Published:Updated:

`குழந்தை' சுரேஷ், கைகொடுத்த அனிதா; தொடரும் சனம் vs பாலா... பிக்பாஸ் வீட்டில் நடந்தது என்ன? – நாள் 6

பிக்பாஸ் - நாள் 6

முதலில் பிடித்தவர்களாக சம்யுக்தாவையும் பாலாவையும் தேர்ந்தெடுத்த சனம், இப்போது தோசையை அப்படியே திருப்பிப் போட்டது பிக்பாஸின் சுவாரஸ்யங்களுள் ஒன்று. பிக்பாஸ் வீட்டில் நடந்தது என்ன? – நாள் 6

Published:Updated:

`குழந்தை' சுரேஷ், கைகொடுத்த அனிதா; தொடரும் சனம் vs பாலா... பிக்பாஸ் வீட்டில் நடந்தது என்ன? – நாள் 6

முதலில் பிடித்தவர்களாக சம்யுக்தாவையும் பாலாவையும் தேர்ந்தெடுத்த சனம், இப்போது தோசையை அப்படியே திருப்பிப் போட்டது பிக்பாஸின் சுவாரஸ்யங்களுள் ஒன்று. பிக்பாஸ் வீட்டில் நடந்தது என்ன? – நாள் 6

பிக்பாஸ் - நாள் 6
இந்த சீஸனில் கமல் வருகை தரும் முதல் நாள் இது. பொதுவாக, இதர நாட்களில் பிக்பாஸ் பார்க்காதவர்கள் கூட இன்று இந்த நிகழ்ச்சியைப் பார்ப்பதற்கு காரணம் கமல்.

அவரின் அட்டகாசமான ஒன்லைனர்கள், வார்த்தை விளையாட்டுக்கள், கொளுத்திப் போடும் அரசியல் பட்டாசுகள், சிலந்தி தன் இரையை நோக்கி நகர்வது போல் பிழை செய்யும் போட்டியாளர்களை தன் வியூகத்திற்குள் நகர்த்தி வரும் லாகவம் போன்ற காரணங்களுக்காக இன்று பார்ப்பார்கள்.

ஆனால் கமலால் கூட இன்றைய நிகழ்ச்சியின் சுவாரஸ்யத்தைக் கூட்ட முடியவில்லை. ஆங்காங்கே சில இடங்களில் மட்டும் சுவாரஸ்யத்தின் தீற்றல்கள் வெளிப்பட்டன. மற்றபடி... ம்ஹூம்...

என்ன நடந்ததென்று பார்ப்போம்.

பிக்பாஸ் - நாள் 6
பிக்பாஸ் - நாள் 6

விஸ்வரூபம் (I) திரைப்படத்தில் எனக்குப் பிடித்த காட்சியொன்று. நடன ஆசிரியர் தோற்றத்தில் இருந்த கமல், அந்த உக்கிரமான சண்டைக்குப் பிறகு ஒப்பனை மாற்றி உளவுத்துறை ஆசாமியாக படிக்கட்டில் இறங்கி வருவார். அவரது மனைவி ஆச்சர்யமும் காதலுமாக திகைத்துப் பார்ப்பார். ‘என்ன?’ என்பது போல் தலையாட்டிக் கொண்டே கமல் இறங்கி வருவார். ஆர்ப்பாட்டமாக இல்லையென்றாலும் அழகாக இருக்கும் காட்சி அது.

இன்று பிக்பாஸ் அரங்கிற்குள் கமலின் எண்ட்ரி இப்படித்தான் இருந்தது. கண்ணாடியில் தன்னைப் பார்த்துக் கொண்டு தலை முடியை சரிசெய்யும் பாவனையில் தடவிக் கொண்டே வந்த தோரணை அட்டகாசம். டார்க் க்ரீம் கலரில் கோட்டும் இதர உடைவடிவமைப்புகளும் அம்சமாக இருந்தன.

