Published:Updated:

சர்வைவர் தமிழ் - 30 | ஓவர் பேச்சு பார்வதி எலிமினிடேட்டட்… ஆனாலும், ஜல்சா பாட்டெல்லாம்?!

சர்வைவர் தமிழ் - 30

ZEE தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'சர்வைவர்' ரியாலிட்டி ஷோவின் 30-வது எபிசோட் எப்படி இருந்தது? சுரேஷ் கண்ணன் எழுதும் விறுவிறு விமர்சனம்!

Published:Updated:

சர்வைவர் தமிழ் - 30 | ஓவர் பேச்சு பார்வதி எலிமினிடேட்டட்… ஆனாலும், ஜல்சா பாட்டெல்லாம்?!

ZEE தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'சர்வைவர்' ரியாலிட்டி ஷோவின் 30-வது எபிசோட் எப்படி இருந்தது? சுரேஷ் கண்ணன் எழுதும் விறுவிறு விமர்சனம்!

சர்வைவர் தமிழ் - 30
சர்வைவர் போட்டியிலிருந்து பார்வதி நிரந்தரமாக வெளியேற்றப்பட்டார் என்பதுதான் நேற்றைய எபிசோடின் ஹைலைட். ஒரு பக்கம் சந்தோஷமாகவும் இன்னொரு பக்கம் துக்கமாகவும் இருந்தது. பார்வதி வெளியில் செல்வது ஒருபக்கம் சரியென்று தோன்றினாலும் இன்னொரு பக்கம், அவரது வெளிப்படையான, அதிரடி ஸ்டேட்மென்ட்களை இனி கேட்க முடியாதே என்று ஏக்கமாகவும் இருந்தது.

இதைத் தவிர ‘மூன்றாம் உலகத்தில்’ நிகழ்ந்த அந்த எலிமினேஷன் சவால் பரப்பரப்பாகவும் சுவாரஸ்யமாகவும் அமைந்திருந்தது.

சர்வைவர் 30-வது நாளில் என்ன நடந்தது?

சர்வைவர் சம்பிரதாயப்படி ட்ரைபல் பஞ்சாயத்தில் விஜயலட்சுமியை தனியாகச் சந்தித்து விசாரணை செய்து கொண்டிருந்தார் அர்ஜூன். தான் திடீரென வெளியேற்றப்பட்டது குறித்தான அதிர்ச்சியும் கோபமும் விஜிக்கு இருப்பது நியாயம்தான். “சரணுக்கு வாக்களிக்கணும்னுதான் எல்லோரும் முதல்ல பிளான் பண்ணியிருந்தோம். ஆனா திடீர்னு படத்தைத் திருப்பிப் போட்ட மாதிரி என்னென்னவோ நடந்துச்சு” என்றார் அவர்.

“உங்களுக்கு எதிரா விழுந்த ரெண்டாவது வாக்கை யார் போட்டிருப்பாங்க?” என்று அர்ஜூன் போட்டு வாங்க முயன்ற போது “வேற யாரு... ஐஸ்வர்யாதான். சரண் கெட்டிக்காரன்… ரெண்டு பேருக்கும் உள்ள ஒரு பாசம் உருவாகிடுச்சு” என்று இக்கு வைத்து பேசினார் விஜி.

சர்வைவர் தமிழ் - 30
சர்வைவர் தமிழ் - 30

“நீங்க கூட நிறைய விதிகளை மீறியிருக்கீங்கன்னு சரண் சொன்னாரே அதப்பத்தி...” என்று அர்ஜூன் விசாரித்தபோது ‘கம்பி கட்டும் கதைகளை’ அடுக்க ஆரம்பித்தார் விஜி. “எனக்கு ஈறு பிரச்னை இருந்ததால் டூத் பேஸ்ட் உபயோகிக்க அனுமதி வாங்கினேன். ஆனா அதை யாரோ சுட்டுட்டாங்க… மீன் சாப்பிட்டது… வந்து” என்று விஜி விளக்கம் தந்த இடைவெளியில் “மீன் சாப்பிடலைன்னாலும் பிரச்னையாயிடும்... அதானே?” என்று ஜாலி கவுன்ட்டர் அடித்தார் அர்ஜூன்.

