Published:Updated:

சர்வைவர் - 45 | நந்தா அமைதிப்புறாவா… ஐஸ்வர்யா ஏன் கூட்டுக்குள் சேர்க்கிறார்?

ZEE தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'சர்வைவர்' ரியாலிட்டி ஷோவின் 45-வது எபிசோட் எப்படி இருந்தது? சுரேஷ் கண்ணன் எழுதும் விறுவிறு விமர்சனம்!

இரு அணிகளுக்குமான தலைவர் போட்டி நடந்தது. இந்தப் போட்டி வர வர ஒரு சம்பிரதாயமான சடங்கு போல மாறி வருகிறது. எந்தவொரு சுவாரசியமும் இல்லை. எனவே இந்த எபிசோடில் இதை விடவும் சில முக்கியமான விஷயங்கள் தோண்டப்பட்டு நமது நெடுநாள் சந்தேகங்களுக்கான விடைகள் குத்துமதிப்பாக கிடைத்தன.

அணி மாற்றத்தின் போது உமாபதியை தேர்ந்தெடுக்காமல் நந்தாவை ஏன் ஐஸ்வர்யா தேர்ந்தெடுத்தார்? என்பது உள்ளிட்ட பல கேள்விகளுக்கான விடைகள் அர்ஜூனின் விசாரணையின் மூலமாக வெளியே வந்தன.

சர்வைவர் 45-ம் நாளில் என்ன நடந்தது?

சர்வைவர்
சர்வைவர்

நந்தாவின் பிறந்த நாளை வேடர்கள் அணி பாசத்துடன் கொண்டாடியது. கிளிஞ்சல்களை வைத்து மணலில் பிறந்த நாள் வாழ்த்தை அழகாக எழுதியிருந்தார்கள். வெட்டுவதற்கு கேக்கிற்கு பதிலாக இளநீர். கத்திக்கு பதிலாக அரிவாள் என்று பிறந்த நாள் கொண்டாட்டம் வித்தியாசமாக களை கட்டியது. அவர்களின் அன்பிற்கு மிகவும் நெகிழ்ந்து போனார் நந்தா. இனிகோவிற்கு வேடர்களுடன் எந்த மாதிரியான மனஸ்தாபங்கள் இருந்தாலும் இது போன்ற சமயத்திலாவது அருகில் இருந்திருக்கலாம். ஆனால் அவரோ வழக்கம் போல் தள்ளி நின்று அலையில் விளையாடிக் கொண்டிருந்தார். வேடர்கள் தன்னுடன் இணக்கமாகப் பழகுவதில்லை என்கிற இனிகோவின் குற்றச்சாட்டில் உண்மையிருக்கலாம். ஆனால் இனிகோ எந்த அளவிற்கு முன்வந்து நட்பிற்கு முயற்சி செய்திருக்கிறார் என்கிற கேள்வி எழுகிறது.

ஓலை வந்தது. அதில் தலைவர் போட்டிக்கான செய்தி இருந்தது. ‘உலகத்தில் ஆயிரம் சண்டைகள், துரோகங்கள் இருக்கின்றவாம். இப்போதைக்கு அமைதிதான் அவசியமான தேவையாம். இந்த வார தலைவருக்கான அடிப்படை தகுதி “அமைதி தூதுவராம்”. இந்த அறிவிப்பை பார்த்த அடுத்த நொடியே ‘நாராயணன்தான் இதற்குப் பொருத்தமானவர்’’ என்று இனிகோ சொல்லி விட்டார். வேடர்களில் அனைவரிடமும் நட்பாகப் பழகுகிறவர் நாராயணன் மட்டுமே.

“எனக்கு தலைவராக நிற்க விருப்பமில்லை” என்று வேண்டா வெறுப்பாக சொன்னார் இனிகோ. “மூன்றாவது வாரமா இப்படிச் சொல்றாரு” என்று பிறகு புலம்பிக் கொண்டிருந்தார் சரண். இனிகோ உண்மையிலேயே மாமியார் வீட்டுக் கொடுமையை அனுபவிக்கும் மருமகள் போல் உணர்கிறாரோ, என்னவோ?

