Published:Updated:

சர்வைவர் - 27 | விஜயட்சுமி vs சரண்... அதிகம் வழியும் போட்டியாளர் யார்?

சர்வைவர் - 27

ZEE தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'சர்வைவர்' ரியாலிட்டி ஷோவின் 27-வது எபிசோட் எப்படி இருந்தது? சுரேஷ் கண்ணன் எழுதும் விறுவிறு விமர்சனம்!

Published:Updated:

சர்வைவர் - 27 | விஜயட்சுமி vs சரண்... அதிகம் வழியும் போட்டியாளர் யார்?

ZEE தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'சர்வைவர்' ரியாலிட்டி ஷோவின் 27-வது எபிசோட் எப்படி இருந்தது? சுரேஷ் கண்ணன் எழுதும் விறுவிறு விமர்சனம்!

சர்வைவர் - 27
ஒரு கூட்டணியில் இருந்து இன்னொரு கூட்டணிக்கு தாவுவது என்பது அரசியல்வாதிகளுக்கு அல்வா சாப்பிடுவது போல. ஆனால் நட்பாக இணைந்திருக்கும் ஓர் அணியிலிருந்து சிலரைப் பிரித்து எடுப்பதென்பது அறுவைச் சிகிச்சை போல. இந்த அணி மாற்றம்தான் நேற்றைய எபிசோடின் ஹைலைட்.

‘கோக்குமாக்கு டாஸ்க்’ கேள்விகளை போட்டியாளர்களே கையாளும் போது அழுகுணி ஆட்டம் ஆடினார்கள். அர்ஜூன் தலைமையில் இதை கட்டுப்பாடாக நடத்துவதுதான் சரி என்று நேற்றைய கட்டுரையில் எழுதியிருந்தேன். அது இன்று நடந்தது.

இந்த அணி மாற்றம் எப்படி இருந்தது? யார் யார்... எதிர் அணிக்கு செல்ல வேண்டியிருந்தது?

சர்வைவர் 27-ம் நாளில் என்ன நடந்தது?

சர்வைவர் - 27
சர்வைவர் - 27

‘மாற்றம்’ என்கிற வார்த்தையை நிறையமுறை தூவி வந்திருந்த ஓலையைப் பார்த்தவுடன் ‘Swap’ என்கிற விஷயம் நடக்கப் போகிறது என்பதை இரு அணிகளும் புரிந்து கொண்டு விட்டார்கள். இது அவர்களுக்குள் நிறைய குழப்பத்தையும் தயக்கத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தின. யார் யார் விலகுவார்கள்... புதிய இடம் எப்படி இருக்கும்... புதிய நபர்கள் எப்படிப் பழகுவார்கள் என்று ஆறாங்கிளாஸ் ஏ செக்ஷன் மாணவனை, டி செக்ஷனில் தூக்கிப் போடுவதைப் போல் கலங்கிக் கொண்டிருந்தார்கள்.

காடர்கள் அணி இந்தப் பிரச்னையை ஜாலியாகவே அணுகியது. “வானத்தைப் போல சினிமா மாதிரியே... டீமாவாடா... இருக்கீங்க?ன்னு நமக்கு ஆப்பு வெச்சிட்டாங்க போல” என்று கமென்ட் அடித்தார் உமாபதி. “இப்பத்தான் ஒரு மாதிரியா செட் ஆகிட்டு வந்தோம். இப்ப எப்படி பிரியறது?” என்று சீரியஸ் ஆனார் லேடி காஷ்.

வேடர்கள் அணி வழக்கம் போல் இதை உலக சதியாக டீல் செய்து கொண்டிருந்தது. “அணி மாற்றத்தை டீம் லீடர் முடிவு செய்யலாம்னு சொல்லிட்டா... ஐஸ்வர்யா நிச்சயம் என்னை பழிவாங்கிடுவா” என்று அஞ்சிக் கொண்டிருந்தார் லட்சுமிபிரியா. “சமீபத்தில் நடந்த ரிவார்ட் டாஸ்க்கை பொறுத்து இந்த அணி மாற்றம் இருக்கலாமோ... இதில் பின்தங்கியவர்களை அணி மாத்திடுவாங்களோ?” என்றும் குழம்பினார்கள்.