“எங்க இருந்து கொண்டு வருவான்னு தெரியாது. சிப்ஸ், முட்டைன்னு சரண் நிறைய கொண்டு வருவான்” என்று சரணை பதிலுக்கு போட்டுக் கொடுத்தார் விஜி. ஆக ஒட்டுமொத்தத்தில் ‘காடர்கள் அணி’ கள்ள மெளனத்துடன் நிறைய சேட்டைகள் செய்து கொண்டிருந்தார்கள்போல. அணித்தலைவர்களாக இருந்தவர்களும் இதற்கு உடந்தையாக இருந்திருக்கிறார்கள். இந்த லட்சணத்தில் ‘சரண் போன் பேசியதால்’ இரண்டு நாள்களாக விக்ராந்த் தூங்கவில்லை என்றெல்லாம் கதையளந்தார் உமாபதி.

“இதையெல்லாம் ஏன் முன்னாடியே சொல்லல?” என்று சரியான கேள்வியை அர்ஜூன் கேட்டார். “அதையெல்லாம் கவனிக்காம சர்வைவர் டீம் என்ன பண்ணிட்டு இருந்தது?” என்று பார்வதியாக இருந்திருந்தால் கேட்டிருப்பார். ஆனால் விஜியோ ‘’இதை ஒரு இடத்தில் நான் முன்னாடியே பதிவு செஞ்சிருக்கேன்” என்று தப்பிக்க முயன்றார். “மீன் வாங்கணும்னு நாங்க பிளான் பண்ணலை. தற்செயலா நிகழ்ந்த விஷயம் அது’’ என்று என்னதான் விஜி சமாதானம் சொன்னாலும் இது மிகப்பெரிய தவறு. (ஆனால் - இந்த விஷயம் ‘யார் அதிகம் வழிபவர்?’ என்கிற கேள்வி - பதிலில் முன்பே வெளிப்பட்டு விட்டது. ‘மீன் வைத்திருந்தவரிடம் வழிந்து விஜி வாங்கினார்’ என்று ஜாலியாக முன்னர் சொல்லப்பட்டது. அப்போது அர்ஜூன் இதைக் கண்டிக்கவில்லை).

மூன்றாம் உலகத்தில் விஜியைக் கண்டதும் காயத்ரி குஷியானரோ இல்லையோ, பார்வதி நிறைய மகிழ்ச்சியாகி விட்டார். (ஹைய்யா... புது வம்புகள் நிறைய பேசலாம். எவ்ளோ நேரம்தான் இந்த உம்மணாமூஞ்சி காயத்ரி கூட குப்பை கொட்றது?!). “எனக்கு அப்பவே தெரியும். விஜி எலிமினேட் ஆவாங்கன்னு” என்று அலட்டத் தொடங்கிய பார்வதி ‘‘என்னென்ன நடந்தது?” என்று ஆர்வமாக விசாரிக்க ஆரம்பத்தார். ‘கடவுளே. இவ சும்மாவே ஆடுவா… இப்ப சலங்கையை கட்டி விட்டாப்பல ஆயிடுச்சு’ என்று மைண்ட் வாய்ஸில் கதறினார் காயத்ரி.

சர்வைவர் தமிழ் - 30
சர்வைவர் தமிழ் - 30

“இதுவரை என்ன நடந்துச்சுன்னா..” என்று கொசுவர்த்தி சுருளை சுழற்ற வைத்து பழைய கதையையெல்லாம் விஜி விவரிக்கத் துவங்க பார்வதிக்கு உற்சாகம் பிடிபடவில்லை. “சரண் விஜிக்கு வோட் பண்ணது ஒரு ஸ்மார்ட் மூவ். வேற யாரையாவது அவன் செலக்ட் பண்ணியிருந்தா வேடர்கள் அணியின் சப்போர்ட்டை இழந்திருப்பான்” என்று சரியான லாஜிக்கைச் சிந்தித்துக் கொண்டிருந்தார் காயத்ரி.