தலைவர் போட்டிக்காக நந்தாவின் பெயரை ஐஸ்வர்யா முன்மொழிந்த போது ‘நந்தா அமைதிப்புறாவா?” என்று சர்காஸ்டிக்காக கேட்டார் இனிகோ. நந்தாவே இதற்கு சிரித்து விட்டார். நந்தாவுக்கு கையில் அடிபட்டிருப்பதால் நாராயணனும் ஐஸ்வர்யாவும் போட்டியிடுவது என்று முடிவாயிற்று.

சர்வைவர் - 45
சர்வைவர் - 45

காடர்கள் தீவிலோ ‘’அமைதிக்கும் எனக்கும் தூரம்... நான் தலைவர் போட்டிக்கு நிற்க மாட்டேன்” என்று தன் வழக்கமான பாணியில் ஜாலியாக சொல்லி விட்டார் உமாபதி. “சரி... போட்டி எப்படியிருக்குதுன்னு பார்த்துட்டு அதுக்கேத்த மாதிரி முடிவு செய்யலாம்’’ என்று விக்ராந்த் சொன்னதை அனைவரும் ஏற்றுக் கொண்டார்கள்.

“களத்துக்கு வாங்க சர்வைவர்ஸ்” என்று தனது டிரேட் மார்க் வசனத்தை சொல்லி வரவேற்றார் அர்ஜூன். தலைவர் போட்டியை விடவும் அவர் நடத்திய குறுக்கு விசாரணைகள்தான் இன்று பரபரப்பாக அமைந்தது.

“காடர்கள் அணியில் அம்ஜத்கான் இல்லை.” என்று கொளுத்திப் போடுவதின் மூலம் கலகத்தை துவக்கினார் அர்ஜூன். “காடர்கள் அணியில் இருந்ததுதான் எனக்குப் பெருமை. இவர்களில் யாராவது ஒருவர்தான் இறுதியில் ஜெயிக்கணும்”-ன்னு அம்ஜத் சொல்லிட்டுப் போயிருக்காரு” என்றெல்லாம் சொல்வதின் மூலம் வேடர்களை உசுப்பி விட்டார் அர்ஜூன்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அம்ஜத்தின் பிரிவிற்காக தாங்கள் உருகியதை காடர்கள் விதம்விதமாக சொன்னார்கள். “எதிர் டீம்ல இருந்து வந்தாலும் எங்கள்ல ஒருத்தரா மாறிட்டார்” என்று புகழ்ந்தார் விக்ராந்த். “என்னை நல்லா புரிஞ்சுக்கிட்டவர் அம்ஜத். எப்போதுமே நேர்மையா விளையாடுவார்” என்று சொல்வதின் மூலம் எதிர்அணியின் கோபத்தின் மீது எக்ஸ்ட்ராவாக கொளுத்திப் போட்டார் லட்சுமி.

“அம்ஜத் உங்களுக்காக ஒரு லெட்டர் எழுதியிருக்கார். படிச்சுப் பாருங்க’’ என்று வேடர்களிடம் தந்தார் அர்ஜூன். காடர்களிடம் அம்ஜத் பயங்கரமாகப் புலம்பிக் கொண்டிருந்த காரணத்தினால், இந்தக் கடிதத்தில் பெட்ரோல் பாமை அவர் வைத்திருப்பாரோ என்று தோன்றியது. ஆனால் ஆச்சரியமாக, மிகவும் பாசிட்டிவ் டோனில் எழுதியிருந்தார் அம்ஜத்.

சர்வைவர் - 45
சர்வைவர் - 45

ஆயிரம் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் அடிநாதமாக தான் சொல்ல வேண்டிய கருத்து என்ன என்பதை நேர்மறையாக வெளிப்படுத்திய அம்ஜத்திற்கு பாராட்டு. வேடர்கள் அணியிலுள்ள ஒவ்வொரு பெயரையும் குறிப்பிட்டு தன்னுடைய மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்திருந்தார் அம்ஜத். வெரி க்யூட்.