“கவண் எறிதல் செக்ஷன்ல நானும் லட்சுமியும்தான், ஆக்டிவா இல்லை. அப்ப எங்க ரெண்டு பேரையும் செலக்ட் பண்ணுவாங்களோ?” என்று நந்தா கேட்க, ‘’அய்... டாடி கூட கடைக்குப் போறேன்’’ என்கிற குழந்தை மாதிரி உற்சாகமாகி விட்டார் லட்சுமி. நந்தாவுடன் செல்வதென்றால் லட்சுமிக்கு ஓகே. அதிலும் ஐஸ்வர்யாவிடமிருந்து விலகுவது என்பது அவருக்கு போனஸ் மாதிரி. இதற்காக, ‘தான் டாஸ்க்கில் சரியாக செயல்படவில்லை’ என்பதை ஒப்புக் கொள்ளக்கூட இப்போது தயாராக இருக்கிறார். ஆனால், இதே விஷயத்தை நேற்று அவர் ஒப்புக் கொள்ளவில்லை.

சர்வைவர் - 27
சர்வைவர் - 27

ஆனால், நந்தாவை விட்டுத்தர ஐஸ்வர்யாவுக்கு மனமில்லை. எந்தவொரு அணியிலும் இரு நபர்களை ‘சேர்த்து வைத்து’ கிண்டல் செய்வார்கள் அல்லவா? அப்படியாக நந்தாவையும் ஐஸ்வர்யாவையும் இணைத்து வைத்து ஜாலியாக ஓட்ட ஆரம்பித்திருக்கிறார்கள். அதிக குழப்பம் ஏற்பட்டவுடன் “ஓகே... அப்ப டீம் லீடர் நான் சொல்றத ஏத்துக்கறீங்களா?” என்று ஐஸ்வர்யா கேட்டவுடன் அரைமனதாக ஒப்புதல் வந்தது.

‘வேடர்கள் தீவுல... தேங்காய். பப்பாளி எல்லாம் பெரிசு பெரிசா கிடைக்குமாமே... போய் பார்த்துட வேண்டியதுதான். ஒருவேளை தர்பூசணியை பப்பாளின்னு நெனச்சிட்டு சாப்பிடறாங்களோ...” என்று எதிரணியை கிண்டலாக பங்கம் செய்து கொண்டிருந்தார் உமாபதி. தீவை விட்டு கிளம்பும் போது ‘படையப்பா’ படத்தில் சிவாஜி தன் வீட்டின் தூணைக் கட்டிப் பிடித்துக் கதறுவது போல ஒரு தென்னை மரத்தை கட்டியணைத்து விட்டு கிளம்பினார்.

‘‘களத்துக்கு வாங்க சர்வைவர்ஸ்’’ என்று அவர்களை வரவேற்றார் அர்ஜூன். சற்று நேரம் இழுப்பார் என்று எதிர்பார்த்தால், ஆரம்பத்திலேயே ‘வேடர்கள் அணி’ தண்டனையை இன்னமும் ஏற்காதது குறித்து முதல் கேள்வியை கேட்டு விட்டார்.

‘‘இது அணியாக எடுத்த முடிவு. அந்தத் தண்டனைதான் எங்களுக்குப் பிரச்சினை” என்று சங்கடத்துடன் ஐஸ்வர்யா பதில் அளிக்க “அப்ப இந்த கேம்ல உங்களுக்குப் பிரச்சினையா இருக்கற எல்லாத்தையும் மாத்திடலாமா?” என்று எதிர்க்கேள்வி கேட்ட அர்ஜூன் “இது சர்வைவர் ரூல். ஆட்டத்தின் ஃபார்மட் அப்படி. காடர்கள் அணியும் தங்களுக்கு தரப்பட்ட தண்டனையை முன்ன ஏத்துக்கிட்டாங்களே?” என்று கிடுக்கிப் போட ஆரம்பித்தார்.