சரண் போன் பேசினார் என்கிற தகவலைக் கேட்டதும் பார்வதியும் காயத்ரியும் அதிர்ச்சியானார்கள். “ஒரு பாசத்துல அம்மா, அப்பா கிட்ட பேசியிருந்தா கூட பரவால்ல... லவ்வர் கூட போய் பேசியிருக்கான் பாரேன்… இவன் என்ன வெக்கேஷனுக்கு வந்திருக்கானா?” என்று காண்டானார் பார்வதி. “பாய்ஸுக்குள்ள ஏதோ பிரச்னை ஆயிடுச்சு. என்னன்னு எனக்குத் தெரியாது” என்று விஜி சொன்ன போது ‘அடப்பாவி மக்கா’ என்று ஆகிவிட்டது. “கூடவே இருந்தியே செவ்வாழ.’’

“காயத்ரியை ஏன் வோட் பண்ணி வெளியே அனுப்பிச்சீங்க?” என்று ஆதிக்காலத்து கதையை உற்சாகமாகத் தோண்ட ஆரம்பித்தார் பார்வதி. “நாங்க கண்ணால பார்த்துக்கிட்டோம். காயத்ரி கதை முடிஞ்சது” என்று சுருக்கமாக அந்த சதிக் கதையை விவரித்தார் விஜி.

‘‘வேடர்கள் அணில ரவி உங்களை மிஸ் பண்றாரு. நீங்க போட்ட லெட்டர் அங்க பரபரப்பை உருவாக்கிடுச்சு” என்று விஜி சொன்னதும் இன்னமும் உற்சாகமாகிவிட்டார் பார்வதி. “ஆமாம் பின்ன... வண்டை வண்டையா கேட்டுட்டேன்ல” என்று உலக சாதனை செய்தது போன்ற மகிழ்ச்சி அவரது முகத்தில் தெரிந்தது.

சர்வைவர் தமிழ் - 30
சர்வைவர் தமிழ் - 30

“வேடர்கள் அணியில் நிறைய குழப்பம் இருக்கு. எல்லோரும் லட்சுமிபிரியாவுக்கு எதிரா இருக்காங்க. லட்சுமிக்கும் ஐஸ்வர்யாவுக்கும் சண்டை. எல்லாத்துலயும் ஐசு முன்னாடி போறாங்கன்னு லட்சுமிக்குக் கோபம்” என்றெல்லாம் விஜி பற்ற வைக்க “இதத்தானடா நான் முன்னாடியே சொன்னேன். என்னைப் போய் தப்பா நெனச்சீங்க” என்று பார்வதி சொன்ன போது ‘கரெக்ட்டுதாம்மா… அறிஞர்களை இந்த உலகம் தாமதமாகத்தான் அடையாளம் கண்டு கொள்ளும்’ என்று பார்வதியை தேற்றத் தோன்றியது.

“புது ஜோடி கனெக்ட் ஆயிடுச்சு. சரண் கனவுல ஐசு வந்தாளாமாம். வேடர்கள் அணிக்கு போனவுடனே ரெண்டு பேரும் ஒத்துமையாயிட்டாங்க” என்று தனது வம்புப் பேச்சை கிசுகிசு ஏரியாவுக்கு விஜி உற்சாகமாக நகர்த்திச் செல்ல “இருடா டேய்... உன் லவ்வருக்கு போன் பண்ணி இந்த விஷயத்தைச் சொல்றேன்” என்று காதலில் புகுந்து குட்டையைக் குழப்பும் உற்சாகத்தைக் காட்டினார் பார்வதி. (‘எங்க அக்காவின் காதலுக்கு எதிர்ப்பா நின்னேன்’ என்று முன்னர் சொல்லியவர் இதே பார்வதி. "என் காதலை எங்க அக்காதான் கெடுத்தா” என்று சொன்னவரும் இவரே... ஆக..!).

சர்வைவர் தமிழ் - 30
சர்வைவர் தமிழ் - 30

இந்த வம்பின் உச்சமாக "ஜல்சா பண்ணுங்கடா...” என்கிற வில்லங்கமான பாட்டை பார்வதி பாட “அய்யோ... எனக்கு எதுவும் தெரியாதுப்பா” என்று எஸ்கேப் ஆனார் விஜி. (பெண்களுக்கு எதிராக பெண்களே வம்பு பேச ஆரம்பித்தால் எந்த எல்லைக்கும் செல்வார்கள் என்பதற்கு இந்தக் காட்சி உதாரணம்).

"களத்துக்கு வாங்க சர்வைவர்ஸ்” என்று மூன்றாம் உலக போராளிகளை போட்டிக்கு அழைத்தார் அர்ஜூன். இவர் அணியும் மென் நிற ஆடைகள் பார்ப்பதற்கு மிகவும் வசீகரமாக இருக்கின்றன.

"எப்படி இருக்கிறது மூன்றாம் உலகம்?” என்று விஜியிடம் விசாரிக்க ஆரம்பித்தார் அர்ஜுன். இந்தக் கேள்வியை கேட்டிருக்க வேண்டாம் என்று பின்னர்தான் அவருக்குத் தோன்றியிருக்கும். ட்ரைபல் பஞ்சாயத்தில் கூட விஜி இத்தனை ஆவேசமாக கேள்விகள் கேட்கவில்லை. ஆனால் மூன்றாம் உலகம் வந்தவுடனே ஞானோதயம் வந்து சர்வைவர் விதிகள் மீது குற்றச்சாட்டுக்களை அடுக்கத் தொடங்கிவிட்டார். (பார்வதி கூட பழகிய சகவாசமா இருக்குமோ?!).

சர்வைவர் தமிழ் - 30
சர்வைவர் தமிழ் - 30

“நான் கோபமா demotivated-ஆ இருக்கேன். இந்த ஃபார்மட் தெரியும். ஆனா ஒருத்தர் திடீர்னு வந்து எப்படி என்னை வெளியேற்ற முடியும்? அதுவும் சரண் எப்படி என்னை எலிமினேட் பண்ண முடியும்? ஒருவேளை எல்லோரும் சேர்ந்து எனக்கு வோட் பண்ணி வெளியே வந்திருந்தா கூட ஓகே. ஆனா அதிர்ஷ்டத்தால் தப்பித்த ஒருவர் எப்படி என்னை வெளியேற்ற முடியும்?” என்றெல்லாம் சரமாரியான கேள்விகளை விஜி அடுக்க, “அதாம்மா கேமோட ரூல்... அதான் ஃபார்மட். அதை மாத்த முடியாது” என்பதையே வேறு வேறு வார்த்தைகளில் சொன்னார் அர்ஜூன்.

“சரண் அதிர்ஷ்டம் இருந்ததால் தப்பித்தார்” என்று அர்ஜூன் சொல்ல, “அப்ப சர்வைவர்ல அதிர்ஷ்டம்தான் முக்கியமா?” என்று சரியாக மடக்கினார் விஜி. “அதிர்ஷ்டமும் முக்கியம். அதுவும் part of the game. இதுதான் சர்வைவர் தர்மம்” என்று விஜிக்குப் பதில் அளிப்பதற்குள் ஆக்ஷன் கிங்கிற்கே வியர்த்துப் போயிருக்கும். “நான் தப்பான இடத்துல வந்து மாட்டிக்கிட்டேன்” என்று புலம்பினார் விஜி. “எனக்கு விளையாடப் பிடிக்கலை. இருந்தாலும் நான் கேமை விட்டுப் போகப் போறதில்லை. கடைசி வரைக்கும் போராடிட்டுதான் போவேன்” என்று விஜி முடிவெடுத்தது ஆரோக்கியமான விஷயம்.

ராமுக்கு எதிராக செய்த அரசியல் உள்ளிட்டு பல விமர்சனங்கள் விஜியின் மீது உள்ளது என்றாலும், இந்த எலிமினேஷன் விஷயத்தில் விஜியின் கோபம் நியாயமானதாகவே தெரிகிறது. “ஓகே. போட்டிக்கு போகலாமா... யாரு அந்த இரண்டு பேர்?” என்று அர்ஜூன் இதைக் கேட்டதும் “கல் ஜோசியம் பார்த்துடலாம் சார்” என்றார் பார்வதி. “அடிப்பாவி! இவ்ளோ நேரம்… நான் உன்னோட மோதி ஜெயிக்க விரும்பறேன்னு சொல்லிட்டு இங்க வந்தப்புறம் பிளேட்டை திருப்பிட்டாளே” என்று உள்ளுக்குள் எரிச்சல் அடைந்தார் காயத்ரி. “வாடி மகளே... போட்டி உனக்கும் எனக்கும்னு வரட்டும்... இருக்கு உனக்கு’’ என்று காயத்ரி உள்ளுக்குள் சபதம் எடுத்துக் கொண்டிருந்ததைப் போலவே முடிவு அமைந்தது.

சர்வைவர் தமிழ் - 30
சர்வைவர் தமிழ் - 30

“இந்தப் போட்டில ஜெயிச்சு உன் வாய்க்கொழுப்பை அடக்குறேன்” என்று முடிவு செய்த காயத்ரியைப் பார்த்தபோது “நீ கலக்கு தங்கம்” என்று நமக்கு அத்தனை சந்தோஷமாக இருந்தது. பார்வதியின் திருவிளையாடல்கள் அப்படி.

அந்தப் போட்டி மிக சுவாரஸ்யமாக வடிவமைக்கப்பட்டிருந்தது. (எப்படிதான் யோசிப்பாய்ங்களோ?!). பின் போர்டில் பந்தை உருட்டி விட வேண்டும். அது ஆணிகளின் பாதை வழியாக உருண்டு கீழே வரும் நேரத்திற்குள் ‘சர்வைவர்’ டிசைனின் துண்டுகளை அடுக்க வேண்டும். பிறகு பந்து கீழே விழுவதற்குள் பிடித்து மறுபடியும் புதிரில் கவனம் செலுத்த வேண்டும். அதாவது ஒரே நேரத்தில் இரண்டு வேலைகளையும் செய்ய வேண்டும்.

பந்தைப் பிடிக்காவிட்டால் என்னவாகும்? அது கீழே விழுந்து இன்னொரு பாதையில் 25 நொடிகளைக் கடந்து இன்னொரு குழியில் விழும். அதுவரை புதிரைக் கையாள முடியாது. இதனால் எதிராளிக்கு கூடுதல் நேரம் கிடைத்து விடும். (ஒருவேளை புரியவில்லையென்றால் இதன் வீடியோவைத் தேடிப் பாருங்கள். சுவாரஸ்யமான ஆட்டம் இது!).

சர்வைவர் தமிழ் - 30
சர்வைவர் தமிழ் - 30
போட்டி தொடங்கியது. ஒருபக்கம் பந்து கீழே உருண்டு விழுவதற்குள் கச்சிதமாக பிடித்து இன்னொரு பக்கம் புதிரைக் கவனிக்கத் துவங்கினார் காயத்ரி. ஆனால் புதிரை அவிழ்ப்பதில் பலவீனமான பார்வதி, பந்து அடுத்த நிலையையும் கடந்து வருவதை அப்படியே விட்டுவிட்டார். ஒரு கட்டத்தில் காயத்ரியும் இதையே செய்ய வேண்டியதாக இருந்தது. ஏனெனில் இரண்டு வேலைகளையும் ஒரே சமயத்தில் செய்வது சிரமமாக இருந்தது.