“அம்ஜத்தின் வெளியேற்றத்தை நீங்கள் எதிர்பார்த்தீர்களா?” என்று ஐஸ்வர்யாவின் வாயைக் கிளறினார் அர்ஜூன். “ஆம்... எதிர்பார்த்தேன். காடர்கள் மெஜாரிட்டியை விட்டுத்தர மாட்டார்கள். புதிதாக வந்தவர்களைத்தான் பலியிடுவார்கள் என்பது எதிர்பார்த்ததுதான். அது மட்டுமில்லாமல் அம்ஜத்தின் காலில் அடிபட்டிருந்தது ஒரு காரணமாக இருக்கலாம்” என்று தன் யூகத்தை ஐஸ்வர்யா சொல்ல, “கால்ல அடிபட்டிருப்பதெல்லாம் ஒரு மேட்டரே இல்லை. அதை நாங்க யோசிக்கவேயில்லை” என்று இந்தக் கருத்தை இடது கையால் புறந்தள்ளினார் உமாபதி.

அம்ஜத்தின் மீது இத்தனை பாசம் வைத்திருக்கும் காடர்கள் அணி, வனேசா, கலைவாணி ஆகிய பலவீனமான போட்டியாளர்களை வைத்துக் கொண்டு அம்ஜத்தை ஏன் வெளியேற்றினார்கள் என்பதற்கு அவர்களால் பதில் சொல்ல முடியுமா?

“வேடர்கள் அணியில் இருந்த போது அம்ஜத் என்னிடம் நன்றாகத்தான் பழகினார். எதுவாக இருந்தாலும் என்னிடம் வெளிப்படையாகச் சொல்வார். எங்களுக்குள் ஒரு நல்ல புரிதல் இருந்தது” என்று நந்தா சொல்ல, “ஆனா, அவர் ட்ரைபல் பஞ்சாயத்து சொன்னதெல்லாம் தலைகீழா இருக்குதே... ‘ஆமாம் சாமி.. போடறவங்கதான் வேடர்கள் அணியில் நீடிக்க முடியும். நந்தாவின் ஆதிக்கம் அங்க அதிகம் இருந்தது. எந்த முடிவாக இருந்தாலும் நந்தாவைத்தான் கேட்பாங்க. கருத்து சுதந்திரம் என்பதே அங்கு இல்லை... இவ்வளவு விஷயம் சொல்லியிருக்கிறாரே” என்று நந்தாவிடம் கிடுக்கிப்பிடி போட்டார் அர்ஜூன்.

“இதையெல்லாம் நான் ஏற்க மாட்டேன். போட்டோ எடுக்கும் பகுதியில் அம்ஜத் என்னுடன்தான் புகைப்படம் எடுத்துக் கொண்டார். “இறுதி வரை இவருடன் பயணிக்க விரும்புகிறேன்’ன்னு அவர் சொன்னது என் கூடத்தான். இப்போ அவரோட பார்வை மாறியிருக்கலாம். எனக்குப் புரியல” என்றார் நந்தா.

நந்தாவின் மீது ஏராளமான குற்றச்சாட்டுகள் வந்து கொண்டிருந்த நிலையில் அவருக்கு ஆதரவாக ஐஸ்வர்யாவின் குரல் எழுந்தது. “நந்தா யாரிடமும் கருத்து சொல்ல மாட்டார். அவர் கிட்டதான் எல்லோரும் கருத்து கேட்பாங்க. எதிரில் உட்கார்ந்திருக்கும் லட்சுமியும் அப்படித்தான் கேட்டிருக்கிறார். அணியில் நந்தாவின் ஆதிக்கம் இல்லை” என்று நந்தாவின் மீதுள்ள பாசத்தை சபையில் வெளிப்படுத்தினார் ஐஸ்வர்யா.

சர்வைவர் - 45
சர்வைவர் - 45

“நந்தாவின் செல்வாக்கிற்கு உட்படாத நபர்களே வேடர்கள் அணியில் கிடையாது” என்று லட்சுமி சொல்ல “நான் அப்படி கிடையாது. என் தனிப்பட்ட முடிவுகளை நான்தான் எடுப்பேன். அணியே சரணுக்கு எதிராக வாக்களித்த சமயத்தில் நான் மட்டுமே விஜிக்கு எதிராக வாக்களிக்கும் முடிவை எடுத்தேன்” என்று லட்சுமிக்கு நோஸ் கட் அளிக்க முயன்றார் ஐஸ்வர்யா.