"உப்பு போட்டு சாப்பிடறவங்க இங்க இருக்க மாட்டாங்கன்னு சொல்லிட்டு உள்ளேயே ஒருத்தர் இருக்கிறார். தவறுகளைத் தட்டிக் கேட்காத தலைவரும் இருக்கிறார். நாம சும்மா இருக்க முடியுமா. வாங்க தட்டிக் கேட்கலாம்!” என்கிற பஞ்ச் வசனத்துடன் உள்ளே சென்றார்.

கமலுக்கு ஸ்கிரிப்ட் எழுதித் தருபவர்கள் சற்று கவனமாக இருக்க வேண்டும். ஆரம்பத்திலேயே அடுத்தடுத்த வாக்கியங்களில் லாஜிக் மிஸ்டேக்.

“'முதல் வாரத்துல எவிக்ஷன் இல்லை. சுவாரஸ்யம் போய் விடும்' என்று சிலர் கவலைப்பட்டார்கள். நீங்கள் போட்டியாளர்களைப் புரிந்து கொள்வதற்கான ஒரு சந்தர்ப்பம் இது" என்று மக்களை நோக்கி சொன்ன கமல் தொடர்ந்து, “போட்டியாளர்கள் ஒருவரையொருவர் புரிந்து கொண்டிருக்கிறார்களோ. இல்லையோ... மக்கள் அவர்களை நன்றாகப் புரிந்து கொண்டிருப்பது ஊடகங்களின் மூலம் தெரிய வருகிறது” என்றது முரண் வாக்கியமாக அமைந்தது.

பிக்பாஸ் - நாள் 6
பிக்பாஸ் - நாள் 6

‘கடந்த வந்த பாதையில்’ வெளிப்பட்ட உரைகளைக் கேட்டு பலர் கண்கலங்கியதாக கூறிய கமல் ‘வெள்ளிக் கிழமை நிகழ்வுகளை’ காண்பித்தார்.

‘நெஞ்சுக்குள்ள குடியிருக்கும்’ என்கிற விஜய் பாடல் ஒலிக்க.. மக்களின் நடனம். ‘அய்யோ... ரம்யா... அந்தக் கண்ணாடி...”

காலையில் எழுந்ததும் முதலில் டூத்பிரஷ்ஷை தேடுகிறாரோ இல்லையோ... "வம்பு எங்கே?” என்றுதான் சுரேஷ் தேடுவார் போல. மக்கள் சோப்பை வீணடிக்கிறார்கள் என்று புகார் சொன்னவர், ‘என்னவோப்பா... நல்லதுக்குத்தான் சொன்னேன்” என்று தனக்கே சான்றிதழ் கொடுத்துக் கொண்டார்.

“அழுக்குப் பையா.. ஆரஞ்சுப் பழத்தைத் தொடாதே” என்று கிச்சன் ஏரியாவில் சனம் எரிச்சல் காட்ட அவரைப் பதிலுக்கு கலாய்த்து வெறுப்பேற்றி இன்புற்றார் பாலா. இருவருக்குமான உரசல் மெல்ல மெல்ல வளர்ந்து கொண்டேயிருக்கிறது.

மாடலிங் துறையில் உள்ள ஒன்றைப் பற்றி ‘அது டுபாக்கூர்’ என்று பொத்தாம் பொதுவான கமெண்ட் ஒன்றை பாலா அடிக்க, அதைத் தனக்கானதாக எடுத்துக் கொண்டு சனம் கோபித்துக் கொண்டு எழுந்து செல்ல, இரண்டு பேருக்கும் தனியாக பஞ்சாயத்து நடந்தது. “உன் மாடலுக்கும் என் மாடலுக்கும் சோடி போட்டுக்குவமா... சோடி" என்கிற ரீதியில் அவர்களின் துறை சார்ந்த மோதல்.

சில பேர் பொதுவான சபையில் ஏதாவது ஒரு சமூகத்தைப் பற்றிய கிண்டலை முன்யோசனையின்றி சட்டென்று சொல்லி விடுவார்கள். ‘நமக்கு அறிமுகமில்லாத, அந்தச் சமூகத்தைச் சார்ந்த எவரேனும் அந்தச் சபையில் இருந்தால், அவருக்குக் கோபம் வருமே, புண்படுவாரே’ என்று அவர்களுக்குத் தோன்றாது. பாலா செய்ததும் அதைத்தான். சனம் ஆட்சேபித்த பிறகாவது சற்று அடங்கியிருக்கலாம்.

