்டூடண்ட்' விருது உட்பட ரெண்டு பரிசுகளை வாங்கினேன். `படிப்புதான் முக்கியம்'னு பெற்றோர் உறுதியா சொல்லிட்டாங்க. எனக்கும் படிப்புல அதிக ஆர்வம்.

குடும்பத்தினருடன் ஸ்பூர்த்தி
குடும்பத்தினருடன் ஸ்பூர்த்தி

அதேசமயம் என் இசை ஆர்வத்துக்கும் பெற்றோர் முழு ஒத்துழைப்பு கொடுத்தாங்க. இப்போவரை எதிர்கால இலக்குனு எதையும் வெச்சுக்கலை. அதனால பயமில்லாம, குழப்பமில்லாம இந்தக் குழந்தைப் பருவம் எனக்கு நல்லபடியா போகுது. ப்ளஸ் டூ முடிச்சுட்டுதான், எதிர்கால கரியர் பத்தி முடிவெடுக்கணும்.

நிறைய புக்ஸ் படிப்பேன். ஓரளவுக்குத்தான் குறும்பு செய்வேன். யார் எது சொன்னாலும் உடனே கேட்டுக்க மாட்டேன். `ஏன், எதுக்கு?'னு கேள்வி கேட்டுகிட்டே இருப்பேன். எப்பயாச்சும்தான் அமெரிக்கா போயிட்டு வர்றோம்.

தொடர்ந்து சென்னையிலதான் வசிப்போம். இப்போ ஓரளவுக்கு இசைக் கத்துகிட்டதாலயும், இசை நிகழ்ச்சி பண்ணிட்டதாலயும், இனி வெளிநிகழ்ச்சிகளில் பங்கெடுப்பேன். சினிமா பாடல்களையும் பாட ஆர்வமா இருக்கேன். 

ஸ்பூர்த்தி
ஸ்பூர்த்தி

வீட்டில் என் தாய்மொழி கன்னடத்துலதான் பேசுவோம். சென்னையில குடியேறி நாலு வருஷம் ஆகுது. அதன் பிறகுதான், தமிழ் கத்துக்க ஆரம்பிச்சேன். இப்போ நல்லா தமிழ் பேசுறேன். என் தம்பி சமர்த் ஏழாவது படிக்கிறான். அவனுக்கும் இசையில் அதிக ஆர்வமுண்டு. நானும் தம்பியும் மிருதங்கமும் கத்துகிக்கிறோம்" என்று புன்னகைக்கிறார் ஸ்பூர்த்தி.

அடுத்த கட்டுரைக்கு