இதற்குப் பிறகுதான் ஒரு முக்கியமான கேள்வியை எழுப்பினார் அர்ஜூன். நான் கூட இதைப் பற்றி அடிக்கடி எழுதியிருக்கிறேன். அணி மாற்றத்தின் போது மிக வலிமையான போட்டியாளரான உமாபதியை விட்டு விட்டு நந்தாவை ஏன் ஐஸ்வர்யா தேர்ந்தெடுத்தார்? வேடர்களின் தொடர்ச்சியான தோல்விகளுக்கு இது ஒரு முக்கியமான காரணம் என்பதை தொடர்ந்து பதிவு செய்திருக்கிறேன்.

“நந்தா என்பதை நான் ஏற்கெனவே முடிவு செய்து விட்டேன். அவருக்கு ஓகேவா என்பதை அறிவதற்காகத்தான் அவரைப் பார்த்தேன். அனுமதி பெறுவதற்காக அல்ல” என்று ஐஸ்வர்யா அளித்த விளக்கம் தெளிவில்லாமல் இருந்தது. “நாங்க எல்லோருமே அப்போது உமாபதின்னு சொல்லிட்டு இருந்தமே” என்று இனிகோவும் இந்தச் சமயத்தில் உண்மையைப் போட்டு உடைத்தார்.

சர்வைவர் - 45
சர்வைவர் - 45

‘அங்கு வந்து விடுகிறேன்’ என்று ஜாடையில் நான் ஐஸ்வர்யாவிடம் சொன்னதாகச் சொல்கிறார்கள். என் மனசாட்சியின்படி சொல்கிறேன். அப்படி நான் எதையும் செய்யவில்லை. ஐஸ்வர்யா முடிவு செய்தார். நான் சென்றேன். அவ்வளவுதான்” என்றார் நந்தா. அவரின் இந்த விளக்கத்துக்கு சந்தேகத்தின் பலனை அவருக்கு அளிக்கத்தான் வேண்டியிருக்கிறது.

ஐஸ்வர்யா முடிவு செய்தாரா, அல்லது நந்தா கண் காட்டினாரா என்கிற ஆராய்ச்சியெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும் அந்தச் சமயத்தில் ஐஸ்வர்யா எடுத்தது தவறான முடிவு என்பதைத்தான் இப்போதைய நிலைமை காட்டுகிறது. இதை சுயபரிசீலனையுடன் வேடர்கள் ஒப்புக் கொள்ள வேண்டும்.

“சரி.... இது வேலைக்கு ஆவறதில்லை... பேசிட்டு இருந்தா பேசிட்டேதான் இருக்கணும். மக்கள் பார்த்துட்டு இருக்காங்க” என்று இந்த உரையாடலுக்கு முற்றுப்புள்ளி வைத்த அர்ஜூன், தலைவர் போட்டிக்கு வந்தார்.

தொடக்கத்திலேயே சொன்னது போல் இந்த தலைவர் போட்டி என்பது சம்பிதாயமாக மாறிக் கொண்டு வருகிறது. ஒரு பரபரப்பும் சுவாரஸ்யமும் இல்லை. ஒரே அணியில் இருவர் போட்டியிடும் போது நட்பு காரணமாக விட்டுக்கொடுத்தல் போன்ற விஷயங்கள் நிகழ்கின்றன. மேலும் தலைவர் என்பவருக்கு தனி கூடாரம் உள்ளிட்ட சில வசதிகள் மட்டும்தான் கிடைக்கும். அவருக்கு எதிராக இந்த வாரம் யாரும் வாக்களிக்க முடியாது என்பது போன்ற வலுவான சலுகைகள் இல்லை. (பிக்பாஸ் போல). முடிவுகள் எடுப்பதிலும் இதுவரை எந்தத் தலைவரும் உறுதியாக செயல்படுவதில்லை. எனவே ஒப்புக்கு சப்பாணியாகத்தான் தலைவர் போட்டி நிகழ்கிறது.