பிக்பாஸ் - நாள் 6
பிக்பாஸ் - நாள் 6

"வீட்டு கேப்டன்... டீம்களின் கேப்டன்கள்... இதுவரை என்னவெல்லாம் கிழித்தார்கள் அல்லது கிழிக்கவில்லை” என்பதை கிழிக்கப்பட்ட படிவத்தில் போட்டியாளர்கள் நிரப்பி போட்டுக் கொடுக்கலாமாம். இப்படியொரு அறிவிப்பை பிக்பாஸ் வெளியிட்டவுடன் ‘கேப்டன்களைத்’ தவிர இதர போட்டியாளர்கள் மகிழ்ச்சியடைந்தனர். ‘இதோ நான் போறேன்’ என்று முதல் ஆளாக ஓடினார் பாலா.

“எனக்குத் தெரியுண்டா... என்னை எப்படியும் நீங்க விதம் விதமா போட்டுக் கொடுக்கப் போறீங்க” என்பது போல் ரம்யா கவலையின்றி சிரித்துக் கொண்டிருந்தார். (நல்ல தலைவருக்கா நீ!)

“இது வேஸ்ட்டு.. என்ன திட்டினாலும் இதுக்கு சுரணை வராது. நமத்துப் போன பட்டாசு. நான் சொல்ற ஆளை மட்டும் அடுத்த வாரம் கேப்டன் ஆக்கிடுங்க... நான் வெளியே போறதுக்குள்ள வெச்சி செய்யறேன்” என்று சுரேஷ் சபதம் எடுத்தது யாரைப் பற்றியது என்பது அனைவருக்கும் தெரியும்.

‘மாதா பராசக்தி...’ என்கிற கீர்த்தனைப் பாடலை கர்நாடக சங்கீதப் பாணியில் அழகாக பாடிய வேல்முருகன், அதை அப்படியே ‘அம்மா... நீ சுமந்த பிள்ளை’ என்று சினிமாப் பாடலாக வண்டியை திருப்பியது அழகான விஷயம்.

“என்னப்பா... நீங்க சண்டையே போட மாட்டேன்றீங்க” என்று மற்றவர்களிடம் சுரேஷ் அலுத்துக் கொள்ள வீட்டின் விளக்குகள் அணைக்கப்பட்டன.

பிக்பாஸ் - நாள் 6
பிக்பாஸ் - நாள் 6

கார்டன் ஏரியாவில் இருள். அதில் ஓர் உருவம் கேமராவுடன் பேசிக் கொண்டிருந்தது. அட! நம்ம நிஷாக்கா… வடிவேலுவை புரட்டி புரட்டி அடித்த கோவை சரளா, பத்தாண்டுகளுக்குப் பிறகு அதற்கு மனமுருக மன்னிப்பு கேட்பது போல தன் கணவருடன் காதல் பொங்க பேசிக் கொண்டிருந்தார். “வாரா வாரம் எண்ணெய் தேய்ச்சுக் குளிங்க. என்னைப் பத்தி கவலைப்படாதீங்க... ஐ லவ் யூ மச்சான்” என்று காதலும் நெகிழ்வுமாக நிஷாக்கா பேசியது அத்தனை சுவாரஸ்யம். அவர்களுக்கு மறுநாள் கல்யாண நாளாம். அதற்குத்தான் இந்த லவ் டயலாக்.

பிரதான அரங்கிற்குள் மறுபடியும் வந்த கமல், “என்னா பிக்பாஸ்... எப்படியிருக்கீங்க?” என்று பிக்பாஸிற்கு ஒரு ஹலோ சொல்லி குசலம் விசாரித்தார். "மந்தையிலிருந்து பிரிந்த இரண்டு ஆடுகள்.. மீண்டும் சந்தித்த போது…” என்கிற தருணமாக அது இருந்தது.

தான் வந்தததை அறிவிக்காமல் அகம் டிவி வழியாகச் சற்று நேரம் மக்களை வேடிக்கை பார்த்த கமல், பிறகு டிவியில் தோன்ற, வழக்கம் போல் பிக்பாஸ் மக்கள் மிகையாக உற்சாகப்பட்டனர். “ஹை. ஊர்ல இருந்து பெரியப்பா வந்திருக்காங்களே!”

ஒவ்வொருவரையாக குசலம் விசாரிக்கத் துவங்கிய கமல் “ரேகாஜி.. உங்க பொருட்கள் எல்லாம் வந்துச்சா?” என்று ஆரம்பிக்க ‘இன்னமும் ரெண்டு லாரி நெறய மேக்கப் செட் வெளியே நிக்குது” என்று கலாய்த்தார் நிஷா. கடலை உருண்டை அனுப்புவதில் சில ப்ரோட்டாகால் இருக்கிறதாம். ‘பிறகு வரும்’ என்று வாக்களித்த கமல், நிஷாவின் திருமண நாளையொட்டி வாழ்த்து தெரிவித்தார். "அதான் பயபுள்ள தலைல ஒத்த ரோசா வெச்சிருக்கா?” என்று யாரோ கமெண்ட் அடித்தார்கள்.

“முட்டைக்காக முட்டிக் கொள்வது பிக்பாஸ் மரபு. கணேஷ் வெங்கட்ராமன் காலத்துல இருந்தே வரலாறு அப்படித்தான். கோழி கேட்காததை தோழி கேட்கலாமா? பரவால்ல... நீங்க சாப்பிடுங்க” என்று பாலாவை ஊக்குவித்த கமல், பள்ளிக்கூடத்தில் முட்டை வாங்கிய பழைய ஜோக்கையெல்லாம் ஆம்லேட்டாக அவித்தெடுத்தார்.

பிக்பாஸ் - நாள் 6
பிக்பாஸ் - நாள் 6

“புதுசா... எனக்கொரு குரல் கேட்டதே... ஷிவானி உங்களுக்கு பேசக்கூட தெரியுமா?” என்று கமல் சூசகமாக குறிப்பிட்டது... பாவம் அவருக்குப் புரியவில்லை. பிறகு கமல் கேட்டுக் கொண்டபடி ‘கண்மணி’ பாடலை பாடினார் ஷிவானி. முன்பு அவருக்கு கம்பெனி கொடுத்து பாடலைக் கொத்து பரோட்டவாக்கிய சுரேஷ்... நல்லவேளையாக இப்போது துணை வரவில்லை.

வேல்முருகனின் கதை உருக்கமாகவும் முன்னுதாரணமாக இருந்ததைச் சுட்டிக் காட்டிய கமல், “கிராமத்து ஏழ்மையிலிருந்து கிளம்பி சாதித்தவர்கள் பட்டியல் ஏராளம். சினிமாத் துறையில் பார்த்தால்... பாரதிராஜா... இளையராஜா... ன்னு நிறைய பேர் இருக்காங்க. அவர்களின் பிரதிநிதி நீங்கள்” என்று பாராட்டியவர், “சத்துணவு சாப்பாட்டை சாப்பிடறதுல எந்த அவமானமும் இல்லை. அது உங்கள் உரிமை” என்று அரசியல் பேசினார். எல்லோரும் சொல்வது போலவே சத்துணவு திட்டத்தோடு காமராஜர் பெயரை கமல் இணைத்தார்.

நீதிக்கட்சி ஆட்சியின் போதுதான் சென்னையில் மதிய உணவுத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. பின்பு காமராஜர் இதை தமிழகமெங்கும் விரிவுப்படுத்தினார். பின்னர் இதை ‘சத்துணவு திட்டமாக’ மேம்படுத்தியது எம்.ஜி.ஆர். இதுதான் வரலாறு. கடந்த சீஸனிலும் கமல் இதையே சொன்ன நினைவிருக்கிறது.

‘இந்த சீஸனில் எளிய, நடுத்தர வர்க்க பின்னணயிலிருந்து வந்த போட்டியாளாகள் நிறைய இருக்கிறார்கள். ரியோவின் கதை உதாரணம். முன்பெல்லாம் ‘வாழ்க்கை இப்படியே போனா போதும்’ன்றதுதான் மிடில் கிளாஸ் மென்ட்டாலிட்டியா இருக்கும். இப்ப அப்படியில்லை. அதையும் தாண்டி வரணும்னு நெனக்கறாங்க” என்ற கமல் ‘திக்குவாய்’ பிரச்னையைத் தாண்டி வந்த சோமை பாராட்டினார். “என் படங்கள்ல கூட அப்படிப்பட்ட பாத்திரங்களை வெச்சிருக்கேன்” என்றவர் ‘காதலா... காதலா’வை உதாரணம் சொன்னார். (‘நம்மவரிலும்’ அப்படியொரு பாத்திரம் உண்டு).

பிக்பாஸ் - நாள் 6
பிக்பாஸ் - நாள் 6

அம்மாவின் மரணத்தின் போது படப்பிடிப்பை நிறுத்தாமல் வேலையை முடித்து விட்டுக் கிளம்பிய ஆரியைப் பாராட்டிய கமல், ‘ஆடுபுலி ஆட்டம்’ திரைப்பட உருவாக்கத்தின் போது தனக்கும் அது போன்று ஏற்பட்ட அனுபவத்தை விவரித்த போது கலங்குவதை ஆரியால் தடுக்க முடியவில்லை. “நான் வேலையை முடிச்சுட்டு வந்தததை நினைச்சா... எங்க அம்மா சந்தோஷம்தான் படுவாங்க”.

‘கடந்த வந்த பாதை’ கதைகளில் பாலாவின் கதை முக்கியமானது. குடும்ப வன்முறை காரணமாக அவர் பல்வேறு தீய, போதை வழியில் சென்றிருக்கலாம். மாறாக தன் உடலை வடிவமைத்து சிறந்த வழியில் பயணித்தததை கமல் பாராட்டிய போது பாலாவிற்கு மகிழ்ச்சி.

“ஓகே.. Heart breaking stories கேட்டோம்... இப்போ ‘heart break’ டாஸ்கிற்கு வருவோம்” என்று அழகாக உரையை லிங்க் செய்தவர், இதில் அதிக ஸ்டாம்ப் வாங்கி கின்னஸ் சாதனை செய்த ஷிவானியை விசாரணை செய்ய, "மிங்கிள் ஆக டைம் ஆகும்.. சார். அதான் சிங்கிளா இருக்கேன். இனிமே ஜிங்கிள் ஆயிடுவேன்" என்று உறுதியளித்தார். (அந்த ரெட்டைக் கொம்பு டிசைனை மட்டும் தலையில போடாதீங்கம்மா... ப்ளீஸ்!)

சாப்பிட்டுக் கொண்டிருந்த ஆரியையும் சோமையும் எழுப்பி விட்டு மேஜையை சுத்தம் செய்த ரேகாவை கமல் செல்லமாக ஆட்சேபிக்க, “ஆரி... சாரி" என்று ரைமிங்கில் டைமிங்காக மன்னிப்பு கேட்டு பஞ்சாயத்தைச் சுருக்கமாக முடித்தார் ரேகா.

பிக்பாஸ் - நாள் 6
பிக்பாஸ் - நாள் 6

அடுத்ததாக நிஷாவின் கதைக்கு வந்தவர், "கறுப்பு நிறம் குறித்த தாழ்வு மனப்பான்மை தேவையில்லை. இங்க வெள்ளையா இருக்கிறவன் கூட மேற்கத்திய நாட்டுக்குப் போனா கறுப்பன்தான். நிஷா இந்த மனோபாவத்தை கடந்து வந்துட்டாங்க’ன்னு தோணுது" என்று கமல் சொன்னதும் ஆமோதிப்பது போல தலையாட்டினார் நிஷா.