“இது எங்கள் சுயமரியாதைக்கு எதிரான விஷயமாக இருந்தது. டபுள் தண்டனையா தெரிஞ்சது. மசாலா அரைக்கறதை நாங்க கூட செஞ்சிருப்போம்” என்று நந்தா சொல்ல “இந்த ஆட்டத்தோட விதிகள் பிடிக்காதவங்க வாக்அவுட் பண்ணிடலாம்” என்று அதிரடியாக சொன்னார் அர்ஜூன். இது இன்னமும் அதிக சூட்டைக் கிளப்புமோ என்று பார்த்தால் அப்படியே அடங்கிப் போயிற்று.

ஒரு கடுமையான சவாலின் விதிகளுக்குள் தங்களைப் பொருத்திக் கொள்வது வேறு. அது சரியானதும் கூட. ஆனால் அதற்காக தரப்படும் அநியாயமான தண்டனைகளை அடிமைத்தனமாக ஏற்றுக் கொள்ளத் தேவையில்லை. தங்களின் ஆட்சேபத்தை துணிச்சலாக வெளிப்படுத்தலாம். குறைந்த பட்சம் அதையாவது செய்யலாம். ஆனால், இந்த முதலாளித்துவ சமூகம் நம்மை பல இடங்களில் அடிமைகளாகவே இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறது. “ஆமாம் கரெக்ட்டுதானே... அதுதானே ரூல்?” என்று விவாதிப்பவர்கள் இந்த அடிமைத்தனத்தை மறைமுகமாக ஆதரிக்கிறார்கள் என்றே பொருள்.

சர்வைவர் - 27
சர்வைவர் - 27

தண்டனை விஷயத்தை அப்படியே டீலில் விட்டார் அர்ஜூன். ஒருவேளை இதன் பின்விளைவுகள் பிறகு தெரியவருமோ… என்னமோ?!

இரு அணிகளும் ஏற்கெனவே நிகழ்த்தியிருந்த கேள்வி-பதில் ஆட்டம், போங்காட்டமாக நிகழ்ந்திருந்ததால், அதை மறுபடியும் தூசு தட்டி எடுத்தார் அர்ஜூன். இதன்படி ஒவ்வொரு அணியும் மேல் படிக்கட்டில் ஒன்றாக நிற்க வேண்டும். அவர்களுக்கு ஒரு கேள்வி தரப்படும். இதில் சரியாக பதில் சொல்பவர்கள் ஒரு படி கீழே இறங்கி வருவார்கள். இப்படி அவர்கள் சரியான பதில்களைச் சொல்ல சொல்ல கடைசிப் படிக்கட்டில் வரும்போது அவர்கள் வெளியேறலாம். A மற்றும் B என்று அடையாளமிட்டப்பட்டிருந்த பலகைகள் இருந்தன. அர்ஜூன் சொல்கிறபடி சென்று அதில் நிற்க வேண்டும். இதுதான் ஆட்டத்தின் விதிமுறை.

அணித்தலைவர்கள் இதில் பங்கேற்க தேவையில்லை. எனவே விக்ராந்த்தும் ஐஸ்வர்யாவும் ஓரமாக அமர்ந்து தங்களுக்கு வழங்கப்பட்டிருந்த ஜூஸ், சிப்ஸை ஜாலியாக சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். ஒவ்வொரு நபரும் தங்களின் அணியில் உள்ளவர்களின் குணாதிசயங்களை எந்த அளவுக்கு சரியாகப் புரிந்து கொண்டிருக்கிறார்கள், நேர்மையாக பதில் அளிக்கிறார்கள் என்பதைப் பொறுத்து அவர்களின் அணி மாற்றம் நடக்கும்.

ஆனால் இதில் ஒரு ஆட்சேபம் இருந்தது. இதுதான் ‘சரியான பதில்’ என்று சர்வைவர் டீம் ஒரு பதிலை ஏற்கெனவே முடிவு செய்திருந்தது. பல்வேறு ஆய்வுகளுக்குப் பிறகுதான் அதை தயார் செய்திருப்பார்கள். என்றாலும் அதுதான் சரியான பதில் என்று என்ன நிச்சயம்? உதாரணத்திற்கு ‘உங்கள் அணியில் அதிகம் வழிபவர் யார்?” என்கிற கேள்விக்கு ‘விஜயலட்சுமி’ என்று முன்பே பதில் வந்திருந்தது. விஜியும் ஒரு மாதிரியாக அதை ஒப்புக் கொண்டு விட்டார். ஆனால், சரியான பதிலாக ‘சரணை’ சர்வைவர் டீம் தேர்ந்தெடுத்திருந்தது. (அப்ப பயபுள்ள... நாம பார்க்காத காட்சிகளில் ஏதோ செஞ்சிருக்கு போல).

அணியில் எல்லோரும் விரும்பும் நபர் யார்? டைட்டில் ஜெயிக்க தகுதி இல்லாத நபர் யார், கூட்டத்தில் நம்பிக்கை குறைவாக இருப்பவர் யார், Soul Survivor ஆக தகுதி இருக்கும் நபர் யார், வழிந்து பேசும் ஆசாமி யார், கண்ணீர் விடும் சென்ட்டி ஆள் எவர்? சைலன்ட் கில்லர் யார், அடுத்தவர்களின் மீது அக்கறை செலுத்தும் கனவான் யார்? ஜாலியாக இருப்பவர் யார்? என்றெல்லாம் தாறுமாறான கேள்விகள் வரிசையாக வந்தன.

போட்டியாளர் சொல்லும் பதிலும் சர்வைவர் டீம் முடிவு செய்திருக்கும் பதிலும் பொருந்தியிருந்தால் அவர் ஒருபடி கீழே இறங்கலாம். தான் எதிர்கொண்ட அனைத்துக் கேள்விக்கும் சரியாக பதில் சொல்லி முதலில் இறங்கியவர் வனேசா. ஒரு நபரின் குணாதிசயத்தை கணிப்பதில் இவர் வல்லவராக இருக்கிறார்.

சர்வைவர் - 27
சர்வைவர் - 27

இந்த கேள்வி பதில் டாஸ்க்கில் போட்டியாளர்களை சங்கடப்படுத்தும் கேள்விகளும் இருந்தன. சிரிக்க வைக்கும் கேள்விகளும் இருந்தன. உதாரணத்துக்கு ‘எதிர்பாலினத்தவரை நோக்கி அதிகம் வழிபவர் யார்?’ என்கிற கேள்விக்கு வேடர்கள் அணியில் அனைவருமே ‘ஐஸ்வர்யா’ பெயரை எழுதியிருந்தனர். ‘’மைக் வெக்க வர்ற பையன் கிட்ட கூட பேசிட்டிருப்பா அவ” என்று அம்ஜத் சொன்னதும் வெட்கம் பொங்கி வழிய சிரித்தார் ஐஸ்வர்யா. (ஜொள்ளு மன்னி!). ‘’மூக்கு நீளமா இருந்தா அவங்களுக்குப் பிடிக்கும் சார்” என்று அம்ஜத் மேலும் போட்டுக் கொடுக்க அனைவரின் கண்களும் நந்தாவை நோக்கி குறும்பாக நகர்ந்தன. “ஏன்... நாராயணனுக்கு அதை விட மூக்கு பெருசா இருக்கே?” என்று இந்த குறும்பு அல்வாவை ஆழமாக கிண்டினார் அர்ஜூன்.