இன்று நடந்ததும் அப்படியே. வேடர்கள் அணியில் இருந்து நாராயணனும் ஐஸ்வர்யாவும் மோதினார்கள். காடர்கள் அணியில் இருந்து விக்ராந்த்தும் போட்டியிட்டார்கள். எனில் ஆரம்பத்திலேயே முடிவுகளை எளிதாக யூகிக்க முடிகிற சுவாரஸ்யமற்ற போட்டியாக இது அமைந்தது.

சர்வைவர் - 45
சர்வைவர் - 45

போட்டியாளர்களில் ஆணாக இருந்தால் பத்து கிலோவும் பெண்ணாக இருந்தால் ஐந்து கிலோவும் எடையை சுமந்து கொண்டு ஒருவரையொருவர் துரத்தி இரண்டு முறை அவுட் ஆக்கினால் அவர்தான் வெற்றியாளர்.

தனித்தனி எடைகளை வைத்து ஏன் பாலினரீதியான வித்தியாசத்தை செய்திருக்கிறார்கள் என்று நாம் யோசித்துக் கொண்டிருக்கும் போதே ஐஸ்வர்யா ஒரு துணிச்சலான முடிவை எடுத்தார். “பெண் என்கிற காரணத்தினால் ஏன் இந்த சலுகை? நானும் பத்து கிலோ எடையை சுமந்து ஓடுகிறேன்” என்று அவர் சொன்னது கம்பீரமான அறிவிப்பு. அர்ஜூனும் இதைப் பாராட்டினார். “அய்யய்யோ… உன்னால நானும் பத்து கிலோவைத் தூக்கணுமே” என்று வனேசா மனதுக்குள் அலறியிருக்கலாம். (ஆனால் பிறகு ஐந்து கிலோவை மட்டுமே சுமந்தார்).

ஓடுவதில் நாராயணன் சிரமப்பட்டு கீழே விழுந்து காலில் அடிபட ஐஸ்வர்யா எளிதாக வென்றார். விக்ராந்த் – வனேசா ஜோடி, இந்தப் போட்டியை இன்னமும் கேலிக்கூத்தாக்கினார்கள். “இது ஏதோ ஜாகிங் போறது மாதிரி இருக்கு... துரத்திப்பிடிக்கணும்” என்று அர்ஜூனே தலையிடும் அளவுக்கு விக்ராந்த் ஜாலியாக ஓடி வனேசாவை சோர்வடையச் செய்து அவுட் ஆக்கினார்.

ஆக... காடர்கள் அணியின் தலைவர் விக்ராந்த் மற்றும் வேடர்கள் அணியின் தலைவர் ஐஸ்வர்யா. இரு அணிகளுக்கும் வாழ்த்து சொல்லி விடைபெற்றார் அர்ஜூன்.

தங்களின் அணிக்குத் திரும்பிய ஐஸ்வர்யா “நந்தாவைக் கேட்டுத்தான் எல்லோரும் செய்வாங்களாம்... ஏன், லட்சுமி இருந்த போது கூட அப்படித்தானே செஞ்சாங்க... இப்ப ஏன் அதையே புகாரா சொல்லணும்” என்றெல்லாம் புலம்பிக் கொண்டிருக்க இனிகோவோ அசுவாரஸ்யத்துடன் இந்த விவாதத்தைக் கேட்டுக் கொண்டிருந்து விடடு, ஒரு கட்டத்தில் நொந்து போய் ‘‘பசிக்குது... சாப்பிடப் போகலாமா?” என்று எழுந்து விட்டார்.

உமாபதியை விட்டு விட்டு நந்தாவை ஐஸ்வர்யா தேர்வு செய்தது எவ்வளவு தவறோ... அதேயளவுக்கான தவறை அம்ஜத்தை வெளியேற்றுவதன் மூலம் காடர்கள் அணி செய்திருக்கிறார்கள். இனி என்ன நிகழும்?

பார்த்துடுவோம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு