Published:Updated:

சர்வைவர் - 28 | ஐபிஎல் போல பரபரத்த இம்யூனிட்டி சேலன்ஞ்... மொபைல் உபயோகித்து மாட்டிய போட்டியாளர்!

சர்வைவர் - 28

ZEE தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'சர்வைவர்' ரியாலிட்டி ஷோவின் 28-வது எபிசோட் எப்படி இருந்தது? சுரேஷ் கண்ணன் எழுதும் விறுவிறு விமர்சனம்!

Published:Updated:

சர்வைவர் - 28 | ஐபிஎல் போல பரபரத்த இம்யூனிட்டி சேலன்ஞ்... மொபைல் உபயோகித்து மாட்டிய போட்டியாளர்!

ZEE தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'சர்வைவர்' ரியாலிட்டி ஷோவின் 28-வது எபிசோட் எப்படி இருந்தது? சுரேஷ் கண்ணன் எழுதும் விறுவிறு விமர்சனம்!

சர்வைவர் - 28
கடைசி பந்தில் சிக்ஸர் அடித்து ஜெயிக்கும் ஒருநாள் கிரிக்கெட் போட்டியின் பரபரப்பான முடிவை ‘இம்யூனிட்டி சேலன்ஞ்’ கொண்டிருந்ததுதான் நேற்றைய எபிசோடின் அட்டகாசமான ஹைலைட். காடர்கள் அணி வென்றாலும் இறுதி நொடிவரை போட்டியை உயிர்ப்புடன் வைத்திருந்து எதிரணிக்கு நெருக்கடியைத் வேடர்களுக்கு ஒரு சபாஷ். அதிலும் இறுதிக்கட்டத்தில் பெண் புலி போல துடிப்புடன் செயல்பட்ட ஐஸ்வர்யாவிற்கு ஹேட்ஸ் ஆஃப்.

இந்தச் சவாலில் வேடர்கள் அணி தோற்று எலிமினேஷனை சந்திக்கவிருக்கிறது. அதிலிருந்து வெளியேற்றப்படவிருக்கிறார் யார்?

இந்தப் பரபரப்பையெல்லாம் மீறி தலைவி பார்வதி எப்போது தனது அணிக்குத் திரும்பி கலாட்டாவை ஆரம்பிப்பார் என்பதைக் காண மனம் ஆவலாகத் துடிக்கிறது.

ஓகே... சர்வைவர் 28வது நாளில் என்ன நடந்தது?

வேடர்கள் தீவில் புதிதாக ஐக்கியமாகத் துவங்கியிருக்கும் சரண் “நான் புதுசா உள்ள வந்தது உங்களுக்குச் சங்கடமா இருந்தா மன்னிச்சுக்கங்க. ஆனா என்னோட 200 சதவீத உழைப்பை நிச்சயம் தருவேன்” என்று வாக்களித்தார். சொன்னது போலவே பிறகு செய்தார்.

சர்வைவர் - 28
சர்வைவர் - 28

வேடர்களை விடவும் காடர்கள் அணியில் ‘அணி ஒற்றுமை’ என்கிற விஷயத்தை விரதம் போல பின்பற்றுகிறார்கள். எனவே “தோத்தாலும் சரி. ஜெயிச்சாலும் சரி... அதற்கு அணிதான் காரணம். யாரையும் தனியா பிரிச்சுப் பார்க்க வேணாம்” என்று சொல்லிக் கொண்டிருந்தார் டீம் லீடர் விக்ராந்த். “இந்த டீல் எனக்குப் பிடிச்சிருக்கு” என்று நிம்மதியுடன் சொல்லிக் கொண்டிருந்தார் அம்ஜத். ஏனெனில் அவர் முன்பு இருந்த வேடர்கள் டீமில் கணிசமான தனிநபர் அரசியல் ஓடிக் கொண்டிருந்தது என்பதை நிறைய பார்த்துவிட்டோம்.

இந்த அணி மாற்றம் ஒருவகையில் வேடர்களுக்குப் பின்னடைவை ஏற்படுத்தலாம். ஏனெனில் அணியின் பலமாக இருந்த நந்தா, அம்ஜத் போன்றவர்கள் எதிர் அணிக்குச் சென்றிருக்கிறார்கள். மாறாக சரணும் விஜயலஷ்மியும் இங்கு வந்திருக்கிறார்கள். சென்றவர்களோடு ஒப்பிடும்போது வந்தவர்கள் பலவீனமானவர்கள் என்பது வெளிப்படை. விஜயலட்சுமியும் இதை வேறு வகையில் வழிமொழிந்தார்.