அடுத்த அயிட்டம்தான் முக்கியமானது. சுரேஷ் – அனிதா பஞ்சாயத்து. “ஏதோ தலைமுறை தலைமுறையா விரோதம் இருக்கற மாதிரி முறைச்சிட்டே நிக்கறீங்களே?!" என்று கமல் பஞ்சாயத்தை ஆரம்பித்தார்

“வெளில இருந்து பார்க்கறவங்க ரொம்ப நாள் விரோதின்னு நெனப்பாங்க. அப்புறம் கிட்ட வந்து பார்த்தாதான்... த்தூ.. இவ்ளதான் விஷயமான்னு போயிடும்’’ என்று துப்பிக் காட்டி ‘எச்சி தெறிக்கலையே... சுரேஷ்’ என்று கமல் நக்கலாகக் கேட்டது இன்றைய பட்டாசுகளுள் ஒன்று. "நாங்கள்லாம் பேசும் போது எச்சி தெறிச்சா. ‘எச்சி வுட்டேன்’ ன்னு சொல்லிட்டு போயிடுவோம். நீங்க விட மாட்டேன்றீங்களே" என்று சொல்ல சபை கலகலத்தது. அனிதாவுக்கு ஏக குஷி.

“நான் செத்தாலும் மூஞ்சில முழிக்க மாட்டேன்னு சொன்னீங்க... அப்படில்லாம் நாம முழிக்க முடியாது. மத்தவங்கதான் நம்மளை கடைசியா பார்க்க முடியும். உப்பு போட்டு சாப்பிடறவன் இங்க இருக்க மாட்டான்’றதுல்லாம் ரொம்ப பெரிய வார்த்தை. இப்படி சட் சட்டுன்னு நெறய பேசிடறீங்க... உப்பு போடாம சாப்பிட்டா பிரஷருக்கு நல்லது” என்றெல்லாம் ஜாலி ஊசிகளை கமல் செருகிக் கொண்டே போக சுரேஷின் புன்னகையின் பின்னால் சங்கடம் தெரிந்தது.

“நான் இப்ப கோபத்தை, OCD-ஐ கண்ட்ரோல் பண்ணியிருக்கேன் சார்... ரேகாஜிதான் இந்த விஷயத்துல என் குருஜி ஆனா. நியூஸ் ரீடர்ஸ்ஸை மொத்தமா சொன்னதா” என்று சுரேஷ் விளக்கம் அளிக்க ஆரம்பிக்க, ‘இம்சைய்யா இந்த ஆளு’ என்கிற முகச்சுளிப்பு அனிதாவிடம் வெளிப்பட்டது.

“ஒருத்தர் ஸாரி சொன்னா விட்டுடணும். பஸ் கம்பி மாதிரி பிரச்னையை பிடிச்சிக்கிட்டு தொங்கிட்டிருக்க கூடாது” என்று கமல் சொன்ன விஷயம் முக்கியமானது. வீட்டுச்சண்டைகளில் பார்த்தால், சொல்லப்பட்ட சில வார்த்தைகளை வைத்துக் கொண்டு பத்து வருடங்களுக்கும் மேல் அதை குத்திக் குத்திக் காட்டி சண்டையைத் தொடரும் ஆசாமிகள் இருக்கிறார்கள். மன்னிப்பு கேட்டிருந்தாலும் கூட மறக்க மாட்டர்கள்.

பிக்பாஸ் - நாள் 6
பிக்பாஸ் - நாள் 6

“நான் கூட குழம்பு செய்துக் கொடுத்து அதன் மூலமா சுரேஷ் சார் கிட்ட ஸாரி கேட்டேன். ஸாரியை நேரா கேட்கணும்-னு அவசியமில்லை. குழம்பு வழியா கூட கேட்கலாம்.. வீட்ல குழந்தைங்க பார்த்தீங்கன்னா...“ என்று தன் தரப்பு விளக்கத்தை அனிதா ஆரம்பிக்க, “இதுல யாரு குழந்தை?” என்று கமல் ஜாலியாக இடைமறித்தார்.

“நான்தான் சார் குழந்தை” என்று ஒப்புக் கொண்ட சுரேஷ், சற்று நேரத்துலயே, "நான்தான் இந்த வீட்ல தாத்தா” என்று சட்டென்று பிரமோஷனுக்கு தாவினார். வேலு நாயக்கர் ‘நல்லவரா.. கெட்டவரா கேள்வி’ மாதிரி. ‘நீங்க குழந்தையா... இல்ல தாத்தாவா... கரெக்ட்டா சொல்லுங்க” என்று சுரேஷிடம் கறாராக கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும்.