புதிரை சரியாக அமைப்பதில் காயத்ரி வெகுவாக முன்னேறிக் கொண்டிருக்க, பார்வதிக்கு தலையைப் பிய்த்துக் கொள்ளலாம் போல் இருந்தது. சிலர் இது போல் மூளைக்கு வேலை தரும் விளையாட்டுக்களில் பின்தங்குவது இயல்புதான். காயத்ரி புதிரை ஒரளவுக்கு அமைத்து விட்டாலும் அதை முழுமையாக்குவதில் ரொம்பவே சிரமப்பட்டார். அர்ஜூன் அவ்வப்போது தந்த டிப்ஸ் அவருக்கு உதவிகரமாக இருந்தது. இருவருமே புதிரை முடிக்க முடியாமல் திணறிக் கொண்டிருக்க “ஓகே ஒரு நிமிஷம் தர்றேன்… நீ பந்தைப் பிடிக்க வேணாம். அந்த நேரத்துல புதிரை சால்வ் பண்ணுங்க” என்றதும் காயத்ரி பரபரப்பாக இயங்கினார். அப்போதும் பார்வதியின் குழப்பம் நிற்கவில்லை.

சர்வைவர் தமிழ் - 30
சர்வைவர் தமிழ் - 30

சில பல தவிப்புகளுக்குப் பிறகு சர்வைவர் டிசைனை வெற்றிகரமாகப் பொருத்தி சாதித்து விட்டார் காயத்ரி. இந்தப் போட்டியில் ஜெயித்ததை விடவும் ‘வாய்க்கொழுப்பு’ பார்வதியை வீழ்த்தியதுதான் காயத்ரிக்கு உண்மையான மகிழ்ச்சி. ‘எப்பவும் நிறைய பேசுவியே இப்ப பேசு…”என்று சந்தோஷமானார். “ஓவர் கான்ஃபிடன்ஸ் உடம்புக்கு ஆகாதும்மா” என்பது காயத்ரியின் மைண்ட் வாய்ஸ்.

“வாழ்த்துகள் காயத்ரி. மூன்றாம் உலகத்தில் நிகழ்ந்த போட்டியில் இதுவரைக்கும் மூணு சேலன்ஞ்ச்ல ஜெயிச்சிருக்கீங்க” என்று வாழ்த்தினார் அர்ஜூன். (அப்ப Tribe-க்கு திரும்பலாமா?!) “காலைல இருந்து சோர்வா இருந்தேன். இந்த விளையாட்டில் வென்றதின் மூலம் எனது நம்பிக்கை திரும்ப வந்துவிட்டது” என்றார் காயத்ரி.

சர்வைவர் தமிழ் - 30
சர்வைவர் தமிழ் - 30

ஆக... சர்வைவர் போட்டியில் இருந்து பார்வதி நிரந்தரமாக வெளியேறுவது உறுதியாகி விட்டது. “ஒவ்வொரு நாளும் கத்துக்கறேன். தோல்வியில் இருந்தும் கத்துக்கறேன்... சர்வைவர் போட்டியிலும் நிறைய கத்துக்கிட்டேன். மனிதர்களைக் கவனிக்க முடிந்தது. மூன்றாம் உலகம், பேச்சுலர் ஹவுஸ் மாதிரி நிம்மதியா இருந்தது. வேடர்கள் அணில குடும்பம் மாதிரி ஃபீல் ஆச்சு... எல்லோருக்கும் வாழ்த்துகள்’’ என்ற பார்வதி “உண்மையா இருங்க... நடிக்காதீங்க” என்கிற கருத்தை உலகத்திற்கு சொன்னபடி விடைபெற்றார்.

“என்ன வேணா நடக்கட்டும். நான் சந்தோஷமா இருப்பேன். எனக்கு ராஜாவா வாழுறேன்” என்பதுதான் அம்மணியின் பாலிசி. வாழ்த்துகள் பார்வதி. உங்கள் மீதுள்ள விமர்சனங்களைத் தாண்டி we will miss you. சென்று வாருங்கள்!