“வாங்க சர்வைவர்ஸ்” என்று களத்திற்கு வரவேற்ற அர்ஜூன், வந்தவுடனேயே காடர்கள் அணிக்கு ஓர் அதிர்ச்சியைத் தந்தார். “உங்க அணில ஏழு பேர் இருக்காங்க... ஆனா வேடர்கள் அணில ஆறு பேர்தான் இருக்காங்க... எனவே உங்க கிட்ட இருந்து ஒருத்தரை அவங்க செலக்ட் செஞ்சு எடுத்துக்கலாம்” என்று சொன்னவுடன் விக்ராந்திற்கு பலத்த அதிர்ச்சி. எனவே இதை ஆட்சேபிக்க ஆரம்பித்தார்.

“சார்... இது நியாயமாப் படலை. எங்க அணில மூணு பொண்ணுங்க இருக்காங்க... அங்க ரெண்டு பேர்தான் இருக்காங்க... வேணுமின்னா...” என்று ஆரம்பித்து அவர் சொல்ல வந்ததை அர்ஜூனால் புரிந்து கொள்ள முடிந்தது. “இங்க ஆண், பெண் என்கிற பேதமில்லை” என்று டெட்டால் போட்ட வார்த்தைகளால் அர்ஜூன் மழுப்பினாலும் விக்ராந்த் கேட்டதிற்குப் பின்னால் ஒரு நோக்கம் இருந்ததை உணர முடிந்தது. இது உடல் வலிமை சார்ந்த போட்டி என்பதால் பெண்களைத் தியாகம் செய்யலாம். ஆனால் ஆண்களைத் தியாகம் செய்தால் அணி பலவீனமாகி விடும் என்று அவர் நினைத்திருக்கக் கூடும். ஆனால், இதே சர்வைவரில்தான் ஐஸ்வர்யாவைப் போல் உடல்வலிமையானவர்களும், லட்சுமியைப் போல் புத்திக்கூர்மை உள்ளவர்களும் இருக்கிறார்கள்.

சர்வைவர் - 28
சர்வைவர் - 28

விக்ராந்தின் ஆட்சேபம் ஏற்கப்படவில்லை. இதற்கு முன்னால் ‘வேடர்கள் அணியில்’ ஏழு பேர் இருக்கத்தானே செய்தார்கள் என்றொரு கேள்வி எழலாம். ஆனால் இப்போதைய அணி மாற்றத்தின் படி ஒரு சமநிலையற்ற தன்மை ஏற்பட்டிருக்கிறது. காடர்கள் அணியில் பெரும்பாலும் வலிமையானவர்கள் இருக்க, வேடர்கள் அணி பலவீனமாக இருக்கிறது. இதை ஒழுங்குப்படுத்துவது சர்வைவர் டீமின் நோக்கமாக இருக்கலாம்.

எதிர்அணியில் இருந்து யாரைத் தேர்ந்தெடுக்கலாம் என்று வேடர்கள் அணி கூடிப் பேசியது ‘உமாபதி’யைத் தேர்ந்தெடுக்கலாம் என்று பரிந்துரைத்தார் விஜி. அவரின் பாசத்தை ஒரு பக்கம் வைத்துவிட்டாலும் கூட அதுவொரு புத்திசாலித்தனமான முடிவு. சவால்களை வேகமாகவும் துடிப்பாகவும் செய்வதில் உமாபதி கில்லி. அணியை ஜாலியாக வைத்திருக்கும் பேர்வழியும் கூட. “தன்னை அழைப்பார்கள்" என்கிற எதிர்பார்ப்பு அம்ஜத்திற்கு இருந்தது.

ஆனால் அணித்தலைவரான ஐஸ்வா்யா தேர்ந்தெடுத்தது ‘நந்தா’வை. அவரும் ஒரு வலிமையான போட்டியாளர்தான். ஆனால் அதையும் தாண்டி நந்தாவின் மீதுள்ள தனிப்பட்ட பாசம்தான், ஐஸ்வர்யா இந்த முடிவு எடுத்ததற்குக் காரணமா என்பது ஐசுவிற்குத்தான் வெளிச்சம். நந்தா வந்ததும் ஐஸ்வர்யாவின் முகத்தில் பிரகாசம் ஒளிர்ந்தது. லட்சுமியின் முகம் இருண்டுபோனது.

“இது அணியாக கூடிப் பேசி எடுத்த முடிவுதானா? எல்லோரும் கையைத் தூக்குங்கள்” என்று அர்ஜூன் ஒரு வாய்ப்பு தந்தும் கூட யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. (எதுக்கு தலைவியைப் பகைச்சுக்கணும்?!). “ஐஸ்வர்யாவால் ஒரு முடிவைக் கூட பாரபட்சமில்லாமல் எடுக்க முடியலை” என்று பின்னர் புகார் கூறிக் கொண்டிருந்தார் அம்ஜத்.

வேடர்கள் அணிக்கு நந்தா மறுபடி திரும்பிய சடங்கைத் தொடர்ந்து இன்னொரு அதிர்ச்சியைத் தந்தார் அர்ஜூன். போட்டியாளர்களில் யாரோ ஒருவர் மொபைல் போனை உபயோகித்திருக்கிறார். “இந்த விளையாட்டு நேர்மையா நடக்கணும். இது விஷயமா யாருக்காவது தகவல் தெரியுமா?’ என்ற போது சம்பந்தப்பட்ட நபரை யாரும் காட்டித்தரவில்லை. “நான்தான் சார்” என்று முன்வந்து சரணாகதி அடைந்தார் சரண்.

சரண் போன் உபயோகித்த விஷயம் விக்ராந்திற்கு அப்போதே தெரியும். ஆனால் அதை சர்வைவர் டீமிடம் தெரிவிக்கவில்லை. மாறாக அந்தத் துரோகத்தை நினைத்து அவருக்கு தூக்கமே வரவில்லையாம். மொபைல் போன் தந்த ஒரு தொழிலாளிக்கு ஏதாவது இடர் வருமோ என்று நினைத்து அமைதி காத்தாராம். (நம்பும்படியாக இல்லையே?!).

சர்வைவர் - 28
சர்வைவர் - 28

“நாங்கள்லாம் எவ்வளவு கஷ்டப்பட்டு குடும்பத்தை தியாகம் செய்து விளையாடிக் கொண்டிருக்கிறோம்” என்று நந்தா, அம்ஜத் உள்ளிட்டவர்கள் ஆத்திரப்பட்டார்கள். “அண்ணன்கிட்ட சொல்லிட்டுதான் பண்ணேன்’ என்பதுபோல் சரண் விளக்கம் அளிக்க ஆரம்பிக்க “நீ என்கிட்ட சொல்லல...” என்று கோபத்துடன் மறுத்தார் விக்ராந்த்.

“அண்ணன் கிட்ட சொல்றது இருக்கட்டும். இது தப்புன்னு உங்களுக்கே தெரிய வேண்டாமா? அறிவில்லே?” என்று டென்ஷன் ஆனார் அர்ஜூன். “தப்புதான் சார். மன்னிச்சுடுங்க” என்று சரண் உருக்கமாக வேண்டியதும் “இதுதான் கடைசி வார்னிங். வேற யாராவது இப்படிப் பண்ணா விளையாட்டை விட்டு வெளியே போக வேண்டியதுதான்” என்று எச்சரித்தார் அர்ஜூன்.

“ஓகே... நிறைய விஷயங்களை தியாகம் செய்துதான் இந்த விளையாட்டிற்கு வந்திருக்கோம். கேம்ல ஃபோகஸ் பண்ணுங்க” என்று சொன்ன அர்ஜூன், ‘இம்யூனிட்டி சேலன்ஞ்’ பற்றிய விதிமுறைகளை விளக்க ஆரம்பித்தார்.

பல சிரமமான தடைகளைத் தாண்டிச் சென்ற பிறகு நிதானமாக யோசித்து செய்யும் ஒரு நிலையைக் கடந்த பிறகு இறுதியை அடையும் வழக்கமான முறையில்தான் இந்தப் போட்டியும் அமைந்திருந்தது.

சமமற்ற வகையில் அமைக்கப்பட்டிருக்கும் மரத்துண்டுகளின் மீது கால் வைத்து தாண்டிச் செல்வது முதல்நிலை. கயிற்றைப் பிடித்து எதிரேயுள்ள மேடையில் தாண்டுவது இரண்டாம் நிலை. எதிரேயிருக்கும் கொக்கியில் கயிற்றை வீசி மாட்டச் செய்வது மூன்றாம் நிலை. அந்தக் கயிற்றைப் பிடித்து ரப்பர் பாலத்தில் நடந்து செல்வது நான்காம் நிலை. பிறகு முடிச்சுகளை அவிழ்த்து புதிர்க்கட்டைகளை விடுவிப்பது ஐந்தாம் நிலை. A வடிவத்தில் இருக்கும் கோபுரத்தில் அந்த பலகைகளைப் பொருத்தி பாதை அமைப்பது ஆறாம் நிலை. அதில் ஏறிச் சென்று உச்சி மேடையில் கொடியை நடும் முதல் அணி வெற்றியாளர்.

வேடர்கள் அணியில் ஏழு நபர்கள் இருப்பதால் யாரவது ஒருவர் போட்டியிலிருந்து விலக வேண்டும். கடந்த முறை ரவி விலகியதால் இந்த முறை அவர் விளையாடித்தான் ஆக வேண்டும். மருத்துவ சிகிச்சையில் இருந்தாலும் துணிச்சலாக ஆட ஒப்புக் கொண்டார் ரவி. ஆனால் நந்தா விலகிக் கொண்டதுதான் ஆச்சர்யம். நந்தாவை விரும்பி எதிர்அணியிலிருந்து வாங்கி விட்டு அவரை ஓய்வெடுக்க வைப்பது என்ன ஸ்ட்ராட்டஜியோ?

சர்வைவர் - 28
சர்வைவர் - 28

போட்டி ஆரம்பித்தது. மரத்துண்டுகளில் மீது கால் வைத்து தாண்டிச் செல்வதில் பலரும் ததிங்கினத்தோம் போட்டபோது மிக எளிதாக தாண்டிச் சென்றுவிட்டார் லட்சுமிபிரியா. சற்று மூளையை உபயோகித்து, கட்டைகள் வைக்கப்பட்டிருக்கும் கோணத்தில் கால் வைத்துக் கடந்தால் அதிக சிரமமில்லாமல் சென்று விட முடியும். இந்த உத்தி புரியாதவர்கள் பதற்றத்தில் தவித்தார்கள். வேடர்கள் அணியின் புதிய வரவான சரண், இந்த டாஸ்க்கை எளிதாக செய்து முடித்தார். இவரைப் போலவே இனிகோவும் எளிதாக வந்துவிட்டார்.

ஐஸ்வர்யா விளையாட்டில் வேகம் காட்டுபவர் என்றாலும் உயரம் தாண்டும் விஷயத்தில் அவர் தடுமாறுவதை வழக்கமாக பார்க்க முடிகிறது. இதிலும் துவக்க நிலையில் அவர் தடுமாறினாலும் ஒரு கட்டத்தில் ஜிம்னாஸ்டிக்ஸ் போன்றதொரு அட்டகாசமான உத்தியைப் பயன்படுத்தி தாண்டி வந்துவிட்டார்.

‘இவரால் செய்ய முடியுமா?’ என்கிற சந்தேகம் தோன்றினாலும் ரவி கூட சிறப்பாகத் தாண்டி வந்துவிட்டார். இந்த முதல் நிலையை காடர்கள் அணி வேகமாக முடித்துவிட்டு அடுத்த நிலைக்குச் சென்றுவிட்டது. ஆனால் வேடர்கள் அணியின் நாராயணனும் விஜயலட்சுமியும் மிகவும் தடுமாறிக் கொண்டிருந்தார்கள். "நான் வந்த மாதிரி வாங்கக்ககா” என்று சரண் உதவிக் கொண்டிருந்தார். பிறகு இவர்களும் வந்து சேர்ந்துவிட்டார்கள்.

இரண்டாம் நிலையான கயிற்றைப் பிடித்து தாண்டுதலில் கீழே விழுந்தார் லேடி காஷ். பிறகு மூன்றாம் தடவையில் தாண்டிவிட்டார். காடர்கள் அணி இரண்டாம் நிலையை முடித்துவிட்டு கயிற்றை வீசி கொக்கியில் மாட்டும் நிலைக்குச் சென்றுவிட்டார்கள். ஆனால் விஜயலட்சுமி இன்னமும் கட்டையைத் தாண்ட முடியாமல் சிரமப்பட்டு வந்து சேர்ந்தார்.

காடர்கள் அணி மளமளவென முன்னேறினாலும் கயிற்றை வீசி கொக்கியில் மாட்டும் டாஸ்க்கில் மிகவும் சிரமப்பட்டது. பின்னால் வந்து சேர்ந்த வேடர்கள் அணிக்கும் இதே சிரமம்தான். இரண்டு அணிகளும் இந்த டாஸ்க்கில் இலக்கை அடைய முடியாமல் நிறைய நேரம் போராடினார்கள். “கயிற்றை லூசா விட்டுட்டு தூக்கிப் போடுங்க” என்று டிப்ஸ் தந்தார் அர்ஜூன்.

சர்வைவர் - 28
சர்வைவர் - 28

இதன்படி விக்ராந்த் கயிற்றை வீசி முதல் கொக்கியில் மாட்டிவிட்டார். ஆனால் வேடர்கள் அணி இன்னமும் தடுமாறிக் கொண்டிருந்தது. ரவி பல முறை முயன்றும் முடிச்சு இலக்கின் அருகில் சென்று விழுந்தது. ஒருமுறை சரண் சரியாகக் கொக்கியில் போட்டார். ஆனால் கயிற்றை இழுக்கும்போது தவறாக இழுத்துவிடவே முடிச்சு மாட்டாமல் வந்துவிட்டது. விக்ராந்த் வெற்றிகரமாக இரண்டாவது கொக்கியையும் பிடித்துவிட அவர்கள் கடகடவென ரப்பர் பாலத்தைக் கடந்து அடுத்த நிலைக்குச் சென்று கயிறு முடிச்சை அவிழ்க்க ஆரம்பித்துவிட்டார்கள்.

வேடர்கள் அணி மிகவும் பின்தங்கியது இந்த நிலையில்தான். அவர்களால் கொக்கியை மாட்ட முடியவில்லை. ஒருவழியாக சரண்தான் இரண்டு கொக்கியையும் மாட்டினார். ஒரு கட்டத்தில் இரண்டு அணிகளும் சமமான நிலையில் வந்து சேர்ந்தன. தாமதமாக வந்து சேர்ந்தாலும் பலகைகளை சரியாகப் பொருத்தும் நிலையில் காடர்களுக்குச் சரியான சவாலை வேடர்கள் தந்தார்கள். தாங்கள் முன்னே வந்துவிட்டதால் எளிதில் ஜெயித்துவிடலாம் என்று கற்பனை செய்திருந்த காடர்கள் அணிக்குள் இப்போது பயம் தெரிய ஆரம்பித்து விட்டது.

ஒரு பக்கம் லட்சுமிபிரியாவும் லேடி காஷூம் போராடிக் கொண்டிருக்க இன்னொரு பக்கம் ஐஸ்வர்யாவும் விஜயலட்சுமியும் வேகமாக முன்னேறிக் கொண்டிருந்தார்கள். குறிப்பாக இந்தச் சமயத்தில் ஐஸ்வர்யா காட்டிய வேகமும் விவேகமும் பாராட்டத்தக்கது. ஏறத்தாழ இரண்டு அணிகளும் ஒரே சமயத்தில் உச்சியிலிருந்த பலகையை மாட்டிக் கொண்டிருந்தன. ஆனால் லட்சுமிபிரியா முதலில் முடித்துவிட அவர்களின் அணி கடகடவென்று பலகையில் ஏறி உச்சியை அடைந்தார்கள். வேடர்களின் அணியும் வேகமாக வந்து சேர்ந்தாலும் சில சொற்பமான நொடிகளில் பின்தங்கி வெற்றி வாய்ப்பை இழந்தார்கள்.

ஏற்கெனவே சொன்னது போல இந்தச் சவாலில் தோற்றாலும் வேடர்களின் வேகமும் அர்ப்பணிப்பும் பாராட்டத்தக்கது. ஒரு சுவாரஸ்யமான கிளைமாக்ஸை இரு அணிகளும் வழங்கின. “என்னுடைய தலைமையின் போது எங்கள் அணியில் இருந்து யாரும் வெளியே போகும் நிலைமை வரக்கூடாது என்று வேண்டிக் கொண்டேன்” என்றார் விக்ராந்த்.

சர்வைவர் - 28
சர்வைவர் - 28

“ஐஸ்வர்யா... நீங்க என்ன உத்தி பயன்படுத்தினீங்க?” என்று அர்ஜூன் கேட்டவுடன் “நந்தா இல்லாம என்னத்த உத்தி?” என்பது போன்ற முகபாவத்தைத் தந்தார் ஐஸ்வர்யா. பின்னணியில் இறுதிச்சுற்று பாடலின் இசையை குறும்பாக ஒலிக்கவிட்டது சர்வைவர் டீம்.

ஆக... வேடர்கள் அணியில் இருந்து ஒருவர் வெளியேறியாக வேண்டும். மொபைல் உபயோகித்த காரணத்தினால் சரண் வெளியேற்றப்படுவாரா என்று பார்த்தால் அவர் இன்று தன் திறமையை நிரூபித்துவிட்டார். மருத்துவ சிகிச்சையில் இருக்கும் ரவி ஒருவேளை வெளியேறலாம். அவர் எதற்கும் தயாரான மனநிலையில்தான் இருக்கிறார். என்ன நடக்கும்?

பார்த்துடுவோம்.