“நான் ஒரு கெட்ட வார்த்தை சொன்னேன் சார். உறுத்தலா இருந்துச்சு. பதிலுக்கு அவங்களும் ஒண்ணு சொன்னாங்க... பதிலுக்கு பதில் சரியாப் போச்சு... நாங்க இப்ப பிரண்ட்ஸ்... நாங்க இப்படித்தான் எங்களுக்குள்ள அசிங்க அசிங்கமா திட்டிப்போம்” என்பது போல் சுரேஷ் விளக்கம் அளித்தது கண்றாவியாக இருந்தது.

“இங்க எல்லாம் நமத்துப் போன பட்டாசா இருக்கு சார். வெடிக்கவே மாட்டேங்குது... நான் பிக்பாஸோட பெரிய ஃபேன்.. ஐ வாண்ட் மோர் எமோஷன்... மோர் ஃபைட்... சண்டை போட்டுத் தொலைங்கடா" என்று தனது கொலைவெறி ஆவலை வெளிப்படுத்தினார் சுரேஷ். ("சபாஷ்.. என் இனமடா.. நீ!” என்று அகம் மகிழ்ந்திருப்பார் பிக்பாஸ்).

கமல் சென்ற இடைவேளையில், "நீ திரும்பத் திரும்ப பேசி மாட்டிக்காத... நீ செய்யறது வெளில தெரியதாலதான் அப்படி சொல்றாங்க” என்று அனிதாவிடம் டைமிங்காக எச்சரித்தார் ரியோ.

பிக்பாஸ் - நாள் 6
பிக்பாஸ் - நாள் 6

கமல் திரும்பி வந்தவுடன், “அய்யா.. என் பிராதை நீங்க விசாரிக்கவே இல்லையே” என்று மறுபடியும் ஆரம்பித்த அனிதா, “நான் பேசினா ‘உஸ்... உஸ்... ‘ன்னு ஆட்சேபித்த சுரேஷ், ரேகா பேசினா மட்டும் ‘எஸ்... எஸ்’ன்னு தலையாட்டினாரு. இது என்ன நியாயம்?” என்று பஞ்சாயத்தை தூசு தட்டி ஆரம்பிக்க, “இது முதல் சீஸன்ல நடந்த விஷயம்… இதை இன்னுமா ஞாபகம் வெச்சிருக்கீங்க” என்று கமல் அறிவுறுத்தியவுடன் சங்கடம் அடைந்து, "சரி சார்.. சுரேஷ்கிட்ட பழம் விட்டுடறேன்...” என்று எழுந்து சென்று கை கொடுக்க, வில்லங்கமான புன்னகையுடன் அதை ஏற்றுக் கொண்டார் சுரேஷ்.

மறுபடியும் heart break விவகாரத்தை ஆரம்பித்த கமல் “இப்போதைய நிலையில் அதைச் செய்ய வேண்டுமென்றால் என்ன செய்வீர்கள்?” என்று சனத்தை முதலில் அழைத்தார்.

‘இதயம்’ சின்னத்தை ரேகாவிற்கும் அனிதாவிற்கும் அளித்து ஆச்சர்யப்படுத்தினார் சனம். ரேகாவுடன் கிச்சன் ஏரியாவில் நடந்த உரசல்களின் சூடு தணிந்து விட்டதாம். இப்போது இருவரும் நண்பர்களாம். காலில் விழுந்து சாதித்து விட்டார் ரேகா மேம்.

"அனிதா ஒரு எமோஷனல் இடியட்டாம். எமோஷனலாக இருப்பது நல்ல விஷயம்தானாம்.” இது அனிதாவிற்கு சொல்லப்பட்ட காரணம்.

அடுத்து ஆரம்பித்ததய்யா... அந்த நெடும் பஞ்சாயத்து.