இதே கேள்விக்கு காடர்கள் அணியினர் கலவையாக பதில் சொல்லிருந்தாலும் சரியான பதில் ‘சரண்’தானாம். இது சர்வைவர் டீமின் அப்சர்வேஷன். வனேசா அதிகம் வழிபவராக ‘சரண்’ பெயரை எழுதியிருந்தவுடன் ‘’என்னா சரண்... ஏதோ வில்லங்கம் பண்ணியிருக்கே போலயே” என்று ஜாலியாக கிண்டல் செய்தார் அர்ஜூன். தன் பெயர் வந்தது குறித்து சரணுக்கே அதிர்ச்சியும் ஆச்சரியமும்.

ஒருவழியாக கேள்வி பதில் முடிந்து முதலில் சரியான பதில்களை சொல்லி, அர்ஜூன் சொன்ன ஆர்டரில் வந்து நின்றார்கள். இந்த வரிசையில் சிலர் அணி மாற்றப்பட்டிருந்தார்கள். ‘தாங்கள் எந்த அணிக்குச் செல்வோம்’ என்கிற பதைபதைப்பு ஒவ்வொருவரிடமும் இருந்தது. குறிப்பாக ‘வானத்தைப் போல’ படத்திற்கு நிகரான சென்ட்டிமென்ட்டைப் பிழியும் காடர்கள் அணியில் கலக்கம் அதிகம் இருந்தது.

“நீங்க நிக்கற போர்டை அப்படியே புரட்டிப் பாருங்க. அதுதான் நீங்க இருக்கற டீம்” என்று அர்ஜூன் அறிவித்தார். அதன்படி அம்ஜத், லட்சுமிபிரியா, நந்தா ஆகிய மூவரும் வேடர்கள் அணியிலிருந்து விலக்கப்பட்டு காடர்கள் அணிக்குச் செல்கிறார்கள். விஜி மற்றும் சரண் காடர்கள் அணியிலிருந்து வேடர்கள் அணிக்குச் செல்கிறார்கள்.

அணித்தலைவர்களில் மாற்றம் ஏதுமில்லை. விக்ராந்த் இருக்கும் இடத்திலேயே தானும் நீடிப்பது குறித்து உமாபதி குஷியாகி விட்டார். ஆனால் இடம் மாறுவதில் விஜிக்கும் சரணுக்கும் இஷ்டமேயில்லை. ‘மிக அநியாயமான முடிவு’ என்று புலம்பிக் கொண்டிருந்தார் சரண்.

சர்வைவர் - 27 |
சர்வைவர் - 27 |

இதைப் போலவே வேடர்கள் அணியில் நந்தா இல்லாததின் இழப்பை ஆழமாக உணர்ந்தார் ஐஸ்வர்யா. “இனிமே அவர் இடத்துல நீங்கதான் இருந்து என்னைப் பார்த்துக்கணும்... சரியா?” என்று ரவியிடம் உருக்கமாகச் சொல்லிக் கொண்டிருந்தார் ஐஸ்வர்யா. (பாவம்!). “இதையெல்லாம் நீ எனக்கு சொல்லணுமா... ஆத்தா நான் உன்னைப் பார்த்துக்கறேன்” என்று ரவி சொன்ன காட்சி நெகிழ்வாக இருந்தது. (தமிழில்தான் இது போன்ற சென்டிமென்ட் காட்சிகள் அதிகம் இருக்கும் போலிருக்கிறது!).

புதிய அணியில் சங்கடத்துடன் அமர்ந்திருந்த சரணை வேடர்கள் அணி ஆற்றுப்படுத்தியது. இப்படி ஒவ்வொரு அணியிலும் கலவையான மாற்றங்கள் ஏற்பட்டன. இந்த மாற்றம் வரும் சவால்களில் எப்படி எதிரொலிக்கும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

இந்த அணி மாற்றம் குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? இது வரும் நாட்களில் எவ்வாறான பாதிப்புகளை, மாற்றங்களை ஏற்படுத்தும்? கமென்ட் பாக்ஸில் வந்து பதில் சொல்லுங்களேன்!