அனிதாவாவது பிக்பாஸ் தமிழ் முதல் சீஸனின் விஷயங்களை இப்போதும் ஞாபகம் வைத்துக் கொண்டிருக்கிறார் என்றால், சனமோ... சர்வதேச அளவில் பிக்பாஸ் துவக்கப்பட்ட முதல் நாளின் விஷயங்களையெல்லாம் இப்போதும் அல்வாவாக கிளறிக் கொண்டேயிருக்கிறார். “என்னது.. லென்த்தா போயிட்டே இருக்கு” என்கிற வடிவேலுவின் டயலாக் மாதிரி ஆகிப் போனது.

பிக்பாஸ் - நாள் 6
பிக்பாஸ் - நாள் 6

பாலாவுக்கும் சம்யுக்தாவிற்கும் ‘heart break’ சின்னத்தைக் குத்தினார் சனம். இவருக்கும் பாலாவிற்கும் மாடலிங் துறை சார்பாக நிகழ்ந்த உரசலின் நீண்ட வெர்ஷன் இப்போது வெளிப்பட்டது. சனம் வைத்த நீண்ட புகாருக்கு, "நான் பொதுவாத்தான் சொன்னேன். இவங்க பர்சனலா எடுத்துக்கிட்டாங்க” என்றார் பாலா.

"ஒரு துறையைப் பற்றி பொதுவாக சொல்லப்படும் புகாரை அதிலிருக்கும் ஒருவர் தனதாக எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை” என்று கமல் சொன்னதும் கைவலிக்க கைத்தட்டி பாலா மகிழ்ச்சியை வெளிப்படுத்த சனத்தின் முகத்தில் காண்டு ஏறியது.

அடுத்தது சம்யுக்தா. "பெட்ரூமில் இடம்பிடிக்கும் விவகாரம் இன்னமும் தொடர்ந்தது. நாமினேஷன் முடிவை சபையில் அறிவிப்பது பற்றி தான் கேட்ட போது சம்யுக்தா அதற்கு முகத்தில் அடிப்பது போல் பதில் சொன்னார்" போன்ற காரணங்களை சனம் சொல்ல, “அப்படியெல்லாம் சொன்னதா எனக்கு நினைவில் இல்லை. இருந்தாலும் ஸாரி” என்று சுருக்கமாக முடித்துக் கொண்டார் சம்யுக்தா. (க்யூட்மா!).

தனக்காக தங்களின் படுக்கையை தியாகம் செய்த சனம் மற்றும் நிஷாவைப் பாராட்டிய சுரேஷ், “எனக்கு உடம்பு சரியாயிடுச்சு.. இனிமே தேவையில்லை” என்றார். சனத்தின் பஞ்சாயத்து நீண்டு கொண்டே சென்றதால், “இருங்க சார். இங்க எல்லோரும் ஹைட்டா இருக்காங்க. நான் ஹீல்ஸ் போட்டுட்டு வந்துடறேன்” என்று தன் இமேஜ் பற்றிய கவலையில் சென்றார் அனிதா.

முதலில் பிடித்தவர்களாக சம்யுக்தாவையும் பாலாவையும் தேர்ந்தெடுத்த சனம், இப்போது தோசையை அப்படியே திருப்பிப் போட்டது பிக்பாஸின் சுவாரஸ்யங்களுள் ஒன்று.

பிக்பாஸ் - நாள் 6
பிக்பாஸ் - நாள் 6

‘இதயத்தை கொடுப்பதும்... உடைப்பதும்...’ என்கிற இந்த நிகழ்ச்சியின் தொடர்ச்சியை நாளை பார்ப்போம் என்ற கமல் நடிகை மனோரமாவை அவரது நினைவு நாளில் நினைவுகூர்ந்தார்.

‘நாளை’ என்று காட்டப்பட்ட பகுதியில் மறுபடியும் சனம் – பாலா, பஞ்சாயத்து தொடர... இப்போது சனத்திற்கு ஆதரவாக தோசையைத் திருப்பிப் போட்டு கமல் பேசுவது போன்ற காட்சிகள் வர... நமக்கு இப்போதே கண்ணைக் கட்டியது போன்ற உணர்வு.

இது நாளைக்கும் இருக்கா... ஹய்யோ... ஹய்யோ!